நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
(அதிகாரம்:கூடாநட்பு
குறள் எண்:826)
பொழிப்பு (மு வரதராசன்): நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
|
மணக்குடவர் உரை:
உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும் பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.
பரிமேலழகர் உரை:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும்.
('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)
தமிழண்ணல் உரை:
உற்ற நண்பரைப்போல் நல்லவற்றையே நம்முன் பேசினாலும் நம்முடன் மனம்பொருந்தாதவர் பேச்சே அது என்பது, அவர் பேசிக்கொண்டிருக்கும் அப்பொழுதே அறியப்படும். பேச்சு நடிப்பு என்பது பேசும் முறையிலேயே வெளிப்பட்டுவிடும். ஏமாறாமல், உடனே கண்டுகொள்ள வேண்டும் என்பதும் கருத்து.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப்படும்.
பதவுரை: நட்டார்போல்-நண்பர்கள் போல்; நல்லவை-நன்மை பயப்பன; சொல்லினும்-சொன்னாலும்; ஒட்டார்-மனத்தினால் பொருந்தாதார், அகத்து ஓர் ஒட்டு இல்லாதார்; சொல்-மொழி; ஒல்லை-விரைவில், கடிதின்; உணரப்படும்-அறியப்படும்.
|
நட்டார்போல் நல்லவை சொல்லினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உற்றாரைப்போல நல்லவானவை சொன்னாராயினும்;
பரிப்பெருமாள்: நட்டாரைப்போல நல்லவை ஆராய்ந்து சொல்லினும்;
பரிதி: உற்றாரைப்போல நல்லது சொன்னாலும்;
காலிங்கர்: தாமும் சிலரோடு நட்டார்போல் நடித்துச் செவிக்கு இனியனவே சொல்லினும்;
பரிமேலழகர்: நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம்.
'நட்டாரைப்போல நல்லவை சொன்னாராயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நண்பர் போல நல்லன கூறினாலும்', 'நண்பரைப் போன்று நன்மைதரும் சொற்களைப் பேசினாலும்', 'நண்பர்களைப் போல் நன்மைகளையே பேசினாலும்', 'நண்பர்போல நல்லவற்றைச் சொன்னாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நண்பர் போல நல்லவற்றைச் சொன்னாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர் சொல்லுஞ்சொல் விரைந்தறியப்படும்.
பரிப்பெருமாள்: மனத்தினால் பொருந்தாதார் சொல்லை இதுவும் ஒரு வினையுடைத்து என்று விரைய ஆராயப்படும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, காரியமானவற்றைச் சொல்லினும் தேறலரிது என்றது.
பரிதி: கூடா நட்பார் குணம் சடுதியிலே அறியலாம் என்றவாறு. [சடுதியிலே - விரைவிலே]
காலிங்கர்: அகத்து ஓர் ஒட்டு இல்லாதார் சொல்லும் அச்சொல் தானும் விரைய ஆராய்ந்து கொள்ள அடுக்கும் என்றவாறு. [ஒட்டு-பொருத்தம்; அடுக்கும் - பொருந்தும்]
பரிமேலழகர்: பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார். [ஒல்லை-விரைவில்]
'மனத்தினால் பொருந்தாதார் சொல் விரைந்தறியப்படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீயவர் கருத்து உடனே தெரிந்து விடும்', 'பகைவர் கூறும் சொற்கள் தீமைதரும் என்பது அவர் மேற்கொள்ளும் செயலால் விரைவில் விளங்கிவிடும்', 'பகைவர்களுடைய பேச்சின் உட்கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்', 'பகைவர் சொற்கள் வேறென்பதை விரைவாக அறியலாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உள்ளத்தால் பொருந்தாதார் சொற்கள் வேறென்பதை உடனே அறிந்து கொள்ளலாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நண்பர் போல நல்லவற்றைச் சொன்னாலும் உள்ளத்தால் பொருந்தாதார் சொற்கள் வேறென்பது ஒல்லை உணரப்படும் என்பது பாடலின் பொருள்.
'ஒல்லை உணரப்படும்' என்றால் என்ன?
|
உள்ளன்பு இல்லாமல் பழகுபவர் சொல்நடை இயல்பாக இருக்காது.
நண்பர்போல் நன்மையானவைகளைப் கூறுவனபோல் பேசினாலும் மனத்தால் ஒன்றாதவர்தம் சொற்களின் உண்மைத் தன்மையை விரைவில் அறிந்துவிடலாம்.
ஒருவன் பேச்சிலுள்ள சொற்களையும் சொல்லும் வகையையும் கொண்டு அவனது பேச்சின் ஆழத்தை ஓரளவு கண்டறியலாம். இனிமையாகவே பேசினாலும் பொய்ச்சொல் வெளிப்பட்டுப் பகையான நெஞ்சினைக் காட்டிவிடும். பேச்சின் கருத்துக்கள், எந்த சூழலில் சொல்கிறான், சொல்லும்போது எத்தகைய உணர்ச்சிகளைக் காட்டுகிறான் என்பனவற்றிலிருந்து வஞ்சகமாக நடிக்கின்றானா அல்லவா என்பதை உய்த்துணர முடியும்.
நட்புக்குரியவன் அல்லன் என்று தெரிந்தால் அந்நட்பினை விட்டொழிக்க வேண்டும்.
'ஒட்டார்' என்ற சொல்லுக்குக் காலிங்கர் 'அகத்து ஓர் ஒட்டு இல்லாதார்' என விளக்கம் தருவார்.
'ஒல்லை உணரப் படும்' என்ற ஈற்றடியைக் கொண்ட இன்னொரு குறள் உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் (குறிப்பறிதல் 1096 பொருள்: அயலார் போலப் பேசினாலும் பகையில்லாதவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று விரைவில் உணரப்படும்) என்று காதலி தன் தலைவன் பற்றிச் சொல்லும். இங்கு இன்சொல்வழிப் பகைநெஞ்சமும் காமத்துப்பால் செய்யுளில் சுடுசொல்வழி நட்பு நெஞ்சும் காட்டப்பட்டன.
|
'ஒல்லை உணரப்படும்' என்றால் என்ன?
'ஒல்லை உணரப்படும்' என்றதற்கு விரைந்தறியப்படும், விரைய ஆராயப்படும், சடுதியிலே அறியலாம், விரைய ஆராய்ந்து கொள்ள அடுக்கும், அச்சொல்லிய பொழுதே அறியப்படும், மெய் என்று நம்பப்போகாது, நன்மை பயவாவென்று உடனே மனதிற் கருதவேண்டும், உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும், அவர் பேசிக்கொண்டிருக்கும் அப்பொழுதே அறியப்படும், உடன் உணரப்படும், உடனே தெரிந்து விடும், மேற்கொள்ளும் செயலால் விரைவில் விளங்கிவிடும், உட்கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும், விரைவில் உண்மை உணரச் செய்து விடும், வேறென்பதை விரைவாக அறியலாம், உண்மைத் தன்மை விரைவில் அறியப்படும், பொய்ம்மை விரைவில் வெளிப்பட்டுவிடும், செயலை மேற்கொள்ளும்போது விரைவில் விளங்கிவிடும், வேறுகுறிப்புகளான் வெளிப்படும், வினைபயனால் விரைந்துணரப்படும், செயல் முறைகளால் விரைந்து உணரப்படும்' என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
விரைவில் ஆராய்ந்து தெளிக என்று பரிப்பெருமாளும், காலிங்கரும் இத்தொடர்க்குப் பொருள் கூறினர். சொல்லின் உண்மைத்தன்மை விரைவில் தெரியவந்துவிடும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. நட்பாடவந்தவர் நல்லவைதான் சொல்கிறாரானாலும் அவற்றின் பயனைக் கொண்டு அவர் சொல்லில் உண்மை இல்லை என்பதை விரைவில் அறிந்துகொள்ளலாம் (கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் என்றாற்போல) எனவும் மேற்கொள்ளும் செயலால் விரைவில் விளங்கிவிடும் எனவும் பொருள் கூறினர்.
தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வருபவரிடம் அவ்வளவு விரைவில் செயலை ஒப்படைத்துவிட முடியாது.
கூடும் நட்பா இல்லையா என்பதைப் பயன் முடிவு வரை காத்திருக்க வேண்டும் என்றும் இப்பாடல் சொல்லவில்லை. விரைவிலேயே தெரிந்து விடும் என்று பாடல் சொல்வதால் அவர் சொல்லிலிருந்தே முடிவு எட்டப்படவேண்டும் என்பதாகிறது.
ஒருவரது பேச்சிலிருந்தே அவரது கல்வியளவு, ஒழுக்கமுறை, நாகரிகப் பண்பு என்பனவற்றைக் காணமுடியும் என்பர்.
அவரது பேச்சிலிருந்தே சொல்லின் உண்மைத் தோற்றத்தை உடனே கண்டுகொள்க என்கிறது குறள்.
'ஒல்லை உணரப்படும்' என்ற தொடர் (சொல்லின் உண்மைத்தன்மை) விரைவில் உணரப்படும் என்ற பொருள் தருவது.
|
நண்பர் போல நல்லவற்றைச் சொன்னாலும் உள்ளத்தால் பொருந்தாதார் சொற்கள் வேறென்பதை உடனே அறிந்து கொள்ளலாம் என்பது இக்குறட்கருத்து.
கூடாநட்பினர் சொல் பிறழ்ந்தே வரும்.
நண்பர் போல நல்லவற்றைச் சொன்னாலும் பொருந்தாதவர் சொற்கள் உடனே தெரிந்து விடும்
|