இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0548எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:548)

பொழிப்பு: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் காலத் தாழ்ச்சியால், (பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.

மணக்குடவர் உரை: எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும்.
எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.

பரிமேலழகர் உரை: 'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.
(எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: வந்தவர் தம் குறை சொல்லுதற்கு எளியனாய் உடனே செவிமடுத்து, தன் அமைச்சர்களுடன் ஆலோசித்து விரைந்து முறைசெய்யாத மன்னவன், காலந்தாழ்த்துகின்ற காரணத்தால் கெடுப்பாரின்றியும் தானே கெட்டுப் போவான். காலந்தாழ்த்துவதால் நீதிமுறை தவறக்கூடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.


எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்:
பதவுரை: எண்-எளிய; பதத்தான்-செவ்வியுடையவனாய்; ஓரா-ஆராய்ந்து; முறை-நீதி; செய்யா-இயற்றாத; மன்னவன்-வேந்தன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன்;
மணக்குடவர் குறிப்புரை: எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்;
பரிப்பெருமாள்: எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எளிய காலம்;
பரிதி: எளிதாகிய செங்கோல் முறையாலே உலகம் காவாத மன்னவன்;
காலிங்கர்: விசார வழியால் ஆராய்ந்து செங்கோல் நடத்தாத மன்னவன்; [விசார வழி- ஆராயுமுறை.]
காலிங்கர் குறிப்புரை: எண்பதத்தான் என்பது எண்ணு நெறியால் என்றது;
பரிமேலழகர்: முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்;
பரிமேலழகர் குறிப்புரை: எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.

'ஆராய்ந்து செங்கோல் நடத்தாத மன்னவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். எண்பதம் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் எய்துங்காலம்/எளிய காலம் என உரை கூறினர். காலிங்கர் ஆராயுமுறை என்றார். பரிமேலழகர் எளிய செவ்வி உடையவனாய் எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரக்கமாகப் பார்த்து முறைவழங்கா அரசன்', 'காட்சிக்கு எளிமையோடு பலருடன் ஆராய்ந்து முறை செய்யாத அரசன்', 'தன் பதவிக்கு எண்ணப்பட்ட தன்மையோடு (குற்றங் குறைகளை) விசாரித்து நீதி நடத்தாமல் ஒரு அரசன்', 'குறையிரப்போரால் எளிதில் பார்த்துப் பேசத்தக்க நிலையில் நின்று அவர்கள் சொல்லியதை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எளிதாக முறையிட வகை செய்து, ஆராய்ந்து நீதி வழங்கா அரசமைப்பு என்பது இப்பகுதியின் பொருள்.

தண்பதத்தான் தானே கெடும்:
பதவுரை: தண்-தாழ்மையான; பதத்தான்-நிலையில் நின்று; தானே-தானே; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.
பரிப்பெருமாள்: தனது தண்பதத்தினானே கெடுப்பார் இன்றியும் தானே கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.
இது காலம் தப்பாமல் கேட்டுச் செய்யவேண்டும் என்பதூஉம், முறை செய்யாக்கால் வரும் குற்றமும் கூறிற்று.
பரிதி: தெய்வசகாயத்தினாலே எளிதாகக் கெடுவன் என்றவாறு.
காலிங்கர்: மற்று இனித் தான் செய்யும் தண்ணிய வழியாலே தானே கெட்டுவிடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தண்பதத்தான் என்பது தண்ணிய நெறியினான் என்றது.
பரிமேலழகர்: தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.

'தானே கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். தண்பதம் என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்' என்று விளக்கினர். பரிதி தெய்வசகாயத்தினால் எனப் பொருள் கூறினார். காலிங்கர் தண்ணிய நெறி என உரைத்தார். பரிமேலழகர் தாழ்ந்த நிலை என்று கூறி அது பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை என விளக்கமும் செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் குற்றத்தால் தானே கெடுவான்', 'தாழ்ந்த நிலையிலே நின்று தானே கெடுவான்', 'இரக்கம் காட்டிவிடுவதனாலேயும்கூட (செங்கோன்மை) கெட்டுப் போகும்', 'தாழ்ந்த நிலையுற்றுத் தானே கெடுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காலத்தாழ்ச்சி உண்டானால் அதுவாகவே அழிந்துபோம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முறைவேண்டி வருவார்க்கு எளிதாகக் காண வாய்ப்புத் தந்து ஆராய்ந்து முறைசெய்யாது காலத்தாழ்ச்சி செய்யும் ஆட்சியாளர், தானே கெடுப்பாரின்றியே அழிந்து போவர்.

எளிதாக முறையிட வகை செய்து, ஆராய்ந்து காலத்தில் நீதி வழங்காத நிர்வாக அமைப்பு அதுவாகவே சீர்குலைந்துபோம் என்பது பாடலின் பொருள்.
'தண்பதத்தான்' என்ற தொடரின் பொருள் என்ன?

எண்பதத்தான் என்ற சொல்லுக்கு முறைவேண்டி வந்தவர்க்குக்காட்சிக்கு எளியனாய் என்பது பொருள்.
ஓரா முறை செய்யா என்ற தொடர் ஆராய்ந்து செங்கோலாட்சி செய்யாத எனப்பொருள்படும்.
மன்னவன் என்றது அரசனைக் குறித்தது. அரசமைப்பு எனக் கொள்ளலாம்.
தானே கெடும் என்ற தொடர் தானாகவே அழிந்துபடும் என்ற பொருள் தரும்.

முறைவேண்டி வந்தவர்க்குக் காட்சிக்கு எளியனாய் இல்லாமல், ஆராய்ந்து காலத்தோடு நீதி செலுத்தாத ஆட்சியமைப்பு அதுவாகவே சீர்குலையும்.

மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கு எளிதில் நேரில் காணமுடியாத நீதி நிர்வாக அமைப்பு இருந்தால் முறையிடுவதற்குக்கூட காலத்தாழ்ச்சி உண்டாகும். மேலும், கலந்து ஆலோசிக்க வேண்டியவருடன் ஆராய்ந்து விரைந்து முறை செய்யாமல் அதனாலும் கால நீட்சி உண்டானால் அந்த நிர்வாக அமைப்பு தாமே சீர்குலையும். முறைவேண்டி வருவோர் நீதி வழங்குவோரைப் பார்க்க வேண்டிய நேரங்களில் பார்க்க முடிபவராகவும் அச்சமின்றித் தம் குறைகளைத் தெரிவிக்கும் நிலையிலும் இருத்தல் வேண்டும். அவர் கூறுகின்றவற்றை நன்கு கேட்டு ஆராய்ந்து விரைந்து முறைமை செய்தல் வேண்டும். வந்தவன் கருத்துக் கேட்பதைக் காக்க வைக்காமலும், அப்படிக் கேட்டபின் காலம் தாழ்த்தாமலும் முறை செய்ய வேண்டும். காலத்தாழ்ச்சி உண்டாவது செங்கோன்மை தவறவும் வழி வகுக்கும்.
மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்க வேண்டும். அதுவும் விரைவில் கிடைக்க வேண்டும். இது முறைசெய்தலில் அரசின் தலையாய பொறுப்பாகும். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் (Justice delayed is justice denied) என்னும் சட்ட அறத்தைச் சொல்லும் குறள் இது. பாதிக்கப்பட ஒருவர் தீர்வுக்கான நம்பிக்கை இன்றி, பாதிப்புகளையும் சுமந்து கொண்டிருப்பது அறனன்று என்னும் அடிப்படையில் விரைந்து விசாரணை உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தருவதற்காக இக்கூற்று உண்டாயிற்று. அப்படிக் காலத்தாழ்ச்சி செய்யும் நீதி நிர்வாகம் கொண்ட அரசு தானே அழியும் என்கிறார் வள்ளுவர்.

'தண்பதத்தான்' என்ற தொடரின் பொருள் என்ன?

'தண்பதத்தான்' என்ற தொடர்க்குக் குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம், தெய்வசகாயத்தினாலே, தண்ணிய வழியாலே, தாழ்ந்த பதத்திலே நின்று(பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை), தாழ்ந்த இடம் (முறையிடுவர்கள் காணாத இடம்), தாழ்ந்த பதவி (பழியும் பாவமும்), காலந்தாழ்த்துகின்ற, தாழ்ந்த நிலையில் நின்று, குற்றத்தால், இரக்க குணத்தினாலேயே, இரங்கத்தக்க அவன் செயலால், தாழ்ந்த நிலையுற்று, குற்றங்களுக்குத் தானே இரையாகி, காலந்தாழ்த்தும் நிலையால், ஆராய்ச்சி செய்து முடிவு செய்யவேண்டிய நிலை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இவ்வுரைகள் தாழ்க்குங் காலத்தால், பழியும் பாவமும் எய்திய தாழ்ந்த நிலையால், (கண்டிப்பான நீதி செலுத்தாமல்) இரக்கம் கொண்ட காரணத்தினால் என்பனவற்றுள் அடங்கும். தாழ்க்குங் காலம் என்பது பொருத்தமானது.

'தண்பதத்தான்' என்பது காலத் தாழ்ச்சி உண்டாவதால் என்பது பொருள்.

எளிதாக முறையிட வகை செய்து, ஆராய்ந்து காலத்தில் நீதி வழங்கா நிர்வாக அமைப்பு, அதுவாகவே சீர்குலைந்துபோம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காலம் தாழ்த்து முறை செய்தல் செங்கோன்மை ஆகாது.

பொழிப்பு

எளிதாக்கப்பட்ட முறை கேட்டல் இல்லாமல், ஆராய்ந்து காலத்தில் நீதி வழங்காத ஆட்சியமைப்பு, அதுவாகவே சீர்குலைழியும்.