இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0830பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்

(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:830)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் விடவேண்டும்.

மணக்குடவர் உரை: பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.

பரிமேலழகர் உரை: பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க.
(அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தம் பகைவர் தமக்கு நண்பராக நடக்கும் காலம் வந்தால் தாமும் அவருடன் முகத்தால் நட்புக்கொண்டு மனத்தால் நட்பினை நீக்கிவிடுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.

பதவுரை: பகை-பகை; நட்பாம்-நட்பு ஆகும்; காலம்-பொழுது; வருங்கால்-வரும்போது; முகநட்டு-முகத்தால் நட்பு கொண்டு; அகநட்பு-மனத்தாலான நட்பு; ஒரீஇ-நீங்க, ஒழிய; விடல்-விடுக, விட்டொழிக.


பகைநட்பாம் காலம் வருங்கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து;
பரிப்பெருமாள்: பகைவர் நட்பின் நட்பாங்காலம் வந்தவிடத்து;
பரிதி: பகையான் உறவாக வந்தால்;
காலிங்கர்: இங்ஙனம் பகை நட்பு ஆம் காலம் வருங்கால்;
பரிமேலழகர்: தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்;
பரிமேலழகர் குறிப்புரை: அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு.

'தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவன் நண்பனாக வரும் சமயம்', 'பகைவன் நட்புக் கொண்டாட வருகிற சமயங்களில்', 'பகைவர் தமக்கு நட்பினராய் ஒழுகுங் காலம் வந்தால்', 'தம் பகைவர் தமக்கு நட்பாய் ஒழுகும் காலம் வந்தால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவர் தமக்கு நட்பாய் ஆகும் காலம் வரும்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.
பரிப்பெருமாள்: முகத்தால் நட்பினைச் செய்து அகத்தால் நட்பினை நீங்கவிடுக என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகைவோராய நட்டோர்மாட்டு ஒழுகும் திறன் கூறிற்று.
பரிதி: நல்ல காரியம் என்று கூடி மனத்துள் வார்த்தை சொல்லாமல் முகத்தில் வார்த்தை சொல்லவும் என்றவாறு.
காலிங்கர்: இது ஒன்று உடைத்து எனக் கருதிக் குறிக்கொண்டு தாமும் புறமே முகத்தினான நட்புச் செய்து அகத்தான இவரை நம்பி நள்ளாது ஒழித்து விடுக என்றவாறு. [நள்ளாது- நட்பு கொள்ளாது]
பரிமேலழகர்: தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க.
பரிமேலழகர் குறிப்புரை: இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.

'முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகத்தால் ஏற்று அகத்தால் நட்பை விடுக', 'முகத்தளவில் நண்பனாகவே நடந்துகொண்டு, மனதில் அவனை நண்பனாக நம்பிவிடுவதை விலக்க வேண்டும்', 'தாமும் முகத்தால் அவரோடு நட்புச்செய்து அகத்தால் நட்பினை ஒழித்துப்பின் வெளிநட்பினையும் விடுக', 'முகத்தால் நட்புச் செய்து அகத்தால் நட்புக்கொள்ளுதலை விட்டுவிடல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முகத்தால் ஏற்று மனத்தால் நட்பை நீங்கவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைவர் தமக்கு நட்பாய் ஆகும் காலம் வரும்பொழுது முகத்தால் ஏற்று மனத்தால் நட்பை நீங்கவிடுக என்பது பாடலின் பொருள்.
'ஒரீஇ விடல்' என்பதன் பொருள் என்ன?

வேண்டும் காலத்து நட்புக்கொண்டும் வேண்டாத நேரத்தில் தொடர்பை நீக்கியும் மனவேற்றுமையுடையாருடன் பழகலாம்.

பகைவர் நமக்கு நட்பினராக ஆகவேண்டியதாக இருந்தால், அந்தச் சமயத்தில் அவரிடம் முகத்தால் மட்டும் நட்புடையாரைப் போல ஒழுகி, மனத்தால் நட்புச் செய்தலை நீக்கிவிடுதல் வேண்டும்.
உலகியலில் சில சமயம் பகைநெஞ்சம் கொண்டோரும் நம்முடன் நண்பர் போலப் பழக வேண்டிய காலம் நேர்வதுண்டு. அப்பொழுது நாம் பகைமை பாராட்ட இயலாதிருக்கும். அதுபோல் மனித உறவில், நம்மோடு மன ஒற்றுமை இல்லாதவருடனும் நாம் பழகவேண்டிய இடங்களும் நிலைகளும் பல உள. அவைபோன்ற வேளைகளில் நட்புக்கு உள்ளே நட்புக்கு வெளியே என்ற நட்பாட்டம் நாம் ஆடலாம் என்கிறது பாடல்.
குழுவாகச் செயல்படும்பொழுது மனம் ஒவ்வாதவரும் நாமும் ஒரே குழுவில் இருந்தால் இணைந்தே பொது நன்மைக்காக இணக்கமாக செயல்பட வேண்டியிருக்கும். அதுபோல அண்டை வீட்டுக்காரருடன் வேறொரு காரணத்துக்காக பகை உண்டாயிருந்தாலும் பல நேரங்களில் இருவரது நன்மை கருதி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் தேவை ஏற்படும். இவை பகை நட்பாகும் காலத்துக்கு எடுத்துக்காட்டுக்கள். அதுபோன்ற சமயங்களில், நாம் வெளியே சிரித்துப் பேசி, உள்ளத்தால் ஒட்டாது பழகலாம். அதாவது பகைவர் நட்புக்கொண்டார் போல் நம்முடன் பழகும் சூழல் ஒன்று ஏற்பட்டால், அக்காலம் மட்டும் முகத்தால் நட்புக் கொண்டவர்போல் பழகி, பொது நன்மை உண்டானபின் மனத்திலிருந்து நட்பை நீக்கிவிடலாம்.

முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு (நட்பு 786 பொருள்: முகமட்டும் மலர நட்புக்கொள்வது நட்பாகாது; உள்மனமும் மலரும்படியாகப் பழகி நட்புக்கொள்வதே நட்பாகும்) என்று முந்தைய அதிகாரம் ஒன்றில் சொன்னதுதான் மனமொத்த நட்பின் இலக்கணம். மற்ற உலகியல் உறவுகளையும் நட்பு தொடர்பான அதிகாரங்களில் ஆங்காங்கே கருத்தாடல் செய்கின்றார் வள்ளுவர். இடத்துக்கும் காலத்துக்கும் மாந்தர்க்கிடையே உள்ள உறவுகளுக்கும் ஏற்ப ஒருவன் தன் நிலைப்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல்கள் நேரத்தான் செய்கின்றன. பகைவர்களிடம் கூட்டுச்சேரக் காலமும் சூழலும் ஏற்படும்பொழுது, அதாவது நம்மாலும் பகையென்று வெளிப்பட அவரை நீக்கமுடியாத காலத்தில், முகத்தளவில் நட்பு பாராட்டிவிட்டு, பின், உரிய நேரத்தில் அந்த நட்பிலிருந்து விலகிவிட வேண்டும் என்ற உத்தியைக் கற்றுத்தருகிறது இக்குறள். நமது அன்றாட வாழ்க்கையில் இத்தகைய தருணங்கள் அடிக்கடி உண்டாவனதாம்.

'ஒரீஇ விடல்' என்பதன் பொருள் என்ன?

'ஒரீஇ விடல்' என்றதற்கு நீங்கவிடுக, வார்த்தை சொல்லாமல், ஒழித்து விடுக, அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க, நீங்கி, வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் விடவேண்டும், விட்டுப் பிறகு அந்த முகத்துறவையும் தவிர்க்க வேண்டும், ஒழித்துப் பின் முக நட்பையும் ஒழித்து விடுக, முழுவதும் கைவிட்டு, இறுதியில் சூழ்நிலை மாறும்பொழுது புறத்தே நட்பையும் கைவிடுக, விடுக, நீக்கிவிடுக, விலக்கிவிட வேண்டும், ஒதுக்கி விடுதல் வேண்டும், ஒழித்துப்பின் வெளிநட்பினையும் விடுக, விட்டுவிடல் வேண்டும், ஒதுக்கி விட வேண்டும், எண்ணத்தைவிட்டு ஒழித்துவிடுவாயாக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘ஒரீஇ விடல்’ என்ற தொடரை இரு சொல்லாகக் கொண்டு '(அகத்தால்) அதனை விட்டுப்பின் அதுவும் விடுக' என்ற பொருளில் சிலரும் ஒரு சொல் நீர்மைத்தாய்க் கொண்டு 'ஒழித்துவிடுக' என்ற பொருளில் பிறரும் உரை கண்டனர். இவ்விரு வகை உரைகளும் ஏற்கத்தக்கனவே.

'ஒரீஇ விடல்' என்ற தொடர் ஒழித்துவிடுக என்ற பொருள் தரும்.

பகைவர் தமக்கு நட்பாய் ஆகும் காலம் வரும்பொழுது முகத்தால் ஏற்று மனத்தால் நட்பை நீங்கவிடுக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கூடாநட்பினரிடமும் நேரம் வரும்போது சிரித்துப்பேசி பிரிந்துவிட வேண்டும்.

பொழிப்பு

பகைவர் நட்பாய் ஆகும் நேரத்தில் முகத்தால் நட்புக்கொண்டு மனத்தால் நட்பினை நீங்கவிடுக.