இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:435)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.மணக்குடவர் உரை: துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்.
இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.

பரிமேலழகர் உரை: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும்.
('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)

நாமக்கல் கவிஞர் உரை: (குற்றம் செய்தபின் வருந்திப் பயனில்லை. செய்து விடாமல் எச்சரிக்கையாகத் தடுக்க வேண்டும்.) குற்றம் செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருந்து விலக்கிவிடாதவனுடைய வாழ்க்கை நெருப்பு தீண்டுவதற்குமுன் தடுப்பாரில்லாத வைக்கோல் பொதிபோல் அழிந்தே போகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்.

பதவுரை: வருமுன்னர்-வருவதற்கு முன்னால்; காவாதான்-காத்துக் கொள்ளாதவன்; வாழ்க்கை-வாழ்க்கை; எரி-நெருப்பு; முன்னர்-முன்னிடம்; வைத்தூறு-வைக்கோல் குவியல்; போல-போன்று; கெடும்-அழியும்.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம்;
பரிப்பெருமாள்: துன்பம் வருவதன்முன்னர், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யாத அரசனரது செல்வம்;
பரிதி: தனக்கு ஒரு விதனம் வருமுன்னே பாதுகாவாதான் வாழ்க்கை;
காலிங்கர்: சிறிதேனும் குற்றமாவது வந்து எய்துவதன் முன்னமே உற்றுணர்ந்து தன்பால் வராமல் பரிகரிக்கமாட்டானது செல்வமானது;
பரிமேலழகர்: குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை;.
பரிமேலழகர் குறிப்புரை: 'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது.

'துன்பம் வருவதன் முன் காக்கப்படாத செல்வம்' என்று மணக்குடவர் கூற, பரிப்பெருமாள் துன்பம் வருவதன் முன் காக்கப்படாத அரசனரது செல்வம் என்று உரை கூறினார். பரிதி 'விதனம் வருமுன்னே காவாதான் வாழ்க்கை' என்றார். 'சிறுகுற்றமும் வராதபடி காப்பானது செல்வம்' என்று காலிங்கர் உரை நல்கினார். பரிமேலழகர் குற்றம் காவாத அரசன் வாழ்க்கை என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றம் வருமுன்னே தடுக்காதவன் வாழ்வு', 'குற்றம் வருமுன்னர் அறிந்து அதனைக் காக்க மாட்டாதவனுடைய வாழ்க்கை', 'குற்றம் வருவதற்கு முன் அதனை வாராமற் காவாதானுடைய வாழ்க்கையானது', 'குற்றம் வருவதற்கு முன்னர் அதனைத் தடுத்துக் கொள்ளதவனுடைய வாழ்க்கை' என்ற பொருளில் உரை தந்தனர்.

குற்றம் வருவதற்குமுன் காத்துக்கொள்ளாதவனது வாழ்க்கை என்பது இத்தொடரின் பொருள்.

எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.
பரிப்பெருமாள்: எரியின் முன்னர்க் கிடந்த வைத்திரள் போலக் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முந்துற்றுக் காவல் செய்ய வேண்டுவன செய்யாமையும் குற்ற மென்றது.
பரிதி: நெருப்பின் முன்னர் வைக்கோற்போர் பட்டது போலவும் தூறு போலவும் படும் என்றவாறு.
காலிங்கர்: மற்று எரிமுன்னர்ப் பட்ட வைக்கோற்போர் போலக் கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும்.
பரிமேலழகர் குறிப்புரை: குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.

'நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல அழிந்துபடும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீ முன் வைக்கோற் போர் போல அழியும்', 'தீ முன் உள்ள வைக்கோற்போர் போல அழிந்தொழியும்', 'குற்றம் வந்தபோது தீமுன் வைத்த வைக்கோற்போர் போல அழிந்துவிடும்', 'நெருப்பு முன்னர் உள்ள வைக்கோல் குவைபோல அழிந்து விடும்.' என்ற பொருளில் உரை தந்தனர்.

தீயின் முன் நின்ற வைக்கோல்போர் போல அழிந்துவிடும் என்பது இத்தொடரின் பொருள்.நிறையுரை:
வருமுன்னர்க் காத்துக்கொள்ளாதவனது வாழ்க்கை, தீயின் முன் நின்ற வைக்கோல்போர் போல அழிந்துவிடும் என்பது பாடலின் பொருள்.
எது வருமுன்னர்க் காப்பதைச் சொல்கிறது இப்பாடல்?

சிறு குற்றமும் நெருங்காமல் தடுக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுதல் பெருங்கேட்டினைத் தவிர்க்க உதவும்.

குற்றம் நிகழ்வதற்கு முன்பே அது நிகழாதவாறு தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை ஒரு சிறிய நெருப்புப் பொறியின் முன்உள்ள பெரிய வைக்கோற்போர் போல அழிந்துவிடும்.
இக்குறளிலுள்ள வாழ்க்கை என்ற சொல்லுக்கு 'வாழ்க்கை' என்றும் 'செல்வம்' என்றும் இருவிதமாகப் பழம்ஆசிரியர்கள் பொருள் கொண்டனர். வாழ்க்கை என்பதுவே பொருத்தமாகும்.
வைத்தூறு என்ற சொல் வைக்கோற்போர், வைக்குவை, வைத்திரள் எனவும் அறியப்படும். வைத்தூறு என்றது வை+தூறு என்ற இரண்டு சொற்களைக் கொண்டது. வை என்றால் வைக்கோல்; தூறு என்றால் குவியல்; வைத்தூறு-வைக்கோல் குவியல். நெல் முதலிய பயிர்களின் மணிகளை நீக்கியபின் மிஞ்சும் பகுதிளை, உலர்ந்தபின், போரடிக்கும் களத்தின் அருகிலோ அல்லது கால்நடைக் கொட்டகையிலோ குவித்து வைத்துத் தேவையான போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்வர். பொதுவாக, காற்று மிகவும் சரளமாகப் புழங்கக்கூடிய திறந்த வெளியிலேயே வைக்கோல் பொதிந்து வைக்கப்படும். வைக்கோல் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டதாதலால், சிறு நெருப்புப் பொறியே பெரிய வைக்கோல் போரை ஒரு கணப்பொழுதில் பொசு பொசு வென்று ஒன்றுக்கும் பயனில்லாமல் அழித்துவிடும். வைக்கோலை நெருப்புத் தீண்டிவிட்டால் அதன் பிறகு குவையைக் காப்பாற்றுவது இயலாது. நெருப்பு சிறிதாயினும் வைக்கோற்போரை விரைவில் சாம்பலாக்கும் என்பதை உவமையாகப் பயன்படுத்திக் குற்றஞ் சிறிதாயினும் அது ஒருவனது வாழ்க்கையை முழுவதுமாகக் கெடுத்துவிடும் என்பது உணர்த்தப்பட்டது. குற்றமொன்று உண்டானபின் காப்பது என்பது முற்றும் அழியும் பொருளை நெருப்பிலிருந்து மீட்கப் போராடுவதற்கு இணையாகும்; வீண் முயற்சியாம். குற்றங்களை நீக்கி வாழ நினைப்பவன் அவனது வாழ்க்கையில் குற்றங்கள் அணுகாமல் காத்துக்கொள்ள வேண்டும். இதுவே வருமுன் காக்கும் செயல் ஆகும்.

வைக்கோற் குவையை அழிக்கச் சிறிய தீப்பொறியே போதும்; பெருநெருப்புத் தேவையில்லை. பெருமுயற்சியும் தேவையில்லை. அது போல குற்றமும் சிறியதாகத் தோன்றினாலும் அது அவன் சேர்த்துவைத்துள்ள பெருஞ்செல்வத்தையும், ஈட்டிய புகழையும் ஒரு பொழுதில் அழித்து விடும் ஆற்றல் வாய்ந்தது. சிறு தீ பெரிய போரைத் தன்கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதுபோல குற்றம் சிறியதாயினும் அதை உடையவனை அக்குற்றம் அவனைத் தன் அடிமை ஆக்கிவிடும்.
தீ பற்றிக்கொண்டால் சுற்றியுள்ள இடங்களுக்கும் ஆபத்து. அதுபோல குற்றம் வந்துவிட்டால் அதன் விளைவுகள் ஒருவனைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும்.
'எரிமுன்னர் வைத்தூறு' என்று நெருப்பின் 'முன்னால் உள்ள வைக்கோல் திரள்' என்கிறார் வள்ளுவர். வைக்கோல் பொதி ஏற்றிய வண்டி, எரியுள்ள இடம் ஒன்றின் முன்னால் போய் நின்றுகொண்டிருப்பதை அல்லது நிறுத்தி வைத்திருப்பதை நினைத்துக் கொள்ளலாம். உவமிக்கப்பட்ட காட்சியானது ஒருவன் தன்னையே குற்ற நிகழ்வுக்கு உள்ளாக்கிக் கொள்வதைக் குறிக்கும். குற்றம் நிகழும் இடத்தில் இருந்தாலோ அல்லது குற்றம் செய்வோர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தாலோ அவனது வாழ்வுக்கு கேடு உண்டாக்கி விடும் என்பது குறிப்பு; வாழ்க்கையைக் குற்றங்கள் அணுகவே விடக்கூடாது என்பது கருத்து.

இக்குறளைத் திட்டமிடலின் இன்றியமையாமை பற்றியதாகவும் வருங்காலத்தை எண்ணி சேமித்து வைப்பது பற்றியதாகவும் இன்று பொருள் கொள்கின்றனர். மேலாண்மை பற்றி எழுதும் இன்றைய கட்டுரையாளர்களும் அப்படியே எண்ணி இக்குறளை மேற்கோள் காட்டுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சிந்தனை இல்லாதவனும் குற்றம் புரிபவனே என்பது இவர்கள் துணிபு போலும். முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்றம்தான் என்ற அடிப்படையில் எழுந்தது இவர்கள் கருத்து.

எது வருமுன்னர்க் காப்பதைச் சொல்கிறது இப்பாடல்?

வருமுன்னர் என்ற சொற்றொடர்க்கு துன்பம் வருவதன்முன் என மணக்குடவரும் பரிப்பெருமாளும் உரை வரைந்தனர். பரிதியும் அதே கருத்தினர். காலிங்கர் குற்றம் எய்துவதன் முன் எனக் கூறியுள்ளார். பரிமேலழகர் 'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது என்று விளக்கி குற்றம் நிகழ்வதற்கு முன் எனக் குறிப்பிடுகின்றார். இக்குறளில் குற்றம் என்ற சொல் இல்லை. இது 'குற்றங் கடிதல்' அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ளதால் குற்றம் நேர்வதற்குமுன் எனப் பொருள் கொண்டனர். இன்றைய உரையாசிரியர்களும் குற்றம் நேர்வதற்கு முன்னர் என்றே பொருள் கொள்கின்றனர். துன்பம் என்று கூறியவர்கள் குற்றம் காரணமாக உண்டாகும் துன்பம் என்பதாக உரை கண்டனர் எனலாம்.
அதிகாரத் தலைப்பு நோக்கி, குற்றம் வருவதற்கு முன்னர் எனக் கொள்வதே சரியாகும்.

ஒரு குற்றம் நடந்து அது அளப்பரிய அழிவை ஒருவனது வாழ்வில் ஏற்படுத்துவதற்கு முன்னர் விழிப்புடன் நடந்துகொள்ளச் சொல்கிறது இப்பாடல். 'குற்றம் கடிதல்' அதிகாரம் நீக்கப்படவேண்டிய குற்றங்களாக வணக்கமற்ற செருக்கு, சினம், சிறுமை, இவறல்(கஞ்சத்தனம்), மாட்சியில்லாத மானம், பெருமையற்ற தன்மகிழ்வு போன்ற மனக்குற்றங்களைப் பேசுகிறது. குற்றமே அற்றம் தரும் பகையாதலால் இக்குற்றங்கள் ஒருவனது வாழ்வை அழித்துவிடாமல் அவை நிகழும்முன் விரைந்து காத்துக் கொள்ளவேண்டும்.
இன்றைய ஆசிரியர்கள் தனிமனிதன் தனக்குண்டான நோய் அறிகுறிகளைப் புறக்கணிப்பது, எதிர்காலத்துக்குச் சேமிக்காமை, ஆயுள், மருத்துவ காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்யாமை, அளவுமீறி கடன் பெருக்கம் உண்டாக்கிக் கொள்வது, மாணவன் தேர்வுக்கு ஆயாத்தமாகாமல் இருப்பது, பெரும் இழப்பு கண்டு வாளாஇருக்கும் வணிகர்கள் போன்றவற்றை வருமுன் காவாததற்குக் காட்டாகக் குறிக்கின்றனர்.

வருமுன்னர்க் காப்பது என்பது குற்றம் உண்டாகாதவாறு அது நிகழ்வதன்முன் காப்பது என்பதைக் குறிக்கும்.

குற்றம் வருவதற்குமுன் காத்துக்கொள்ளாதவனது வாழ்க்கை, தீயின் முன் நின்ற வைக்கோல்போர் போல அழிந்துவிடும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குற்றங்கடிதல் தீயுடன் போராட நேர்வதைத் தவிர்க்கும்.

பொழிப்பு

குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காதவனது வாழ்க்கை தீயின் முன் நின்ற வைக்கோல் போல் அழிந்துவிடும்.