இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0547



இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:0547)

பொழிப்பு: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

மணக்குடவர் உரை: வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு.
இது தனக்குக் காவலாம் என்றது.

பரிமேலழகர் உரை: வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
(முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நாட்டையெல்லாம் அரசன் காப்பான்; குறையற்ற நீதி அவனைக் காக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.


இறைகாக்கும் வையகம் எல்லாம்:
பதவுரை: இறை-வேந்தன்(அரசு); காக்கும்-காப்பாற்றும்; வையகம்-மண்ணுலகம்; எல்லாம்-அனைத்தும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்;
பரிப்பெருமாள்: வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்;
பரிதி: உலகத்தைச் செங்கோல் முறையாலே அரசன் காப்பானாகில்;
காலிங்கர்: இவ்வையகத்து வாழும் மக்கள் முதலாகிய உயிர்கள் அனைத்தையும் மன்னனானவன் ஒன்றினை ஒன்று நலியாமல் பாதுகாத்து ஒழுகும்;
பரிமேலழகர்: வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்;

'வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகங்களை எல்லாம் அரசன் காப்பான்', 'தன் நாட்டின் மக்களையெல்லாம் காப்பவன் மன்னவன்', 'அரசன் உலகத்தை எல்லாம் காப்பான்', 'உலகம் முழுவதையும் அரசன் காப்பாற்றுவான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாட்டையெல்லாம் ஆள்வான் காப்பான் என்பது இப்பகுதியின் பொருள்.

அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்:
பதவுரை: அவனை-அவனை; முறை-நீதி; காக்கும்-காப்பாற்றும்; முட்டா-வழுவாமல்; செயின்-செய்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது தனக்குக் காவலாம் என்றது.
பரிப்பெருமாள்: அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தனக்குக் காவலாம் என்றது.
பரிதி: அரசனை உலகம் காக்கும் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அம்மன்னவன் (தன்னைத் தான் நடாத்துகின்ற) செங்கோலாகிய நீதியானது நிறையக் காத்து நிற்கும். மற்று இதனை இடை முறியாமல் பரிகரித்துச் செய்யுமாயின் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.

'அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனை ஆட்சிமுறை காக்கும்; முறைக்குக் குறையில்லாதவாறு நெறிப்படி ஆட்சிபுரிந்தால்', 'முட்டில்லாதபடி அரசு செய்தால் அம்மன்னவனைக் காப்பது அவனுடைய நல்ல அரசாட்சி முறையே', 'அவன் வழுவாமல் செங்கோல் செலுத்துவனாயின் முறையே அவனைக் காக்கும்', 'அவன் இடையூறு வந்தபோதும் தவறாமல் அறநெறியில் ஆட்சி செலுத்துவானானால் அவனை அவனுடைய ஆட்சி முறையே காப்பாற்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவனை ஆட்சிமுறை காக்கும்; இடையூறு வந்தபோதும் முறைக்குக் குறையில்லாதவாறு ஆட்சிபுரிந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆட்சி நடத்துபவர் நாட்டையெல்லாம் காப்பர்; தடைகள் வந்தபோதும் செங்கோன்மை தவறாமை ஆட்சியைக் காக்கும்.

நாட்டையெல்லாம் ஆள்வான் காப்பான்; அவனை ஆட்சிமுறை காக்கும், இடையூறு வந்தபோதும் முறைக்குக் குறையில்லாதவாறு ஆட்சிபுரிந்தால் என்பது பாடலின் பொருள்.
'முட்டாச் செயின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

இறை என்ற சொல்லுக்கு ஆள்வோர் என்பது பொருள்.
முதலிலுள்ள காக்கும் என்ற சொல் காப்பாற்றுவர் என்றும் அடுத்துள்ள காக்கும் என்ற சொல் காப்பாற்றும் என்றும் பொருள் தரும்.
வையகம் எல்லாம என்ற சொல் நாட்டையெல்லாம எனப் பொருள்படும்.
அவனை என்ற சொல்லுக்கு அந்த ஆள்வோரை என்று பொருள்.
முறை என்ற சொல் செங்கோன்மை குறித்தது.

நாட்டை ஆள்வோர் காப்பர்; ஆட்சியையோ தடை வந்தவிடத்தும் குறையற்ற அரசாட்சி காக்கும்.

'நீதி வழுவாமல் அரசாட்சி செய்யும்பொழுது ஆட்சியாளனுக்கே கேடுவரின், அப்பொழுது அவன் செய்ய வேண்டுவது என்ன?' இக்கேள்விக்கு விடை தருமாற்போல் அமைந்தது இக்குறள். அரசு நாட்டைக் காப்பாற்றும்; அவனுடைய ஆட்சி கோணாமல் நேர்மையாக நடைபெறும் முறைதான் அவனைக் காப்பாற்றுகின்றது என்பது பதில். செங்கோல் செலுத்தி நாட்டைக் காக்கும் நல்லரசனைக் கடவுள் காப்பார் என வள்ளுவர் கூறவில்லை. ஆனால் 'முறை காக்கும்' என்றார். அவனுக்குப் பாதுகாப்பு அவன் மேற்கொள்ளும் நேர்மையான நெறிமுறையே.
தடையற முறை செய்த ஆட்சியாளர்களாக மகனென்றும் பாராமல், பசுவுக்காக, தன் மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனையும், நீதிகாக்க தன் கையை இழந்த பொற்கைப் பாண்டியனையும் சான்று காட்டுவார் பரிமேலழகர்.

குறளில் இறைவன் என்பதற்குக் கடவுள் என்னும் பொருளும், அரசன் (ஆள்பவன்) என்னும் பொருளும் உண்டு. இறை என்ற சொல்லும் அவ்விரு பொருள் தருவதே.

'முட்டாச் செயின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'முட்டாச் செயின்' என்ற தொடர்க்குத் தப்பாமல் செய்யின், இடை முறியாமல் பரிகரித்துச் செய்யுமாயின், முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின், தப்பாமல் செலுத்துவானாயின், முட்டுப்பாடுகள் நேர்ந்தபொழுதும் வழாஅது செய்யும், குறையற்ற, குறையில்லாதவாறு நெறிப்படி ஆட்சிபுரிந்தால், முரணில்லாமல் செய்வானாகில், வழுவாமல் செலுத்துவனாயின், இடையூறு வந்தபோதும் தவறாமல் செலுத்துவானானால், பிழையின்றிச் செயல்படுத்தும், முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது, தவறாது நடத்துவானாயின் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

முட்டாது என்பது கெட்டு முட்டா என நின்றது. முட்டு என்ற சொல்லுக்குத் தடை என்று பொருள். செங்கோன் முறைப்படி அரசு செலுத்த முயலும்போது இடைமுறிவுகள் நேரலாம். அத்தடைகளைக் கடந்து முறை செய்தல் வேண்டும். நீதி செலுத்துங்கால் 'வேண்டியவன் வேண்டாதவன் என்று பார்க்காமல், குலத்தையும் நலத்தையும் கருதாமல், எல்லார்க்கும் நீதி ஒன்றே' என்ற நேர்மையான பார்வையோடு முறை செய்தல் வேண்டும். தொடக்கத்தில் நீதி செலுத்திக் காலம் செல்லச் செல்ல மாறிவிடாமல்- இடை முறியாமல்- நீதி செய்வதே முட்டாச் செயின் ஆகும்.

நாட்டையெல்லாம் ஆள்வான் காப்பான்; அவனை ஆட்சிமுறை காக்கும், இடையூறு வந்தபோதும் முறைக்குக் குறையில்லாதவாறு ஆட்சிபுரிந்தால் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செங்கோன்மை ஆள்வோரைக் காக்கும்.

பொழிப்பு

நாட்டையெல்லாம் ஆள்வோர் காப்பர்; குறையற்ற அரசாட்சி அவரைக் காக்கும்.