இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0541 குறள் திறன்-0542 குறள் திறன்-0543 குறள் திறன்-0544 குறள் திறன்-0545
குறள் திறன்-0546 குறள் திறன்-0547 குறள் திறன்-0548 குறள் திறன்-0549 குறள் திறன்-0550

செங்கோன்மையாவது செவ்விதாகிய முறைசெய்தல் உடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார்; அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று.
- மணக்குடவர்

செங்கோன்மை என்பது செவ்விய கோல் அதாவது வளையாத கோல் போன்ற நேர்மையான ஆட்சியைக் குறிக்கும். குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் அரசியல் அறத்தைப் பேணுவது ஆட்சியாளரது கடமை. அரசாட்சியில் குற்றத்தையும் குணத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து செம்மையாக ஆள்வதே செங்கோன்மையாகும். வருவாய், வரிமுறை, நீதி, நிர்வாகம், அரசுப்பணி, தேர்வு முறை போன்ற அனைத்து அரசாட்சியின் உறுப்புக்களும் மக்கள் நலங்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியவை. இவை எல்லாவற்றிலும் நேரிய ஆட்சிமுறை தேவை. இவற்றில் உண்டாகும் குற்றங்களை ஆராய்ந்து நீதி வழங்குதல் பற்றியே இவ்வதிகாரம் பேசுகிறது. நீதி வழங்குதல் என்பதை முறை செய்தல் என்கிறார் வள்ளுவர். ஆராய்ந்து எந்த ஒரு பக்கமும் அன்பு காட்டாது தெளிவாகத் தகுந்த ஒறுத்தல் விதிப்பதை முறை செய்தல் எனக் குறிக்கிறார் அவர். நல்லாட்சியே செங்கோலாட்சி.

செங்கோன்மை

முறைசெய்து நேர்மையான தண்டனை வழங்குவது ஒரு சமுதாயத்தை வளமுள்ளதாகவும் மனநிறைவுள்ளதாகவும் ஆக்கும். இது செங்கோன்மையின் அடிப்படைக் கருத்து. செங்கோல் என்பது நடுநிலை தவறாத நெறிபிறழாத ஆட்சி முறையைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகும். தன் கையிலிருக்கும் செங்கோல் நேராக இருப்பதைப் போல், கோணலற்ற நேர்மை மிக்க அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அரசனுக்கு அக்கோல் நினைவூட்டுவதாக இருந்தது. அது துலாக்கோல் போன்ற செவ்விய ஆட்சி முறையை உணர்த்தியது. குற்றம் இன்னதென்று ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவு நிலைமையில் நின்று, செய்யத்தக்கதை ஆராய்ந்து செய்வதே முறைசெய்தலாகும் என்று ஒரு குறட்பா எடுத்துரைக்கிறது. நீதி எனும் சொல்லின் பொருளினையே 'முறை' என்னும் சொல்லால் சிறப்பு வகையான் குறிக்கப்பட்டது என்பது தெளிவு.

செங்கோன்மை என்பது உள்நாட்டு அரசியல் பற்றியது. உள்நாட்டு அமைதி காப்பாற்ற வேண்டுமானால் செங்கோல் ஆட்சி அமைவது மிகத் தேவை. நாட்டின் உள்ளாட்சி முறைமை யுடையதாக இருந்தால், வலிய அயற்பகையும் படைகொண்டு வெல்ல முயலமாட்டா. அறவோர் தந்த நூற்கருத்துக்களையும் அறச்செயல்களையும் காப்பது இச்செங்கோலே; இதற்கு மிஞ்சியது வேறொன்றில்லை. செங்கோல் ஓச்சும் ஆட்சியாளனை குடிமக்கள் அடியொற்றிப் பின்பற்றுவர். முறை மாறாத நாட்டில் மழையும் விளைச்சலும் பெருகும் என்ற அறம் சார்ந்த நம்பிக்கை வள்ளுவர்க்கு உண்டு. அரசு என்பது பேராற்றல் தங்கிய அமைப்பு. அதை ஆள்பவன் தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், த்ன் கொள்கைகளை எதிர்ப்போரை ஒடுக்கவும் தீது செய்வான் என்றும், குடிக்காப்பு என்னும் பெயரால் கொலைப்பயிற்சி பெற்ற நாட்டுப்படைத்தொகையைப் பயன்படுத்தி, கொலைபல செய்து தன்னைக் காத்துக் கொள்வான் என்று கருதிய வள்ளுவர் படைப்பெருக்கு வலியாகாது; வலி என்பது குடிமக்களின் நாட்டின் மேல் உள்ள பற்றுக்கோடு என்றார். வெற்றிகரமான ஆட்சி என்பது போர்ப்படையின் வலியால் உண்டாவதில்லை; வளையாத செங்கோலே அதை முடிவு செய்யும். ஆட்சியாளன் நாட்டைக் காக்கிறான். அவனை செங்கோலாட்சி காக்கும். முறை வேண்டுவோர்க்கு எளிதாகவும் காலத்தாழ்ச்சி இன்றியும் நீதி கிடைக்க வேண்டும். பிறரிடமிருந்து இடையூறு வராமல் குடிமக்களைக் காப்பாற்ற குற்றம் செய்வோரைத ஆட்சியாளன் தண்டிப்பான். அப்படி தண்டிப்பது அவன் கடமையாதலால் அவன் மீது எந்தப் பழியும் சென்று சேராது; மிகக் கொடியவர்க்கு மிகக் கடும்தண்டனை தருவது பசும்பயிர்களைக் காக்கக் களை எடுப்பது போன்றதுதான். இவை இவ்வரதிகாரம் தரும் செய்திகள்.

செங்கோலாட்சி என்பது ஒரு ஆட்சியாளன் எவ்வாறு முறைசெய்தல் வேண்டும் என்பதைச் சொல்வது. படைகொண்டு குடிகளை ஆள்தல் கூடாது; முறை கொண்டு ஆள்கை வேண்டும். கண்ணகியின் கணவனான கோவலனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை அறிந்ததும், தன் தவறை உணர்ந்த பாண்டிய மன்னன் அரியணையில் தன் உயிரை நீத்து வளைந்த செங்கோலை நேர் செய்தான். செங்கோன்மைக்கு இலக்கணமாக ஆனவன் இந்த அரசன். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் (இறைமாட்சி குறள் 388) என்று பிறிதோரிடத்தில் கூறியுள்ளார் வள்ளுவர்.

செங்கோன்மை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 541ஆம் குறள் ஆராய்ந்து, எவரிடத்தும் அன்பு காட்டாது, இறைத்தன்மையுடன், அரசியல் தெளிந்து ஆளுதல் செய்வதே நீதியாட்சியாகும் என்கிறது.
  • 542ஆம் குறள் உலகத்து உயிர்கள் எல்லாமும் மழை உளது என்ற நம்பிக்கையில் அஞ்சாது வாழும். அதுபோல், குடிமக்கள் அரசின் செங்கோல் ஆட்சி முறையை நம்பி வாழ்கின்றனர் என்பதைக் கூறுவது.
  • 543ஆம் குறள் அறவோர் இயற்றிய நூல்களுக்கும் அறநெறிச் செயற்பாடுகளுக்கும் காரணமாய் நிற்பது ஆட்சியாளரின் செங்கோல் சிறப்பேயாகும் எனச் சொல்வது.
  • 544ஆம் குறள் குடிமக்களின் தேவை அறிந்து ஆட்சி நடத்துவோருடைய அரசின் வழி நிற்பர் அந்நாட்டு அனைத்து மக்களும் என்கிறது.
  • 545ஆம் குறள் ஆரவாரமில்லாமல் இயல்பாகவே செங்கோல் ஆட்சியுள்ள நாட்டில் மழை தவறாது பெய்து விளைச்சலும் பெருகி நிற்கும் எனக் கூறுவது.
  • 546ஆம் குறள் நாட்டின் படை அல்ல; அரசாட்சியே ஆள்பவனுக்கு வெற்றி தரும்; அதுவும் செம்மையினின்றும் வழுவாமல் இருக்கவேண்டும் என்கிறது.
  • 547ஆம் குறள் ஆட்சி நடத்துபவர் நாட்டையெல்லாம் காப்பர்; தடைகள் வந்தபோதும் செங்கோன்மை தவறாமை ஆட்சியைக் காக்கும் எனச் சொல்கிறது.
  • 548ஆம் குறள் முறைவேண்டி வருவார்க்கு எளிதாகக் காண வாய்ப்புத் தந்து ஆராய்ந்து முறைசெய்யாது காலத்தாழ்ச்சி செய்யும் ஆட்சியாளர், தானே கெடுப்பாரின்றியே அழிந்து போவர் என்கிறது.
  • 549ஆம் குறள் குடிகளைக் காத்து அவர்களைப் பேணுதற்காகக் குற்றம் செய்தாரைத் தண்டித்தல் ஆட்சியாளர்க்குப் பழியாகாது; அது அவர் தொழிலாகும் எனக் கூறுவது.
  • 550ஆவது குறள் கொடுஞ்செயல் செய்பவரை அரசு கொலையால் தண்டித்தல், செழித்து வளரும்பயிருலுள்ள களையை உழவன் பறித்தலுக்கு ஒப்பானதாகும் என்கிறது.

செங்கோன்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் அன்பு காட்டாது நடுவு நிலைமையுடன் தெளிந்து அரசாட்சி செய்வதே முறை செய்தல் ஆகும் என்ற கருத்தைத் தரும் ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (541) என்னும் குறள் முறைசெய்தலுக்கு வரையறை செய்தது.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு (544) என்னும் குறள் இன்றைய குடியரசு ஆட்சியின் கூறுகளைச் சொல்கிறது. மக்கள் கருத்தை மதித்துக் குடிகளை அவையிற் கூட்டித் தான் செய்வதை அவர்களுக்கு அறிவுவழியாக எடுத்துக்காட்டி, அவர்களையும், தன்னுடன் ஒருங்கு சேர்த்து எடுத்து செல்லுதலே குடி தழுவிக் கோலோச்சுதலாகும். அந்நாட்டு மக்கள் அத்தகைய அரசனிடம் நீங்கா அன்பினராய் அவன் வழி ஒழுகுவர் என்று ஆள்வோன் பெறும் பயனும் கூறினார்.

வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதூஉம் கோடாது எனின் (546) என்ற குறள் போர்ப்படைகள் அல்ல, ஆள்வோனது நேர்மையான ஆட்சியே அவனுக்கு வெற்றி தரும் என்கிறது. இது குடிகளின் ஆதரவையும் அரசன் நன்மதிப்பையும் பெற்றுத் தரும் என்ற பொருளது.
நாட்டை ஆள்பவன் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தனக்கு ஒவ்வாக் கொள்கையினரை கொலையால் அழித்தும் தன்னைக் காத்துக் கொள்ள விழைவான் என்பதனால் 'வேல் வலியை நம்பி தீமை புரியாதே; செய்யின் அழிவாய்' என்று அறிவுரை பகர்கின்றார். படைப்பெருக்கு ஆள்வோரது வலி கூட்டாது; செங்கோன்மை ஆட்சியில் விளைந்த குடிமக்களின் பற்றுக்கோடே உண்மையான வலிமை என்றார்.

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில் (549) கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்(550) 'குடிகளைக் காக்கும் நோக்கில் குற்றம் புரிந்தோரைத் தண்டிப்பதால் ஆள்பவன் நற்பெயரில் கறை படியாது; அது அவன் கடமையாதலால். கொலையினும் கொடியோரை அரசு கடுந்தண்டனையால் ஒறுப்பது பயிர் காக்க களையை நீக்குவதற்குச் சமமானதாம்' என்பவை இவற்றின் பொருள். முற்ற ஆராய்ந்து நடுநிலையோடு முறைசெய்பவன் குற்றவுணர்வோ, பழியுண்டாகுமே என அஞ்சவேண்டியதில்லை என்பது கருத்து. அரசாட்சியில் ஒறுத்தலும்-கொலைத்தண்டனை கொடுத்தலும்கூட- செங்கோன்மை சார்ந்ததே என்று இவ்விரண்டு குறள்கள் மூலம் தெளிவுபடச் சொல்கிறார் வள்ளுவர்.




குறள் திறன்-0541 குறள் திறன்-0542 குறள் திறன்-0543 குறள் திறன்-0544 குறள் திறன்-0545
குறள் திறன்-0546 குறள் திறன்-0547 குறள் திறன்-0548 குறள் திறன்-0549 குறள் திறன்-0550