இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0431செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:431)

பொழிப்பு (மு வரதராசன்): செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

மணக்குடவர் உரை: பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு.
பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.

பரிமேலழகர் உரை: செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.
(மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: கருவமும் சினமும் இழிவும் இல்லாதவர் முன்னேற்றம் மேலானது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

பதவுரை: செருக்கும்-இறுமாப்பும்; சினமும்-வெகுளியும்; சிறுமையும்-சிறியோரியல்பும்; இல்லார்-இல்லாதவர்; பெருக்கம்-ஆக்கம், செல்வம், மேம்பாடு; பெருமித-மேம்பாட்டின்; நீர்த்து-தன்மையுடையது.


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு;
மணக்குடவர் குறிப்புரை: பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.
பரிப்பெருமாள்: பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகலும் இல்லாதார்க்கு;
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறர்மனை நயத்தல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார். சினம் குரோதத்தால் வருதல். சிறியார் செய்வன செய்தலாவது காமநுகர்ச்சியும், சூதும், கள்ளும், வேட்டையும் முதலானவற்றின் மிக்கொழுகுதல். இதனை வடநூலார் 'இந்திரிய செயமின்மை' என்பர். இவை பெரியாரால் கடியப்படுதலின் சிறுமை என்றார். இவை மூன்று குற்றமும் இல்லாதார் ஆக்கமுடையார் என்றதனாலே இவை உடையார்க்குக் கேடுவரும் என்றவாறாயிற்று. பிறர்மனை நயத்தலாற் கெட்டான் இராவணன்; வெகுளியாற் கெட்டான் சனமேசயன்1; நுகர்ச்சியாற் கெட்டான் சச்சந்தன்.
பரிதி: கர்வமும் கோபமும் அற்பக்குணமும் இல்லாதார்;
காலிங்கர்: செருக்கு முதலாகச் சொன்ன மூன்று குற்றமும் தமக்கு இல்லாதவாறு கடிந்தொழுகுவாரது;
பரிமேலழகர்: மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது;
பரிமேலழகர் குறிப்புரை: மதம்: செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின், மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன [மதம்-பெற்றதைப் பெரிதாக மதிக்கும் மகிழ்ச்சி; அளவிறந்த காமம்-அளவு கடந்த ஆசை]

மணக்குடவர்/பரிப்பெருமாள் செருக்கு என்ற சொல்லுக்கு பிறன்மனை நயத்தல் என்று கொண்டு பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருவது என்ற விளக்கமும் தந்தனர். சிறுமை என்ற சொல்லுக்கு சிறிய குணம் அல்லது அற்பக்குணம் எனப் பரிமேலழகர் தவிர்த்த பழைய ஆசிரியர்கள் உரை கூறினர். பரிமேலழகர் இச்சொல்லுக்குக் காமம் என்று கொண்டார். அனைவரும் 'இம்மூன்று குணமும் இல்லாதவர்' என்று இப்பகுதிக்குப் பொருள் வழங்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செருக்கும் சினமும் இழிவும் இல்லாதாரது', 'இறுமாப்பும் வெகுளியும் இழிவான ஒழுக்கமும் இல்லாதவர்களுடைய', 'செருக்கும் சினமும் தாழ்ந்த செயல்களைச் செய்யும் இயல்பும் இல்லாதவருடைய', 'அகங்காரமும் கோபமும் அற்பத்தனமும் இல்லாதவர்களுடைய' என்ற பொருளில் உரை தந்தனர்.

செருக்கும் சினமும் சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பெருக்கம் பெருமித நீர்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து என்றவாறு.
பரிப்பெருமாள்: ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையையுடைத்து என்றவாறு.
பரிதி: பெருக்கம் அளவுபடாத பெருமையுடையது என்றவாறு.
காலிங்கர்: ஆக்கமானது பெரிய மேம்பாட்டுத் தன்மையினை உடைத்து. காலிங்கர் குறிப்புரை: எனவே மற்று ஏனை ஆக்கத்தை ஒன்றாகக் கருதார் உயர்ந்தோர் என்றவாறு.
பரிமேலழகர்: செல்வம் மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.

பெருக்கம் என்ற சொல்லுக்கு ஆக்கம் என்று பரிமேலழகர் தவிர்த்த தொல்லாசிரியர்கள் உரை கண்டனர். பரிமேலழகர் செல்வம் எனக் கொண்டார். 'ஆக்கம் பெருமையுடையது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆக்கம் மேம்பாட்டு இயல்புடையது', 'செல்வம் மதிக்கப்படும் பெருந்தன்மை உடையது', 'உயர்வு மேம்பாட்டுத் தன்மையினை உடையது', 'செல்வந்தான் பெருமை கொள்ளத்தக்கது' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஆக்கம் பெருமைதரும் இயல்புடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாதவரது ஆக்கம் பெருமைதரும் இயல்புடையது என்பது பாடலின் பொருள்.
'சிறுமை' குறிப்பது என்ன?

பகை மிகஉண்டாக்கும் குற்றங்களை நீக்கி உயர்வு காண்பது பெருமைக்குரியது.

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய வளர்ச்சி மேம்பாடுடையதாகும்.
ஒருவன் சிலபல தகுதிகள் பெற்று உயர்வு பெறுகிறான். ஆனால் அந்த உயர்வு பெருமைக்குரியதாக வேண்டுமானால், அவன் அதை சில குணக்கேடுகள் இல்லாமல் அடைந்திருக்க வேண்டும் என்கிறது பாடல். இங்கு செருக்கு, சினம், சிறுமை என்னும் மூன்று குற்றங்கள் இல்லாமை சொல்லப்படுகின்றன.

செருக்கு:
இச்சொல்லுக்கு 'பிறன்மனை நயத்தல் (செருக்கினால் விளைதலின்), செல்வக்களிப்பு, தற்பெருமை, இறுமாப்பு, கர்வம், அகந்தை, செல்வச் செருக்கு எனப் பொருள் கூறினர். செல்வக்களிப்பால் மட்டும் செருக்கு தோன்றுவதில்லை. செருக்கு விளைதற்குப் பல காரணங்கள் உண்டு. செருக்கு என்பது பொதுவாக ஒருவர் தமக்கு வாய்த்துள்ள ஆக்கங்கள், பதவிகள்போன்றவற்றை நினைத்து அறிவு மயங்கி இருக்கும் நிலையைச் சொல்வது. செருக்குக் கொண்டோரிடம் ஒருவிதப் பெருமிதத் தோற்றமும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே மற்றவர்க்குக் கேடு உண்டாக்கும் செருக்கே குற்றமாகக் கருதப்படும்.
செருக்கு என்பதற்கு இறுமாப்பு என்பது பொருள்.

சினம்:
சினம் என்பது இங்கு அளவு கடந்த கோபத்தைக் குறிக்கும். வெகுளி கொண்டவர் சிறப்பு எய்த இயலாது. எந்த நேரமும் சிடுசிடுப்புடன் தோற்றமளிப்பவரைக் கண்டு நல்லவர்களும் அறிவுரை தருவோரும்கூட அவரை அணுக அஞ்சுவர்; சினம் என்பது அதைக்கொண்டவரை எளிதில் அழிக்கக் கூடியது; அது நெருப்புப் போன்றது; நெருப்பானது அதனைச் சார்கின்ற பொருள்களையும் எரித்து அழிப்பதைப்போன்று சினம் என்பதும், ஒருவர்க்கு நன்மையாக வகுக்கப்பட்டுள்ளவற்றையும் இல்லாமல் செய்துவிடத்தக்கது. சினத்தால் உறவுகள் எளிதில் சீர் குலையும் என்பதால் இது விலக்கப்படவேண்டிய குற்றம் எனப்பட்டது.

சிலர்க்குத் தங்களிடம் உள்ள குறைகளே நிறைகளாகத் தோன்றும்; அவற்றாலேயே தாம் வெற்றி பெற்றுவருவதாக எண்ணுவர். ஆனால் செருக்கு, சினம், சிறுமை ஆகிய குற்றங்கள் நிரம்பிய ஒருவர் உயர்வு பெற்றாலும், அந்த ஆக்கம் நன்கு மதிக்கப்படுவதில்லை. இந்த மூன்று குற்றங்களைக் களைந்து விட்டால் அவரது மேம்பாடு அல்லது வளர்ச்சி பெருமிதம் அடையும்.

சிறுமை என்றால் என்ன?

சிறுமை என்ற சொல்லுக்குச் சிறியார் செய்வன செய்தொழுகுதல். அற்பக்குணம், அளவிறந்த காமம், காமம், சிறுமைப் பண்பு, சின்னத்தனம், இழிவு, அற்பத்தனம், இழிதன்மை, இழிவான ஒழுக்கம், தாழ்ந்த செயல்களைச் செய்யும் இயல்பு, கழிகாமம், தாழ்ந்த குணமாகிய ஆசை, பெண்ணாசை, சிறுமனப்பான்மை. பெரியோர்க்கு ஆகாதன எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சிறுமை என்பதைப் பரிப்பெருமாள் காமநுகர்ச்சி, சூது, கள்ளுன்ணல், வேட்டை முதலானவற்றில் மிக்கொழுகுதல் என விளக்கினார். பரிமேலழகர் இதை 'அளவிறந்த காமம்' என்று சொன்னார். இவர்கள் காமநுகர்ச்சி, சூது, கள்ளுன்ணல், வேட்டை போன்றவற்றுள் அளவுகடந்த ஆசை அல்லது ஈடுபாடு கொள்ளுதலைக் குறிக்கின்றனர்.
தண்டபாணி தேசிகர் 'சிறுமை என்றதற்கு எல்லாச் சிறுமைக் குணங்களையும் உள்ளடக்கி நிற்கும் 'சிறியார் செய்வன செய்தொழுகுதல்' என்னும் மணக்குடவர் உரை சிறந்து நிற்கிறது' என்றார்.
சிறுமையாவது, நிலையினின்றும் தாழ்வு படுத்தும் சொல்லும் செயலுமாகும். அது அற்பத்தனத்துடன் உயர்வுடையாருக்கும் சிறுமை செய்வதைக் குறிக்கும்.

'சிறுமை' என்றது இழிந்த செயல்களைச் செய்யும் இயல்பு என்ற பொருள் தருவது.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாதவரது ஆக்கம் பெருமைதரும் இயல்புடையது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

செருக்கு, சினம், சிறுமை ஆகிய குற்றங்கடிதல் செய்து விளங்கும் ஒருவனது வளர்ச்சிக்கு மதிப்புண்டு

பொழிப்பு

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாதவர்களது ஆக்கம் பெருமிதம் கொள்ளத்தக்கது.