இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0409மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:409)

பொழிப்பு: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்.
இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கல்லாதார் மேற்குலத்தில் பிறந்தவராய் இருந்தாலும், கீழ்க்குலத்திற் பிறந்தும் கல்வி உடையவர்போல அவ்வளவு பெருமை உடையாரல்லர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர்.


மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் :
பதவுரை: மேற்பிறந்தார்-உயர்குடியில் பிறந்தவர்; ஆயினும்-ஆனாலும்; கல்லாதார்-ஓதாதவர்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும்;
பரிப்பெருமாள்: கல்வியில்லாதார் உயர்ந்த குலத்திற் பிறந்தாராயினும்;
பரிதி: மேலான குலத்திலே பிறந்தும் கல்வியில்லாதார்க்கு;
காலிங்கர்: உலகத்துக் கல்லாதாராகிய மக்கள் உயர்குடிப் பிறந்து ஒள்ளியர் ஆயினும்;
பரிமேலழகர்: கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்;

பழம் ஆசிரியரகள் அனைவரும் 'கல்வியில்லாதார் உயர்குலத்தில் பிறந்தாராயினும்' என்று இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதார் மேட்டுக்குடிப் பிறந்தாராயினும்', 'கல்லாதவர் உயர் குடியிற் பிறந்திருப்பினும்', 'சாதியாலும் செல்வத்தாலும் மேலான பிறப்புடையவர்களும் கூட கல்வியறிவில்லாதவராக இருந்தால்', 'கல்லாதார் மேற்குலத்தில் பிறந்தவராய் இருந்தாலும்' என்றபடி உரைத்தனர்.

'கல்லாதார் மேற்குலத்தில் பிறந்தவராயினும்' என்பது இத்தொடரின் பொருள்.

கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு:
பதவுரை: கீழ்ப்பிறந்தும்-கீழ்க்குடியில் பிறந்தும்; கற்றார்-ஓதியவர்; அனைத்து-அவ்வளவு; இலர்-இல்லாதார்; பாடு-பெருமை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்.
மணக்குடவர் கருத்துரை: இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிப்பெருமாள்: இழிகுலத்துப் பிறந்த கற்றாரோடு ஒத்த பெருமையிலர்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிதி: கீழான சாதியிலே பிறந்தும் கல்வி உள்ளார்க்குள்ள பெருமையத்தனை இல்லை என்றவாறு.
காலிங்கர்: உலகத்துக் கல்லாதாராகிய மக்கள் உயர்குடிப் பிறந்து ஒள்ளியர் ஆயினும், மற்றுக் கீழ்குடிப்பிறந்தும் கற்றாரைப் போல்வதோர் பெருந்தன்மை என்றும் இலர் என்றவாறு.
பரிமேலழகர்: தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.
பரிமேலழகர் விரிவுரை: உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.

'கீழ்குடிப்பிறந்த கல்வி உள்ளார்க்குள்ள பெருமையத்தனை இல்லை' என்று பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கீழ்க்குடியிற் பிறந்த கற்றவரைப் போல் பெருமையுடையவர் அல்லர்', 'தாழ்குடியிற் பிறந்த அறிஞர்க்கு ஒவ்வார்', 'சாதியாலும் செல்வத்தாலும் கீழான பிறப்புடையவர்களாக இருந்தும் கல்வியறிவுடையவர்களைப் போல் பெருமை அடையமாட்டார்கள்', 'கீழ்க்குலத்திற் பிறந்தும் கல்வி உடையவர்போல அவ்வளவு பெருமை உடையாரல்லர்' என்றபடி உரை தருவர்.

'தாழ்குடியில் பிறந்த கற்றாரது பெருமை அளவு பெருமை கொண்டவர் அல்லர்' என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
மேற்பிரிவைச் சார்ந்தவன் கல்லாமையால் பெருமை குன்றுவான் என்னும் குறள்.

கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் கீழ்ப்பிறந்தும் கற்றாரது அளவு பெருமை கொண்டவர் அல்லர் என்பது பாடலின் கருத்து.
மேற்பிறந்தார்/கீழ்ப்பிறந்தார் யாவர்?

மேற்பிறந்தார் யார்? கீழ்ப்பிறந்தார் யார்?
சமுதாய அமைப்பில் பல காரணங்களால் பிரிவுகள் ஏற்படுகின்றன. நம் நாட்டில் ஒன்றிலிருந்து ஒன்று விரிந்த குடி, குலம், சாதி என்ற அடிப்படையில் சமுதாயப் பிரிவுகள் உருவாயின. பிறப்பால் பிரிவு என்னும் இழிந்த கருத்தாக்கத்தை ஆரியர்கள் இங்கு திணித்தனர். இது சாதி என்னும் பிரிவை உண்டாக்கியது. பிறப்பின் அடிப்படையில் சிறப்புக் கொள்வதை நம்நாட்டுப் பெரியோர்கள் எஞ்ஞான்றும் ஏற்றுக்கொண்டதில்லை. வள்ளுவருக்கும் அது ஒவ்வாததே என்பது 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' (குறள் 972) என்ற பாடல்வழி அனைவரும் அறிந்ததே. உலகத்தில் உள்ள மற்ற பண்பாடுகளிலும் பிரிவுகள் உண்டு. வேறுநாடுகளில் சாதி என்ற பெயரில் இல்லாவிட்டாலும் வேறு வகையில் பிரிவுகள் உண்டு. அங்குள்ள வகையான பிரிவுகள் நம்நாட்டில் இல்லை. பிரிவுகள் சமுதாய படிநிலைகளைத் தோற்றுவித்து உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட வழிவகுத்தன. சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்பட்டவர் மேற்பிறந்தார்; தாழ்வாகக் கருதப்பட்டவர் கீழ்ப்பிறந்தார் என அறியப்பட்டனர்.

எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியான உயர்வு தாழ்வு இருந்திருக்கவில்லை என்பதையும் நாம் அறிய வேண்டும். ஒரு காலகட்டத்தில் உயர்ந்தோர் என் மதிக்கப்பட்டோர் இன்னோரு காலத்தில் தாழ்ந்தவர் ஆயினர். அதுபோலவே ஒரு காலகட்டத்தில் தாழ்ந்தவர்கள் பிறிதொரு காலத்தில் உயர்ந்தோர் ஆயினர். கால அளவு வேறுபாட்டைப் பொறுத்து உயர்வு/தாழ்வு மாறின. இன்றுள்ள சாதிப்பாகுபாடே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பும் இருந்தன என்று சொல்வதற்கான சான்றுகள் இல்லை.
குடி, குலம், சாதி முறை சமூகப்படிநிலையை ஒருபுறம் தீர்மானித்தாலும் செல்வ நிலைமை, தொழில் நிலைமை, அதிகார நிலைமை, இவையே சமூகத் தகுதிநிலையைக் கணிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மேற்பிறந்தார்/கீழ்ப்பிறந்தார் என்பது பின்னர்க் குறித்த அளவுகோலை வைத்தே முடிவு கட்டப்பெறுகிறது. அவற்றுள்ளும் கல்வி பெற்றமை கொண்டு மேற்பிறந்தார் கீழாகவும் கீழ்ப்பிறந்தார் மேலாகவும் மாறுவர் என்கிறார் வள்ளுவர். ஒருவன் உயர்ந்தவனா அல்லது தாழ்ந்தவனா என்பதை அவன் கற்றவனா அல்லது கல்லாதவனா என்பது கொண்டே அறியமுடியும்; கற்றவன் மேற்பிறந்தவன், கல்லாதவன் கீழ்ப்பிறந்தோன் என்பது இக்குறள் கூறவரும் கருத்து.

'அனைத்திலர்' என்ற சொல் அனைத்து, இலர் என்ற இரு சொற்களால் அமைந்தது. அனைத்து என்பதற்கு 'அவ்வளவு' என்று பொருள். இலர் என்ற சொல்லுக்கு இல்லாதார் என்பது பொருள். 'பாடு' என்ற சொல் பெருமை என்ற பொருளில் இங்கு ஆளப்படுகிறது. 'அனைத்திலர் பாடு' என்ற் தொடர்க்கு 'அனைத்துப் பாடு இலர்' என்பது பொருள்கோள்வைப்பு; 'அவ்வளவு பெருமை இல்லாதவர்' என்ற பொருள் தருவது.

இக்குறள் கல்வியைக் கொண்டு மக்களை மேல்-கீழ் என்று வரையறுக்கிறது; கல்லாதவர்கள் உயர்பிரிவில் பிறந்தவராக இருக்கலாம். ஆனாலும் தாழ்ந்த பிரிவில் பிறந்துவைத்தும் கற்றவர் அளவுக்கு பெருமை கொண்டவர்கள் அல்லர் என்கிறது. ஒருவரது கல்வியறிவே அவரது மேன்மை-கீழ்மையை தீர்மானம் செய்வது.

கல்லாதார் மேற்குலத்தில் பிறந்தவராயினும் தாழ்குடியில் பிறந்த கற்றாரது பெருமை அளவு பெருமை கொண்டவர் அல்லர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சமுதாய ஏற்றத் தாழ்வுகளைச் சமன் செய்யும் கருவி கல்வியாம் என்னும் கல்லாமை அதிகாரப் பாடல்.

பொழிப்பு

தாழ்ந்த குடியிற் பிறந்திருந்தாலும் கல்வி கற்றார் எய்திய பெருமையின் அளவு உயர்குடிப் பிறந்த கல்லாதவர் பெறமாட்டார்.