இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0439



வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:439)

பொழிப்பு (மு வரதராசன்): எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.

மணக்குடவர் உரை: எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.
செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.

பரிமேலழகர் உரை: எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக.
(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எஞ்ஞான்றும் தன்னை வியவற்க; நன்றி பயவா வினை நயவற்க.

பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்.


வியவற்க எஞ்ஞான்றும் தன்னை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக;
பரிப்பெருமாள்: எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக வியவாதொழிக;
பரிதி: தன்னை வியந்து கொள்ளக் கடவனல்லன்;
காலிங்கர்: வேந்தனானவன் எஞ்ஞான்றும் தன்னைத் தானே பெருமிதம் கருதற்க;
பரிமேலழகர்: தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக; [தான் இறப்ப உயர்ந்த ஞான்று - தான் மிகுதியும் உயர்ந்தபோது; மதத்தால் - செருக்கால்]

'எப்பொழுதும் தன்னை வியந்து கொள்ளற்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்குத் உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எக்காலத்தும் தன்னைப் புகழாதே', 'தான் மிகுந்த உயர்ச்சி பெற்ற காலத்தும் தன்னைச் செருக்கினால் பெரியனாக மதித்து வியவாதொழிக', 'எக்காலத்திலும் தன்னை வியந்து பேசுதல் கூடாது', 'தன்னைத் தானே குற்றமற்றவனாக ஒரு நாளும் புகழ்ந்து கொள்ளக்கூடாது' என்ற பொருளில் உரை தந்தனர்.

எக்காலத்தும் தன்னை வியந்து கொண்டிருக்க வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நயவற்க நன்றி பயவா வினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.
பரிப்பெருமாள்: வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: செய்யின் கேடுதரும் என்றவாறாயிற்று. இதனை மதம் என்ப. இதனாற் கெட்டான் கார்த்தவிரியார்ச்சுனன்.
பரிதி: புண்ணியம் தராத காரியத்தை விரும்புவான் அல்லன் என்றவாறு.
காலிங்கர்: மற்று இதுவும் அன்றித் தனக்கு இருமைக்கும் நன்மை பயவா(க் கருமங்களை எஞ்ஞான்றும் விரும்பாது) ஒழிக என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது. [இதனான் -தன்னை வியத்தலானும், நன்றி பயவா வினையை நயத்தலானும்; தன்னை வியத்தல் மதமாம்; நன்றி பயவா வினையை நயத்தல் மானமாம்]

'நன்மை பயவாத செயலைச் செய்யாதொழிக' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கரும் பரிமேலழகரும் 'தனக்கு நன்மை பயவா வினைகளை விரும்பாதொழிக' என்று பொருள் உரைத்தனர். காலிங்கர் 'இருமைக்கும் நன்மை பயவா செயல்கள்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கெடுதல் வினையை என்றும் விரும்பாதே', 'வியந்தாலும் நன்மை தராத செயல்களை விரும்பாதொழிக', 'தப்பான மானத்தினால் நன்மை பயவாத செயல்களை விரும்புதலும் கூடாது', 'பிறர் செய்கிற நன்மையற்ற காரியத்தையும் பாராட்டக்கூடாது' என்றபடி பொருள் உரைத்தனர்.

நன்மை தராத செயல்களை விரும்ப வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எக்காலத்தும் தன்னை வியந்து கொண்டிருக்க வேண்டாம்; நன்மை தராத செயல்களை விரும்ப வேண்டாம் என்பது பாடலின் பொருள்.
தற்பெருமை கொள்வதற்கும் நன்மை தராத செயல் விரும்புதற்கும் என்ன தொடர்பு?

உன்னைப்பற்றியே எப்பொழுதும் நினைந்து பெரிதாகப் பாராட்டிக் கொண்டிராதே; எந்தவித நன்மையும் விளைவிக்காதவற்றைச் செய்யநினையாதே.

எப்போதும் தன்னையே வியந்து கொள்ள வேண்டாம்; நன்மை தராத செயல்களை விரும்புதல் கூடாது.
தன்னை வியத்தல் என்பது தன் முதுகைத் தானே தட்டிக்கொடுத்துப் பெருமிதம் கொள்வதைச் சொல்வது. அறிவாற்றல்களில் உண்மையிலேயே மிகவுயர்ந்தவராய் இருந்தாலும் ஒருவர் தன்னை மெச்சிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர் நம்மைப்பார்த்து வியக்க வேண்டுமாறு நடந்து கொள்ளவேண்டுமே ஒழிய, நாமே நம்மைப்பார்த்து அல்ல. தம்மைத் தாமே வியந்து கொள்பவர்கள் தம் பெருமித உணர்வால் விழிப்பு நிலை இழந்து, முற்காப்புச் செயலையும் இகழ்வர். தற்புகழ்ச்சியற்றவர்களே தம் குற்றத்தைக் காணமுடியும். தம்மைத் தாமே பெரிதாகப் பாராட்டிக் கொண்டிருப்பவர்கள் தம் குற்றத்தை உணரமாட்டார்கள். இவர்கள் பிறரால் எளிதில் ஏமாற்றப்படுவர்; இதனால் அவர்களது முன்னேற்றம் தடைபடும், தான் பிறரினும் மேலானவாக இருந்தாலும் தான் மேலானவன் என்று சொல்லிக் கொள்ளவேண்டாம் என செருக்குறாமையை அறிவுறுத்துகிறது இப்பாடல்.
நன்றிபயவா வினை என்பது நன்மை தராத செயல் எனப்பொருள்படும். சிலர் உயர்வினை அடைந்திருக்கிறாரோ இல்லையோ எப்பொழுதும் தாம் மேன்மையானவர் என்ற புனைவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பர். அவ்விதம் புனைவுலகில் வாழ்பவர்கள் வெற்றுச் செயல்களை நிறைவேற்றுவதிலும் மன ஈடுபாடுகொண்டிருப்பவராயிருப்பர். தன்னைப்பற்றி மிகையாக மதிப்பிட்டுக் கொள்பவர்கள், ஆர்வக் கோளாற்றினால், நன்மை தராத செயல்களை உள்ளத்தால் விரும்பாதிருந்து தாம் செய்யும் செயல்களில் நன்நோக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், என்றும் இப்பாடல் சொல்கிறது.
தன்னைத்தானே மெச்சி மகிழ்ந்து கொண்டிருப்பதும் நன்மை தராத செயல்களை விரும்புதலும் கடியப்படவேண்டிய குற்றங்களாம்.

தற்பெருமை கொள்வதற்கும் நன்மை தராத செயல் விரும்புதற்கும் என்ன தொடர்பு?

எப்பொழுதும் தன்னை மிகவும் மதிக்கவேண்டாம்; நல்லது பயக்காத செயல்களைச் செய்யவும் கூடாது - இவை இரண்டும் எவ்விதம் இயைகின்றன?
மணக்குடவர் 'அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக' எனத் தொடர்புபடுத்துவார். இவ்வுரை தன்னை வியத்தலே நன்மை தராத செயல்களைச் செய்யத் தூண்டுவது என்ற பொருள் தருவதாகிறது. இது 'வியந்தானாயினும் நயவற்க' எனக் கூறுவதால் இரண்டு குற்றங்களில் வியத்தல் ஓரளவு பொறுக்கக் கூடிய ஒன்று என்பதாகிறது.
பரிமேலழகர் தன்னை வியத்தல் செருக்காம்; நன்றி பயவா வினையை விரும்புதல் மானமாம் என இவ்விரண்டின் தீமைகளை இயைப்பார்.
பாவாணர் உரை 'அரசன் தன்னை வியந்த விடத்து, காலம் இடம் வலிமுதலியன பற்றித் தன்னைப் பகைவருடன் ஒப்புநோக்கி ஏற்றத்தாழ்வறிய வாய்ப்பின்மையானும், அறமும் பொருளும் கவனிக்கப் படாமையானும், முற்காப்பும் விழிப்பும் இல்லாது போதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும்; தான் கருதியதை முடித்தே விடுவதென்னும் ஆணவத்தால் அறம் பொருளின்பம் பயவா வினைகளை மேற்கொள்ளின், அவற்றாற் கரிசும் (பாவமும்) பழியும் கேடுமே விளையுமாகலின் அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார்' எனத் தொடர்பை விளக்கும்.

தனது செயல்கள் அனைத்தும் குற்றமற்றவை என்ற நினைப்பில் தன்னைத்தானே மெச்சிக் கொள்ளுகிறவன் ஒரு நாளும் தனது குற்றத்தை உணரமாட்டான். தன்னைப் பற்றிய கற்பனை இன்பத்தில் திளைத்துக்கொண்டிருத்தல் விருதாச் செயல்கள் புரியவே வழிவகுக்கும். மிகவுயர்ந்த நிலைகளையடைந்தாலும் தற்பெருமை கூறாமலும் அந்நிலையில் உண்டான செருக்கினால் நன்மை பயவாத செயல்களை விரும்பாமலும் ஒருவன் ஒழுகவேண்டும் என்பது செய்தி.

தன்னை வியந்து கொண்டிருப்பவனே வீண் செயல்களில் மனம் செலுத்துவான் என்பது இயைபு.

எக்காலத்தும் தன்னை வியந்து கொண்டிருக்க வேண்டாம்; நன்மை தராத செயல்களை விரும்ப வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உள்ளத்தில் தாழ்மையின்றி பயனற்ற செயல்களில் ஈடுபடும் குற்றங்கடிதல் வேண்டும்.

பொழிப்பு

எக்காலத்தும் தற்பெருமை பாராட்ட வேண்டாம்; நன்மை தராத செயல்களை விரும்ப வேண்டாம்.