இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0549குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:549)

பொழிப்பு: குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.

மணக்குடவர் உரை: குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்.

பரிமேலழகர் உரை: குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
(துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: நற்குடியைக் காத்துத் தீயகுடியைத் தண்டித்தல் பழியில்லை; வேந்தனது கடமை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வேந்தன் வடுஅன்று தொழில்.


குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்:
பதவுரை: குடி-குடிமக்கள்; புறம்-பிறர்; காத்து-காப்பாற்றி; ஓம்பி-பேணி; குற்றம்-பிழை; கடிதல்-ஒறுத்தல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல்;
பரிப்பெருமாள்: குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஓம்ப என்று திரிக்க.
பரிதி: குடியை அறுவகைப் பயம் தீர்த்துக் குடியில் உண்டான குற்றமெல்லாம் பார்த்துத் தீர்ப்பது;
காலிங்கர்: தமது அகங்காவல் குடிகட்கே இயல்பானது; அதனால் தனது கோல்கீழ் வாழும் குடிமக்களைப் புறங்காவல் காத்து மற்று அப்பாதுகாவற்கு இடையில் சோர்வு வராமல் செலுத்துமிடத்துக் குடிமக்கட்குச் சோர்வு முதலிய குற்றம் உளதாயின் அதனைக் கடியுமாறு கடிந்தொழுகுதல்;
பரிமேலழகர்: குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம்.

'குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்துத் தானும் நலியாமல் பேணி, நெறி பிறழ்ந்து நடந்தால் அவர்களைத் தண்டித்துக் குற்றம் போக்குதல்', 'குடிகளுக்குப் பிறர் துன்பம் செய்யாதபடி தீமைகளைத் தடுத்துப் பாதுகாப்பளிப்பதற்காகக் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பது', 'குடிமக்களைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வேண்டுவன உதவிப் பேணுதலுடன் அவர்கள் குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல்', 'குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, ஆவன செய்து வளர்த்து, குற்றங்கள் செய்தால் அவை நீக்கத் தண்டித்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, வளர்த்து, குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

வடுஅன்று வேந்தன் தொழில்:
பதவுரை: வடு-பழி; அன்று-இல்லை; வேந்தன்-மன்னவன்; தொழில்-கடமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமன்று; அரசன் தொழில்.
பரிப்பெருமாள்: குற்றமன்று; அரசன் தொழில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறர்க்கு இன்னா செய்தல் அறம் அல்ல என்றார் ஆகலின், ஈண்டுக் கூறுகின்றது அறம் அல்லவாம் பிற என்று ஐயுற்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: செங்கோல் என்றவாறு.
காலிங்கர்: கொடுங்கோன்மை அன்று, அரசர்க்குச் செங்கோன் முறைமை என்றவாறு.
பரிமேலழகர்: வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.

'குற்றமன்று; அரசன் தொழில்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் காலிங்கரும் 'செங்கோன்மை' என்றனர். பரிமேலழகர் 'பழியன்று வேந்தனுக்குத் தொழில்' என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்குக் கடமை; பழியாகாது', 'தவறன்று. அதுதான் அரசன் செய்ய வேண்டிய வேலை', 'வேந்தனுக்கு இழுக்காகாது. அஃது அவன் கடமையே', 'வேந்தனுக்குப் பழி அன்று; அவனுக்குரிய தொழில்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசுக்குப் பழியன்று; அவன் கடமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடிகளைக் காத்து அவர்களைப் பேணுதற்காகக் குற்றம் செய்தாரைத் தண்டித்தல் ஆட்சியாளர்க்குப் பழியாகாது; அது அவர் தொழிலாகும்.

குடிமக்களைப் புறம் காத்தோம்பிக் குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் அரசுக்குப் பழியன்று; அதன் கடமையாம் என்பது பாடலின் பொருள்.
'புறம் காத்தோம்பி' என்ற தொடரின் பொருள் என்ன?

குடி என்ற சொல்லுக்கு குடிமக்கள் என்பது பொருள்.
குற்றம் கடிதல் என்ற் தொடர் குற்றங்களை ஒறுத்தல் என்ற பொருள் தரும்.
வடு அன்று என்ற தொடர்க்குக் கறை ஆகாது அதாவது பழி இல்லை என்று பொருள்.
வேந்தன் தொழில் என்றது அரசின் கடமை எனப் பொருள்படும்.

குடிமக்களைக் காத்தலும் வளர்த்தலும் அரசின் கடமை; குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் அரசுக்குக் கறை (Stigma) சேர்க்காது. அதுவும் இயல்பான ஆட்சித் தொழிலே ஆகும்.

இன்னா செய்தவர்களைத் தண்டிக்கும் முறை அவர்கள் தாமே நாணும்படியாகப் பதிலுக்கு நன்மை செய்வதே என்றும், மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் போற்றுவதே அறிவின் பயன் என்றும் பலமுறை இன்னா செய்யாமையை வற்புறுத்தியவர் வள்ளுவர். பிறர்க்கு இன்னா செய்தல் அறம் அல்ல என்று சொன்ன வள்ளுவர் இங்கு ஒறுத்தல் செய்யலாம் என்கிறாரே எனக் கேட்பவருக்குப் பதில் கூறுமுகமாக இப்பாடல் விளக்கம் அளிக்கிறது. பிறரிடமிருந்து காப்பாற்றி, தாம் மட்டும் தண்டிப்பதில் என்ன அறம் இருக்கிறது என்று அதில் குறை காணமுடியாது; நல்ல குடிமக்களைக் காத்துப் பேணுவதற்காக குற்றஞ்செய்தவர்களைத் தண்டிப்பதற்கும் அரசுக்கு உரிமையுண்டு என வள்ளுவர் இப்பாடலில் சொல்கிறார். பொதுவாழ்க்கையில் பலரைக் காக்கும் கடமையை மேற்கொண்ட அரசு பொது வாழ்க்கை கெடுவதானாலும் ஒரு சிலர்க்குத் துன்பம் செய்யக்கூடாது என்று நிற்பது அறியாமை. அறியாமை மட்டும் அன்று. கடமை செய்யத் தவறிய குற்றமுமாகும். ஆகவே பொதுவாழ்க்கை கெடாமல் ஓங்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும். அவ்வாறு தண்டிப்பது பழி அன்று; தலைவனுடைய தொழில் ஆகும். பரிப்பெருமாள் 'பிறர்க்கு இன்னா செய்தலும் அறமாம். குடிகளைக் காக்கும் முறையில் அரசற்காயின்; என்பதாம்' என இக்குறளுக்கான சிறப்புரையில் கூறுவார். குற்றங்களை நீக்குவதற்காக சமூக நன்மைக்காக ஒறுக்கத்தக்கவர்களைத் தண்டித்தே ஆக வேண்டும். குடிமக்களைக் காப்பதற்காக குற்றவாளிகைளத் தண்டிப்பது நற்பெயருக்கு கறை ஏற்படுத்தும் என்றோ அது புகழில் ஏற்படும் இழுக்கு என்றோ எண்ணாமல் ஒறுத்தலும் தம் தொழில் என்று செய்யவேண்டும்.

ஒரு குடியால் மற்றொரு குடிக்குத் தீங்கு நேராதவாறு கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. அவர்களை ஒறுப்பது அதன் பொறுப்பாகும். இதற்காகத்தான் அரசு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் சிலரைத் தண்டித்தால், மக்கள் பலரைக் காப்பாற்ற முடியும். இதை செய்யாது அரசு பிழைத்தால், மக்கள் விலங்குநிலைக்குச் சென்று ஒருவரை ஒருவர் மாய்த்துக் கொள்வர். அரசு தற்காப்புக்காகக் குடிகளை ஒறுப்பது வடு ஆகும்; ஆனால் நற்குடிக் காப்புக்குத் தீக்குடி கடிவது அதன் தொழில் என்று குறள் கூறும். ஒறுப்பது குடிமக்கள் நலங்கருதியே. இங்குச் சமூகத்தில் குற்றம் மலிந்து அதனால் குடிகள் துன்புறாமல் காத்தல் தண்டனையின் நோக்கம் என்ற கருத்தும் காணப்படுகிறது.
குற்றவாளிகளைத் தண்டிப்பதை குற்றம் கடிதல் அதாவது ‘ஒறுத்தல் முறை’ என்பர். பரிமேலழகர் ஒறுக்கும் வகையை துனபம் செய்தல், பொருள் கோடல், கோறல் என மூன்றாக்கி அவற்றுள் 'துன்பஞ்செய்தலை மட்டும் குற்றங்கடிதல்' என்றார். இன்றைய தண்டனை முறையில் துன்பம் செய்தல் என்பதை ஆயுள் தண்டனை மற்றும் சிறைத்தண்டனையுடனும் பொருள் கோடல் என்பதைச் சொத்துப் பறிமுதல், அபராதம் அல்லது பணத்தண்டம் என்பதுடனும் கோறல் என்பதை கொலைத் தண்டனை என்பதுடனும் ஒப்பிடலாம்.

கொங்கு மண்டலப் பகுதியை ஆண்ட விக்கிரமசோழ தேவன் என்ற அரசனது கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், 'ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து' என்ற தொடரில் 'குடிபுறம் காத்து' என்ற இக்குறளின் சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது என்பது சுவையான செய்தியாகும்.

'புறம் காத்தோம்பி' என்ற தொடரின் பொருள் என்ன?

'புறம் காத்தோம்பி' என்ற தொடர்க்கு நலியாமற் காத்து- ஓம்புதற்காக, அறுவகைப் பயம் தீர்த்து, புறங்காவல் காத்து மற்று அப்பாதுகாவற்கு இடையில் சோர்வு வராமல் செலுத்துமிடத்து, பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, பிறர் துன்புறுத்தாமல் காத்து, தானும் துன்பம் செய்யாது பேணிக் காக்கும், பிறர் வருத்தாமல் பாதுகாத்தும் தானும் வருத்தாமல் பேணிக்காத்து, நற்குடியைக் காத்து, பிறர் வருத்தாமல் காத்துத் தானும் நலியாமல் பேணி, பிறர் துன்பம் செய்யாதபடி தீமைகளைத் தடுத்துப் பாதுகாப்பளிதற்காக, பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வேண்டுவன உதவிப் பேணுதல், பிறர் வருத்தாமல் காத்து-ஆவன செய்து வளர்த்து, பிறர் வருத்தாமல் காத்து-தானும் வருத்தாமல் காத்து என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பாவாணர் 'குடிபுறங் காத்தோம்பி' என்றதனால், சில தீயோரின் 'குற்றங் கடிதலும்' நல்லோரான குடிகளைப் பாதுகாத்தற் பொருட்டே யென்பது பெறப்படும் என்பார்.
‘வழிபடு தெய்வம் நிற்புறங்காப்ப’ என்பது போல் புறங்காத்தலை ஒரு சொல் நீர்மைத்தாகக் கொள்ளல் நன்று. நன்கு காக்க என்ற கருத்தழுத்திற்காகக் ‘காத்தோம்பல்’ என்ற ஒரு பொருட்பன்மொழியாகக் ‘காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு’ (642) என்புழிப் போலக் கூறப்பட்டுள்ளது என்று கொள்வதே குறள் நடைப்போக்குக்கு இயந்ததாகும் ( இரா சாரங்கபாணி).

'புறம் காத்தோம்பி' என்ற தொடர்க்குப் பிறர் வருத்தாமல் நன்கு காத்து என்பது பொருள்.

குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, வளர்த்து, குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் அரசுக்குப் பழியன்று; அதன் கடமையாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குற்றத்திற்காக ஒறுத்தலும் செங்கோன்மையே.

பொழிப்பு

நற்குடியைக் காத்து அவர்கள் வளர்வதற்கு துணைசெய்யத் தீயகுடியைத் தண்டித்தல் பழியில்லை; அரசின் கடமை.