இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0546



வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:546)

பொழிப்பு: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

மணக்குடவர் உரை: அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.
இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்.
(கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)

குன்றக்குடி அடிகளார் உரை: மன்னவனுக்கு வெற்றியைத் தருவது வேல் அனறு; நீதிமுறை மாறாத ஆட்சியே வெற்றியைத் தரும். போரில் வேல் கொண்டு வெற்றி பெற, நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும். வேல் வெற்றியைத் தந்தாலும், நாட்டில் நல்லாட்சி இல்லாது போனால் அந்த வெற்றி பயனுடையதாகாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வென்றி தருவது வேல்அன்று மன்னவன் கோல்; அதூஉம் கோடாது எனின்.


வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல்:
பதவுரை: வேல்-படைக்கலப் பொது; அன்று-இல்லை; வென்றி-வெற்றி; தருவது-கொடுப்பது; மன்னவன்-வேந்தன்; கோல்-முறைசெய்யுங்கோல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்;
பரிப்பெருமாள்: அரசனுக்கு வென்றி தருவது அவன் கை வேலன்று, முறை செய்தல்;
பரிதி: அரசற்கு ஆயுதம் வெற்றி கொடாது; செங்கோல் வெற்றி கொடுக்கும்;
காலிங்கர்: வேந்தர்க்கு வேலே அனறு வெற்றியைக் கொடுப்பது; மற்று மன்னனானவன் மரபினைக் கோடாமல் நடத்தும் கோலானது வென்றியைக் கொடுக்கும்;
பரிமேலழகர்: மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல்;
பரிமேலழகர் குறிப்புரை: கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார்.

'அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்கு வெற்றி தருவது வேலில்லை', 'மன்னவனுக்குப் போரில் வெற்றி தருவது அவனது வேலனறு; செங்கோலாகும்', 'அவனுக்கு வெற்றி தருவது அச் செங்கோலே, அவன் வேலன்று', 'அரசனுக்கு வெற்றியைக் கொடுப்பது அவன் கொண்டுள்ள வேற்படையன்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆட்சியாளனுக்கு வெற்றியைக் கொடுப்பது அவன் கொண்டுள்ள படையன்று, ஆட்சிமுறையேயாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அதூஉம் கோடாது எனின்:
பதவுரை: அதூஉம்-அதுவுங்கூட; கோடாது-கோணாது; எனின்-என்றால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
பரிப்பெருமாள்: அதனைக் கோடச் செய்யாதொழியின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
பரிதி: ஆதலால் செங்கோல் கைவிடுவானல்லன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அது சிறுதும் கோடாதவாறு நடத்துமாயின் என்றவாறு.
பரிமேலழகர்: அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.

'அவன் அதனைக் கோடச் செய்யானாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனது நேரான செங்கோல் ஆட்சியே', 'அச்செங்கோலும் வளையாமல் நேரிதாக இருந்தால்தான் வெற்றி கிட்டும்', 'அரசனுடைய கோலானது கோணாது செம்மையாக இருப்பின்', 'அவனுடைய நல் ஆட்சியேயாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதுவும் கோணாது செம்மையாக இருப்பின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாட்டின் படை அல்ல; அரசாட்சியே ஆள்பவனுக்கு வெற்றி தரும்; அதுவும் செம்மையினின்றும் வழுவாமல் இருக்கவேண்டும்.

ஆட்சியாளனுக்கு வெற்றியைக் கொடுப்பது அவன் கொண்டுள்ள படையன்று, கோல்தான்; அதுவும் கோணாது செம்மையாக இருப்பின் என்பது பாடலின் பொருள்.
கோல் எப்படி வென்றி தரும்?

வேல் என்ற சொல் வேல் என்ற ஆயதத்தைக் குறிப்பது.
அன்று என்ற சொல் இல்லை என்ற பொருள் தரும்.
வென்றி தருவது என்ற தொடர் வெற்றி கொடுப்பது எனப் பொருள்படும்.
மன்னவன் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள். ஆள்பவன் எனக் கொள்ளலாம்.
கோல் என்பது அரசாட்சி எனப் பொருள் தருவது.
அதூஉம் என்ற தொடர் அதுவும் கூட எனப்படும்.
கோடாது எனின் என்ற தொடர் கோணாது நேராக இருந்தால் என்பதை உணர்த்துவது.

ஆள்வோர்க்கு வெற்றிகளை வழங்குவது படைபலம் அன்று; ஆட்சிமுறைதான். அதுவும் கோணாது இருக்க வேண்டும்.

ஒரு அரசு தொடர்ந்து பொருட்செலவு செய்து தனது போர்ப்படையை வலிமையானதாக்கி தன் குடிமக்களை அடக்கிக் கொலைப்பலி கொடுத்து வெற்றி தேடுகிறது. இன்னொரு ஆட்சியாளன் நாட்டை வளமாக்குவதிலும் மக்கள் அமைதியான வாழ்வு நடத்தவும் குடிகளுக்குச் சம உரிமையும் சமவாய்ப்பும் வழங்கி செங்கோல் ஆட்சி தருகிறான். இவர் இருவரில் யார் வெற்றிகரமான ஆட்சியாளன்? வள்ளுவர் செங்கோல் ஆட்சி தருபவனே வெற்றியாளன் என்கிறார்.

வீரத்திற்குச் சின்னமாக வேலையும் நீதிக்கு அறிகுறியாக கோலையும் சொல்வர். ஆட்சியில் இருப்பவர் தம் படைவலியை பகைவரை வீழ்த்தவோ அல்லது தன் கொள்கைக்கு இணங்காத குடிகளை ஒடுக்குவதற்கோ பயன்படுத்துவர். அதிகாரம் செங்கோன்மை ஆதலால் இப்பாடல் தன் குடிமக்களை அடக்கிஆள அரசு வேலைப் பயன்படுத்துகின்றது என்பதை சொல்லவந்தது என அறியலாம். அப்படி அடக்கி ஒடுக்கும்போது அதில் அவன் வெற்றியும் பெறலாம். ஆள்வோனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வரும் அரசு என்பது பேராற்றல் கொண்டதோர் அமைப்பு. தன் நிலை காக்கவும், தனக்கு ஒத்துவராதாரை அழிக்கவும் இவன் இவ்வமைப்பின் துணை கொண்டு மக்களை அச்சுறுத்தியும் வஞ்சித்தும் எளிதாக ஆள விழைவான். படையும், பதவியும் பிற துணைகளும் கொண்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வது வெற்றியாகாது; அவை ஆட்சியாளனை வெற்றிக்குரியவனாக்கா; ஆனால் அன்பும், அறனும், அருளும், அறிவும் துணையாகக் கொண்டு ஆட்சி செய்து மக்களுக்கு நன்மை செய்தல் வெற்றி எனக் கருதப்படும். அவன் வைத்திருக்கும் வேல் அல்ல வெற்றியைத் தருவது; அவனது ஆட்சிமுறைதான் உண்மையான வெற்றி நல்குவது. அதூஉம் கோணாத நேரான ஆட்சியாக இருக்க வேண்டும் என்கிறது இப்பாடல்.

கோல் எப்படி வென்றி தரும்?

தம் வேலைக் காட்டி மக்களை மிரட்டி, ஒடுக்கி ஆட்சி செய்யும் ஓர் அரசு வெற்றிபெற இயலாது. ஆட்சி நேர்மையானதாக இல்லாது போனால் அதாவது அரசின் கோல் கோடின் அது கொடுங்கோல் அரசு என அறியப்படும். அவ்வரசை வெறுத்துக் குடிகளே அவனுக்கு பகைவராய் முடிவர். எவ்வளவுதான் படை பெருக்கமுடையதாய் இருந்தாலும், வெற்றி பெறுதல் அரிது. இது வரலாறு சொல்லும் உண்மை. ஆதலின், படைப் பெருக்கத்தினும் ஆட்சிமுறைச் சிறப்பே வெற்றிக்கு ஏதுவாம்.
'வேல் அச்சத்தால் வென்றி விளைப்பது; கோணாத கோல் அன்பால் வென்றி விளைப்பது. அன்பால் விளைந்த வென்றியோ பிறரால் தீமை வந்துழியும். குடிமக்களால் உயிரையுங் கொடுத்துக் காக்கச் செய்யும் ஆதலால் கோணாத கோலே வென்றி தருவது' என்றார். செங்கோல் ஏற்ற வழி ஆட்சிச் செருக்கால் கொடுங்கோலாகவுங் கூடுமாதலால் அதுவும் ஆகாது என்பதால் 'கோடாது எனின்' என்றார் (தண்டபாணி தேசிகர்).
நாமக்கல் இராமலிங்கம் 'போரில் வெல்லும் வெற்றி இங்கு பேசப்படவில்லை' என்று சொல்லி, 'செல்வபலம் துணைபலம், குடிகளின் ஆதரவும, வேற்றரசரின் நன்மதிப்பு எல்லாஞ் சேர்ந்த வல்லமையைக் குறித்தது வெற்றி' என்பார்.

ஆட்சியாளனுக்கு வெற்றியைக் கொடுப்பது அவன் கொண்டுள்ள படையன்று, நல்லாட்சியேயாகும். அதுவும் கோணாது செம்மையாக இருப்பின் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செங்கோன்மை செலுத்தும் ஆட்சியாளனே வெற்றிகரமானவன் எனக் கருதப்படுவான்.

பொழிப்பு

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது அவரது படைபலம் அன்று; நேரான செங்கோல் ஆட்சியே.