இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:407)

பொழிப்பு (மு வரதராசன்): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

மணக்குடவர் உரை: நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும்.
இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: நுட்பமும் மாட்சியும் உடையதாய்ப் பல நூல்களிலும் நுழைந்து கண்ட அறிவினைப் பெறாதவனது எழுச்சியும் அழகும் மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பாவையை ஒக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று.

பதவுரை: நுண்-நுட்பமான; மாண்-மாட்சிமைப்பட்ட; நுழைபுலம்--நுணுகிச் சென்ற அறிவு, ஆராய்ந்து பார்க்கும் அறிவு; இல்லான்-இல்லாதவனது; எழில்நலம்-அழகு, தோற்றப் பொலிவு, எழுச்சி, கம்பீரத்தோற்றம்; மண்-மண்; மாண்-சிறந்த; புனை-அலங்காரம் செய்த; பாவை-பதுமை, பொம்மை; அற்று-அத்தன்மைத்து.


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு;
பரிப்பெருமாள்: நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு;
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவிற்கு மாட்சியாவது, பொருளைக் கடிதில் காண்டலும் மறவாமையும் முதலாயின.
பரிதி: நுண்ணிய அறிவில்லாதவன் அழகு;
காலிங்கர்: நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டு எஃகுதலை உடைத்தாயுள்ள ஞானத்தைத் தருவதாகிய நூலினைக் கற்றிலாதான் எழில் நலமானது;
காலிங்கர் குறிப்புரை: நுழைதல் என்பது எஃகுதல்; புலம் என்பது அறிவு. [எஃகுதல்-நுணுகுதல். வலியாதல்]
பரிமேலழகர்: நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்;
பரிமேலழகர் குறிப்புரை: அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின. [கடிதில் காண்டல்-விரைந்து உணர்தல்]

'நுண்ணிய அறிவில்லாதவன் எழில்நலம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களின் உரை அமைந்தன.

இன்றைய ஆசிரியர்கள் 'நுண்மை மாட்சி கூர்மை பொருந்திய அறிவு இல்லாதவன் அழகு', 'நுட்பமாகிய சிறந்த நூல்களில் நுழைந்து ஆராய்ந்த கல்வி அறிவு இல்லாதவனுடைய அழகின் சிறப்பு', 'நுட்பமாய்ச் சிறந்து நூல்களை நுழைந்து பார்க்கும் அறிவு இல்லாதவனுடைய தோற்றப்பொலிவும், அழகும்', 'நுட்பமான பெருமை மிக்க நூல்களைக் கற்று அதனால் பெற்ற அறிவினை இல்லாதவனுடைய அழகின் பெருமை' என்றபடி உரை நல்கினர்.

'நுண்ணியதாயும் மாட்சிமைப்பட்டதாயும் உள்ள நூல்களைக் கூர்ந்து நோக்கும் அறிவு இல்லாதவனுடைய தோற்றப்பொலிவும், அழகும்' என்பது இத்தொடரின் பொருள்.

மண்மாண் புனைபாவை அற்று:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிப்பெருமாள்: மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அழகியர் ஆயினும் மதிக்கப்படாரென்றது.
பரிதி: மண்ணினால் பண்ணின பொம்மைக்கு நிகராம் என்றவாறு.
காலிங்கர்: பலவகைப்பட்ட நிறங்களால் அழகு புனைந்த பாவையைப் போல உறுப்பழகு உண்டு; உணர்வழகு இல்லை என்றவாறு. பரிமேலழகர்: சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.

இத்தொடர்க்கு 'மண்ணினால் செய்த அழகிய பொம்மைக்கு நேர்' என்று பழம் ஆசிரியர்கள் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறப்பொம்மை போலும்', 'மண்ணைக் கொண்டு திறமையாகச் செய்யப்பட்ட பொம்மையைப் போன்றது', 'மண்ணினால் சிறப்பாக வனையப்பட்ட பதுமையினுடைய எழுச்சியும் அழகும் போல்வனவே', 'மண்ணினால் அழகுறச் செய்யப்பட்ட பதுமையினுடைய அழகின் தன்மையை ஒக்கும்' என்றபடி உரை தந்தனர்.

'மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பொம்மையை ஒக்கும்' என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
நுண்மாண் நுழைபுலம் இல்லாதவனுடைய எழில்நலம், மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பொம்மையை ஒக்கும் என்பது பாடலின் பொருள்.
'நுண்மாண் நுழைபுலம்' என்றால் என்ன?

மாந்தர்க்குக் கல்வி உள்ளொளியுடன் கூடிய தோற்றப்பொலிவு தரும்.

நுண்ணியதாயும் மாட்சிமைப்பட்டதாயும் உள்ள நூல்களைக் கூர்ந்து நோக்கும் அறிவுநலம் இல்லாதவனுடைய உடல் அழகு மண்ணினால் அழகாகச் செய்யப்பட்ட பதுமையை ஒத்தது.
யாவருமே அழகை விரும்புகிறவர்கள் என்பதால் அழகாகத் தோற்றமளிப்பது சில இடங்களில் நன்மை தருவதுவாகவும் இருப்பது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அழகாயிருப்பவனுக்கு நூலறிவில் நாட்டமில்லையென்றால் அவனது அழகு, மண்பொம்மைக்கு எவ்விதம் காட்சிப்பொருள் என்ற அளவில்தான் சிறப்பு இருக்குமோ, அவ்வளவே இருக்கும் என்பதை அவன் உணரவேண்டும். எனவே, தான்அழகாக இருக்கிறோமே அத் தகுதிப்பேறு போதாதா என்று எண்ணாமல் அவன் கல்வியாலும் தன்னை எழிலாக்கிக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

எழில்நலம்:
எழில் என்ற சொல் எழுச்சியான (கம்பீரமான)தோற்றத்தையும் நலம் என்பது அழகையும் குறிப்பதாகக் கொள்வர். காலிங்கர் 'எழில்நலம் கொண்ட கல்லாதவரிடம் உறுப்பழகு உண்டு; உணர்வழகு இல்லை' என்பார். கல்லாதவனது தோற்றப் பொலிவானது வெளியே கண்கவர் நிறம், உள்ளே மண் கொண்ட பொம்மைக்குச் சமம். ஆகையால் அழகுடல் கொண்டவர்க்கும் சிறப்புச் சேர்ப்பது எது என்பதை அறிதல் வேண்டும்.
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
(நாலடியார், கல்வி, 133)
(பொருள்: மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும் மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.) என்ற நாலடியார் பாடல் இக்குறட்கருத்தைப் போல் உடல் அழகினும் 'கல்வி யழகே யழகு' என்று கூறுகிறது.

மண்மாண் புனைபாவை:
இத்தொடர்க்கு மண்ணால் நேர்த்தியாக வனையப்பட்ட பாவை என்பது பொருள். பாவை என்ற சொல் பதுமை அல்லது பொம்மையைக் குறிக்கும். மாண் என்பது மாட்சி அல்லது சிறப்பு என்ற பொருள் தருவது. 'புனை' என்னும் சொல் 'அழகு செய்தல்' அல்லது 'அலங்கரித்தல்' என்னும் பொருளில் வந்தது. இதற்குக் 'கண்ணுக்கினிமையாகப் புனைந்த பாவை' என்றும் 'பலவகைப்பட்ட நிறங்களால் அழகு புனைந்த பாவை' என்றும் விளக்கம் தருவர். இப்பாவை கோயில் போன்ற கட்டிடங்களின் மேல் அழகுக்காகவும் பிற இடங்களில் கண்கவர் காட்சிபொருளாகவும் வைக்கப்படுவதாம்.

அழகானதும் எழுச்சியானதுமான தோற்றம் கொண்டு ஒருவன் விளங்கலாம்; ஆனாலும் அவன் கல்விகற்றபின்தான் அவனது இயற்கைஅறிவுக்குப் பயன் உண்டு. ஆகையால் அவன் நுண்மாண்நுழைபுலம் கொண்டவனாக அதாவது ஆராய்ச்சி அறிவு உள்ளவனாக விளங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தோற்றப்பொலிவும் செல்வம்போல் ஆற்றல் உள்ளதே; ஆளுமையும் கொண்டதுதான். ஆனால் கல்விஅறிவற்ற அழகு நல்ல வேலைப்பாட்டுடன் அலங்கரிக்கப்பட்ட மண்பொம்மைக்கு நேர். அதாவது வெளியே அழகு; உள்ளே மண் என்பதால் வேறு எந்த ஆற்றலும் அப்பொம்மைக்குக் கிடையாது என்பது உணர்த்தப்பட்டது. உடலழகினும் ஒளிதருவது கல்வி அழகே. கல்வியாலே ஒருவன் சிறந்த எழில்நலம் பெறுகிறான். மேலும் நூலறிவு உடையோரையே பிறர் மதிப்பர் என்பதாலும் அழகியரும் கற்றல் வேண்டும்.
ஆளைப் பார்த்தால் அழகு; வேலையைப் பார்த்தால் குழவு (குழந்தைத்தனம்) என்னும் அழகுப் பேதையின் செயற்பாடுகளை எள்ளும் பழமொழியையும் நினைத்துக் கொள்க.

'நுண்மாண் நுழைபுலம்' என்றால் என்ன?

நுண்மாண் நுழைபுலம் இல்லான் என்ற தொடர் நூலறிவில் ஈடுபாடு காட்டமாட்டாதவனைக் குறிக்கும். நுண்மாண் நுழைபுலம் என்பதிலுள்ள நுண் என்பது நுட்பத்தையும், மாண் என்பது மாட்சிமையையும், நுழை என்பது நூல்களில் நுழைதல் அல்லது ஆராய்தலைச் சொல்வது. பழைய ஆசிரியரான காலிங்கர் 'நுழைதல் என்பது எஃகுதல்' என்றார். அஃகி அகன்ற அறிவு..... (வெஃகாமை 175: பொருள்: நுணுகி ஆராய்ந்த விரிந்த அறிவு) என்ற குறளில் அஃகிய அறிவு பற்றிச் சொல்லப்படுகிறது. எஃகுதல், அஃகுதல் இரண்டும் ஒரு பொருள் தருவன. இதன் நேர் பொருள் கூர்மையாக்கல் என்பது. தீட்டப்படும் கருவிகள் ஒவ்வொருமுறையும் கூர்மை மிகுதல் போல அறிவு பல நூல்களிலும் பலமுறை பயிலும்போது நுணுக்கம் மிகும் என்பது கருத்து.

பலதுறைகளிலும் நன்கு நுழைந்து ஆராய்ந்த நுண்ணிய மாண்புள்ள அறிவு நுண்மாண் நுழைபுலம் எனப்படுகிறது.
அறிவிற்கு மாட்சியாவது, பொருளைக் கடிதில் காண்டலும் மறவாமையும் முதலாயின எனப் பரிப்பெருமாள் என்ற மற்றொரு தொல்லாசிரியர் கூறினார். இவ்வறிவு உள்ளவர் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் விரைந்து உணர்ந்து முடிவு எடுக்கும் திறன் கொண்டவர் ஆவர். விரைவிற்கண்டு, அவற்றை மறவாதிருக்கக் கூடிய திறன் நுண்ணிய நூலறிவு கொண்டவருக்கு எளிதில் கைவரப்பெறும். இவ்வறிவு இல்லாத மாந்தர் எவ்வளவு எழிற்தோற்றம் உடையவரேயாயினும் உண்மையில் நலனுடையராகார் என்பது சொல்லப்பட்டது. 'நுண்மாண் நுழைபுலம்' என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் "Perspicacity" எனக் கூறுவர்.

'நுண்மாண் நுழைபுலம்' என்ற தொடர் கூர்மையும் மாட்சிமையும் உடையனவான பலநுல்களில் நுழைந்து அதாவது சென்று, ஆராய்ந்து பெறும் அறிவு என்ற பொருள் தரும்.

நுண்ணியதாயும் மாட்சிமைப்பட்டதாயும் உள்ள நூல்களைக் கூர்ந்து நோக்கும் அறிவு இல்லாதவனுடைய எழில்நலம், மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பொம்மையை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கல்லாமை ஒருவனுக்கு அழகுக் குறைபாடாம்.

பொழிப்பு

நுண்மை மாட்சி கூர்மை பொருந்திய அறிவு இல்லாதவனது எழுச்சியும் அழகும் மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பாவையை ஒக்கும்.