இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0542வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:542)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

மணக்குடவர் உரை: உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.

பரிமேலழகர் உரை: உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
(நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: உலகத்து உயிர்களெல்லாம் வானத்தை நோக்கி வாழ்தல் போலக் குடிமக்கள் யாவரும் அரசன் செங்கோல் ஆட்சி நோக்கி வாழ்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகெல்லாம் வான்நோக்கி வாழும்; குடி மன்னவன் கோல்நோக்கி வாழும்.

பதவுரை: வான்-மழை; நோக்கி-நம்பி; வாழும்-வாழ்கின்றன, உளவாக நிற்கும்; உலகு-உலகம், உலகத்தார்; எல்லாம்-அனைத்தும்; மன்னவன்-ஆட்சியாளர், வேந்தன்; கோல்-செங்கோல்; முறை செய்யுங் கோல்; நோக்கி-எதிர்பார்த்து; வாழும்-வாழும்; குடி-குடிமக்கள்.


வான்நோக்கி வாழும் உலகெல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்;
பரிப்பெருமாள்: உலகத்துயிர் எல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்கும்;
பரிதி: மேகத்தைப் பார்த்த உலகமதுபோல;
காலிங்கர்: மழை தமக்கு உளது என்று அதனைக் குறிக்கொண்டு அஞ்சாது வாழும் உலகமானது;
பரிமேலழகர்: உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும்;

'உலகத்துயிர் எல்லாம் மழையை நோக்கி நிற்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிரெல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும்', 'உலகத்திலுள்ள உயிர்களின் நல்வாழ்வு மழையைப் பொறுத்தது', 'உலகத் துயிரெல்லாம் மழையை நோக்கி வாழும்', 'உலகத்து உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகத்து உயிர்கள் எல்லாம் மழை உளது என்ற நம்பிக்கையில் வாழும் என்பது இப்பகுதியின் பொருள்.

மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.
பரிப்பெருமாள்: அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கி இன்புறுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முறை செய்தல் குடிமக்கட்கு இன்றியமையாது என்பது கூறிற்று. பரிதி: மன்னவன் செங்கோல் பார்த்து வாழும் குடிகள் என்றவாறு.
காலிங்கர்: மற்று இது போல மன்னவன் செங்கோல் நமக்கு எளிது என்று அதனைக் குறிக்கொண்டு அஞ்சாது வாழும் குடிமக்களும் என்றவாறு.
பரிமேலழகர்: குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம். [கோல்- கோலாலாகிய காவல்; ஏமம் - பாதுகாப்பு]

'அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கி நிற்பர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடியெல்லாம் நல்லாட்சியை நோக்கி வாழும்', 'அதைப்போல ஒரு நாட்டின் குடிமக்களுடைய நல்வாழ்வு அந்த நாட்டின் அரசாட்சியைப் பொறுத்தது', 'அதுபோல அரசனது செங்கோலை நம்பிக் குடிகள் வாழ்கின்றன', 'அதுபோல மக்கள் எல்லாரும் அரசன் செங்கோல் ஆட்சி முறையை எதிர்பார்த்து வாழ்கின்றனர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குடிமக்கள் அரசின் செங்கோல் ஆட்சிமுறையை எதிர்பார்த்து வாழ்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகத்து உயிர்கள் எல்லாம் மழை உளது என்ற நம்பிக்கையில் வாழும்; குடிமக்கள் அரசின் கோல்நோக்கி வாழும் என்பது பாடலின் பொருள்.
'கோல்நோக்கி வாழும்' என்பதன் பொருள் என்ன?

உயிர்வாழ வான்மழையும், அஞ்சாது இன்புற்று வாழ நல்லாட்சியும் இன்றியமையாதன.

உலகத்து உயிர்கள் எல்லாமும் மழை உளது என்ற நம்பிக்கையில் வாழும்; குடிமக்கள் அரசின் செங்கோல் ஆட்சி முறையை எதிர்பார்த்து அஞ்சாது வாழ்வர்.
வான்நீரின்றி அமையாது உலகு; நீதிநெறி இல்லாத ஆட்சியில் மக்கள் இன்புற்று இருக்கமாட்டார்கள் என்கிறது பாடல். மழையையும் அரசின் முறைசெய் ஆட்சியையும் இயைபுபடுத்தும் இக்குறட்பொருளை இருவகையாக விளக்குவர். முதல்வகை 'மழை எப்படி உலக உயிர்களை மகிழ்விக்கிறதோ அதுபோல அரசின் நல்லாட்சி குடிமக்களை மகிழ்விக்கும்' என்பது. இன்னொன்று 'மழை உளதாயின் உலகத்துயிர்கள் உளவாகும்; எனினும் செங்கோல் உளதாயின் குடிகள் உளவாகும்'. முதலில் சொன்னதில் 'அதுபோல' என்ற சொல் இடைப்பெய்யப் பெற்றது. இரண்டாவதில் 'எனினும்' என்ற சொல் இடைப்பெய்யப்பட்டு செங்கோலே மழையினும் இன்றியமையாதது எனச் சொல்லப்படுகிறது.
உயிர்களைக் காப்பதற்கு வேண்டிய மழை குறையில்லாமல் பெய்தாலும், அரசாட்சியில் முறைசெய்தல் இல்லாதுபோனால், குடிகள் செய்வதறியாது தவிப்பர். மக்களுக்கு ஆட்சியாளரிடம் மதிப்பும் நம்பிக்கையும் உண்டாக வேண்டும். இவற்றை இழக்குமாறு அவர் நடந்துகொள்ளக்கூடாது அரசு இருப்பது குடிகளுக்காவே ஆதலின், அவர்கள்மாட்டு முறைசெய்தல் வேண்டும் என வற்புறுத்துப்படுகிறது. மழை உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் வேண்டப்படுவது; குடிமக்கட்கோ மழை மட்டும் போதாது; அரசனது செங்கோலும் வேண்டும் என்று செங்கோலாட்சி சிறப்பிக்கப்பட்டது. மழையைவிட செங்கோல் இன்றியமையாதது என்பது மிகைக்கூற்றல்ல.

நீதிநெறியிலான ஆட்சியிலேயேதான் ஒரு நாடு உயிர்ப்புடன் விளங்கும்.
'உடல் பாதுகாப்புக்கு மழையும் உயிர் உடைமைப் பாதுகாப்புக்கு நல்லாட்சியும் தேவை. வானின் மழை, இயல்பாகக் கிடைப்பது போல அரசின் நீதியும் இயல்பாகக் கிடைத்தல் வேண்டும். வான்மழை பொய்ப்பின் வளம் கெடும். அரசு முறை பிறழின் மக்களின் வாழ்க்கை கெடும்' என்பார் குன்றக்குடி அடிகளார்.
மழை வெள்ளத்தால் அழிவு வந்தபோதும், மழைபெய்தலின் நிச்சயமற்ற தன்மை குறித்து அஞ்சி நிற்கும் நிலையிலும் குடிமக்கள் அரசையே நோக்கி நிற்பர் என்றும் இப்பாடலை விளக்குவர்.
இக்குறளின் கருத்தில் அமைந்த மற்றொரு பாடல் வரும் அதிகாரத்தில் உள்ளது: துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளிஇன்மை வாழும் உயிர்க்கு (கொடுங்கோன்மை 557 பொருள்: மழை இல்லாமை உலகத்துக்கு எவ்வாறு துன்பம் பயக்குமோ அவ்வாறே, ஆட்சியாளன் அருள் இல்லாதிருப்பது குடிகளுக்குத் துயரம் தரும்). இங்கு முறை செய்தலின் இன்றிமையாமை சொல்லப்படுகிறது; அங்கு ஆள்பவரின் அருளின்மை பேசப்படுகிறது.

குடிமக்கட்கு மழையினும் இன்றியமையாதது செங்கோலாட்சி என்பதைச் சொல்ல வந்தது இக்குறள்.

'கோல்நோக்கி வாழும்' என்பதன் பொருள் என்ன?

'கோல்நோக்கி வாழும்' என்ற தொடர்க்கு செங்கோன்மையை நோக்கி, செங்கோல் பார்த்து, செங்கோல் நமக்கு எளிது என்று அதனைக் குறிக்கொண்டு, செங்கோல் உளதாயின், செங்கோல் உண்டானால், கோல் செங்கோலாயின், அரசனீதியைப் பத்திச் சீர்மையிலே, செங்கோலை நோக்கி, நேரிய ஆட்சியை எதிர்நோக்கி, செங்கோலை நம்பி, நல்லாட்சியை நோக்கி, செங்கோல் ஆட்சி நோக்கி, அரசாட்சியைப் பொறுத்தது, செங்கோன்மையை எதிர்பார்த்தே, செங்கோலை நம்பி, செங்கோல் ஆட்சி முறையை எதிர்பார்த்து, செங்கோலை (நீதி நெறியினை) எதிர்பார்த்தே, செங்கோல் முறையை நம்பி, செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால், செங்கோலை எதிர்பார்த்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கோல்நோக்கி' என்பதன் பொருள் 'செங்கோல் நோக்கி அதாவது நேர்மையான ஆட்சியை நோக்கி' என்பது. நோக்கி வாழ்தலாவது பற்றப்பட்ட முறைமையை இன்றியமையமையாத் துணையாகக் கொண்டு வாழ்தல் குறித்தது. காலிங்கர் 'மன்னவன் செங்கோல் நமக்கு எளிது என்று அதனைக் குறிக்கொண்டு அஞ்சாது வாழும் குடிமக்கள்' எனப் பொருளுரைப்பார். கோல் நோக்கி வாழ்தல் என்பது செங்கோல் ஆட்சி முறைமையை எதிர்பார்த்து வாழ்தல்; மக்களுக்குப் பாதுகாப்பு நல்கும் பொறுப்பு ஆட்சியாளரைச் சார்ந்தது. எல்லைகளில் படைகள் நிறுத்தப்பட்டுப் பாதுகாப்பபளிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையில்தான் குடிமக்கள் அமைதியாக உறங்குகிறார்கள். காவல்துறை ஊருக்குள் இருப்பதால்தான் திருடர்பயமின்றி இருக்க முடிகிறது. நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கும்வரை நாட்டில் அமைதி நிலவும். இவையெல்லாம் முறையாக நடக்கவில்லையென்றால், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடி ஆகிவிடும். இது தவிர்த்து வேற்றுமை பாராட்டாதது, சமவாய்ப்புக்கு வழிசெய்வது போன்ற நல்லாட்சித் தன்மைகள் குன்றினால் மக்கள் அல்லல்படுவர் அவர்கள் வாழ்க்கை காட்டில் வாழும் விலங்கு வாழ்க்கைக்கு ஒப்பாகும். எனவே குடிமக்கள் கோல் போன்ற செவ்விய ஆட்சியை நோக்கி வாழ்வார் எனச் சொல்லப்பட்டது.

பரிமேலழகர் உரையை விரித்துத் தண்டபாணி தேசிகர் 'வானை மழை வேண்டியும் வெயில்காற்று முதலியன வேண்டியும் நோக்குதல் போலக் கொலையிற் கொடியாளர் ஒறுக்கவும், நல்லோரை ஆக்கவும் குடிகள் கோலை நோக்குவர். உயிர்கட்கு மழையின்றியமையாதது; உயிர்களுட் சிறந்த இவன் கீழ் வாழும் மக்கட்கு செங்கோன்மையும் இன்றியமையாதது என்பதே வள்ளுவர் கருத்து. எனவேதான் உயிர் என்றும் குடி என்றும் பிரிந்துச் சொன்னார் வள்ளுவர். மேலும் கள்ளரை ஒறுத்துக் காத்தல், உழைப்பு உழைத்தவனுக்கே பயன்படச் செய்தலுமாகிய தண்ணளி, தண்டம் போன்ற செங்கோன்மையால் வரும் நன்மையை நேரே நுகர்பவர் குடிமக்களேயாவர்' என்று விளக்குவார்.
புலவர் குழந்தை 'அரசன் கொடுங்கோலனானால் தாம் துன்புற நேருமாகையால் குடிமக்கள் அரசன் செங்கோலனாக இருக்க வேண்டுமென்பதையே எப்போதும் எண்ணிக்கொண்டு வாழ்வர். நோக்குதல்-இன்றுபோல் என்றும் இருக்க வேண்டுமென எதிர்நோக்குதல்' எனக் கூறினார்.

'கோல்நோக்கி வாழும்' என்பதற்கு நல்லாட்சியை நோக்கி வாழும் என்பது பொருள்.

உலகத்து உயிர்கள் எல்லாம் மழை உளது என்ற நம்பிக்கையில் வாழும்; குடிமக்கள் அரசின் செங்கோல் ஆட்சிமுறையை எதிர்பார்த்து வாழ்வர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குடிமக்களுக்குச் செங்கோன்மை மழைபோல இன்றியமையாதது.

பொழிப்பு

உலகத்து உயிர்களெல்லாம் வானத்தை எதிர்பார்த்தே வாழ்தல் போலக் குடிமக்கள் யாவரும் நல்லாட்சியை நோக்கி வாழ்வர்.