இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
(அதிகாரம்:குற்றங்கடிதல்
குறள் எண்:432)
பொழிப்பு (மு வரதராசன்): பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.
|
மணக்குடவர் உரை:
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம்.
இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும்,
இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம்.
(மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும், 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
செலவு செய்ய வேண்டுமிடங்களிலும் செலவு செய்யாமல் செல்வத்தின் மீது பற்றுவைக்கும் கருமித்தனமும் பெருமைதராத, எல்லைமீறிய மான உணர்ச்சியும் மாண்பற்ற, தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசர்க்குக் குற்றமாகும்.
இவை அறவே நீக்க வேண்டியன. மாண்பு இறந்த மானம்-எல்லை கடந்து மான வுணர்ச்சி பேசுவது, மாணா உவகை-காமம் போன்றவற்றில் எல்லைகடந்த பெருமகிழ்ச்சியில் திளைப்பது. அதிகாரம் இருந்தால் வரக்கூடியவை இவை. இவற்றை அறிந்து நீக்குதல் ஆள்வோர் கடமையாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் இறைக்கு ஏதம்.
பதவுரை: இவறலும்-வேண்டும் வழிப் பொருள் கொடாமையும், செலவு செய்யவேண்டிய இடத்தில் செய்யாமல் இருக்கும் குணமும்; மாண்பு இறந்த மானமும்-மாட்சிமை நீங்கிய மானமும், தன் தகுதிக்கு மேம்பட்ட பெருமையும்; மாணா-பெருமையற்ற; உவகையும்-மகிழ்ச்சியும்; ஏதம்-குற்றம்; இறைக்கு-ஆட்சியாளர்க்கு, வேந்தனுக்கு.
|
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும்;
பரிப்பெருமாள்: உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: உலோபம் இரண்டு வகைத்து; தனக்கு முறைமையல்லாத பொருளை விரும்புதலும், உண்டான பொருளை விடாமையும்;
அஃது ஆமாறு பின்பே கூறப்படும். மாண்பு இறந்த மானமாவது தொடங்கிய வினை நன்மை பயவாதாயினும் அதனை விடாதொழிதல். இதனாற் கெட்டான்
துரியோதனன். மாணா உவகையாவது எளியாரை அடர்க்கையாற் பிறந்ததொரு மகிழ்ச்சியால் வலியார் மாட்டும் செல்லுதல். இதனாற் கெட்டான் வாதாபி.
பரிதி: குற்றம் என்பது தன்பேரிலே வராமல் அழகு உண்டாக நடப்பானாகில்;
காலிங்கர்: பலர்க்கும் உபகரிக்குமதை உபகரியாது உலோபித்தலும், மற்றும் நன்மையின் நீங்கிய நாணக்கேடும் தகாதவற்றைக் காதலித்தலும் என்னும் இவை மூன்றும்;
காலிங்கர் குறிப்புரை: இவறல் என்பது உலோபித்தல். இறத்தல் என்பது கடத்தல்.
பரிமேலழகர்: வேண்டும்வழிப் பொருள் கொடாமையும், நன்மையின் நீங்கிய மானமும், அளவிறந்த உவகையும்;
பரிமேலழகர் குறிப்புரை: மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை
தாய் என்றிவரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும், 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். [கழிகண்ணோட்டம்-எல்லை மீறிய தாட்சண்ணியம்]
இவறலும் மாண்பிறந்த மானமும் என்றதற்குப் பழைய உரையாசிரியர்கள் 'கஞ்சத்தனமும், நன்மை நீங்கிய மானமும்', என்றபடி உரை நல்கினர்.
மாணா உவகை என்ற தொடர்க்கு 'நன்மையைத்தராத மகிழ்ச்சி', 'தகாதவற்றைக் காதலித்தல்', 'அளவிறந்த மகிழ்ச்சி' என்றபடி இவர்கள் உரைகள் அமைந்தன.
இன்றைய ஆசிரியர்கள் 'கஞ்சத் தன்மையும் பொய்யான மானமும் வேண்டாத மகிழ்ச்சியும்', 'வேண்டிய செலவும் செய்யாது பற்றுள்ளம் கொண்டு பொருளை
இறுகப் பிடித்தலும் பெருந்தன்மைக்கு ஒவ்வாத மானமும் நன்மை தாராத மகிழ்ச்சியும்', 'செலவு செய்யவேண்டிய இடத்துச் செலவு செய்யாமையும்,
நன்னெறியைக் கடந்த மானமும், அளவுக்கு மிஞ்சிய மகிழ்ச்சியும்', 'செலவு செய்ய வேண்டியபொழுது செலவு செய்யாமலிருத்தலும், பெருமையில்லாத
மான உணர்ச்சியும், நன்னெறிக்குப் பொருந்தாத மகிழ்ச்சியும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
பற்றுள்ளம் கொண்டு பொருளை இறுகப் பிடித்தலும், பொய் மானமும், தகாதவற்றிற்கு உவகை அடைதலும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஏதம் இறைக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசர்க்குக் குற்றமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
பரிப்பெருமாள்: அரசர்க்குக் குற்றமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கருத்து.
பரிதி: இறையென்று சொல்லப்பட்ட சிவனும் இவனைப் பிரியமாக மனத்துள்ளே கண்டிருப்பர் என்றவாறு.
காலிங்கர்: குற்றமே வேந்தர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: அரசனுக்குக் குற்றம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.
'அரசனுக்குக் குற்றங்களாகும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வேந்தன் கேடுகள்', 'அரசனுக்குக் குற்றங்களாம்', 'அரசனுக்குக் குற்றங்களாம்', 'தலைவர்க்குக் குற்றங்களாம்' என்றபடி பொருள் உரைத்தனர்.
தலைவனுக்குக் குற்றங்களாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பற்றுள்ளம் கொண்டு பொருளை இறுகப் பிடித்தலும், பொய் மானமும், மாணா உவகையும் இறைக்குக் குற்றங்களாகும் என்பது பாடலின் பொருள்.
'இறைக்கு' என்று ஏன் விதந்து சொல்லப்பட்டது?
|
தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி உரிமையைத் தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது.
கொடுக்காமல் பொருளை இறுகப்பற்றிக் கொள்ளல், வறட்டு மானவுணர்ச்சி, தகாதவற்றிற்கு மகிழ்ச்சி காட்டல் ஆகிய குணக்கேடுகளை ஆட்சியாளர் நீக்கிக்கொள்ள வேண்டும்.
இவறல்
இச்சொல்லுக்குப் பற்றுள்ளம் என்னும் இவறன்மை..... என வள்ளுவரே இவ்வதிகாரத்துப் பின்வரும் குறள் ஒன்றில் (438) பொருள் கூறியுள்ளார்.
குறளில் இச்சொல் ஆளப்பட்ட இடங்களை நோக்கும்போது பொதுப்பொருள் அல்லது பொது நிதி ஆகியவற்றின் மீது கொள்ளப்படும் பற்றுள்ளம் பற்றியதே 'இவறல்' எனத் தெளியலாம். பொருள் சேமிப்பிற்காக அதை விடாமல் வைத்துக் கொள்ளல் ஒருவகையான் வேண்டப்படுமாயினும் செலவழிக்கவேண்டிய இடத்தில் செலவழித்தே யாகவேண்டும். அரசு தொடர்பானவற்றில் இவறல் என்பது வரிப்பணம் போன்ற பொதுப்பொருளை இறுகப்பற்றிக் கொள்வதைக் குறிக்கும். பொதுப்பொருள் என்பது பொது நன்மைக்காகச் செலவிட்டே ஆகவேண்டியது ஆகும். செய்யப்படவேண்டிய இடத்திலும், கொடுக்கப்பட வேண்டிய இடத்திலும் 'இல்லை' என்று சொல்லுதல் இவறல் ஆகும். தனக்கு முழு உரிமை இல்லாதவிடத்தும்கூட, வெஃகிய மனம் கொண்டு, செலவு செய்யாமல் தேக்கி வைத்துக் கொள்ளும் இந்த மனநிலை குற்றமாகும்.
மாண்பு இறந்த மானம்
பெருமைகடந்த மானவுணர்ச்சி என்பது நேர் பொருள். இதை வறட்டுக் கௌரவம் என்றும் போலியான அல்லது பொய்யான மானவுணர்ச்சி என்றும் சொல்லலாம். அளவு கடந்து மானவுணர்ச்சி பேசுவது, பெருமையற்ற செயல்களை உயர்வாக நினைத்துச் செருக்கடைவது ஆகியவையும் மாண்பிறந்த மானத்தில் அடங்குவதாகும்.
'தொடங்கிய வினை நன்மை தராது என்று தெரிந்தும் அதை வீண் பெருமைக்காகக் தொடர்ந்து செலுத்துவது' என்ற எடுத்துக்காட்டுடன் பரிப்பெருமாள் இத்தொடரை விளக்குவார். வணக்கம் உடையவனாக இல்லாதிருத்தலையும் மாண்பு இறந்த மானத்துள் அடக்குவர். மாண்பிறந்த மானத்தால் நன்மை ஏதும் இல்லை; தீமையே நிகழும். இதனால் குற்றம் எனப்பட்டது. 'Ego' என்ற ஆங்கிலச் சொல் இத்தொடர்க்கு இணையாகலாம்.
மாணா உவகை
இத்தொடர்க்கு நன்மைதராத மகிழ்ச்சி, அளவிறந்த மகிழ்ச்சி, தகாதனவற்றைக் காதலித்தல், வேண்டாத மகிழ்ச்சி என்றவாறு பொருள் கூறுவர்.
பரிப்பெருமாளின் 'எளியாரை அடக்கியதால் பிறந்த மகிழ்ச்சியால் வலியார் மாட்டும் செல்லுதல்' என்ற உரைப்பொருளும் நன்கு பொருந்துகின்றது.
தாம் செய்த சிறிய செயல்களை வைத்துக்கொண்டு பெரிய செயல்களையெல்லாம் முடித்துவிட்டதாகச் சொல்லி மகிழ்ச்சியடையும் பெருமையற்ற தன்மகிழ்வு, கள்ளுண்ணல், காமம் போன்றவற்றில் எல்லைகடந்த பெருமகிழ்ச்சியில் திளைப்பது ஆகியனவும் மாணா உவகை எனச் சொல்வர்.
மற்றவர்கள் துன்புறுதலில் இன்பம் அடைவதும் எளியாரை இகழ்ந்து அதில் மகிழ்ச்சி காண்பதும் தலைவனுக்கு இழிவு தரக்கூடியதாதலால் அது களையப்படவேண்டிய குற்றமாம்.
தலைமைப் பொறுப்பில் உள்ளோர் நீக்கிக் கொள்ளவேண்டிய மூன்று குற்றங்களாக தனக்கு உரிமையில்லாத பொருளின் மேல் பற்றுள்ளம், சிறப்பில்லாத மான உணர்ச்சி, தகாத மகிழ்ச்சி ஆகியன இங்கு சொல்லப்பட்டன. இவை தலைவனால் களையப்படவேண்டியன எனவும் கூறுகிறது பாடல்.
|
'இறைக்கு' என்று ஏன் விதந்து சொல்லப்பட்டது?
'இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று' என்பது மணக்குடவரது குறிப்பு.
தனிமனிதனிடம் இருந்து நாட்டுத் தலைவன் வேறுபட்டவன். ஆள்வோனுக்குப் பொறுப்புகள் மிகையாகும். இக்குற்றங்கள் அவனிடமிருந்து விலக்கப்படாவிட்டால்,
அது அவனது தனிமதிப்பு பாதிப்பதுடன், பொதுநலன் வெகுவாகக் கேடுறும். இதனால்தான் இறைக்கு நீக்க வேண்டிய குணங்களாக மூன்றைத் தனிப்படுத்திக் 'குற்றங்கடிதலில்' கூறுகின்றார் வள்ளுவர்.
தலைவனுக்கு வந்த பொருள்கள் தலைவன் என்ற காரணத்தால் வந்தவையே. அவன் தனக்கென பொருள்களைப் பெருகப் பண்ணாமல்
அவற்றைப் பொதுநலம் கருதி நாட்டுக்காக, குடிமக்களுக்காகப் பயன்படுத்தக் கடமைப்பட்டவன். அவற்றை செலவு செய்யவேண்டியவற்றுக்குச் செலவிட்டே
ஆகவேண்டும். அப்பொருட்கள் மேல் பற்றுக் கொண்டு விடாப்பிடியாக இருப்பது குற்றமாகும். அரசுக்கு உரிமையுள்ள பொருளை தன் விருப்பத்திற்கிணங்க ஒதுக்கிக்கொள்ளும் முறைகேட்டை 'ஊழல்' என அழைப்பர்.
ஒரு நாட்டின் தலைவனுக்கு வஞ்சனையற்ற தூய தொண்டு மனப்பான்மை தேவை. அவனிடம் தன்மானச் செருக்கு அதாவது வீண் பெருமை
இருக்கக்கூடாது. நாட்டுக்கு இழப்பு உண்டாகும் என்று தெரிந்தும், எடுத்த செயலை முடித்தே தீருவேன் என்ற பொய்யான மான உணர்ச்சி கொண்டு,
பிடிவாதமாகச் செயல்களைத் தொடர்வதில் நன்மை ஏதும் இல்லை. இத்தகைய போலியான மானம் தலைவனிடமிருந்து நீங்கவேண்டிய குற்றமாம்.
சிறுமை தரக்கூடிய களிப்பும் தலைவனுக்குக் குற்றமானது. வீணானவைகளுக்கும், தீயவற்றுக்கும் மகிழ்வது மாணா உவகை என்பது.
இது குற்றமான காரியங்களைச் செய்தோ செய்யச் சொல்லியோ மகிழ்ச்சி காட்டுவது.
தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதமாக பொருந்தாத செயல்களைச் செய்து மற்றவரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காண்பது அரசுக்குப் பெருமை அளிப்பதன்று.
இது களையப்படிய வேண்டிய குற்றம்.
இவை தலைவன் நீக்கியே ஆகவேண்டிய குற்றங்கள் என்பதால் இறைக்கு எனச் சொல்லப்பட்டது.
|
பற்றுள்ளம் கொண்டு பொருளை இறுகப் பிடித்தலும், பொய் மானமும், தகாதவற்றிற்கு உவகை அடைதலும் தலைவனுக்குக் குற்றங்களாகும் என்பது இக்குறட்கருத்து.
வஞ்சகமான எண்ணம், வீம்பான தற்செருக்கு, தகாத இன்பம் காட்டல் ஆகியகுற்றங்கடிதல் வேண்டும்.
பற்றுள்ளம் கொண்டு பொருளை இறுகப் பிடித்தலும், பொய்யான மானமும், தகாதவற்றிற்கு மகிழ்ச்சி காட்டுவதும் தலைவனுக்குக் குற்றங்களாகும்
|