இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0401அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:401)

பொழிப்பு: அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

மணக்குடவர் உரை: கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல்.
அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.

பரிமேலழகர் உரை: அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பல நூல்களைப் படித்து நிரம்பிய கல்வி யறிவில்லாதவன் ஒரு சபையில் பேசுவது கோடுகள் இல்லாமல் தாயம் ஆடுவதைப் போன்றது. (ஏனெனில் கோடுகள் இல்லாவிடில் எந்தக் காயை எங்கே ஏன் வைப்பதென்பது முடியாது. அதுபோல் கல்வியறிவில்லாதவன் எந்தச் சொல்லை எங்கே ஏன் சொல்லுவதென்பதை அறியாதவன்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல் அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே.


அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே:
பதவுரை: அரங்கு-சதுக்கம். சதுரங்கப்பலகை; இன்றி-இல்லாமல்; வட்டு-உண்டை; ஆடி-விளையாடி; அற்றே-அத்தன்மைத்தே.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொம்மையின்றி வட்டாடினாற் போலும்;
மணக்குடவர் பதவுரை: அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்;
பரிப்பெருமாள்: அரங்கு அமைவின்றி வட்டாடினாற் போலும்;
பரிப்பெருமாள் பதவுரை: அரங்கு- கோட்டம். வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்;
பரிதி: சதுரங்கக் கோடு இல்லாமல் சதுரங்கம் ஆடுவோம் என்பதற்கு ஒக்கும்;
காலிங்கர்: சூதுக் கருவிக்கு நிலையறிந்து இயற்றிய வரையினாற் சதுரப்பட்ட பலகையின்றி வட்டுக் கொண்டு சூதாடிய தன்மை போலும்;
பரிமேலழகர்: அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்,
பரிமேலழகர் குறிப்புரை: அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக.

பழம் ஆசிரியர்கள் அனைவரும் கோடுகள் குறிக்காமல் உருண்டை உருட்டி விளையாடுவது போன்றது என்ற பொருளிலே உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வட்டாட்டம் ஆடுதற்குரிய அரங்கம் இல்லாது வட்டு ஆடுதல் போல', 'அரங்கின்றிக் காய் உருட்டுவது போலும்', 'சதுரங்கக் கோடு இல்லாமல் வட்டுக் காய்களை உருட்டிச் சூதாடுதல் போன்றது', 'கோடு கீறி அதனால் இடம் வகுத்துக் கொள்ளாது வட்டாடினால் போலும்' என்றபடி உரை கூறினர்.

விளையாடப்படும் இடத்திலே கோடுகள் வரையாமல் உருண்டை உருட்டுகிறது போல என்பது இத்தொடரின் பொருள்.

நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல்:
பதவுரை: நிரம்பிய-ஏராளமாக அறியவேண்டிய; நூல்-இலக்கியம்; இன்றி-இல்லாமல்; கோட்டி-சபை; கொளல்-பெறுதல்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல்.
மணக்குடவர் குறிப்புரை: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.
பரிப்பெருமாள்: நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது இலக்கணம் அறியாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.
பரிதி: பெரிய கல்வியில்லாதார், ஆஸ்தானத்தைப் பிரியப்படுத்துவோம் என்பது என்றவாறு.
காலிங்கர்: இவ்வாறு அனைத்து வகைப்பட்ட நெறியினானும் நிறைவுற்ற நூல்கள் யாதானும் ஒன்றினும் தமக்கு ஒரு முயற்சியின்றி வறிதே இவற்றால் சிறந்த சான்றோருழைச் சென்று தாமும் கல்வி வினோதம் கொள்ளக் கருதுகின்ற கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.

பழைய ஆசிரியர்கள் 'நூல்கள் பல கற்காமல் அவையில் பேச முயல்வது' என்ற பொருளில் உரை செய்வர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைந்த நூல்களைக் கற்காது, கற்றறியாத செய்திகளின் விவாதங்களில் ஈடுபடுதல்', 'பலநூல் அறிவின்றி அவை பேறுதல்', 'பல நூல்களைப் படித்து நிரம்பிய கல்வி யறிவில்லாதவன் ஒரு சபையில் பேசுவது', 'அறிவு நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் புகுந்து ஒன்றைச் சொல்லுதல்' என்று உரை தருவர்.

'வேண்டிய அளவு நூற்பயிற்சி இல்லாமல் கூட்டத்தில் ஒரு பொருளைப்பற்றி உரையாற்றத் தொடங்குதல்' என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
நூலறிவுப் பின்புலம் இல்லாதவர்கள் கூட்டத்தில் உரையாற்ற இயலாதவர்கள் என்னும் பாடல்.

நிரம்பிய நூற்பயிற்சி இல்லாதவர்கள் கூட்டத்தில் பேசுதல், அரங்கின்றி வட்டுஆடியது போல என்பது இக்குறட்கருத்து.
அரங்கின்றி வட்டாடியது என்றால் என்ன?

'அரங்கின்றி வட்டாடியது' - இந்த உவமைத் தொடரின் பொருள் என்ன?
அரங்கு என்ற சொல்லை விளக்குவதில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. இச்சொல்லுக்குச் சூது என்று மணக்குடவர் பொருள் கூறுகிறார்; கோட்டம் என்று பரிப்பெருமாள் சொல்கிறார்; சதுரங்கக் கோடு என்று பரிதி பொரூள் கொள்ள காலிங்கர் சூதுக் கருவிக்கு இயற்றிய சதுரப்பட்ட பலகை என்கிறார்; பரிமேலழகர் வகுத்ததானம் அதாவது 'ஆடுதற்கு அமைத்த கட்டம் (அறை)' என்று உரை சொன்னார். அரங்கு என்பதை சூதாடுமிடம் என்று உரைப்பாரும் உளர்.
மணக்குடவர் கொம்மையின்றி (கொம்மை வட்டத்திற்குப் பெயர் ஆகும்) என்று சொல்வதால் வட்டங்கள் அமைந்த வரைகோடுகளாக உள்ள ஓர் ஆட்டத்தை அவர் குறிப்பதாகக் கொள்ளலாம். சதுரங்கம், சொக்கட்டான், தாயம் போன்ற ஆட்டங்களுக்கு சதுரமான கோடுகள் வரைந்து உருண்டையை உருட்டிவிட்டு காயை நகர்த்தி அவற்றுக்குள் சென்று செலுத்துவது குறிக்கோள். இதை மணக்குடவரும் (பதவுரை) காலிங்கரும் சூது என்று குறிக்கின்றனர். இன்றைய ஆசிரியர்களில் சிலர் பரிமேலழகர் உரைக்கு விளக்கம் தரும்போது சூதாட்டம் என்றே எழுதுகின்றனர். சூதானது பணயம் வைத்து ஆடுதலைக் குறிக்கும். பணயம் வைத்து ஆடுதலைச் சொல்வதாக எந்தக் குறிப்பும் இல்லாதபோது சூது என்று கொள்ளாமல் விளையாட்டு என்று மட்டும் கொள்ளலாம்.
வட்டாடியது என்பதற்கு உருண்டையை உருட்டுவது என்று பொருள் கொள்வர். வட்டு குறிப்பது செண்டு அல்லது பந்து என்பர்.

காயை வைப்பதற்கும், முன்னேறிச் செல்வதற்கும், வெற்றி தோல்வி காண்பதற்கும், கோடுகள் வகுத்த அரங்கம் வேண்டும். கட்டம் இட்டு, உருண்டையை உருட்டி, காய் நகர்த்தி, வெற்றியும் தோல்வியும் உணரப்பட்டது என்பது ஆட்டத்தின் நோக்கம் என்பதாகப் படுகிறது. இதுவே அரங்கின்றி வட்டாடியது குறிப்பது.

கோட்டி என்பதற்கு அவை என்ற இடம் அல்லது இடத்திலுள்ள கூட்டம் என்று இருவகையாகப் பொருள் கூறுவர். கோட்டி கொளல் என்பது மக்கள் கூடுதலை அல்லது அவையில் பேசுதலைக் குறிக்கும்.

கட்டமே இல்லாமல் கருவியை உருட்டி, வெறும் காய்களை மட்டும் நகர்த்தி விளையாடினால், அந்த விளையாட்டு விளங்காமல் குழப்பமாக இருக்கும். எல்லை குறியாமல் ஆடும் போது எந்தக் காயை எங்கே வைப்பது, ஏன் வைப்பது என்ற வரையறை இருக்காது. எனவே விளையாட்டிற்கு வரைக் கட்டங்கள் தேவை.
அதுபோல நல்ல கல்விஅறிவு இல்லாதவர் ஒரு கூட்டத்தில் கருத்தைச் சொல்வது குழப்பமானதாகவே இருக்கும். அவர்கள் எங்கு பேச்சைத் தொடங்குவது எப்படி கூட்டத்தினரைத் தன்வயப்படுத்துவது, எவ்விதம் சொல்லும் கருத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது, பேச்சை எப்பொழுது முடிப்பது என்பவை விளங்காமல் தடுமாறுவர். கேட்பவர்கள் பேசுபவர் சொல் புரியாமல் வெறுப்படைவர். பேச்சின் அளவு, நிறை, குணம் இவற்றை நூலறிவால் நன்கு பெறமுடியும். படிப்பறிவு கொண்டோர் அவையில் கேட்பவர் பாராட்டும்படி பேச இயலும். அரைகுறையாய்க் கற்றவர்களும் அவையில் உரையாற்றினால் தோல்வியே காண்பர். அதனால்தான் நிரம்பிய படிப்பறிவு வேண்டும் என்கிறது குறள்.

வேண்டிய அளவு நூலறிவு இல்லாமல் ஒருவன் கூட்டத்தில் பேசுவது, விளையாடப்படும் இடத்திலே கோடுகளைச் செய்யாமல் உருண்டையுருட்டுகிறது போல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கல்லாதவனின் பேச்சு குழப்பமே தரும் என்னும் கல்லாமை அதிகாரத்துப் பா.

பொழிப்பு

நிறைந்த நூலறிவின்றி கூட்டத்தில் பேசுவது அரங்கின்றிக் காய் உருட்டுவது போல.