குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
(அதிகாரம்:செங்கோன்மை
குறள் எண்:544)
பொழிப்பு (மு வரதராசன்): குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.
|
மணக்குடவர் உரை:
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.
இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
பரிமேலழகர் உரை:
குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.
(அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.)
இரா இளங்குமரனார் உரை:
பெருநில முழுதாளும் ஆட்சியாளன் ஒருவன், தன் குடிகளைத்தழுவி ஆட்சி நடத்துவானேயானால் அவனது வழிகளைப் பின்பற்றி அவன் நாட்டினரே அன்றி உலகோரும் நிற்பர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ உலகு நிற்கும் .
பதவுரை: குடிதழீஇ-குடி மக்களை அணைத்து, குடிமக்களின் கருத்தை மதித்து அவர்கள் நன்மைக்காக; கோல்ஓச்சும்--முறை செய்யுங்கோல் செலுத்தும், செங்கோல்ஆட்சி அதாவது நல்லாட்சி செய்யும்; மாநில மன்னன்-பெருநிலம் முழுமையயும் ஆளுகை செய்யும் ஆட்சியர்; அடி-வழி; தழீஇ-பொருந்தி; நிற்கும்-நிலைத்திருக்கும்; உலகு-உலகத்தார், உலகு.
|
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியை;
பரிப்பெருமாள்: குடியைப் பொருந்தி முறையைச் செலுத்துகின்ற பெரிய நில மன்னனது அடியை;
பரிதி: குடியைப் பரிந்து காத்துச் செங்கோல் நடத்தும் மன்னன் அடியை; [பரிந்து-வருந்தி, விரும்பி]
காலிங்கர்: தனது கோற்கீழ் வாழும் குடியாகிய குலமக்களைக் குலையாமல் அணைத்துக்கொண்டு செங்கோல் நடாத்தும் பூபாலனைத் தமது ஆக்கத்திற்கு எல்லாம் அடியாக அடைந்து; [பூபாலன் - பூமியைப் பாதுகாப்பவன்]
பரிமேலழகர்: தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை;
பரிமேலழகர் குறிப்புரை: அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின.
'குடியைப் பொருந்தி/பரிந்து காத்து/அணைத்து முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடிகளை அணைத்து ஆளும் பெருவேந்தனது அடிகளை', 'குடிமக்களை அன்போடு தழுவிக்கொண்டு செங்கோல் செலுத்தும் உலகாளும் அரசனது திருவடிகளை', 'தன் குடிகளைத் தழுவிச் செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை', 'குடிமக்கள் நலத்தைக் கருதி அவர்கள் கருத்தை ஏற்று ஆட்சிபுரியும் அரசனின் அடிகளை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குடிமக்கள் நலத்தைக் கருதி அவர்கள் கருத்தை ஏற்று நல்லாட்சிபுரியும் அரசின் வழியில் என்பது இப்பகுதியின் பொருள்.
தழீஇ நிற்கும் உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருந்தி நிற்கும் உலகு.
மணக்குடவர் குறிப்புரை: இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
பரிப்பெருமாள்: பொருந்தி நிற்கும் உலகு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகம் என்றது.
பரிதி: பற்றிவிடாது உலகம் என்றவாறு.
காலிங்கர்: நிலைபெற்று வாழும் அனைத்து உயிர்களும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அடிதழீஇ என்பது தமது ஆக்க நிலைக்கு அவனே முதலாக நிற்க என்றது.
பரிமேலழகர்: பொருந்தி, விடார் உலகத்தார்.
பரிமேலழகர் குறிப்புரை: இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.
'பொருந்தி நிற்கும்/பற்றிவிடாது/நிலைபெற்று வாழும் உலகம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பற்றி உலகம் நிற்கும்', 'துணையாகக் கொண்டு உலகோர் வாழ்வர்', 'உலகத்தார் பற்றிக் கொண்டு நிற்பர்', 'தழுவி நிற்கும் உலகு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொருந்தி நிற்கும் உலகு என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
குடிமக்கள் நலத்தைக் கருதி முறைமை செலுத்தி நல்லாட்சிபுரியும் அரசின் அடிதழீஇ நிற்கும் உலகு என்பது பாடலின் பொருள்.
'அடிதழீஇ நிற்கும்' என்பதன் பொருள் என்ன?
|
ஆளப்படுவரை அரவணைத்து ஆட்சி நடத்துவோரின் பின் அந்நாட்டு மக்கள் அணிவகுத்து நிற்பர்.
குடிமக்களின் தேவைகளை அறிந்து செங்கோல் செலுத்துகின்ற பேரரசின் கொள்கைகளை முழுமனத்துடன் ஏற்று அதற்கு ஒத்துழைப்பும் தரும் அவனாளும் உலகு.
குடிமக்களைத் தன்னுடன் எடுத்துச் சென்று நல்லாட்சிசெய்யும் அரசை விரும்பி ஆதரித்து அதற்குக் கட்டுப்பட்டு நிற்பர் அந்நாட்டு மக்கள் அனைவரும்.
குடிகளின் நலனைத் தழுவிய அரசு அமைதல் வேண்டும் என்பது குறள் கூறும் அரசியலிலே தலையாய ஒரு செய்தி, அரசினைக் காப்பது குடிகள் கடன் அன்று; குடிமக்களைக் காப்பது அரசின் கடன் என்பதை விளக்கும் பாடல் இது.
குடிமக்களின் கருத்தை மதித்து, அவர்கள் நன்மைக்காக, ஆட்சி செலுத்தும் பெருநில அரசின் வழி கட்டுப்பட்டு நிற்பர் உலகோர்.
பெரிய நாட்டுக்கு ஆட்சியாளன் என்ற செருக்குக் கொண்டு தன் விருப்பப்படி அதிகாரம் செய்யாமல் குடிகளின் விருப்பங்களை அறிந்து அதற்கிணங்க அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு வேண்டிய செய்து, செங்கோல் கோணாது, முறை செய்யும் ஆட்சியாளரின் ஆட்சியின் கீழ் குடிமக்கள் வாழ விரும்புவார்கள். குடிமக்களுக்காகத்தான் ஆட்சியே தவிர, அதிகார அமைப்புக்குத் தலைமை தாங்குவதற்காக மட்டுமல்ல. குடிமக்கள் வளம்பெறும் வகையில் ஆட்சியாளர் நடந்து கொள்ள வேண்டும். அப்போது அந்நாட்டின் மாநிலம் முழுக்க உள்ளோர் அவர் கொள்கைக்கு இணங்க ஒழுகுவர்; அத்தகைய ஆளுமை கொண்டோர் தலைமையில் நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களும் அவரைப் பின்பற்றுவர் என்பதால் 'மாநில மன்னன்' என்று வள்ளுவர் கூறுகிறார்.
தழுவுதல் என்னும் சொல் மக்கள் நலன் மீது அக்கறை காட்டுதல் என்பதைக் குறிக்க வந்தது. குடிகளைத் தழுவுதல் என்றதற்கு அணைத்தல் என்று பொருள் கூறி, இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் என விளக்கினார் பரிமேலழகர். செங்கோன்மை புரியும் ஆட்சியாளர்க்கு வேண்டிய இன்றியமையாப் பண்பு குடிகளைத் தழுவுதல் என்று வலியுறுத்தப்பெறுகிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு குடிமக்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்குவார்கள். அது இல்லையேல், கலகமும் குழப்பமும் எதிர்ப்பும் அடக்குமுறையும் என விரும்பத்தகா துன்ப நிகழ்வுகளே நாட்டில் நிகழும். அடக்குமுறையைக் கையாண்டோ அச்சமூட்டியோ நிலை நிற்க நினைக்கும் ஆட்சி வெகு விரைவில் அழிந்து போகும்; எத்தகைய வலிமை படைத்த ஆட்சியாளனும் குடிமக்களின் வெறுப்புக்கும், எதிர்ப்புக்கும் முன்னிற்க முடியாது.
கோல் என்றதற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார். கோலோச்சும் என்பது நீதியை உயர்த்திச் செலுத்தும் என்ற பொருள் தருவது.
'குடிகளை அவையிற் கூட்டித் தான் செய்வதே அறம் என்பதை அவர்களுக்கு அறிவுவழியாக எடுத்துக்காட்டி, அவர்களையும், தன்னுடன் ஒருங்கு சேர்த்தல் வேண்டும். ஈதே குடி தழுவிக் கோலோச்சுதலாகும்' (தெ பொ மீ).
மன்னவனே மக்கள் கருத்தைத் தழுவிக் கோலோச்ச வேண்டும் என்னும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இன்றைய குடியரசாட்சியில், மக்கள் கருத்தை நன்கு மதித்து ஆட்சிபுரிய வேண்டுமென்பதைத் தேர்தலில் வெற்றி கொள்வோர் உணர்ந்து செயலாற்றவேண்டும்.
|
'அடிதழீஇ நிற்கும்' என்பதன் பொருள் என்ன?
'அடிதழீஇ நிற்கும்' என்ற தொடர்க்கு அடியைப் பொருந்தி நிற்கும், அடியைப் பொருந்தி விடார், அடியைப்பற்றிவிடாது, தமது ஆக்கத்திற்கு எல்லாம் அடியாக அடைந்து நிலைபெற்று வாழும், அடியைப் பொருந்தி துணையாக நிற்கும், அடி நிழலைத் தழுவி நிற்கும், அடிகளைப் பற்றி நிற்கும், திருவடிகளைத் துணையாகக் கொண்டு வாழ்வர், பாதங்களைத் தழுவிக் கொண்டு நிற்கும், வழிகளைப் பின்பற்றி நிற்பர், அடியை உலகத்தார் பற்றிக் கொண்டு நிற்பர், அடிகளைத் தழுவி நிற்கும், அடிகளை வணங்கி வாழ்த்துவர், தழுவி நிற்பர், விடாது பற்றி நிற்கும், கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர், கட்டளையை மக்கள் தலைமேல் ஏற்று அதன்படி நடப்பார்கள், பாதங்களைத் தமக்கு அடைக்கலமாகக் கொண்டு (கடவுளுக்குச் சமமாக எண்ணி என்பது பொருள்) என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் அடிகளைப் பற்றி நிற்கும் என்பதைவிட ஆள்வோரிடம் நீங்கா அன்பினராய் அவர் வழி நிற்பர் என்பது சிறந்தது.
'அடிதழீஇ நிற்கும்' என்பதற்கு அரசின் கொள்கைகளுடன் பொருந்தி நிற்கும் என்பது பொருள்.
|
குடிமக்கள் நலத்தைக் கருதி முறைமை செலுத்தி நல்லாட்சிபுரியும் அரசின் வழியில் பொருந்தி நிற்கும் உலகு என்பது இக்குறட்கருத்து.
குடிகளின் நலனுக்காகவே அரசு என்பதை உணர்வது செங்கோன்மையாம்.
குடிகளைப் பொருந்தி ஆள்வோரது வழியில் விரும்பி நடப்பர் உலகத்தார்.
|