இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0438பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:438)

பொழிப்பு: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல.

மணக்குடவர் உரை: கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று.
இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.

பரிமேலழகர் உரை: பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது.
(இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பொருளை விடாது இறுகப் பற்றும் மனம் என்று கூறத்தகும் கஞ்சத்தன்மை எக்குற்றத்துள்ளும் ஒன்றாக வைத்து ஒப்ப நினைக்கத் தகுவதன்று. அது நிகரற்ற பெருங்குற்றமாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று..


பற்றுள்ளம் என்னும் இவறன்மை:
பதவுரை: பற்று-பிடித்தல்; உள்ளம்-நெஞ்சம்; என்னும்-என்கின்ற; இவறன்மை-கஞ்சத்தனம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடின பொருளை விடாமையாகிய உலோபம்;
பரிப்பெருமாள்: கூடின பொருளை விடாமையாகிய உலோபம்;
பரிதி: குற்றமாவது பொருளை அவாவி அறஞ்செய்யாமை;
காலிங்கர்: எய்திய செல்வம் யாவர்க்கும் ஈயாது இறுகப் பற்றுதலை நெஞ்சினால் நினைக்கக்கடவது அன்று என்று, ஈதலுடையவன் தகுதியாகிய தன்மையை மற்று, யாதானும் ஒரு நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுவதற்கு ஓர் இணையில்லை;
பரிமேலழகர்: பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை;

'பொருளை விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம்' என்ற பொருளில் மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் இத்தொடர்க்கு உரை பகன்றனர். பரிதி 'பொருளை விரும்பி அறம் செய்யாமை' என்று கூறினார். காலிங்கர் 'ஈயாது இறுகப் பற்றுதலை நெஞ்சினால் நினைக்கக்கடவது அன்று' என்ற எதிர்மறைக் கருத்துடன் 'ஈதலுடையவன் தகுதி எல்லா நன்மைகளிலும் பெரிது' என்ற உடன்பாட்டுக் கருத்தையும் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருட்பற்றாகிய கஞ்சத்தன்மை', 'பொருளைச் செலவு செய்யுமிடத்துச் செய்யாது அதன்கண் பற்றுதலுடைய ஈயாமையானது)', 'பொருளைச் செலவழிக்க வேண்டியவிடத்துச் செலவழிக்காமல் இருப்பதற்குரிய உள்ளம் என்று சொல்லப்படும் சிக்கனத் தன்மை', 'கடும்பற்று என்று பேசப்படும் பொருட்பற்று' என்ற பொருளில் உரை தந்தனர்.

பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத கஞ்சத்தனம் என்பது இத்தொடரின் பொருள்.

எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று:
பதவுரை: எற்றுள்ளும்-எதனுள்ளும்; எண்ணப்படுவது-(வைத்து)எண்ணப்படுகின்ற; ஒன்று-ஒரு பொருள்; அன்று-இல்லை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று.
மணக்குடவர் கருத்துரை: இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.
பரிப்பெருமாள்: யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று.
பரிப்பெருமாள் கருத்துரை: இது தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் உலோபம் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.
பரிதி: அந்தக் குற்றம் எந்த வகையான குற்றத்திலும் மேலான குற்றம்.
காலிங்கர்: ஆதலான் இவறுதல் பெரிதும் குற்றம் என்று பொருள் ஆயிற்று.
பரிமேலழகர்: குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று, மிக்கது.
பரிமேலழகர் கருத்துரை: இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.

'குற்றத் தன்மைகள் எவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி, பரிமேலழகர் ஆகியோர் உரை பகன்றனர். காலிங்கர் உரை மாறுபாடாக உள்ளது. அவர் (இறுகப் பிடித்தலை) நெஞ்சினால் நினைக்கக்கடவது அன்று; இவறுதல் பெரிய குற்றம்' என்று கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எத்தன்மையினும் இழிந்தது', 'குற்றங்கள் பலவற்றுள்ளும் ஒன்றாக மாத்திரம் கருதப்படாது. பிற எல்லாவற்றினும் கெட்டதாகவே கருதப்படும். (அஃது எவ்விதமான நன்மையோடும் சேர்த்துவைத்தெண்ணப்படத்தக்கது அன்று}', 'எதனுள்ளும் வைத்துக் கருதப்படுவதற்குரிய குணம் அன்று; குற்றமேயாகும்', 'எவ்வகையினும் பிற குர்றங்களோடு எண்ணத்தக்கது அன்று. குற்றங்களின் வரையறை கடந்த குற்றம் அது' என்றபடி பொருள் உரைத்தனர்.

எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
செய்யப்பட வேண்டியவற்றுக்குச் செலவிடாத சிக்கனத்தன்மை எந்த நன்மையுள்ளும் சேராது எனச் சொல்லும் குறள்.

பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல என்பது பாடலின் பொருள்.
இவறன்மை என்றால் என்ன?

பற்றுள்ளம் என்பதற்கு இறுகப் பிடித்துக் கொள்ளும் உள்ளம் என்பது நேர்பொருள். இங்கு செல்வத்தைச் செலவிடாது பிடித்து வைத்துக் கொள்வதைக் குறிக்கிறது.
எற்றுள்ளும் என்பதற்கு எவற்றுள்ளும் எனப் பொருள் கொள்வர்.

இவறன்மை என்றால் என்ன?

இவறன்மை என்பது இவறல்+தன்மை என்று விரியும். இவறல் தன்மை என்பது செலவிடப்படத்தக்கனவற்றிற்கு செலவு செய்யாத பொய்யான சிக்கனத் தன்மை என்று பொருள்.
சேர்ந்த பொருளைச் செலழியாமையை இவறன்மை என்று வள்ளுவர் அழைக்கிறார். இது குறிப்பாக ஆள்வோரது பண்பு பற்றியதாகவே கூறப்பட்டதாகப்படுகிறது. குடிகளிடம் இருந்து பெறப்படும் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் செலவழிக்காத தன்மையையே இவறன்மை குறிக்கிறது. பொதுப் பணத்தை அதாவது பொதுநலத்துக்கான நிதியைச் செலவு செய்யாமால் பாதுகாக்கும் கஞ்சத்தனமே இவறன்மையாம். மிகு செல்வம் கொண்டோரின் ஈயாத்தன்மையையும் இச்சொல் குறிப்பதாக உரையயசிரியர்கள் கொள்வர்.

இவறன்மை என்பதன் பகுதிச்சொல் அமைப்புகூடத் தொகை நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இல்லை என்று ஆய்வாளர் கூறுவர். எனவே இது வள்ளுவரால் புதிதாக ஆளப்பட்ட சொல் எனத் துணியலாம்.

இக்குறளுக்குப் பெரும்பான்மை உரையாசிரியர்கள் 'செல்வத்தின் மீது மிகையான பற்றுக் கொண்டு, சேர்த்த செல்வத்தை, தன்னுடைய தேவைகளுக்காகவோ, அல்லது பிறருக்குக்காகவோ செலவு செய்யாத கருமித்தனத்தைப் போல மேலான குற்றம் ஏதுமில்லை. இது மற்றைய குற்றங்களோடுகூட வைக்கப்படமுடியாத கொடுங்குற்றம்' என்று விளக்கம் தந்தனர்.
இப்பாடல் இவறன்மை ஒரு குற்றமே எனச் சொல்லவருவது. பாடலில் எங்கும் குற்றம் என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால் 'எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று' என்ற தொடர் இதைக் குற்றம் என்று குறிப்பிடவே ஆளப்பட்டது என்பது தெளிவு.
இவறலின் குற்றத் தன்மையை விளக்க உரையசிரியர்கள் 'அது எதிலும் வைத்து எண்ணத் தகாதது; இழிந்தது', 'உலோபம் தான் குற்றமாதலேயன்றி உள்ள உத்தம குணங்களையும் போக்குவதாற் குற்றத்தின் மிக்க குற்றம்', 'இவறன்மை ஏனைய குற்றங்களுடன் வைத்து எண்ணக்கூடாது; இது இணையற்ற பெரிய குற்றம்' என மொழிந்தனர்.

இவறன்மை ஓர் இனம் புரியாத குற்றம், குற்றத்தில் பெரிய குற்றம், தனித்தன்மையுடைய குற்றம், நற்குணங்களைத் தாழ்வுபடுத்தும் குற்றம் என்று சொல்வதைவிட காலிங்கரின் உரை பொருத்தமாகப் படுகிறது. அவர் உரை 'ஈதலுடையவன் தகுதியாகிய தன்மையை மற்று, யாதானும் ஒரு நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுவதற்கு ஓர் இணையில்லை; ஈயாது இறுகப் பற்றுதலை நெஞ்சினால் நினைக்கக்கடவது அன்று; ஆதலான் இவறுதல் பெரிதும் குற்றம் என்று பொருள் ஆயிற்று' எனச் செல்கிறது.
'பொருளைச் செலவழிக்க வேண்டியவிடத்துச் செலவழிக்காமல் இருப்பதற்குரிய உள்ளம் என்று சொல்லப்படும் சிக்கனத் தன்மை எதனுள்ளும் வைத்துக் கருதப்படுவதற்குரிய குணம் அன்று; குற்றமேயாகும்' என்ற சி இலக்குவனார் உரை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது.

'சிக்கனமாக இருந்து பொருளைச் சேமித்து வைத்தல் நல்ல ஒழுகுமுறைதானே; அதிலென்ன தவறு?' என்பது இயற்கையாக எழும் வினா. அப்படிக் கேட்பார்க்குப் விடையிறுத்ததுபோல் இக்குறள் அமைந்துள்ளது. அந்தப் பதில்: 'செய்யவேண்டியதற்கு செலவிடாமை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல' என்பது.
பொருள்மீது கடும்பற்று கொண்டு அதை எதற்காகவும் விடாத உள்ளம் கொண்ட தன்மையை எந்த ஒரு நன்மையினுள்ளும் சேர்த்து ஏண்ணத்தக்கதல்ல என்கிறது இப்பாடல். மக்கள் பணத்தை அல்லது பொதுநிதியைத் தேக்கிவைத்து செலவிடாமல் இருப்பது குற்றமே என இக்குறள்மூலம் அறிவிக்கிறார் வள்ளுவர்.

பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத கஞ்சத்தனம் எந்த ஒரு நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருள் மேல் பற்று கொண்டு பொதுநலனுக்குச் செலவழிக்காத குற்றங்கடிதல் வேண்டும் எனச் சொல்லும் பாடல்.

பொழிப்பு

பொருளை விடாது இறுகப் பற்றும் உள்ளம் எனப்படும் செலவழியாத்தன்மை எதனுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல.