முந்தைய அதிகாரத்தில் கல்வி என்ற தலைப்பில் கல்வியின் சிறப்பை முற்றும் கூற முடியாமையால் எதிர்மறைமுகத்தால்
கல்லாமற்போனால் வரும் தீங்கு கூறிக் கல்வியின் சிறப்பு மேலும் வலியுறுத்தப்படுகிறது.
கல்லாமையின் விளைவுகளான வேலைஇன்மை, சுகாதாரக்கேடு, நோய், தாழ்ந்த வாழ்க்கைத்தரம் எப்படி சமுதாய வீழ்ச்சிக்குக் காரணங்கள் ஆகின்றன
என்பது இன்று நமக்கு நன்றாகவே தெரியும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதில் அந்நாட்டு மக்களின் கல்வியின்மை ஒரு முக்கியமான காரணம்
என்பதை சமூக/பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுவர். வளர்ந்த நாடுகளில் கல்லாதார் விழுக்காடு மிகக்குறைவாகவே இருக்கிறது.
கல்லாமை தனிமனிதனை வெகுவாகப் பாதிக்கிறது. எழுதப்படிக்கத் தெரியாததால் சட்டமீறல்கள் நிகழ்கின்றன; குற்றங்கள் மிகுகின்றன; வாழ்க்கைத்தரம்
தாழ்கிறது. கல்லாதார் அடிமைகளாகவும், கூலித்தொழில் புரிபவர்களாகவும், இழிவான தொழில் மேற்கொள்பவர்களாகவும் முடிவுறுகின்றனர்;
மூடநம்பிக்கைகள் பெருகுகின்றன; அடுத்த தலைமுறையும் பாதிப்புக்குள்ளாகின்றது. இக்கூற்றுக்கள் யாவும் கல்லாமை அதிகார்த்துக் குறட்பாக்களின்
கருத்துக்களோடு பொருந்துவனவே. கல்வியின்மை குறைந்தால் மனிதவளம் மேம்படும். தனி மனிதன் இழிவு நீங்கும். சமுதாயம் மகிழ்ச்சியாக இருக்கும்.
நாடு செழிக்கும்.
கல்லாமையின் தீங்குகளை அன்றே உணர்ந்த குறள் ஆசிரியர் அவற்றைக் களையும் நோக்கிலேயே அதற்கெனத் தனி அதிகாரம் படைத்தார்.