இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0545



இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:545)

பொழிப்பு: நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.

மணக்குடவர் உரை: மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு.
இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.

பரிமேலழகர் உரை: பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: ஆடம்பரம் ஆரவாரமெல்லாம் இல்லாமல் கடமையென்று கருதி மிக இயல்பாக அறவழியில் ஆட்சி செலுத்தும் மன்னவனது நாட்டின்கண்ணே பருவ மழையும் குறையாத விளைவும் ஒருங்குகூடிச் சிறக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.


இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட:
பதவுரை: இயல்புளி-இயல்பால்=இலக்கணத்தால்; கோல்-முறை செய்யுங் கோல்; ஓச்சும்-செலுத்தும்; மன்னவன்-வேந்தன்; நாட்ட-நாட்டில் உள்ளன.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம்;
பரிப்பெருமாள்: நூல் சொன்ன முறையினானே முறைமையை நடத்தவல்ல அரசனது நாட்டாம்;
பரிதி: செங்கோல் நடத்தும் அரசன் தேசத்தில்;
காலிங்கர்: சிறுது கோடாமல் குறிக்கொண்டு மரபின் கண்ணே செங்கோல் நடத்தும் வேந்தனது நாட்டிடத்து உள; [குறிக்கொண்டு-இலக்காக எண்ணி]
பரிமேலழகர்: நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.

'நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டின்கண்' என்றபடி மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'செங்கோல் நடத்தும் அரசன் தேசத்தில்' என்றார். காலிங்கர் 'சிறுது கோடாமல் குறிக்கொண்டு மரபின் கண்ணே செங்கோல் நடத்தும் வேந்தனது நாட்டிடத்து' என உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முறையாக அரசாளும் மன்னவன் நாட்டில்', 'நெறிப்படி இயல்பாகச் செங்கோல் ஆட்சி புரியும் மன்னவன் நாட்டில்', 'இயல்பிற்கு மாறாமற் செங்கோல் செலுத்தும் அரசனது நாட்டில்', 'அறநூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனுடைய நாட்டின்கண்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இயல்பாகச் செங்கோல் ஆட்சிநடக்கும் நாட்டில் என்பது இப்பகுதியின் பொருள்.

பெயலும் விளையுளும் தொக்கு:
பதவுரை: பெயலும்-பருவமழையும்; விளையுளும்-விளைச்சலும்; தொக்கு-ஒருங்கு கூடி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழைபெய்தலும் விளைதலுங்கூடி என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.
பரிப்பெருமாள்: மழைபெய்தலும் விளைதலுங்கூட என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய முறைசெய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.
பரிதி: மழையும் விளைவும் உண்டாகும் என்பது என்றவாறு.
காலிங்கர்: யாவை எனின் பருவத்து வந்து உதவும் மழையும் பலவளமாகிய விளைச்சலும் என்னும் இவை முழுவதும் குறைவறக் கூடி என்ற்வாறு.
பரிமேலழகர்: பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி.

'மழைபெய்தலும் விளைதலுங்கூடி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழையும் விளைச்சலும் இரண்டும் இருக்கும்', 'பருவ மழையும் நல்ல விளைச்சலும் ஒருங்கே உளவாகும்', 'மழையும் விளைவும் ஒருங்கு உளவாம்', 'பருவமழையும் குன்றாத விளையுளும் உள' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இயல்பாகச் செங்கோல் ஆட்சிநடக்கும் நாட்டில் மழையும் விளைச்சலும் ஒருங்கு கூடி உளவாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆரவாரமில்லாமல் இயல்பாகவே செங்கோல் ஆட்சியுள்ள நாட்டில் மழை தவறாது பெய்து விளைச்சலும் பெருகி நிற்கும்.

இயல்பாகச் செங்கோல் ஆட்சிநடக்கும் நாட்டில் மழையும் விளைச்சலும் ஒருங்கு கூடி உளவாகும் என்பது பாடலின் பொருள்.
செங்கோல் ஆட்சிக்கும் மழை-விளைச்சலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இயல்புளி என்ற சொல்லுக்கு இயல்பால் என்பது பொருள்.
கோலோச்சும் என்ற தொடர் செங்கோலாட்சி செலுத்தும் என்ற பொருள் தரும்.
மன்னவன் என்ற சொல் அரசன் குறித்தது. அரசு எனக் கொள்ளலாம்.
நாட்ட என்ற சொல்லுக்கு நாட்டின்கண் என்று பொருள்.
பெயலும் விளையுளும் என்ற தொடர் மழைபெய்வதும் விளைச்சல் உண்டாவதும் என்ற பொருளது.
தொக்கு என்ற சொல் ஒருங்கு கூடி எனப் பொருள்படும்.

செங்கோல் ஆட்சிநடக்கும் நாட்டில் மழை தவறாது பெய்யும். விளைச்சலும் செழிக்கும்.

ஆரவாரமும் ஆடம்பரமும் இல்லாத இயலபான செங்கோலாட்சி உள்ள நாட்டிலே மழையும் பலவளமாகிய விளைச்சலும் முழுவதுமாகக் குறைவறக் கூடி வரும். பருவமழை பொய்க்காமலிருப்பதும் குறைவின்றி விளைதலும் ஒரு நாட்டின் செழிப்பிற்கு நல்ல அறிகுறிகள். நாட்டில் பஞ்சம் நேராது. அவ்விடத்தில் தொழில் பெருகும். பொருளாதாரம் சீராக இருக்கும். மக்கள் இன்புற்றிருப்பர். இந்நிகழ்வுகளை மக்கள் எக்காலத்திலும் ஆட்சியாளர்க்குரியதாக்குவர்.
எப்படி நல்ல அடையாளங்களுக்குச் செம்மையான ஆட்சி அமைந்துள்ளதே காரணம் என்று நம்புகிறார்களோ அதுபோல மழை பெய்யாது பொய்ப்பினும் நாட்டில் விளைபொருள் குறையினும் மக்கள் நீதி தவறிய ஆட்சி நடப்பதாகக் குறையும் கூறுவர்.

'இயல்புளி' என்பதை விளக்குவதில் உரையாசிரியர்கள் வேறுபட்டனர். இச்சொல்லுக்கு நூல் சொன்ன முறைமையினால், மரபின் கண்ணே, இயல்பால் செங்கோல் செலுத்தும், முறைமை தப்பாமல், விதிகளின் படி, நெறிகளின் படி, நீதியாக, இயற்கையை அழியாமல் காத்து, இயல்பிற்கு மாறாமல், ஆடம்பரம் ஆரவாரமெல்லாம் எனப் பொருள் கூறினர்.
இயல்புளி என்றது இயல்பு+உளி என விரிந்து இயல்பால் எனப்பொருள்படும். சி இலக்குவனார் உளி என்பது உள்ளி இடைக்குறையாகக் கொண்டு பொருள் செய்கிறார். உள்ளி என்பதற்கு எண்ணி எனப் பொருள் கொண்டு '(நல்லாட்சியின்) இயல்பை எண்ணி' என்பார். இக்குறளுக்கான இவரது உரை 'மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் ஒருங்கு கூடி நல்லாட்சியின் தன்மையை உள்ளி (நினைத்து) ஆட்சி செலுத்தும் அரசனின் நாட்டின் கண்ணவாம்' என்பது.

செங்கோல் ஆட்சிக்கும் மழை-விளைச்சலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அரசு நேர்மையான ஆட்சி நடத்தினால் வானும் நிலமும் நற்பலன் தரும் என்ற நீதி சார்ந்த மக்கள் நம்பிக்கையை எதிரொலிக்கும் குறள் இது.

செம்மையான ஆட்சி நடக்கும் நாட்டில், மழை தவறாது பெய்யும்; விளைச்சலும் பெருகும் என்கிறது இக்குறள்.
மழை பெய்ய வேண்டும் என்றால் அறம் வளர்க்கவேண்டும் என்பர் ஒரு சாரார்; மழை வேண்டுமானால் மரம் வளர்க்க வேண்டும் என்பது மற்றொரு சாராரது அறிவுரை. பின்னவர்கள் இக்குறட்பொருளை வேறு வகையாக விளக்குவர்: செங்கோல் முறைமை தவறாமல் ஆட்சி நடத்தும் ஆட்சியாளரது நாட்டில் மழைநீர் ஏரி குளங்களில் இயல்பாகவே பொறுப்புணர்வோடு தேக்கி வைக்கப்படும். நீரைச் சேமித்துத் தேவைக்கேற்பப் பயன்படுத்தப்படுவதால் விளைச்சலும் குறைவின்றி இருக்கும். இவ்வாறு மழைநீரும் அதன் பயனாக விளையும் விளை பொருளும் ஒன்றில் ஒன்றாகத் தொக்கி நின்று பயனளிப்பனவாகும். இக்குறட்பாவால் மழையைப் பயன்படுமாறு தேக்கி வைத்து விளைவைப் பெருக்குதல் ஆட்சியாளரது கடமை என்பதும் தெளிவாக்கப்பட்டது.

அரசு நேர்மையாக நடந்தால், இயற்கையும் அதற்கு ஒத்துழைக்கும்; அதனால் மாந்தர் வளமும் பெருகும்; மழை நீதியை ஏற்றுப் பெய்யும் என்றும், அநீதியக் கண்டு பெய்யாது போய்விடும் என்றவாறு இக்குறள் பொருள் தருகிறது. மழைக்கு இத்தகைய உணர்வு இருக்கமுடியாது. இது ஓர் அறம் சார்ந்த நம்பிக்கை மட்டுமே. வேறுபாடு கருதாது கைம்மாறு வேண்டாது பெய்வதே மழை. செங்கோலாட்சியின் சிறப்பை விளக்கவே இப்படிப் பாடப்பட்டது. இது மழையின் இயல்பு உரைத்ததாக ஆகாது.
சி.இலக்குவனார், அரசின் நல்லாட்சி முறையால் எவ்விதம் மழைக்கும் விளைச்சலுக்கும் குறைவில்லை என்பதை இப்படி விளக்குகிறார்: 'நல்லாட்சியினையே நடத்த வேண்டுமென்று உறுதி பூண்டு, தான் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லாட்சிக்கு உரியதுதானா என்று ஆராய்ந்து, ஆட்சி புரிதல் வேண்டும். அவ்விதம் ஆட்சிபுரியுங்கால், மக்களுக்கு வேண்டிய பொருள்கள் யாவை, அவற்றை உண்டாக்குவது எப்படி என்று எண்ணி எண்ணி வேண்டும் பொருள்களை உண்டு பண்ணுவதிலோ, பிற நாடுகளிலிருந்து பெறுவதிலோ கருத்துச் செலுத்தி, குறைபாடின்றிப் பெற வைப்பான். இயற்கை மழை பெய்யாவிடினும், செயற்கையிலேனும் மழை பெய்யும் முறையை அறிந்து ஆவன செய்து மழை பெய்யச் செய்வான். ஆதலின், நல்லாட்சி புரியும் மன்னவன் நாட்டில் மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் உளவாம் என்று உரைத்துள்ளார்.'

இயல்பாகச் செங்கோல் ஆட்சிநடக்கும் நாட்டில் மழையும் விளைச்சலும் ஒருங்கு கூடி உளவாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செங்கோன்மை நிலவும் நாட்டில் மழை தவறாது பெய்து விளைச்சலும் பெருகும்.

பொழிப்பு

இயல்பாகச் செங்கோல் ஆட்சிஉள்ள நாட்டில் மழையும் விளைச்சலும் ஒருங்கே உளவாகும்.