இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0436



தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:436)

பொழிப்பு (மு வரதராசன்): முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?

மணக்குடவர் உரை: தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம்.
இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின், இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?
(அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.)

வ சுப மாணிக்கம் உரை: தன் குறையை நீக்கிப் பிறர்குறை கூறின் அரசனை யாரும் குறை சொல்லார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் இறைக்கு ஆகும் குற்றம் என்?

பதவுரை: தன்-தனது; குற்றம்-குற்றம், தவறு, பிழை; நீக்கி-கடிந்து, விலக்கி; பிறர்-மற்றவர்; குற்றம்-தவறு, பிழை; காண்கிற்பின்-காணமுடியுமானால்; என்-என்ன; குற்றம்-பிழை; ஆகும்-ஆம்; இறைக்கு-ஆட்சித்தலைவனுக்கு.


தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின்;
மணக்குடவர் குறிப்புரை: இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றங்களும் கடிய வேண்டுமென்றது.
பரிதி: பிறர் குற்றம்போல் தன் குற்றம் பார்ப்பானாகில்;
காலிங்கர்: முன்னம் தனது குற்றமுள்ள பலவும் தான் அறிந்து நீக்கித் தான் நீதியில் தூயனாய்ப் பின்பு பிறரது குற்றங்களை நோக்கி அக்குற்றங்களை ஒழிப்பதாக நினைக்குமாயின் பின்பு;
பரிமேலழகர்: முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின்;

'தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பிறர் குற்றம்போல் தன் குற்றம் பார்ப்பானால்' என்ற மாறுபாடான உரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன் தன் குற்றத்தை அறிந்து நீக்கிப் பின் பிறரது குற்றத்தைக் காணவல்லவனாயின்', 'அரசன் தன் குற்றத்தை முதலிலே நீக்கிக் கொண்டு பின்னர் மற்றவர்களுடைய குற்றத்தைக் கண்டு கடிய வல்லன் ஆயின்', 'முன்னால் தம் குற்றத்தைக் கண்டு பின்னர் பிறர் குற்றம் காண முடிந்தால்', '(பிறர் குற்றத்தைக் கண்டிப்பதற்கு முன்னால்) தன் குற்றங்களை முதலில் நீக்கிக்கொண்டு அதன் பிறகு பிறர் குற்றத்தைக் கண்டிக்கிற' என்ற பொருளில் உரை தந்தனர்.

தனது குற்றத்தை முதலில் நீக்கிப் பின்னர்ப் பிறர் குற்றங்களைக் கடிய முயல்வானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

என்குற்றம் ஆகும் இறைக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசனுக்கு என்ன குற்ற முளதாம்.
பரிப்பெருமாள்: அரசனுக்கு என்ன குற்ற முளதாம்.
பரிதி: அவனுக்குக் குற்றம் உண்டோ என்றவாறு.
காலிங்கர்: என்ன குற்றம் உளதாகும் அரசர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது?
பரிமேலழகர் குறிப்புரை: அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப. [கடியாவழியே-நீக்காத இடத்திலே; அவற்றது- காமம், வெகுளி முதலான குற்றங்களின்]

'அரசனுக்கு என்ன குற்றம் உளதாகும்?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்கு வரும் குற்றம் என்ன?', 'அவன்பால் ஏற்படக்கூடிய குறை யாதும் இல்லை', 'தலைவர்க்கு உண்டாகும் குற்றம் யாது? ஒன்றுமில்லை', 'தலைவனுக்கு ஒரு துன்பமும் வராது' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஆட்சித்தலைவனிடம் என்ன குறை இருக்க முடியும்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனது குற்றத்தை முதலில் நீக்கிப் பின்னர்ப் பிறர் குற்றங்களைக் காண்கிற்பின், ஆட்சித்தலைவனிடம் என்ன குறை இருக்க முடியும்? என்பது பாடலின் பொருள்.
'காண்கிற்பின்' என்பதன் பொருள் என்ன?

தலைமையிலிருக்கும் குற்றம் கீழே ஊடுருவிச் சென்று பரவும்.

தன்னுடைய குற்றங்களை முதலில் நீக்கிவிட்டு, பிறகு மற்றவர்களுடைய குற்றத்தை காணவல்லவனுக்கு என்ன குறை உண்டாகும் எனக் கேட்கிறது இப்பாடல்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குக் குற்றங்களை ஆராய்தல், தன் கீழ் உள்ளவர்களை நன்னெறியில் செலுத்துதல் ஆகிய கடமைகள் உண்டு. பாடலிலுள்ள இறை என்ற சொல் இது நாடோள்வோருக்குச் சொன்ன குறள் என்பதைத் தெரிவிக்கிறது. நாடாளும் தலைவனுக்குக் குடிகளின் குற்றங்களை ஆராயும் கடமையை முறையாகச் செய்ய வேண்டுமானால், முதலில் அவன் குறைகளுக்கும் குற்றங்களுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும். அவன் தன் குற்றத்தை அறிந்து நீக்கித் தான் அறநெறியிற் தூயனாய்ப் பின்னும் குற்றம் வராமல் காத்துக் கொள்பவனாக இருக்க வேண்டும். பிறகு மற்றவர் குற்றம் ஆராய முற்படவேண்டும். அதன் பின்னரே அறம் கூறும் உரிமை பெறுவான். தன் குற்றம் விலக்காமல் பிறர் குற்றம் காணுதலே ஓர் குற்றமாகும். எனவே தன் குற்றம் கடிந்தபின் தண்டிப்பதே முறைசெய்தலாகும். ஆள்பவனே குற்றமுடையவனானால் குடிமக்களின் குற்றம் நீக்குதல் கைகூடாது.
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராயினும் அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கி நன்னெறியில் நடக்க வேண்டும். மன்னன் அறநெறியில் வாழ்வானேயானால் மக்களும் அதைக் கடைப்பிடித்து வாழ்வார்கள்; அரசு முறை மீறினால், மக்களுக்கு அறநெறியில் நம்பிக்கை அற்றுப்போகும். அரசன் தன் குற்றங்களிலிருந்து விடுபட்டே பிறர் குற்றம் காண வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
அரசு குடிமக்கள் நல்லொழுக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு சூழலை உருவாக்கி வழி நடத்தவேண்டும். நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறநானூறு 312: பொருள்: நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாள்பவரது கடமையாகும்} என்று சங்கப்பாடல் கூறும்.

தன் குற்றம் தனக்குத் தோன்றாது. பலர் தம்மிடம் குற்றங்கள் உண்டா என்று எண்ணிப் பார்ப்பது கூட இல்லை. அவர்கள் தம்மைப் பற்றி யாரேனும் குறை கூறினால் பொறுக்க மாட்டார்கள்; குறைகூறுபவர்கள் மேல் சீறுவார்கள். தம்மைப் பற்றிக் குறை சொல்லுவதற்கான காரணம் உண்டா இல்லையா என்று சிந்திக்கவே மாட்டார்கள். தன் குற்றத்தை மறந்து பிறர் குற்றம் காண்பதே பொதுவான மக்கள் இயல்பு. பிறரிடம் குற்றம் காண்பது எளிது; அக்குற்றத்தை எடுத்துச் சொல்லுவதும் எளிது. முதலில் தன்னிடம் உள்ள குற்றத்தைத் தெரிந்து அதை விட்டொழிக்க வேண்டும். தம்பால் எக்குற்றமும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுகின்றவர்களே பிறர் குறைகளைச் சுட்டிக்காட்ட அறமுறை உரிமையுடையவர்கள். தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவரும் தூய நெறியிலே நடந்துகொள்ள வேண்டும். தம்மை நேர்படுத்திச் செயலாற்றினால்தான் இவர்கள் சொற்களுக்கு செல்வாக்குண்டாகும். தன் குற்றத்தைக் கண்டு நீக்குவது அரிய செயல்தான். ஆனால் முறை செய்யவேண்டிய தலைவன் அந்தத் தகுதிபெற்றே தீரவேண்டும். தன் குற்றம் களைந்து பிறர் குற்றம் ஆராயும் தலைவனை யாரும் குறை சொல்லமாட்டார்கள். அவன் குற்றம் நீங்கிய வாழ்வு மேற்கொண்டு மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்வான்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது பழமொழி. மேலிடம் ஒழுக்கமின்றி இருந்தால் கீழ்நிலையிலும் அது எதிரொலிக்கும். ஆதலால் மக்களிடமுள்ள குற்றங்களை நீக்கித் தண்டனை கொடுக்கும் அரசு அதாவது குற்றங்களை நீக்க முயலும் அரசு முதலில் மக்களிடம் குற்றம் தோன்றி வளர்வதற்குக் காரணமாக தம்மிடம் ஏதாவது குற்றங்கள் உள்ளனவா என்று ஆராயவேண்டும். நடுநிலையற்ற ஆட்சி நடக்கும்போது மக்கள் குற்றம் செய்து அவர்களைக் கடிந்து கொள்ளும்பொழுது மக்கள் அரசின் கோணலைச் சுட்டிக் காட்டுவர். அரசே கள் விற்றால் அது கள்ளுண்ணாமையின் நலன் பற்றி மக்களிடம் எப்படி எடுத்துரைக்க முடியும்? மேல்மட்டத்திலே ஊழல் பெருகிக்கிடந்தால் கீழ்நிலையில் உள்ள முறைகேடுகளை எப்படிக் களைய இயலும்? தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் ஆராயும் தலைவனை யாரும் குறை சொல்லமுடியாது.

இக்குறளும் பொருட்பாலின் ஏனைய சில அதிகாரப்பாடல்கள் போல அரசுக்கும் குடிகட்கும் பொதுவாகக் கூறப்பட்டதுதான். ஆனால் குறிப்பாக இறைக்கு என்று சொல்லப்பட்டதால் அரசு பின்பற்றவேண்டிய அறிவுரைப் பாடல் என்பது புலனாகும். இக்குறள் நடைபோன்றே அமைந்தது ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு (புறங்கூறாமை 190 பொருள்: மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோலத் தம் குற்றத்தைக் காண்பாரானால் இவ்வுலகத்து வாழும் மக்களுக்குத் தீமை இருக்குமா?) என்னும் குறள். பொதுமக்கள் குற்றங்கண்டு கூறுமியல்பினராதலால் அங்கு 'மன்னும் உயிர்க்கு' என்று மக்களுக்குச் சொல்லப்பட்டதாகிறது. குற்றம் கண்டு அதனைத் தண்டித்துப் பின் நிகழாவண்ணம் தடுக்கும் ஆற்றல் அரசமைப்பிலேதான் உள்ளதாதலால் இங்கு அது 'இறைக்கே'யுரியதாகிறது.

'காண்கிற்பின்' என்பதன் பொருள் என்ன?

'காண்கிற்பின்' என்றதற்கு ஆராயவல்லனாயின், பார்ப்பானாகில், நோக்கி (அக்குற்றங்களை) ஒழிப்பதாக நினைக்குமாயின், காணவல்லனாயின், பிறர் செய்யாமல் நீக்குவானாகில், ஆராயவல்லவனானால், கண்டு நீக்க வல்லவனானால், கூறின், காணவல்லவனாயின், சுட்டிக்காட்டி நீக்கினால், கண்டு கடிய வல்லன் ஆயின், காண முடிந்தால், அறிந்து நீக்க முயல்வானானால், கண்டபின் போதிய தண்டனை அளிப்பதால் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கண்டனர்.

காண்கில்பின் என்பதற்கு காணவல்லனாயின் என்பது பொருள். இதில் உள்ள 'கில்' என்பது ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல் என்பர். முன்பு 'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்......' என்ற புறங்கூறாமைப் பாடலிலும் இத்தொடர் ஆட்சிபெற்றது.
இதற்குப் பிறருடைய குற்றத்தை அவர்களைக் காணச் செய்தால் என்று பிறவினைப் பொருள்கொள்ளுமாறும் உரை செய்தனர். அது இலக்கண நெறியன்று என்று அறிஞர் மறுப்பர். காண்கின் + பின் எனப் பிரித்து கண்ட பின்னர் எனவும், பின் எனப் பிரித்துப் ‘பின்’ காண்கில் எனக் கூட்டிப் பின்னே காணவல்லவன் ஆகில் எனவும் பொருள் கண்டனர். இவை குறள் நடைக் கொவ்வா என்பார் இரா சாரங்கபாணி.

'காண்கிற்பின்' என்றது கண்டு நீக்க வல்லவனானால் என்று பொருள்படும்.

தனது குற்றத்தை முதலில் நீக்கிப் பின்னர்ப் பிறர் குற்றங்களைக் கடிய முயல்வானாயின், ஆட்சித்தலைவனிடம் என்ன குறை இருக்க முடியும்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தம் குற்றம் நீக்காமல் பிறர் குற்றங்கடிதல் குறையுள்ள அமைப்பில்தான் காணப்படும்.

பொழிப்பு

முதலில் தன் குற்றத்தை அறிந்து நீக்கிப் பின் பிறரது குற்றத்தைக் கடிவானாயின் மன்னனுக்கு என்ன குறை உண்டாகும்?