இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0823



பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது

(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:823)

பொழிப்பு (மு வரதராசன்): பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

மணக்குடவர் உரை: நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது.
இது கல்வியால் அறிதல் அரிதென்றது.

பரிமேலழகர் உரை: நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்; மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை.
(நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: பல நல்ல நூல்களைக் கற்றவிடத்தும் அதனால் மனம் திருந்தி நட்பாதல் குணங்களால் மாட்சிமைப்படாதார்க்கு இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது.

பதவுரை: பல-பல; நல்ல-நன்மையானவை; கற்றக்கடைத்தும்-கற்ற இடத்தும், கற்றாலும்; மன-உள்ளம்; நல்லர்-நன்மையுடையவர்; ஆகுதல்-ஆதல்; மாணார்க்கு-மாட்சிமையில்லார்க்கு, குணநலம் இல்லாதவர்க்கு, தீயோர்க்கு; அரிது-அருமையானது.


பலநல்ல கற்றக் கடைத்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும்;
பரிப்பெருமாள்: நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும்;
பரிதி: பல நூல் கற்றாலும்;
காலிங்கர்: நல்ல நூல்கள் பலவற்றையும் பழுதறக் கற்ற இடத்தும் அக்கல்விச் சிறப்பால்;
பரிமேலழகர்: நல்லன பல நூல்களைக் கற்ற விடத்தும்;
பரிமேலழகர் குறிப்புரை: நல்லன - மனக் குற்றம் கெடுப்பன.

'நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும்', 'பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும்', 'மகிழ்ச்சியுண்டாகும்படி பல நல்ல வார்த்தைகளைப் பேசி உறவாடினாலும்', 'பல நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்லன பலவற்றைக் கற்ற விடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது கல்வியால் அறிதல் அரிதென்றது.
பரிப்பெருமாள்: மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மனம் நன்மையாவது செம்மை; அஃது இவ்விடத்து இன்மையால் மன நன்மை இல்லாதார் ஆயினார். இது கல்வியான் அறிதலரிது என்றது.
பரிதி: மனம் திருந்தி நற்குணம் உண்டாதல் மாணார்க்கு அரிது என்றவாறு.
காலிங்கர்: தன் நெஞ்சு இனியர் ஆகுதல் உள் தூய்மை இல்லாதார்க்கு அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'மனம் நல்லர்' எனச் சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் - செற்றம் விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி நட்பு என்று கருதற்க' என்பதாம். [செற்றம் விடுதல்-தீராக்கோபத்தை ஒழித்தல்]

'மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் 'மனம் திருந்தி நற்குணம் உண்டாதல்/நட்பாதல் பகைவர்க்கு இல்லை' எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வஞ்சகர்க்கு நல்ல மனம் வாராது', 'அதனால் மனம் திருந்தி நல்லவராதல் இனநலம் இல்லாத கீழோர்க்கு இயலாது', '(திடீரென்று நட்புக் கொண்டாட வரும்) பகைவர்களுடைய எண்ணம் நல்லதாக இருக்குமென்பது முடியாத காரியம் (என்பதை உணர வேண்டும்)', 'மனந்திருந்தி, நல்லவராகுதல் தீயோர்க்குக் கடினமாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்ல மனம் உடையவராகப் பழகுதல் மாட்சியில்லார்க்கு கடினமாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்லன பலவற்றைக் கற்ற விடத்தும் நல்ல மனம் உடையவராகப் பழகுதல் மாணார்க்குக் கடினமாம் என்பது பாடலின் பொருள்.
'மாணார்' யார்?

பெற்றகல்வி உள்ளன்போடு பழகுதலுக்கு உதவுமா?

பல நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் மனத்தால் நல்லவர் ஆகுதல் பண்புநலம் இல்லாதவர்க்கு இல்லை.
நல்ல நூலுக்குள் நல்ல பொருள் அடங்கியிருப்பதால் படிப்பவர் அதைப் பெற்றுப் பயன் அடையமுடியும். நூல்கள் கற்பவர் கல்வி அறிவு பெறுவதுடன் மனநலமும் அடைவர் என்பது பொதுவான கருத்து. கற்பன எல்லாம் மனப்பண்பாட்டிற்கே; மனநலம் உடையவரே நல்ல நட்பாளராக இருக்க முடியும். ஆயினும் நல்ல நூல்கள் படிப்பதால் மட்டும் ஒருவன் நல்ல நட்பினனாக ஆகி விடமுடியாது. நூல்கள் கற்றவர் எல்லாரும் குணமுடையவராய் இருப்பர் என எதிர்பார்க்க முடியாது. எனவே ஒருவன் நன்கு படித்தவன் என்பதால் மனம் தூய்மையாய் இருப்பான் என்று நம்பி நட்புக்கொள்ள வேண்டாம். கல்வியால் குணம் திருந்தமாட்டாத மாந்தர் உலகில் உண்டு.
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும் அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராய்ப் பழகுதல் மாட்சிமை அடையாதவர்க்கு இல்லை. ஒருவன் கல்வி பெற்றவன் என்பதாலேயே, அவன் ஒரு பண்பாளன் என்று முடிவிற்கு வந்து விடக்கூடாது. கற்றவர்களிலும் குணக்கேடானவர்களும் பெருங்குற்றம் புரிவர்களும் பலர் உண்டு. படிப்பதனாலே ஆற்றல் பெருகலாம்; அன்புள்ளம் வளரும் என்று சொல்வதற்கில்லை; அறிவு கூர்மை பெறலாம்; குணம் கூடிவரும் என்று கூறுவதற்கில்லை. எனவே ஏட்டறிவு கொண்டவர்கள் அனைவரும் பண்பாளர்கள் ஆகிவிடுவதில்லை. நல்ல நூல்கள் பல கற்றிருப்பதால் அவர்களது வஞ்சகத்தன்மை மாறுவதில்லை. எனவே படித்தவனாயிருக்கிறானே என்பதற்காக நட்பில் நெருக்கம் காட்ட வேண்டாம்.

'மனநல்லர்' என்பது மனம் செம்மைப்பட்டு உள்ளன்போடு பழகுபவர் என்று பொருள் படும். மனத்தூய்மை உள்ளவரே மனநல்லர் ஆவர். மன உணர்வைக் கொண்டே நட்பை முடிவு செய்திடல் வேண்டும் அதாவது மனத்தினால் நல்லவர்களை மட்டுமே நண்பர்களாக கொள்ள வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது; மிகவும் கற்றவர் என்பதற்காக, ஒருவரை மனநலம் உடையவர் எனச் சொல்ல முடியாது எனவும் சொல்கிறது. நல்ல பண்பு இல்லாதவர்கள் பல நல்ல நூல்களைக் கற்றாலும் நல்ல மனம் உடையவர்களாக மாறுவதில்லை; அவர்கள் உண்மையான அன்போடு பழகமாட்டாதவர்களாகவும் இருப்பர்.

'மாணார்' யார்?

'மாணார்' என்ற சொல்லுக்கு மாட்சியில்லார், உள் தூய்மை இல்லாதார், பகைவர், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர், மாண்பற்றவர், வஞ்சகர், இனநலம் இல்லாத கீழோர், மாண்பு இல்லாதவர், தீயோர், குணங்களால் மாட்சிமைப்படாதார், நற்குண மாண்புகள் இல்லாதவர், இயற்கையாக நல்ல குண நலன்களைப் பெறாத ஒருவன், மாட்சிமையான குணமில்லாத பகைவர், நல்லோர் தொடர்பிலாதார் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறளிலுள்ள நல்லர் ஆகுதல் என்ற தொடர்க்குப் பரிமேலழகர் செற்றம் விடுதல் அதாவது மனத்தில் நெடுநாளாக இருந்த தீராச் சினத்தை ஒழித்தல் எனப் பொருள் கண்டு கல்வி கற்றமையால் பழைய பகைமையை மறக்கும் நல்ல குணம் வராது எனப் பாடலுக்கு உரை கூறினார். இதனால் அவரைப் பின்பற்றுபவர்கள் மாணார் என்ற சொல்லுக்குப் பகைவர் எனப் பொருள் கூறத் தொடங்கினர்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் (சிற்றினம் சேராமை 455 பொருள்: உள்ளத் தூய்மை செயலில் நயம் என இவை இரண்டும் தான் இணைந்த கூட்டத்தின் நன்றாதலைப் பற்றுக்கோடாகக் கொண்டு வரும்) என்ற குறளை மேற்கோள் காட்டி 'மாணார்' என்பதற்குப் பகைவர், உள்ளன்பிலார் என்னும் உரைகளினும் 'நல்லோர் தொடர்பிலாதார்' என்னும் இறையரசன் பொருள் சிறப்புடையது என்கிறார் இரா. சாரங்கபாணி.

மாண்பு, மாட்சி என்ற சொற்கள் குறளில் சிறப்பு, பெருமை என்ற பொருளிலேயே பயிலப்பட்டுள்ளன. இங்கும் மாணார் என்பதற்கு மாண்பு இல்லாதவர் என்ற நேர்பொருள் கொள்வதே தகும்.

'மாணார்' என்ற சொல் மாட்சியடையாதார் என்ற பொருள் தரும்.

நல்லன பலவற்றைக் கற்ற விடத்தும் நல்ல மனம் உடையவராகப் பழகுதல் மாட்சியில்லார்க்கு கடினமாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மனநலம் இல்லாதவருடான தொடர்பு கூடாநட்பாம்.

பொழிப்பு

நல்லன பலவற்றைக் கற்றிருந்தாலும் நல்ல மனம் உடையவராகப் பழகுதல் மாட்சியில்லார்க்கு கடினமாம்