இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0434குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:434)

பொழிப்பு: குற்றமே அழிவு பயக்கும் பகை என்பதால், குற்றமின்மையே வாழ்க்கையின் பொருளாக எண்ணிக் காக்க.

மணக்குடவர் உரை: தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான்.
இது குற்றங் கடிய வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே, குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.
(இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றம் அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது 'அரும்பண்பினால் தீமை காக்க,' என்பதுபோல நின்றது.)

இரா சாரங்கபாணி உரை: தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே. ஆதலால் குற்றம் தன்னிடம் நிகழாமல் பொருளைக் காப்பது போலக் குறிக் கொண்டு காப்பானாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குற்றமே பொருளாகக் காக்க; குற்றமே அற்றம் தரூஉம் பகை.


குற்றமே காக்க பொருளாக:
பதவுரை: குற்றமே-குற்றம்; காக்க-(வாராமல்) காப்பாற்றுக; பொருளாக-உறுதிப்பொருளாக.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க;
பரிப்பெருமாள்: தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க;
பரிதி: தன்பேரிலே குற்றம் வராமல் அறிவுடைமையைத் தனம்போல் பாதுகாப்பான்;
காலிங்கர்: இவ்வுலகத்து அரசருள்ளார் தமக்கொரு குற்றம் நிகழாமல் கருதிப் பரிகரித்துக் கொள்க; மற்று இதுதானே பொருளாகக் கொண்டு ஒழுகின்;
பரிமேலழகர்: ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.

'தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரைக்க, பரிதி 'குற்றம் வராமல் தனம் போல் பாதுகாப்பான்' என்றார். காலிங்கர் 'குற்றம் நிகழாமல் கருதிப் பாதுகாத்துக் கொள்க; அல்லாமல் குற்றமே பொருளாகக் கொண்டு ஒழுகின்' என்று உரை கூறினார். பரிமேலழகர் 'குற்றம் வாராமையே பயனாகக் கொண்டு காக்கவேண்டும்' என்றபடி உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றத்தை விழிப்போடு தடுப்பாயாக', 'மனக்குற்றத்தையே குறிக்கொண்டு வாராமல் தடுக்க வேண்டும்', 'அக் குற்றம் தன்னிடம் உண்டாகாமல் இருப்பதே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்', 'குற்றம் செய்யாமலிருப்பதைத்தான் செல்வத்தைப் பாதுகாப்பதுபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்.' என்ற பொருளில் உரை தந்தனர்.

குற்றமின்மையே வாழ்க்கையின் பொருளாக எண்ணிக் காக்க என்பது இத்தொடரின் பொருள்.

குற்றமே அற்றம் தரூஉம் பகை:
பதவுரை: குற்றமே-குற்றமே; அற்றம்-இறுதி(அழிவு); தரூஉம்-பயக்கும்; பகை-எதிரியாந்தன்மை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இது குற்றங் கடிய வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையாம் ஆதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை::இது குற்றங் கடிய வேண்டு மென்றது.
பரிதி: காவாதபோது தனக்குப் பகையான குற்றம் வரும் என்றவாறு.
காலிங்கர்: அக்குற்றம் தாமே தமக்கு ஆபத்தைத் தருவதாகிய பகை என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே,
பரிமேலழகர் கருத்துரை: இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றம் அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது 'அரும்பண்பினால் தீமை காக்க,' என்பதுபோல நின்றது.

'அக்குற்றமே தனக்கு இறுதி பயக்கும் பகை ஆதலான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றமே குழிதோண்டும் உட்பகை ஆதலின்', 'ஏனெனில், அதுவே தனக்கு முடிவை உண்டாக்கும் பகையாகும்', 'தனக்கு அழிவினைத் தரும் பகை குற்றமேயாகும் ஆதலின்', 'குற்றம் செய்வதுதான் துன்பங்களை உண்டாக்கும் பகை ஆகையால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

குற்றமே அழிவு பயக்கும் பகையாம் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
குற்றம் இன்மையே வாழ்க்கையின் பொருளாகக் கொண்டு வாழ்தல் வேண்டும் என்னும் பாடல்.

குற்றமே அழிவு பயக்கும் பகை என்பதால், குற்றமின்மையே வாழ்க்கையின் பொருளாக எண்ணிக் காக்க என்பது பாடலின் பொருள்.
'குற்றமே காக்க' என்றால் என்ன?

அற்றம் என்ற சொல்லுக்கு இறுதி அல்லது அழிவு என்று பொருள்.
தரூஉம் என்பதற்கு கொடுக்கும் என்பது பொருள்.

'குற்றமே காக்க' என்றால் என்ன?

'குற்றமே காக்க' என்பதற்கு நேர் பொருள் கொண்டால் 'குற்றத்தையே பாதுகாக்க' என்றாகிவிடும். ஆனால் இங்கு 'குற்றமே காக்க' என்பது 'குற்றமே தன்னிடம் வாராமல் காக்க' என்ற பொருளில் அமைந்துள்ளது. இதைத் தெளிவுபடுத்தப் பரிமேலழகர் 'அரும்பண்பினால் தீமை காக்க' என்ற தொடரை மேற்கோளாகக் குறிக்கிறார். இதன் பொருள் 'அடைதற்குரிய நற்குணங்களைத் தேடுவதால் தீமை வாராமற் காக்க' என்பது. எப்படி 'தீமை காக்க' என்பது 'தீமை வாராமற் காக்க' என்று பொருள்படுமோ, அப்படி 'குற்றமே காக்க' என்பது 'குற்றமே வாராமல் காக்க' என்ற பொருள்தரும்.

ஒருவனுக்கு இறுதி பயக்கும் தன்மைத்தான பகை குற்றம் புரிதலே. ஆதலால் எக்குற்றமும் தன்னிடம் நிகழாமல் குறிக் கொண்டு காப்பானாக என்பது இக்குறள் கூறவரும் செய்தி.

இக்குறளின் முதல் பகுதியான 'குற்றமே காக்க பொருளாக' என்பதில் உள்ள 'பொருளாகக் காக்க' என்பது பல்வேறு விதமாக விளக்கப்பட்டது. 'பொருளைக் காப்பது போலக் காப்பது', 'குறிப்பாகத் தடுப்பது', 'கருத்தோடு காப்பது', 'குறிக்கொண்டு தடுப்பது', 'குற்றம் உண்டாகாமல் இருப்பதே பயனாகக் கொண்டு காப்பது', 'விழிப்பாக இருந்து காத்துக்கொள்வது', 'செல்வத்தைப் போல காப்பது', 'நோக்கமாகக் கொண்டு தடுப்பது' என்றவாறு பொருளாகக் காக்க என்பதற்கு உரை கூறினர். மேலும், 'பொருட்டாக-பொருட்படுத்தி காப்பது' 'அலட்சியம் காட்டாமல் காப்பது' என்றும் உரைகள் உள்ளன.

'காலிங்கர் 'குற்றமே காக்க; குற்றமே பொருளாக ஒழுகின் அது அற்றந் தரூஉம் பகையாம்' எனக் கூட்டிச் செம்மையான பொருள் தந்தார்' என இக்குறளுக்கு ஆய்வுரை தருகிறார் தண்டபாணி தேசிகர். இதை விளக்கும் முகத்தான் அவர் மேலும் கூறுவதாவது: 'பிணி நீக்கமே உடல் வளர்ச்சியாகாதவாறு போலக் குற்றமின்மையே பொருளாகாது. இவற்றை எண்ணிய வள்ளுவர் 'காக்க பொருளா அடக்கத்தை'-குற்றமே காக்க பொருளாக' என வழங்குவர். இவற்றுள் முன்னது அடக்கத்தைப் பொருள் போலக் கவனமாகக் காக்க. குற்றத்தை வராமற் காக்க என விதியும் மறுப்புமாகிய இரு பொருளில் வந்தமை காண்க. இருவகையாக வரும் இடர்ப்பாட்டை நீக்கவே காலிங்கர் பின்னதையும் விதிப் பொருளிலேயே உரைத்தனர்'
இது ஏற்கக்கூடிய விளக்கமே.

இக்குறளில் குற்றமே எனற சொல் இருமுறை பயின்று வந்துள்ளது. வள்ளுவர் வெறுமனே குறளில் ஒரே சொல்லை இரு முறை பயன்படுத்தமாட்டார். ஒவ்வோர் பயன்பாட்டிலும் வேறுவேறு பொருள் இருக்கும். அந்தவகையில் முதலில் உள்ள குற்றமே என்பதற்கு, மேற்சொன்ன பரிமேலழகர் மேற்கோள் தொடரின் அடிப்படையில், குற்றமின்மையே என்று பொருள் கொள்ளமுடியும். அப்படிக் கொண்டால் முதல் ப்குதியான 'குற்றமே காக்க பொருளாக' என்பதற்குக் 'குற்றமின்மையே வாழ்வின் பொருளாகக் காக்க' என்று பொருள் கொள்ளலாம். குற்றம் தன்னை அணுகவிடாமல் தடுப்பதே வாழ்வின் குறியாக இருக்கவேண்டும் எனவும் இதை விளக்கினர். பிணி நீங்கிய வாழ்வைப் பொருளாகக் கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? எல்லோரும் விரும்புவது அதைத்தான். (உடல் வளர்ச்சி இங்கு பேசப்படவில்லை. உடல் அழிவைத் தடுப்பது (அற்றம் தரும் பகை) பற்றித்தான் இப்பாடல் சொல்கிறது.)
'குற்றம் வாராமையைப் பொருள் போலக் கவனமாகக் காக்க' என்பதைவிட 'குற்றமின்மையே வாழ்க்கையின் பொருளாகக் கொண்டு காக்க' என்று பொருள் கொண்டால் தெளிவான கருத்து கிடைக்கும்.
இரண்டாவதாக வரும் குற்றமே என்ற சொல்லுக்கு நேர் பொருளான 'குற்றமே' என்பதுவே பொருத்தம். எனவே குறளின் பின்பகுதி 'குற்றமே அழிவைத் தரும் பகை' என்ற பொருள் கொடுக்கும்.
குற்றமின்றி வாழவேண்டும் என்ற உறுதி பூண்டு அதையே வாழ்க்கையின் அர்த்தமாகக் கொண்டு ஒழுகினால் இறுதி பயக்கும் பகையான குற்றத்தை வெல்லமுடியும் என்பது பாடலின் பொருள்.

குற்றமின்மையே வாழ்வின் பொருளாகக் காக்க; அப்படியில்லாமல் குற்றத்தையே பொருளாகக் கொண்டு ஒழுகினால் அதுவே அழிவு தரக்கூடிய பகையாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குற்றம் கொண்டு ஒழுகுதல் நல்ல வாழ்வு நெறி அல்ல என்னும் குற்றங்கடிதல் பாடல்.

பொழிப்பு

குற்றமின்மையே வாழ்வின் பொருளாகக் காக்க; குற்றமே அழிவு பயக்கும் பகை என்பதால்.