இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0433தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:433)

பொழிப்பு (மு வரதராசன்): பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.

மணக்குடவர் உரை: தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.

பரிமேலழகர் உரை: பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.
(குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பழிக்கு அஞ்சி வெட்கப்படுபவர் தினையளவு குற்றம் வரினும் அதனை அவ்வளவாகக் கொள்ளாது பனையளவாகக் கொள்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பழி நாணுவார் தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர்.

பதவுரை: தினை-தினை (நெல்அரிசியைப் போன்றதொரு தானியம்), தினை அரிசி; துணை-அளவு; ஆம்-ஆகும்; குற்றம்-பிழை; வரினும்-வந்தாலும்; பனை-(நெடிதாய் உயர்ந்து நிற்கும்) பனைமரம், பனம்பழம்; துணையா-அளவு ஆகும்படி; கொள்வர்-கருதுவர்; பழி நாணுவார்-பழிதீச்செயல்களுக்கு அஞ்சுவார், குற்றம்புரிய வெட்கப்படுவார்.


தினைத்துணையாம் குற்றம் வரினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தினையளவு குற்றம் வந்ததாயினும்;
பரிப்பெருமாள்: தினையளவு குற்றம் வந்ததாயினும்;
பரிதி: தினையளவு குற்றம் வரினும்;
காலிங்கர்: குணப்பயன் அறியும் குணமுடையோர் தினையளவாகிய சிறுது குற்றம் ஒருகால் வருவதாயினும்;
பரிமேலழகர்: தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: குற்றம் சாதிப்பெயர்.

'தினையளவு குற்றம் வந்ததாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறுகுற்றம் செய்யினும்', 'தினை அளவாகிய மிகச்சிறிய குற்றம் தம்மிடத்தில் ஏற்பட்டாலும்', 'தம்மிடம் தினையளவு குற்றம் உண்டானாலும்', 'தினையளவாகிய சிறிய குற்றம் தமக்குவரினும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தினை அளவு குற்றம் வருவதாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

பனைத்துணையாக் கொள்வர் பழி நாணுவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்.
பரிப்பெருமாள்: இவ்வளவிற்று என்று [இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்]. [இருதலைப் பகரத்தின்கண் உள்ளவை மணக்குடவருரை நோக்கிச் சேர்க்கப்பெற்றன]
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறியவே அன்றி உளதாகும் குற்றமும் கடிய வேண்டும் என்றது என்றவாறு.. பரிதி: அதனைப் பனையளவு குற்றமாகக் கண்டு நோவார். சொற்பழியஞ்சும் பெரியோர் என்றவாறு.
காலிங்கர்: அதனைப் பனையளவாகும் குற்றமாகக் கொள்வர், குற்றத்துக்கு நாணும் அறிவுடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர் பழியை அஞ்சுவார். [அதனை-அக்குற்றத்தை]
பரிமேலழகர் குறிப்புரை: தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.

'அதனைப் பனையளவு குற்றமாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரிதாக எண்ணுவர் பழிக்கு நாணும் பெரியவர்', 'அதைப் பனை அளவு கேடுள்ளதாய்க் கருதுவார்கள் பழியை அஞ்சுகின்றவர்கள்', 'பனையளவாகக் கருதி வருந்துவர் பழியைக் கண்டு அஞ்சுகின்றவர்கள்', 'அதனைப் பனையளவு பெரியதாக எண்ணிக் கொள்வர் பழிச் சொல்லுக்கு நாணுபவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதனைப் பனைஅளவு பெரிதாகக் கொள்வர் பழிக்கு வெட்கப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தினை அளவு குற்றம் வருவதாயினும் அதனைப் பனைத்துணையாக் கொள்வர் பழிக்கு அஞ்சுகிறவர் என்பது பாடலின் பொருள்.
'பனைத்துணையா' என்பதன் பொருள் என்ன?

எவ்வளவிற்றானும் குற்றம் நாணுதற்குரியதே.

பழிக்கு அஞ்சுகிறவர்கள் தினை அளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையின் அளவான பெரிய குற்றமாகக் கருதி வருந்துவார்கள்.
ஒருவர் தன்மீது எவ்விதமான பழியும்நேராமல் காத்துக்கொண்டு வாழ்வதே சிறப்பாகும். மனச்சான்று பண்பட்டவர்கள் சிறு குற்றம் உண்டானாலும் பழிக்குள்ளாகிவிடுவோமே என்று உள்ளம் பொறாது துடிப்பர்; தாம் அறியாமல் செய்த தவறுக்கும் இவர்கள் வெட்கித் தலை குனிவர். அந்த மனச்சான்றே பழிக்கு நாணும் தன்மை உடையது. 'நான் என்ன தவறு செய்துவிட்டேன்; இதெல்லாம் எங்கும் எப்பொழுதும் ஏற்படுவதுதானே; எல்லாமே, எல்லோருமே இப்படித்தானே' என்று குற்றம் புரிந்த சிலர் சொல்லிக் குற்றம் செய்ததையே உணரமாட்டாதவர்களாக இருப்பர். ஆனால் அதனால் வருகிற இகழ்வுக்கு அஞ்சுகிற பண்பாளர்கள் அங்ஙனம் எண்ணமாட்டார்கள். குணப்பயன் அறிந்தவராதலால் அவர்கள் பழியஞ்சுவோராகவே எப்பொழுதும் இருப்பர். மனச்சான்று உறுத்துவதால் அவர்கள் தினையளவு குற்றம்தானே என்றில்லாமல் அதைப் பனையளவு குற்றமாகக் கருதிப் பெரும்பழி தங்கள் மீது வந்துவிடுமே எனப் பதறுவர். இவ்வாறு வருந்துவதால் மறுபடியும் எக்குற்றமும் தம் வாழ்வில் நிகழாதவாறு தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

தினையளவு குற்றமும் இல்லாமல் வாழ்வதே மேம்பட்ட வாழ்வாகும். சிறு குற்றத்தையும் பெரிதாக எண்ணுவது பெரியார் இயல்பு. பழிக்கு நாணுபவர் குற்றத்தில் சிறியது பெரியது என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. அவர்கள் சிறிய குற்றம் நிகழ்ந்தாலும் மிகப் பெரிய குற்றம் நேர்ந்துவிட்டதாகத் துடிப்பர். அப்படிப்பட்டப் பண்பை வளர்த்துக் கொள்பவர்களே குற்றம் களைவர். எல்லாக் குற்றமும் - அது எத்துணைச் சிறியதாக இருந்தாலும்- கடியப்படவேண்டும்.

'பனைத்துணையா' என்பதன் பொருள் என்ன?

பனைத்துணையா என்ற தொடர் பனைத்துணையாக என விரிந்து பனையளவு எனப்பொருள்படும்.
சிற்றளவைக்கும் பேரளவைக்கும் வள்ளுவர் எடுத்தாளும் உவமை தினை-பனை என்பன. தினைத்துணை-பனைத்துணை என்ற ஒப்புமை பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று குறள்களுள் இரண்டாவது குறள் இது. முதற்குறள் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (செய்ந்நன்றியறிதல் 104 பொருள்: தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் உதவியின் பயனை அறியக்கூடியவர்கள்) என்பது. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் (புணர்ச்சிவிதும்பல் 1282 பொருள்: காதல் உணர்ச்சி பனையளவினும் மிகத் தோன்றுமாயின் தினையளவு கூட ஊடாதிருத்தல் விரும்பப்படும்) காமத்துப்பால் பாடல் மூன்றாவதாகும்.
இந்த ஒப்புமை மிகச் சிறியது, மிகப்பெரியது என்கிற வேற்றுமையைக் காட்டவேண்டி வந்தது. நாளும் எல்லோராலும் எங்கும் பார்க்கப்படும் பொருள்களை வைத்து விளங்கச் சொல்வது வள்ளுவர் வழக்கம். அந்த வகையில் அளவிற் சிறிய தினையும் பெரிய பனையும் வந்தன.

'பனை என் அளவும்' என்னும் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தால் பனை அளவைப்பெயராதலையும் அறியலாம்.
தினை உருவிற் சிறிய பொருளான தினை அரிசியைக் குறிக்கும். பனை நெடிதுயர்ந்த மரம். பெரிய அளவு, நிறைய அளவு கூடுதலான அளவு, உயர அளவு என்பனவற்றைச் சொல்லுவதற்குப் பனை உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
பனை என்பதற்குப் பனம்பழம் என்றும் உரை செய்தனர். தினை-பனை ஒப்புமையில் பனை பெரியனவற்றிற்கு உவமையாக அமைவதால் பனையெனக் குறிப்பிடப்படுவது பழமன்றி மரம் என்பதே பொருத்தமாகலாம்.

சிறிய தினையளவே குற்றம் செய்தாலும் அதையே பனைமரமளவுக்குப் பெரிதாக எண்ணி அதனால் வரும் பழிக்கு அஞ்சி நாணுவர் பண்பாளர் என்பது கருத்து.

தினைஅரிசி அளவு குற்றம் வருவதாயினும் அதனைப் பனைஅளவு பெரிதாகக் கொள்வர் பழிக்கு வெட்கப்படுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தான் செய்யும் சிறிய குற்றத்தையும் பெரிதாகக் கருதினால் குற்றங்கடிதல் நிலைக்கும்.

பொழிப்பு

தினைஅரிசி அளவு குற்றம் நிகழ்ந்தாலும் அதைப் பனையளவாகக் கொள்வர் பழிக்கு அஞ்சுபவர்.