இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0550கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:550)

பொழிப்பு (மு வரதராசன்): கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.மணக்குடவர் உரை: கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்.
கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.

பரிமேலழகர் உரை: வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: அரசன், கொலையிலும் கொடியரவராக விளங்குபவரை மிகக் கடுந்தண்டங்களால் துன்புறுத்தல், கழனியில் களை பிடுங்கி எடுத்துப் பயிரைக் காப்பதினை ஒக்கும். "கொலைதான், மிகக் கொடியது". அந்தக் கொலையை விடக் கொடியவர்கள் என்றதால் கொடுமையின் எல்லையை உணர்த்தியது அறிக. "களை கட்டதனோடு நேர்" என்றதால், அரசனின் ஒறுத்தலைக் கொலை செய்தல் என்று கொள்வதில் தவறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேந்து கொலையில் கொடியாரை ஒறுத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர்.

பதவுரை: கொலையில்-கொலையினும், கொலைத் தொழிலினால்; கொடியாரை-தீயவரை, கொடிய செயல்கள் செய்தவரை; வேந்து-அரசு, மன்னவன்; ஒறுத்தல்-தண்டித்தல்; பைங்கூழ்-பசிய பயிர், பசுமையாகிய பயிர்; களை-வேண்டாப் பூண்டு(களையப்படுவது); கட்டதனோடு-நீக்குதலோடு, களைவதோடு; நேர்-ஒக்கும், நிகர்.


கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று;
மணக்குடவர் குறிப்புரை: கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.[ஆறு அலைப்பார் - வழிப்பறி செய்பவர்கள். சூறை-கொள்ளை]
பரிப்பெருமாள்: கொடுமை செய்தாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று;
பரிப்பெருமாள் குறிப்புரை: கொடியராவார்கள் பலர்: ஆறலைப்பார், சூறைகொள்வார் இவர்கள் போல்வார். பிறரைக் கொல்லாதரைக் கொல்லுதல் நீதி அன்று; ஆயினும் கொடியாரைக் கொல்ல வேண்டும் என்றது.
பரிதி: அரசன் கொலையில் மிகுத்தாரைக் கொல்வது;
காலிங்கர்: தகுதி ஆராயாது உலகத்துக் கொலைத் தொழிலினால் காலக் கொடியராய் உள்ளாரை அரசனானவன் தக்காங்கு செறுத்தல் ஆகிய நீதி யாதினை ஒக்கும் எனின்; [செறுத்தல்-தண்டித்தல்]
பரிமேலழகர்: அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல்; [கொலையான் ஒறுத்து-கொலை செய்தலால் தண்டித்து]
பரிமேலழகர் குறிப்புரை: 'கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. [தீக் கொள்ளுவர்-தீ வைப்பர்; ஆறலைப்பார்-வழிப்பறி செய்பவர்கள்; சூறை கொள்வார்-கொள்ளை இடுபவர்கள்]

'கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடியவர்க்கு அரசு கொலைத்தண்டனை செய்தல்', 'கொலைத் தொழிலால் மிகக் கொடியராயினாரை மன்னவன் கொலையால் தண்டித்தல்', 'கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது', 'அரசன் கொடியவர்களைக் கொலைத் தண்டத்தால் தண்டித்து மற்றவர்களைக் காத்தல், அல்லது கொலை செய்வதிற் கொடியவரை அரசன் தண்டித்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொலையினும் கொடியராயினாரை அரசு தண்டித்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

பைங்கூழ் களைகட் டதனோடு நேர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்.
பரிப்பெருமாள்: பைங்கூழ் வளர்தற்குக் கவர்களை களைந்ததனோடொக்கும் என்றவாறு.
பரிதி: பயிர்க்குக் களைபிடுங்குதல் ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: பசும்பயிர் பாழ்பட நெருக்குவதாகிய களையினைக் கண்டு பறித்து எறிந்த அதனோடு ஒக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது. [இப்பெற்றியாரை-இத்தன்மையுடையானை; புற்கள்-நெற்பயிருக்குக் கேடாக வளரும் கோரை முதலியன; வெண்குடை-அரசனுக்கு அடையாளமாகவுள்ள வெண் கொற்றக்குடை]

'உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயிர்வளரக் களைபறிப்பது போலும்', 'வயலில் செழித்து வளரும்பயிருலுள்ள களையைப் பறித்தலுக்கு ஒப்பாகும்', 'பயிர்களுக்குக் களையெடுப்பதற்குச் சமானம்', 'உழுகின்றவன் களையைப் பிடுங்கி எறிந்து பயிரைக் காப்பதனோடு ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பசும்பயிர் வளர்தற்குக் களைகளைப் பிடுங்கி நீக்குவதற்கு ஒப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல், பசும்பயிர் வளர்தற்குக் களைகளைப் பிடுங்கி நீக்குவதற்கு ஒப்பாகும் என்பது பாடலின் பொருள்.
இக்குறளில் கொலைத் தண்டனை வழங்குவது பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா?

களையெடாதவன் விளைவெடான். கடுந்தண்டனை இல்லை, நாட்டில் அமைதி இல்லை.

மிகவும் கொடியவர்களாய் இருப்போரை அரசு கொலைத் தண்டனையால் ஒறுத்தல், பசும்பயிரைக் காப்பாற்றுவதற்காகக் களையெடுப்பதற்குச் சமம் ஆகும்.
கொடியவர் யார்? கொலை செய்வார், வன்முறைச் செயல்களில் நாட்டம் உடையார், ஊரில் தீவைப்பார், குடிநீர்நிலையில் நஞ்சிடுவார், அரசமைப்புகளை மதியாதார் முதலியோர் கொலையிற் கொடியோர் என அறியப்படுவர். கொலையிற் கொடியோர் என்ற தொடரே அவர்கள் எத்தகைய கொடியர்களாக இருப்பர் என்பதைச் சொல்லும். இவர்கள் அரசால் தண்டித்து அடக்கடப்பட வேண்டியவர்கள்.
களையானது பயிர்களிடையே விராயிருந்து அவற்றின் வளர்ச்சியைக் கெடுக்கும். அது போலத் தீயோரும் மக்களிடையே விரவித் தீங்கு செய்வர். அவரைக் களைந்தெறிக என்கிறது பாடல். பல உயிர்களைக் காக்கும் கடமையை மேற்கொண்ட அரசு கொடுஞ்செயல் செய்பவருக்குக் கொடுந்தண்டனை கொடுக்காவிட்டால் பொதுவாழ்வின் அமைதி கெட்டு நாட்டில் குழப்பம் உண்டாகும்.

'கொலையில் கொடியாரை ஒறுத்தல்' என்றதற்கு இருதிறமாகப் பொருள் கூறினர். 'கொடியாரைக் கொலையில் ஒறுத்தல்' என்று கொண்டு கொலை செய்து தண்டித்தல் அதாவது மரண தண்டனை கொடுத்துத் தண்டித்தல் என்று ஒரு சாராரும் 'கொலையினும் கொடியாரை ஒறுத்தல்' என்று மற்றொரு சாராரும் பொருள் கொண்டனர்.
கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேற் கொற்றம் காண் (சிலப்பதிகாரம், வழக்குரை காதை பொருள்:கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும்) என்று சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் கண்ணகியிடம் நீதிமுறையை எடுத்துரைத்ததன் மூலம் களவு செய்பவர்க்கேகூடக் கொலைத் தண்டம் விதித்தல் அரசனுடைய கடமை என்று கருதப்பட்டதால் இக்குறள் கொலைத்தண்டனையால் ஒறுத்தல் என்பதையே பேசுகிறது என்பர் முதல் வகையினர்.
'கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல்' என்று கொள்பவர்கள் கொலையைஒத்த அல்லது கொலையையை விடக் கொடுமை செய்கின்றவர்களைத் தண்டித்தல் பற்றித்தான் இப்பாடல் சொல்கிறது; கொலைத்தண்டனையை அல்ல என்ற கருத்தை முன்வைப்பர். இவர்கள் சொல்லும் கருத்துக்கள் இன்றைய காலஓட்டத்தோடு ஒட்டி வரும் எண்ணங்களாகும். இவர்கள் ஒறுத்தலைக் கடுந்தண்டனை என்று மட்டுமே கருதுவர்.

கொலை, உலகில் கொடுமையானது. அக்கொலையினும் கொடியாரை ஒறுத்தல் பற்றி இக்குறள் ஆய்கிறது. கொலையினும் கொடிய குற்றங்களைத் தடுப்பதற்கும் அக்குற்றங்கள் புரிவாரைத் திருத்துவதற்கும் கடுமையான தண்டனை வேண்டும் என்பதில் எல்லோரும் ஒன்றுபடுவர். அது கொலைத் தண்டனையாகத்தான் இருக்கவேண்டுமா என்ற கேள்வி எழும்பொழுது கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன.
குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் (குறள் 549 பொருள்:குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.) என்று குற்றங்களை ஒறுப்பது அரசின் தொழில் என்று சென்ற குறளில் கூறிய வள்ளுவர் இங்கு எந்த அளவுத் தண்டனைவரை குற்றவாளியை உட்படுத்தலாம் என்று சொல்கிறார்.
கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் என்பதுதான் குறளின் முற்பகுதி. இதில் கொலையால் ஒறுத்தல் என்று நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் தொடர்ந்துவரும் உவமையை நோக்கின் ‘ஒறுத்தல்’ என்பதற்கே 'கொலையான் ஒறுத்தல்' எனப் பொருள் கொள்ள இடமுண்டு. கொலைத் தண்டனைக்குரியான் எத்தகு கொடியானாயிருத்தல் வேண்டுமென்பதனைக் காட்டவே, வள்ளுவர் ‘கொலையிற் கொடியார்’ என்றார். ஆகவே குற்றத்தின் தன்மையைப் பொறுத்து கொலைத்தண்டனையும் வழங்கலாம் என்று குறள் மொழிவதாகத்தான் கொள்ளவேண்டி இருக்கிறது.
பிறிதோர் இடத்தில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும்போது தண்டனை அச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டுமே தவிர அழித்து விடக்கூடாது என்று அறிவுரையையும் அவர் தந்துள்ளார். கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர்(வெருவந்த செய்யாமை, குறள் 562 பொருள்: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.) என்றவர் கொலைத்தண்டனையை விரும்புவாரா என்று சிலர் வினா எழுப்பினர்.
கொலைத்தண்டனை என்னும்போது அரசே கொலையாளி என்றாகின்றது. அரசு என்ற அமைப்பினுள் வன்முறைக்கு இடம் கொடுத்தாற் போன்றதாகிறது. ஆனால் இதனையும் மக்கள் நலம் என்ற பார்வையில் அணுகினால் கொலைத்தண்டனையும் ஏற்கக்கூடியதாகிவிடும். அறநெஞ்சினரான வள்ளுவரின் மனச்சான்று கொலை என்றதும் தயங்கி நின்று உண்மையைத் தெளிவாக உணர்ந்து தேர்ந்த சொற்கள் வழி உணர்த்துகின்றது என்பதைக் குறள்நடை தெரிவிக்கிறது. இப்பாடல் சமூக நலம் கருதி ஆட்சியாளர் செய்யவேண்டிய கடமையாகக் கொலைத்தண்டனை வழங்கலாம் எனச் சொல்வதால், கொல்லாமை அதிகாரத்தில் சொல்லப்பட்ட தனி மனிதனுக்கான அறக்கருத்துக்களை இங்கு நினைக்கத் தேவையில்லை.

கொடியவர்களைத் தண்டிப்பதை விளக்கப் பயிர்வளரக் களைபறிப்பது போலும் என்ற உவமை ஆளப்பட்டது. களை கட்டதனோடு நேர் என்று சொல்லப்பட்டது. 'களை கட்டதனோடு' என்ற சொற்றொடர்க்குக் களையெடுப்பதற்கு என்று பொருள். விரும்பிச் செய்யும் பயிர்களிடையே முளைத்து வரும் வேண்டாத பயிர்வகைகளைக் 'களை' என்பர். களையப்படவேண்டுவனபற்றி இவை களை என்னும் காரணப் பெயர் பெற்றன. கழனியில் உள்ள களையைக் கிள்ளுதல் கூடாது. கிள்ளினால் மீண்டும் தளிர்க்கும். கழனியிற் களைபறிப்போர் களையை வேரோடு அகற்றுவர்.
'களைகட்டது' என்பதற்கு இன்னொரு விளக்கமும் இன்று உண்டு. அது: "களை கட்டுதல் என்பது களையை வேறு முறைகளால் வளரவிடாமல் செய்வது; கட்டல் என்ற சொல் இக்குறளில் இல்லை; கட்டு என்றே சொல்லப்பட்டுள்ளது- கட்டு என்பதற்கு நீக்குதல் என்ற பொருள் இல்லை; களைகட்டு என்பது களையைக் கட்டுப்படுத்தலைக் குறிக்கும்; கட்டு என்பதற்குக் கொல்லுதல், கோறல் என பொருள் இல்லை; மழைவரும்வரை களையைக் காத்து உழவோட்டி மண்ணுள் மடக்கி மட்க வைத்து உரமாக்குதல், தென்னந்தோப்பு போன்றவற்றில் ஆடு, மாடு, வாத்து இவற்றை மேயவிட்டு களைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற நடைமுறை களைகட்டுதலை விளக்கும். களை எடுத்தெறிவது சிறையில் அடைப்பது, நாடுகடத்துவதுபோல கொடியவனை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துவது என்பது போன்றது". இவ்விளக்கம் இக்குறளுக்குப் பொருந்துமாறு இல்லை.

ஒரு வயற்காட்டில் பயிரிடையே களைமிகுந்திருந்தால் பயிர் வளர வேண்டி உழவன் களைகளை எப்படி களைந்து எறிவானோ, அதுபோலவே நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றை விலக்கி குடிமக்களைக் காப்பாற்ற வேண்டுமானால், கொடியவர்களைக் களைபிடுங்குவதுபோல ஒழிப்பதும் தேவையானது. ஆகவே தன்னைப் போன்ற மக்களைக் கொல்லுங்குணம் படைத்த மாக்களுக்கு கடுந் தண்டனை கொடுப்பது அரசாட்சிக்குப் புறம்பான அறமற்ற செயல் அல்ல என்பது உவமை தரும் செய்தி.

இக்குறளில் கொலைத் தண்டனை வழங்குவது பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா?

இந்நாள் குறள் சிந்தனையாளர்கள் கொலைத் தண்டனை இன்றைய அரசியல்-சமூக சிந்தனையில் பிழையானது என்று சொல்லி முக்காலம் உணர்ந்த வள்ளுவரும் மரண தண்டனை பற்றி இப்பாடலில் சொல்லவில்லை என்கின்றனர்.
நாகரீகம் அடைந்த சமுதாயங்களைக் கொண்ட நாடுகள் பல இன்று தூக்கு தண்டனையை ஒழித்துவிட்டன; இன்னும் சில அதை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருக்கும் நாடுகளிலும் அக் கொடிய தண்டனை போக வேண்டும் என்று பல இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. நஞ்சு கொடுத்தும், கல்லால் எறிந்தும், தலையைத் துண்டித்தும், திறந்த வெளியில் துப்பாக்கியால் சுட்டும் அரசு கொலை செய்து கொடுமையாகத் தண்டிப்பதை நாம் காட்டாட்சி முறை என்று இப்பொழுது சொல்வோம். அதுபோலவே தூக்கிலிடுவதையும், மின்சார நாற்காலியில் அமரவைத்துக் கொல்வதையும் நச்சு ஊசி போட்டு உயிர்போக்குவது போன்றவற்றைத் தண்டனை முறைகளாகக் கொண்ட நாடுகளை நாகரிகமற்ற நாடுகள் என்றே கொள்ளவேண்டும். திருத்துதல் அல்லது குற்றங்கள் இனி நிகழாது தவிர்த்தல் என்பதே தற்காலத் தண்டனைமுறைகளின் நோக்கமாகும்.

கொலைத் தண்டனையானது அது நிறைவேற்றப்பட்ட பின்பு எந்த வகையிலும் திரும்பப் பெறவேமுடியாததும் மாற்றி அமைக்க முடியாததுமாகும். இன்றைய சிந்தனைப் போக்கில், எந்த நிலையிலும் மனித உள்ளம் திருந்த வாய்ப்புண்டு; குற்றம் செய்தவன் மீண்டும் குற்றம் செய்யாதிருப்பதற்குக் கடுந்தண்டனை மருந்தாகாது; உலகில் மனிதன் உயிர்வாழ்வது அவனின் பிறப்புரிமையாகும்; மனித உரிமைகளைக் கட்டிக் காக்கவும் மென்மேலும் வளர்க்கவும் மனித சமுதாயம் முயன்று கொண்டிருக்கிறது; அரசு கொலைத்தொழிலில் ஈடுபடக்கூடாது; இவை போன்ற உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் குற்றங்களுக்கான கொலைத் தண்டனைகள் இன்று மறு ஆய்வு செய்யப்படுகின்றன; இதனை வள்ளுவர் அன்றே உணர்ந்திருந்தவர். வள்ளுவர் குற்றவாளிகளை வெகுண்டு கடிந்துரைத்தவர் என்பதில் சிறுதும் ஐயமில்லை; குற்றவாளிகளிடத்து அவர் கொண்டது அவர்களை திருத்த நினைக்கும் அறச்சினமேயாகும்; அவர்களைக் கொல்ல நினைக்கும் கொடுஞ்சினம் அன்று. குறளின் பழைய சமண உரைகளில் ஒறுத்தல் என்பதற்கு கொலைத்தண்டனை என்று கூறப்படவில்லை. கட்டல் என்பதற்குக் கொல்லல் என்பது முதன்மைப் பொருள் அன்று. அப்புறப்படுத்தி சிறையில் அடைப்பதைச் சொல்லியிருக்கலாமே? என்று வினவுகின்றனர் குறள் சொல்வது கொலைத்தண்டனை அல்ல என்பவர்கள். ”ஒன்றாக நல்லது கொல்லாமை” என்பதுதான் வள்ளுவம். வள்ளுவர் மரணதண்டனை தரச் சொல்லிக் குறள் ஒன்றை எழுதியுள்ளார் என்பது நம்ப முடியாததாக உள்ளது என்கின்றனர் இவர்கள்.
நாமக்கல் இராமலிங்கம் தரும் விளக்கம் கொலைத்தண்டனை பற்றி வள்ளுவர் பேசவில்லையென்பவர்களின் கருத்தைத் திரட்டித் தருமாறு அமைந்துள்ளது: அது "கொடியவர்களை எல்லாம் கொன்றுவிடவேண்டும்" என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவர் கருத்துகளுக்கு முற்றிலும் விரோதமானது. மேலும் (கொடியவர் என்று பரிமேலழகர் குறிக்கும்) தீவைப்பவர் , விஷம் கொடுப்பவர், ஆயுதங்களால் கொலை செய்பவர், பிறர் மனைவியிடம் விபசாரம் செய்பவர் ஆகிய இவர்களெல்லாம் கொன்றுவிடத்தக்க கொடியார் என்று குறிப்பது திருக்குறளின் பெருமைக்குத் தீங்கானது. வள்ளுவர் கொலை செய்தவனைக் கொன்றுவிடுவதில் குற்றமில்லை என்று சொல்லவும் கூசி 'கொன்றுவிடுதல்' என்பதைச் சொல்லாமல் 'ஒறுத்தல்' என்று சொல்லுகிறார். 'ஒறுத்தல்' என்பது 'கொல்லுவது' என்பது அல்ல. சமயோசிதம் போல் 'தண்டிப்பது' என்ற பொருளே தருவது. கொலைக்குக் கொலை சரியான தண்டனை என்று சொல்லவும் கூசினார் என்பதை அனுமானிக்க இடமிருக்கிறது. ஆதலால், 'வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்து' என்று பதங்களைக் கூட்டிக் கொன்றுவிடத்தான் வேண்டும் என்று பொருள் கொள்ளுவது திருவள்ளுவருடைய கருத்தாக இருக்க முடியாது. 'களையெடுப்பது' என்ற உவமானத்திலும்கூட, களைகளைப் பயிர்களுக்கிடையிலிருந்து அப்புறப்படுத்துவது காரியமேயல்லால் அவற்றை அழிக்க வேண்டுமென்பது காரியமல்ல. பிடுங்கி எறியப்பட்ட களை பயிரில்லாத வேறு இடத்தில் விழுந்து அங்கே உயிரோடிருந்து விடுவதைப் பற்றிக் களைபறித்தவன் கவலைப்படமாட்டான்" என்பது.

கொலையையும், கொலையைவிடக் கொடுமையான குற்றங்களையும் (பயங்கரவாதச் செயல்கள் என்று இன்று சொல்லப்படுவது போன்றன) செய்வோரை ஒறுத்தல் பற்றி இப்பாடல் பேசுகிறது. பழம் உரையாசிரியர்கள் குறிப்பிடும் கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் போன்ற குற்றங்கள் கொலையிற் கொடியனவாகக் கருத முடியாதாதலால் அவற்றிற்கும் கொலைத்தண்டனை வழங்கவேண்டும் என்று வள்ளுவர் கூறியிருக்க மாட்டார்.
ஆனால் இக்குறள் கொலையினும் கொடிய குற்றம் புரிந்தோரைக் கொலைத்தண்டனை விதித்துக் நீக்குதலும் செங்கோன்மையைச் சார்ந்தது என்றே கூறுகிறது எனத் தோன்றுகிறது. களையெடுத்தல் என்னும் எடுத்துக்காட்டினால் அதன் தேவையைத் தெளிவாக உணர்த்திவிட்டார் வள்ளுவர். களையெடுக்காவிட்டால் பயிர் பாழாகும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வதே. களையை நீக்கி, களையைப் பயிரிலிருந்து தனியாக வளர்ப்போம் என்பது எப்படி இல்லையோ, அதைப் போன்றதே கொலையிற் கொடியோரை கொலைத்தண்டனை இல்லாமல் சிறையில் வைப்பதும் ஆகும். எனவே கொலையில் ஒறுத்தல் குறளுக்கு உடன்பாடனதுதான் என்பதுதான் எனக் கொள்வதில் குற்றம் இல்லை. சமுதாயக் கடமையைச் செய்வதில் அரசு கடுமை காட்டுவதில் தவறில்லை என்பது வள்ளுவம்.

கொலையினும் கொடியராயினாரை அரசு தண்டித்தல், பசும்பயிர் வளர்தற்குக் களைகளைப் பிடுங்கி நீக்குவதற்கு ஒப்பாகும் என்பது இக்குறட்கருத்து.


அதிகார இயைபு

மிகக்கொடுமை புரிவோரை அரசு கொலையால் ஒறுத்தலும் செங்கோன்மையின் பாற்படும்.

பொழிப்பு

கொலை போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு கடுந்தண்டனை கொடுப்பது, பசும்பயிர்களிடையே உள்ள களையெடுப்பது போன்றது.