இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0440



காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:440)

பொழிப்பு: தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை அடக்கிச் செலுத்த வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

மணக்குடவர் உரை: காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம்.
நூலென்பது அவர்கற்ற கல்வி.

பரிமேலழகர் உரை: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)

இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் பொருள்களின் மேலுள்ள விருப்பத்தைப் பிறர் அறிய முடியாதவாறு மனத்தை அடக்கிச் செலுத்துவானாயின், பகை வந்து அவனை வஞ்சிக்க நினைக்கும் எண்ணம் பழுதுபடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதிலார் நூல் ஏதில .


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்:
பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; காதல்-வேட்கை; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின்;
பரிப்பெருமாள்: காதலிக்கப்பட்டவற்றின்மேல் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின்;
பரிதி: தானொன்று விரும்பினதை ஒருவரும் அறியாமல் நடத்துவனாகில்;
காலிங்கர்: பொன்னும், யானையும், நாடும், மற்றும் பிறவும் ஆகிய பொருள்களில் யாவை சிலவற்றைத் தாம் காதலித்தார்; அதைத்தானும் பிறர் ஒருவரும் அறியாதபடி தம்அகத்துள் அடக்கிச் செலுத்தவல்லவராயின், தாம் விரும்பின பொருள் எய்தும்; இதுவும் அன்றிப் புறத்தனவாகியே போம்.
பரிமேலழகர்: தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்;

'தானொன்று விரும்பினதை பிறர் ஒருவரும் அறியாமல் நடத்துவனாகில்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். மற்றவர்கள் பிறர் அறியாமல்' என்று சொல்ல பரிமேலழகர் 'அக்காதல் அறியாமல்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்விருப்பம் வெளிப்படாதபடி நடப்பின்', 'அரசன் தான் விரும்பும் பொருள்களின்கண் தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறியாதவண்ணம் நுகரவல்லன் ஆயின்', 'விரும்பும் பொருள்களிடத்தில் தாம் கொண்டுள்ள விருப்பத்தைப் பிறர் அறியாமல் செலுத்தவல்லவனாயின்', 'ஆசைப்பட்டதையெல்லாம் அடைய விரும்புகின்ற அறியாத்தனத்தை நீக்கிவிட்டால்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தான் விரும்பியதை பிறர் யாரும் அறியாதபடி தம்அகத்துள் அடக்கிச் செலுத்தவல்லவராயின் என்பது இத்தொடரின் பொருள்.

ஏதில ஏதிலார் நூல்:
பதவுரை: ஏதில-பழுதுடையன; ஏதிலார்-பகைவரது; நூல்-எண்ணம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம்.
மணக்குடவர் குறிப்புரை: நூலென்பது அவர்கற்ற கல்வி.
பரிப்பெருமாள்: பகைவர் இவனைக் கொள்ளுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம்.
பரிப்பெருமாள் விரிவுரை: நூலென்பது அவ்வேதிலரது சித்தம். அதனாலேயே சிந்தித்தலின் 'நூல்' என்றார். இது மேற்கூறிய குற்றமே அன்றி, அறம் பொருள் இன்பத்துக்கு மாறாகாத பொருள்கள் மேற்செல்லும் ஆசையைப் பிறர் அறியின் அதுவே வாயிலாக வஞ்சிப்பர்; ஆதலால், அக்காதலை அடக்காமையும் குற்றமென்று கூறப்பட்டது. வத்தராயன் யானை பிடிக்கப்போய்ச் சிறைப்பட்டான்.
பரிதி: சத்துருக்கள் எண்ணின எண்ணமெல்லாம் கெடும் என்றவாறு.
காலிங்கர்: யாவை எனின், மற்றுத் தாம் தாற்பரித்த பொருளைத் தலையழித்தற்கு ஏதிலார் எண்ணிய எண்ணங்கள் என்றவாறு.
பரிமேலழகர்: பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.
பரிமேலழகர் விரிவுரை: அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.

'பகைவர் எண்ணின எண்ணமெல்லாம் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் சூழ்ச்சிகள் பயன்படா', 'அவை வாயிலாகத் தன்னை வசப்படுத்தக் கருதும் பகைவர் சூழ்ச்சி பயன்பட இடமின்றி ஒழியும்', 'தம்மைக் கெடுக்க நினைக்கும் பகைவருடைய வஞ்சனை முறைகள் பயனற்றுவிடும்', 'அதன்பின் பகைமை என்பதற்குக் காரணமாகிய குற்றங்களும் பகைவரின் சூழ்ச்சிகளும் இல்லாமற் போகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பகைவர் தன்னைக் கொள்ளுமாறு சிந்திக்கும் சிந்தனை செல்லாது என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
பகைவர் அறிய பொருட்காதல் கொள்வது குற்றமாய் விடும் என்னும் பாடல்.

தான் விரும்பியதை மாற்றார் அறியாதபடி செலுத்தவல்லவராயின் பகைவர் தன்னைக் கொள்ளுமாறு சிந்திக்கும் சிந்தனை செல்லாது என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்படும் காதல் பொருள் எது?

காதல என்ற சொல்லுக்கு விரும்பினவற்றை என்பது பொருள்.
காதல் என்பது விருப்பம் என்ற பொருள் தரும்.
அறியாமை என்ற சொல் அறியாவண்ணம் என்று பொருள்படும்.
உய்க்கிற்பின் என்பதற்கு செலுத்த வல்லராயின் என்பது பொருள்.
ஏதில என்பது பயனற்றது என்னும் பொருள் கொடுக்கும்.
ஏதிலர் என்ற சொல்லுக்குப் அயலர் அல்லது பகைவர் என்பது பொருள்.
நூல் என்ற சொல்லுக்கு இங்கு சிந்தனை அல்லது சூழ்ச்சி எனக் கொள்வர்.

எந்தக் காதல்பொருள் இங்கு பேசப்படுகின்றது?

காதல் என்ற சொல் ஆளப்பட்டதால் இதற்கு தீவிர ஆசை, மோகம், பித்துக் கொள்வது, ஆர்வத்தோடு விழைதல், பற்றுள்ளம் எனப் பொருள் கொண்டனர். இதனைப் 'பெருவிருப்பம்' என்றும் கொள்வர்.

பரிமேலழகர் 'அரசன் பெரும்பான்மையும் காமத்தைப் பகைவர் அறியாமல் துய்க்க வேண்டும் என்பதும் வெகுளி உவகைகளைப் பெரும்பான்மையும் ஒழிக்க வேண்டும்' என்று மன்னனுக்குரிய காதல் பொருளாக காமத்தைக் குறித்து அதைப் பகைவர் அறியாமல் நுகரவேண்டும் என்றார்.
பின் வந்த உரை ஒன்று 'அரசன் தான் காதல் வைத்த தேவியிரிடத்து, காதல் வையாத தேவியர் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின்' என்று காமத்தைக் காதற்பொருளாகக் கொண்டது. மேலும் சிலர் 'காதலிக்கப்படும் பொருள்கள் காமம், கள், வேட்டை, மதவெறி, யானைப்போர், ஏறுதழுவல் முதலியனவாம்' என்று சொல்லி, 'காமம் கள் முதலாகச் சூது நீங்கலாக உள்ள விருப்பத்தைப் பிறரறியாமல் அரண்மனைக்குள் நிறைவேற்றிக் கொள்ளல் வேண்டும். வெளியிற் போக வேண்டுமாயின், மாறுவேடம் பூண்டு சென்று, மறைவில் திரும்புதல் வேண்டும்' என்றும் காதல்பொருள் என்பதற்கு வெளியே சொல்ல முடியாத இரகசியமான ஆசைகள் என்றும் குடும்பம், நண்பர்கள், சமுதாயம், ஒத்துக் கொள்ளாத ஆசைகள் என்றும் விளக்கம் தந்தனர். 'பொதுமக்கட்காயின் தகர்ப்போர், சேவற்போர், காடைப்போர் முதலியனவும் காதலவாகும்' என்றனர் மற்றும் சில உரையாளர்கள்.

பரிப்பெருமாள் 'அறம் பொருள் இன்பத்துக்கு மாறாகாத பொருள்கள் மேற்செல்லும் ஆசையைப் பிறர் அறியின் தீங்காம் என்று பொதுமையிற் காதல்பொருட்களைச் சொன்னார். காலிங்கர் 'பொன்னும், யானையும், நாடும், மற்றும் பிறவும் ஆகிய சில பொருள்களில் காதலித்ததை' என்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவார்.

வள்ளுவர் காதல் பொருட்கள் எவை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே அவர் எல்லாப் பொருள்கள் மேலும் விருப்பத்தைப் பிறரறியாமல் நடத்த வேண்டும் என்று சொன்னதாகத்தான் கொள்ளவேண்டும், காமக் காதலையே கூறினார் என்றும், பல மணங் கூடினாரைக் குறித்தார் என்றும் கூறப்பட்டன ஏற்புடையன அல்ல.
பகைவர் அறியா வண்ணம் அடக்கிச் செலுத்தவல்லர் காதல் கொண்ட பொருள்கள் அனைத்தையும் இக்குறள் குறிப்பதாகக் கொள்வது சிறக்கும்.

பொருள்கள் மேலுள்ள பெருவிருப்பத்தைப் பிறரறியாமல் ஒருவன் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் பகைவர் அவனது நடவடிக்கைகள் குறித்து யாதுமறியாது அவனது நோக்கத்தை வீழ்த்தும் முயற்சியில் தோற்பர். பகைவர் அறிய நடத்தினால் குற்றமாய் விடும்.

காதலித்த பொருட்கண் மேலுள்ள பற்றுள்ளத்தை 'அறியாமல் செலுத்துவது' என்கிறது பாடல். 'யார் அறியாமல் செலுத்துவது?' என்ற கேள்வி பிறக்கிறது. சிலர் தானும் துணையாவரும் தவிர ஏனையோர் அறியாமல் என்றனர். மற்றவர்கள் தான் தவிர, காதல் பொருள் உள்ளிட்ட பிறர் எவரும் அறியாமல் என்று சொல்வர். பகைவர் அறியாமல் செலுத்துவது என்பது சரியாக இருக்கும்.

இக்குறட்பாவிலுள்ள 'உய்க்கிற்பின்' என்பதற்குத் தொல்லாசிரியர்களில் பரிமேலழகர் காதலையுய்த்தலில் 'காமம் நுகர்தல்' அடங்கும் என்ற பொருளில் விளக்கம் தந்தார்.
'ஒருவனுடைய காம இச்சைகளை அறிந்து கொண்ட பகைவர்கள் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்வர்; ஆகையால் அவற்றை பகைவர்கள் அறியாவண்ணம் செய்யவேண்டும்; காம விழைவே குற்றமில்லை, விழைவை எதிரிகள் அறிந்து கொள்ளும்படி துய்ப்பதே குற்றம்' என்ற பொருளில் மற்றவர்களும் இத்தொடர்க்கான விளக்கத்தைப் பின்பற்றி இக்குறளுக்குப் பொருள் கூறினர். இவ்வகையான உரைகள் குறள் நோக்கையே சிதைத்து மாற்றிவிட்டது.
பின் 'உய்க்கிற்பின்' என்ற தொடர்க்கு எது சரியான பொருள்?
நன்றின்பால் உய்ப்பது அறிவு'>(குறள் 422: பொருள்: தீமையினின்று நீக்கி) நன்மையின்கண் செலுத்துவதே அறிவாகும்) என்ற பாடலில் கூறியது போன்று 'அறியாமை உய்க்கிற்பின்' என்பதற்கு 'அறியாமல் அடக்கிச் செலுத்த வல்லராயின்' என்று கு ச ஆனந்தன் பொருள் கொண்டார். இதுவே நன்கு பொருந்தும் உரையாக அமையும்.

'விரும்பத்தகாதவற்றில் விருப்பம் உண்டாகாதவாறு, ஏன் அதைப் பற்றி அறியாமலே கூட, தன்னைக் காத்து உய்த்துக் கொண்டால் பகைவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பயனற்றுப் போகும்; மது, மாது, சூது ஆகியவற்றில் அறியாமை இருந்தாலும் அது நமக்கு உய்வே தரும்' என்றபடியும் இக்குறளுக்கு உரை உள்ளது.
ஒளிவுமறைவில்லாமல் இருக்கிறதாகக் காட்டிக்கொள்வதற்காக சிலர் தங்கள் செயல்கள் அனைத்தையும் வெளிப்படையாகச் செய்யத் தயங்குவதில்லை. போட்டியான உலகத்தில் பல வேளைகளில் இது ஒரு பலவீனமாகவே அமையும். மாற்றார் அவற்றைப் பயன்படுத்தியே திறந்த சிந்தனை கொண்டவர்களை அழித்துவிடுவர். எனவே பிறர் அறியாமல் இலக்கங்களை எட்ட வேண்டும். இதுவும் பகைவர் அறியின் குற்றம் என்பதற்கு ஒரு காரணம் என்பர்.

காதல் கொண்ட பொருளை அடையும் வரை தம்மில் உள்ள விருப்பத்தை புறத்தார் அறியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.; பகைவர் அறியின் தனக்குத் தானே தீங்கு செய்து கொண்டது போல் ஆகும்; காதல் பொருள் கைகூடாதபடி அவர்கள் குறுக்கிட்டுக் கெடுத்திடுவர் என்பது கருத்து.

தான் விரும்பியதை மாற்றார் அறியாதபடி செலுத்தவல்லவராயின், பகைவர் தன்னைக் கொள்ளுமாறு சிந்திக்கும் சிந்தனை செல்லாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன் பெருவிருப்பம் நிறைவேறவேண்டுமானால் அதைப் பகைவர் அறியுமாறு செலுத்தும் குற்றங்கடிதல் வேண்டும்.
பொழிப்பு

தன் விருப்பம் பகைவர் அறியாதபடி நடப்பின் பகை வந்து அவனை வஞ்சிக்க நினைக்கும் எண்ணம் பயன்படாது.