இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0541ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:541)

பொழிப்பு (மு வரதராசன்): யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

மணக்குடவர் உரை: ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும் குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும்.
யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.

பரிமேலழகர் உரை: ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.
(நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து, யாவரிடமும் அன்பு காட்டாது நடுவு நிலைமையைப் பொருந்தி தொடைவிடையால் உசாவித் தெளிந்து செய்வதே நல்ல ஆட்சி முறையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை.

பதவுரை: பதவுரை: ஓர்ந்து-ஆராய்ந்து, நாடி; கண்ணோடாது-இரக்கம் காட்டாமல்; இறை புரிந்து-இறையாண்மை செலுத்தி, நடுவு நிலைமையைப் பொருந்தி; யார்மாட்டும்-எவரிடத்தும்; தேர்ந்து-தெளிந்து, ஆராய்ந்து; செய்வஃதே-செய்தலே, இங்கு ஆளுதலைச் செய்வதே; முறை-நீதி, ஒழுங்கு.


ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும்;
மணக்குடவர் குறிப்புரை: யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது.
பரிப்பெருமாள்: ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து நட்டோரென்று கண்ணோடாது தலைமையைப் பொருந்தி யாவர்மாட்டும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: யார்மாட்டும் என்றது தன்சுற்றமாயினு மென்றது. இறைபுரிதலாவது சுற்றம் என்று கண்ணோடாத அரசனாயிருத்தல்.
பரிதி: ஓர்ந்து ஒருவன்பேரில் கண்ணோட்டமற்று எல்லோர்க்கும் ஒருதன்மையாக;
காலிங்கர்: வேந்தனாவன் தனக்குத் தகுதியும் தகுதியல்லாமையும் ஆராய்ந்து யாவர்மாட்டும் காதல் காரணமாகக் கண்ணோட்டம் செய்யாது நெறியினை விசாரித்து அதன்கண் தங்கி;
காலிங்கர் குறிப்புரை: ஓர்ந்து என்பது ஆராய்ந்து என்றது, புரிந்து என்பது அதன்கண் தங்கி என்றது. [தங்கி - நிலையாக நின்று]
பரிமேலழகர்: தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி நடுவு நிலைமையைப் பொருந்தி;

'குற்றத்தை ஆராய்ந்து யாவர்மாட்டும் காதல் காரணமாகக் கண்ணோடாது நடுவு நிலைமையைப் பொருந்தி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டு ஒருபக்கம் சாயாது தண்டித்து யாரையும்', 'அரசன் குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆராய்ந்து கண்ணோட்டம் காட்டாமல் நடுவுநிலையில் நின்று எவரிடமும்', 'ஒரு வழக்கை நிதானமாகக் கூர்ந்து கேட்டுப் பாரபட்சம் இல்லாமல் நடுவு நிலைமை காத்து, அசவ்வழக்கைப்பற்றி விசாரிக்க வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து', 'குடிகள் குற்றஞ் செய்தால், அக் குற்றத்தை ஆராய்ந்து யாவர் மாட்டும் நேயம் பற்றிச் சாயாது, குற்றத்திற்குத் தகுந்த ஒறுத்தலை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆராய்ந்து, எவரிடத்தும் இரக்கம் காட்டாமல், இறையாண்மை செலுத்தி என்பது இப்பகுதியின் பொருள்.

தேர்ந்துசெய் வஃதே முறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றத்திற்குத் தக்க தண்டத்தை நூல்முகத்தாலாராய்ந்து அதன் வழியே செய்வது முறையென்று சொல்லப்படும்.
பரிப்பெருமாள்: குற்றத்திற்குத் தக்க தெண்டத்தை நாளும் நூல்முகத்தாலாராய்ந்து செய்வது முறையென்று சொல்லப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, செங்கோன்மையாவது இத்தன்மைத்து என்று கூறிற்று.
பரிதி: நடப்பது செங்கோன்மை என்றவாறு.
காலிங்கர்: செய்யும் செய்கை யாது, மற்று அதுவே செங்கோலாகிய நீதி என்றவாறு.
பரிமேலழகர்: அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். [தண்டம் - தண்டனை]
பரிமேலழகர் குறிப்புரை: நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.

'அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராய்ந்து செய்வதே நீதி', 'முறை தெரிந்து அளவின்படி தண்டிப்பதே ஆட்சி முறையாகும்', 'அறிந்த பின் தீர்ப்புச் செய்வதே செங்கோல் முறை', 'தெரிந்து அதனை விதிப்பதே ஒழுங்கான முறையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தெளிவாக உணர்ந்து செய்வது நீதியாட்சியாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆராய்ந்து, எவரிடத்தும் இரக்கம் காட்டாமல், இறைபுரிந்து தெளிவாக உணர்ந்து செய்வது நீதியாட்சியாகும் என்பது பாடலின் பொருள்.
'இறைபுரிந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

இரக்கம் காட்டாமல் இறையாண்மை செலுத்தி முறை செய்வது அரசு.

தீர ஆராய்ந்து யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், ஆட்சியதிகாரத்தைச் செலுத்தி, தக்கவர்களுடன் கலந்து எண்ணிச் செய்வதே ஆட்சிமுறை ஆகும்.
செங்கோன்மையினை வரையறுக்கும் செய்யுள் இது. நல்ல ஆட்சிமுறை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஆட்சி தொடர்பான நடவடிக்கைகளை எல்லாவகைகளிலும் ஆராய்ந்து, இவர் நம்மவர், அல்லாதவர், நட்பாயினார், உறவினர், உதவி செய்தவர் என்று சார்பில்லாது அதாவது எவ்விதமான முற்சாய்வுமின்றி, தலைமைப் பண்பு கொண்டு தெளிவுற்று ஆளுதலைச் செய்வதே செங்கோன்மை தவறாத ஆட்சியாம் என்கிறது இக்குறள்.
குற்றமும், தண்டனையும் இங்கு பேசப்படுவதாகப் பலர் பொருள் கொண்டனர். செங்கோல் முறை என்பது குற்றம்-ஒறுத்தல் மேலாண்மை செய்வது பற்றியது மட்டும் அல்ல. வருவாய், வரிமுறை, நீதி, நிர்வாகம், அரசுப்பணி, தேர்வு முறை போன்ற எல்லா அரசியல் செய்கைகளிலும் நீதியாட்சியாக இருக்கவேண்டும்.
அரசு தான் நினைத்தபடி தனக்கு வேண்டியவர்களுக்கு ஒருவழியும், பிறருக்கு ஒருவழியுமாக, மனம்போனபடி ஆளாது, நடுவு நிலைமையில் நின்று செயல்படவேண்டும் என்று சொல்வதுடன் தலைமைப்பண்பையும் அதாவது ஆட்சிஅதிகாரத்தையும் பயன்படுத்தி தெளிவாகவும் உறுதியான நிலைப்பாட்டுடன் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறது பாடல்.

ஓர்ந்து என்ற சொல் ஆட்சித்தலைவன் தன் அவையோருடன் கலந்தெண்ணி மற்றவர் கருத்துக்கும் வாய்ப்பளித்துத் தானும் சிந்தித்து என்ற பொருள் தருவது.
கண்ணோட்டம்- தம்முன் நிற்பவர் யார் என்று கண்டால் அவர் மீது இரக்கம் உண்டாகலாம் என்பதாலேயே நீதி தெய்வத்தின் கண்கள் கட்டப்படிருக்கும் என்று கூறுவர். வள்ளுவரும் முறைசெய்வோர்க்குக் கண்ணோட்டம் கூடாது என்று கூறுகிறார். யார்மாட்டும் கண்ணோட்டம் இன்றி நீதி வழங்கப்படவேண்டும் என்று இக்குறள் கூறுவதால் இதற்கு விதிவிலக்கு யாரும் இல்லை என்பது பெறப்படும். 'உயிரினுஞ் சிறந்தாரிடத்தும் கண்ணோட்டம் தகாதென்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார்' என்பது பரிமேலழகர் உரை.
'முறை' என்ற சொல் 'நீதிமுறை' என்ற பொருளிலே ஆளப்பட்டது.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (கண்ணோட்டம் குறள் 571) என்று பிறிதோரிடத்தில் கண்ணோட்டம் இல்லையென்றால் இந்த உலகே இல்லை எனச் சொல்லப்படுகிறதே என்ற வினா எழுகிறது. கண்ணோட்டம் அதிகாரத்தில் தனி மனிதனுக்கு அறம் கூறிய வள்ளுவர் பொதுநலம் காக்கும் செங்கோல் ஆட்சித்தலைவனிடத்துக் கண்ணோட்டம் கூடாது என்று இங்கு கூறுகிறார். இவற்றிடையே முரண் இல்லை. அரசின் தலைமை நோக்கமாகிய நடுவுநிலைமையில் சிறக்க வேண்டும் என்பது கருத்து.

'இறைபுரிந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

'இறைபுரிந்து' என்ற தொடர்க்குத் தலைமையைப் பொருந்தி, சுற்றம் என்று கண்ணோடாத அரசனாயிருத்தல், நெறியின்கண் தங்கி, நடுவுநிலைமையைப் பொருந்தி, ஆட்சியதிகாரத்தைச் செலுத்தி, நடுநிலையுணர்வுடன், நடுவுநிலையில் நின்று, நடுவு நிலைமை காத்து, நடுவு நிலைமையைப் பொருந்தி, ஒரு பக்கம் சாராது, தலைமை பொருந்தி, நடுநிலை பொருந்தி, தெய்வத்துக்குப் பயந்து, தலைமை ஆட்சி செய்து என உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.

இத்தொடர்க்குப் பொருள் கூறுவதில் உரையாசிரியர்கள் வேறுபட்டனர்; பலர் நடுநிலை காத்து என்ற பொருளில் உரைத்தனர். 'கண்ணோடாத இறை' எனப்பிரித்துச் 'சுற்றம் என்று கண்ணோடாத அரசனாயிருத்தல்' எனப் பரிப்பெருமாள் உரை கண்டார். நாமக்கல் இராமலிங்கம் 'இறைபுரிதல்' என்பதை விளக்கும் போது இறைவனுடைய தன்மையைச் செய்தல், இறைவனாகிய கடவுள் உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் சமமாகக் காக்கிறான் என்பதைப் போல அரசன் தன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லாரையும் சரிசமமாகக் காக்க வேண்டும் என விளக்கம் தந்தார். 'தான் செய்யும் முடிவுகள் நேர்மையற்றதாதல் கூடாது எனத் தெய்வத்துணையை விரும்புதல்' என்றார் ஜி வரதராஜன். இதற்குத் தண்டபாணி தேசிகர் 'இவ்வுரை இயைவதாயினும், அரசன் தன்னைத் தெய்வப் பிரதிநிதியாக எண்ணுதல் கூடாது. அவன் கூறும் முடிபை ஏற்கிற இருபாலாரும் இது தெய்வம் விட்ட வழியென ஏற்கலாம். ஆனால் அரசன் அங்ஙனம் எண்ணுதல் கூடாது. அங்ஙனம் எண்ணின் தவறிக் கோல் கோடிய வழித் தான் தப்பத் துணை தேடிக்கொண்ட இழிநிலையாகும் என்க' எனக் கருத்துரைப்பார். 'ஆட்சிபுரிந்து' என்பது சி இலக்குவனார் உரை.
'ஆட்சியதிகாரத்தைச் செலுத்தி' என உரை வரைந்த தமிழண்ணல் 'இக்குறளில் இறைபுரிதல் என்ற தொடர் புதுமையானது. நேரிய ஆட்சியை நடத்துதல் என்பது பொருள். தன்னாட்சியுடைய சுதந்திர மேலாண்மையை இறையாண்மை என்கிறோமே, அதை இது குறிக்கிறது. வள்ளுவர் ஒருவரே இறை, அரசர்களின் பெயர்களாக மட்டும் குறிக்காமல் அரசுத்தன்மையைக் குறிக்கும் தொழிற்பண்புச் சொற்களாக ஆளக் காண்கிறோம்' என்ற விளக்கமும் தந்தார். இது 'இறைபுரிந்து' என்றதற்குச் சிறந்த பொருளாகிறது.

'இறைபுரிந்து' என்ற தொடர்க்கு 'ஆட்சியதிகாரத்தைச் செலுத்தி' என்பது பொருள்.

ஆராய்ந்து, எவரிடத்தும் இரக்கம் காட்டாமல், இறையாண்மை செலுத்தி தெளிவாக உணர்ந்து செய்வது நீதியாட்சியாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நடுநிலை நின்று ஆட்சி செய்வது செங்கோன்மையாம்.

பொழிப்பு

ஆராய்ந்து, எவரிடமும் அன்பு காட்டாமல், ஆட்சியதிகாரத்தைச் செலுத்தி, தெளிவுடன், ஆள்வது நல்லாட்சி முறை.