இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0821பட்டடை
சீர்விடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:821)

பொழிப்பு (மு வரதராசன்): அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும்.

மணக்குடவர் உரை: முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு.
இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.

பரிமேலழகர் உரை: நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம்.
(எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்' என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர்.)

சி இலக்குவனார் உரை: மனத்தால் கூடாதிருந்து தமக்கு வாய்க்குமிடம் பெறுமளவும் கூடியொழுகுவார் நட்பு, வாய்க்குமிடம் பெற்றால் நன்கு வெட்டுவதற்குத் துணையாய் இருக்கும் பட்டடையாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நேரா நிரந்தவர் நட்பு சீர்விடம் காணின் எறிதற்குப் பட்டடை.

பதவுரை: சீர்விடம்-சீர்+இடம்; வாய்க்கும் இடம், வெற்றித்தரும் காலம்; காணின்-பெற்றால்; எறிதற்கு-முழுதும் வெட்டுதற்கு உதவுவதாய; பட்டடை-அடைகல், பட்டறைக்கல்; நேரா-கூடாமலிருந்து, பொருந்தாதிருந்து; நிரந்தவர்-கூடியொழுகுபவர், கலப்பவர்; நட்பு-கேண்மை.


சீர்விடம் காணின் எறிதற்குப் பட்டடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('தீர்விடம்' பாடம்): முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்;
மணக்குடவர் குறிப்புரை: பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.
பரிப்பெருமாள் ('தீர்விடம்' பாடம்): முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.
பரிதி: பட்டடையும் கரும்பும்போலத் தறிப்பர் என்றவாறு. [தறிப்பர்- வெட்டுவர்]
காலிங்கர் ('தீர்விடம்' பாடம்): தமக்கு ஏறத் திருந்தின இடம் காணின் அவரைத் தாம் கொல்லுதற்குப் பட்டடை; [ஏற - வென்று முன்னேற; திருந்தின இடம் - வாய்த்த இடம்]
பரிமேலழகர்: அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர். [அற எறிவிப்பதாய- துண்டு செய்வதாகிய]

'சீர்விடம்' என்ற பாடம் கொண்ட பரிமேலழகர் 'வாய்க்கும் இடம் பெற்றால் துண்டு செய்வதற்குத் துணையாய பட்டடையாம் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினார். 'தீர்விடம் காணின்' எனப் பாடம் கொண்ட மணக்குடவர், பரிப்பெருமாள் இருவரும் 'முடியுமிடங் காணின் கொல்லுதற்குப் பட்டடை' என்றும் காலிங்கர் 'ஏறத் திருந்தின இடம் காணின்' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாய்ப்பு வரின் அடிக்கும் பட்டறையாம்', 'வாய்க்கும் இடம் நேர்ந்தால் கொல்லன் உலைக்களத்தில் இரும்படிக்கத் துணையாகும் பட்டறை', 'அது தக்க சமயம் பார்த்து (நம்மை) நசுக்குவதற்குப் பட்டடைக் கல் (என்று எச்சரிக்கை கொள்ள வேண்டும்)', 'இடம் வாய்க்கும்போது நன்றாய் அடித்தற்கு உதவும் அடித்தகடு போலாம் ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வாய்ப்பான இடம் வரும்போது அடிக்கும் பட்டடை என்பது இப்பகுதியின் பொருள்.

நேரா நிரந்தவர் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: மனத்தினால் நேராது புறம் ஒத்தார் போல ஒழுகுவாரது நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கூடாநட்பினால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி:ஒருவனை நட்புக் கொண்டு அவன் உள் பாடெல்லாம் அறிந்து இவனுக்கு ஒரு குற்றம் வந்தால் அந்தக் குற்றமே முன்னாக எண்ணுவான் அது என்போல் எனின்.
காலிங்கர்: யாது எனின்; தமது அகத்து ஒவ்வாராய்ப் புறத்து ஒருவரோடு ஒத்தார் போன்று உள்ளவர் நட்பு என்றவாறு.
பரிமேலழகர்: கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு;

'தமது அகத்து ஒவ்வாராய்ப் புறத்து ஒருவரோடு ஒத்தார் போன்று உள்ளவர் நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு', 'மனத்தினால் பொருந்தாது புறத்தே ஒத்தவர்போல நடப்பவரது நட்பு', 'பகைவராக இருந்தவர் திடீரென்று கலந்து நட்பாட வந்தால்', 'உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே இணங்கி நடப்பவரது சிநேகம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே ஒத்தவர்போல பழகுபவரது நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே ஒத்தவர்போல பழகுபவரது நட்பு வாய்ப்பான இடம் வரும்போது அடிக்கும் பட்டடை என்பது பாடலின் பொருள்.
'பட்டடை' என்றால் என்ன?

கூடாநட்பு பட்டடைக் கல் போன்றது; தாங்குவது போலிருந்து சடக் கென்று அடிவாங்க வைத்துவிடும்.

உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே பொருந்திப் பழகுகிறவரது நட்பானது, தகுந்த இடம் வாய்க்கும்போது ஓங்கி அடித்தற்குப் பயன்படும் பட்டடை போன்றது ஆகும்.
உலோகக் கொல்லர்கள் தாம் செய்யும் பொருள்களைப் பட்டடையில் வைத்து அடித்து வேண்டிய வடிவம் பெறச் செய்வர். பட்டடை என்பது உலோகத்தை அடித்து வளைக்க உதவும் கல் ஆகும். தாங்கும் கல்லாய்த் தோன்றினும், வாய்ப்பான நேரத்தில் எறிதற்கு அதாவது பொருளை வைத்து வெட்டுவார்க்குதவும் அடைகல் தான் பட்டடை. உள்ளத்தால் கூடியிராது வெளிக்கு நெருங்கிப் பழகுபவரது நட்பு போல காலம் வாய்க்கும் துணையும் காத்திருந்து அது வரும்போது அடித்துவிடும் பட்டடை போன்றது என்கிறது பாடல். பட்டடைக்கு எறியப்படுபொருள் இரும்பு. பட்டடை தாங்கியுள்ள, நல்ல பதமா பழுத்த, இரும்பை உருக்கொடுத்துத் தகுந்த இடத்தில் அடிப்பது போன்று, உள்ளத்தில் வஞ்சம் வைத்துக்கொண்டு, வெளியில் நெருங்கி உறவாடுபவனது நட்பு, நம் உள்பாடெல்லாம் அறிந்து, காலம் வாய்த்தபோது நம்மை அடித்து வளைத்துத் துன்புறுத்தும் அல்லது அறவே அழித்துவிடும்.

சீர்விடம் என்ற சொல்லை சீர்+இடம் எனப் பிரித்து வாய்ப்பான இடம் எனப் பொருள் கொள்வர். சீர்-சிறப்பு; அதாவது கூடாநட்பினர்க்கு வெற்றித்தரும் காலம், நட்புக்கொண்டவன் தோற்குங்காலம் என்ற பொருளில் அமைந்தது.
நேரா நிரந்தவர்-நேராது நிரந்தவர் என்பது குறைந்து நின்றது. இதன் பொருள் பகை உள்ளத்தோடு பழகுபவர் என்பது.
'சீர்விடம்' என்றதற்கு மணக்குடவர் கொண்ட பாடம் 'தீர்விடங்காணின்' என்பது. இது 'பொருள் முடியுமிடங்காணின்' என்ற பொருளது. 'மணக்குடவர் உரையமைதி 'நிரந்தவர் நட்பு' இவர்கட்குள் தீர்விடங்காணின், மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்' என்பது. இதனால் 'இவர்கள் நட்பின் முடிவு மற்றவன் வெல்லுதற்குத் துணையாகிறது என்பதாம். இவ்வுரை அயலான் வெற்றிக்கு ஏதுவாதலைக் கூறிற்றாம்' என்பது தண்டபாணி தேசிகர் விளக்கம். காலிங்கரது பாடமும் 'தீர்விடம்' என்பதே. இவர் உரை 'தமக்கு ஏறத்திருந்தின இடம் காணின்' என்கிறது. இது 'தமக்கு முன்னேறுதற்குரிய அல்லது நண்பனை வெல்லற்குரிய இடம்' என்ற கருத்தைத் தருவதாகலாம்.

'பட்டடை' என்றால் என்ன?

பட்டடை என்னுஞ்சொல் தனித்தநிலையில் கொல்லன் உலைக் களத்தையே சுட்டுதல் மரபாதலின், உலைக்களப் பட்டடையே பொருளாகும் (இரா சாரங்கபாணி). இக்காலத்தில் இது பட்டரை அல்லது பட்டறை என வழங்குகிறது. 'பட்டறை என்பது பட்டு அறை என்னும் இருசொற் புணர்ப்பு. அழிந்துபோன அறை என்னும் பொருளது. அறிவு அறை என்பது அறிவற்றுப் போன எனப் பொருள் தருவது போலப் பொருள் தருவது. அறை என்பது அறுக்கப்பட்ட இடமும், திட்டமும் குறிக்கும் சொல்லாம்' என்பார் இரா. இளங்குமரன்.
குறளில் பட்டடை என்பது கொல்லன் உலைக்களத்தில் உள்ள ஒரு கருவியைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. இரும்பு, போன்ற உலோகங்களை அடித்து வளைக்க உதவும் இக்கருவியை அடைகல், அல்லது பட்டடைக் கல் (anvil) எனவும் சொல்வர். உலைக்கல் எனவும், கிட்டம் எனவும் வழங்கப்படுவது. இரும்பை சூடாக்கி இதன் மேல் வைத்துதான் சம்மட்டியால் ஓங்கி அடிப்பார்கள். தன் மேல் அடுத்த பொருளைத் தாங்கி ஓங்கி அறைதற்கு இடமாக இருப்பது இது. இச்சொல் காரணக்குறி யாதலின், பிறிதொன்றினைத் தன்மேல் தாங்கிக் கொள்ளும் எவ்வகை அடைப் பொருளையும் குறிக்கும் எனக் கொள்ளலாம்,
பட்டடையும் கரும்புபோல எனப் பரிதி உரைப்பதால், இவர் உரைக்கு பட்டடையாகவும் கரும்பு வெட்டப் பயன்படும் தகடு எனவும் கொள்ளல் வேண்டும்.
பழைய உரை 'நட்புக் கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் கூடுமளவும் நட்புக் கூடினவர் போல ஒழுகுவார் நட்பு, சம்மட்டி எடுத்து அடித்தற்குப் பட்டடைக்குறடாம்' எனச் சொல்வதால் இது குறடைக் குறிப்பதாக உள்ளது.

'பட்டடை' என்பது கொல்லர் உலைக்களத்துள்ள உருக்கொடுக்க உதவும் இரும்பாலான துணைக்கருவி.

உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே ஒத்தவர்போல பழகுபவரது நட்பு வாய்ப்பான இடம் வரும்போது அடிக்கும் பட்டடை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மனம் கூடாநட்பினர் நட்டார்க்குத் துயரமே உண்டாக்குவர்.

பொழிப்பு

உள்ளம் பொருந்தாது பழகுபவர் நட்பு வாய்ப்பு வரின் அடிக்க உதவுவதாய பட்டறை போன்றது.