கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்ற அறிவு பெறுதல் பற்றிய அதிகாரங்களை அடுத்து, ஒருவன் அறிவுடையனாயினும் தன்னுடைய குற்றங்களை
உணர்ந்து அவற்றைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துவதற்காக, குற்றங்கடிதல் அதிகாரம் அமைக்கப்பெற்றது.
தன்னிடம் காணப்படும் குற்றங்கள் மட்டுமன்றி பிறரிடம் காணப்படும் குற்றங்களைக் கடிதலையும் கூறுவதாகக் கொள்ளவேண்டும் என்பர்.
இறுமாப்பு, சினம், அற்பத்தனம், பொது நிதியைச் செலவழியாமை, போலியான மானவுணர்ச்சி, பெருமையற்றவற்றில் உவகை கொள்ளல்
தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது, நல்லதல்லாதனவற்றில் விருப்பு கொள்வது; பகைவர் அறிய பொருட்காதல் கொள்வது
ஆகியன கடியப்படவேண்டிய குற்றங்கள் எனச் சொல்கிறது இவ்வதிகாரம்.
சிறிய குற்றம் நேர்ந்துவிட்டால் கூட பெரியதாக நடந்துவிட்டதே என வருந்த வேண்டும்;
குற்றமின்மையே வாழ்க்கையின் பொருள் என்ற எண்ணத்துடன் வாழவேண்டும்; குற்றம் நிகழாமல் தடுக்கும் ஆற்றலை வளர்த்துக்
கொள்ளவேண்டும்; பிறர் குற்றங்களை நீக்க முற்படும் முன் தன்னிடமுள்ள குறைகளை முதலில் களையவேண்டும்; பொதுநிதியைச்
செலவிடாமல் முடக்கிவைத்துக் கொள்வது குற்றம் என உணரவேண்டும்; சேமிப்பு நன்மைதானே என்று செய்யப்படவேண்டியன செய்யாமல்
இருப்பது தவறான சிந்தனை என்று கொள்ளவேண்டும். இவை குற்றந் திருந்திக் குணமுற்றோங்க இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
இவற்றுள் இவறல், போலிமானம், மாணாஉவகை இவற்றை நீக்குதல் என்பதும், பிறர் குற்றம் காணுமுன் தன் குற்றம் நீக்குதல்
என்பதும், 'இறைக்கு' என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் இவை அரசுக்கும் அல்லது தலைவனுக்கும் கூறப்பட்டதாகக்
கொள்ளவேண்டும். மேலும் இவ்வதிகாரத்துக் கருத்துக்கள் இறைக்கு மட்டுமன்றி மாந்தர் அனைவருக்கும் பொருந்துவனவே.