இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0406



உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:406)

பொழிப்பு (மு வரதராசன்): கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்.

மணக்குடவர் உரை: உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்.
இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.

பரிமேலழகர் உரை: கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.
(களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: கல்லாதவர் உடம்போடு உள்ளார் என்று சொல்லும் அளவினாராதலன்றி பிறர்க்குப் பயன்படாமையால் களர் நிலம் ஒத்தவராவர்.
களர்நிலத்தில் ஒன்றும் விளையாது. அதுபோல், கல்லாதவர் வாழ்க்கையில் ஒரு பயனும் விளையாது. இன்று வேளாண்மை வளர்ச்சியில் களர்நிலத்தை நன்னிலமாக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களர் நிலத்தில் தண்ணீரைக் கட்டி ஜிப்சம் என்ற உப்பைக் களரின் அளவுக்கேற்றவாறு கலக்கி மூன்று நாட்கள் நிறுத்தி வைத்துத் தண்ணீரை வடியவிட்டால் களர் போய்விடும். களர் நிலத்திலேயே விளையக் கூடிய 'ஒட்டுக்கால்' என்ற நெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லாதவரும் கற்றாரோடு உறவு கொண்டு கலந்துரையாடல் மூலம் கல்வியின்மையால் வரும் தீமையை மாற்றிக் கொண்டு பயனுடைய வாழ்க்கை வாழலாம் என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லாதவர் உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களர்அனையர்.

பதவுரை: உளர்- இருக்கின்றனர்; என்னும்-என்கின்ற; மாத்திரையர்-அளவினர்; அல்லால்-அன்றி; பயவாக் களர்-விளைவுக்குப் பயன்படாத உவர் நிலம்; அனையர்-ஒப்பர்; கல்லாதவர்-கல்லாதவர், கல்வியறிவு இல்லாதவர்.


உளரென்னும் மாத்திரையர் அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உளரென்னும் அளவினையுடையாரல்லது;
பரிப்பெருமாள்: உளரென்னும் அளவினையுடையாரல்லது;
பரிதி: கல்வியில்லாதவர், செல்வம் பெற்றார்களாகில், பெருமை பெறுவார்;
காலிங்கர்: கல்லாதார் வெறும் பிணம் ஆதலன்றிச் சிறுது உயிரோடு நடைபெறுதலை உடையரென்று சொல்லிக் கொள்ளும் அளவின்றி;
பரிமேலழகர்: காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி;

பரிதி தவிர மற்ற பழம் ஆசிரியர்கள் 'உளரென்னும் அளவினையுடையார்' என இப்பகுதிக்கு உரை கண்டனர். பரிதி 'செல்வம் பெற்றார்களாகில், பெருமை பெறுவார்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிரோடு இருக்கிறார் எனலாமே யன்றி', ' பெயரளவுக்குத்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்', 'உலகத்திலே இருக்கின்றார் என்ற அளவே கூறப்படுதற்கு உரியர்', 'மனிதரைப் போல் தோன்றுகின்ற அளவே அல்லாது' என்றபடி உரை தருவர்.

'இருக்கின்றார் என்ற அளவே கூறப்படுதற்கு உரியரன்றி' என்பது இப்பகுதியின் பொருள்

பயவாக் களர்அனையர் கல்லா தவர்:

இப்பகுதிர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர். [களர் நிலம்-நெல்முதலியன விளைதற்கு உரியதாகாத நிலம்]
மணக்குடவர் குறிப்புரை: இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
பரிப்பெருமாள்: பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
பரிதி: அஃது எப்படி என்றால் விளைநிலத்தின் முன்னே உவர் நிலம்போல் என்றவாறு.
காலிங்கர்: மற்று வித்தியது ஒன்று விளைதல் சிறப்பில்லாத களர்த்தரையே ஒப்பு; அவர்க்குக் கல்வியினால் விளையும் மறுமை ஆக்கமும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர் கல்லாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது. [பேணற்பாடு-விரும்பிக் காக்கப்படுவது]

'பிறருக்குப் பயன்படாத, விளையாத களர் நிலத்தோடு ஒப்பர் கல்லாதவர்' என்னும் பொருளில் பழைய ஆசிரியர்கள் உரை காண்பர். பரிதி 'விளைநிலத்தின் முன்னே உவர் நிலம்போல்' என்று உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதவர்கள் எதுவும் விளையாத களர்நிலம்போலத் தமக்கும் உலகிற்கும் பயன்படமாட்டார்கள்', 'பயன்தராத களர்நிலம் ஒப்பர்', 'ஒன்றுக்கும் உதவாத களர் நிலத்தைப் போன்றவர்களே', 'பிறர்க்குப் பயன்படாமையால் விளையாத களர் (உப்பு) நிலத்திற்கு ஒப்பாவர்' என்றபடி உரைப்பர்.

'கல்லாதவர்கள் எதுவும் விளையாத களர்நிலம்போலப் பயன்படமாட்டார்கள்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஏதோ இருக்கின்றார் என்ற மாத்திரையர் அல்லால் கல்லாதவர்கள் எதுவும் விளையாத களர்நிலம்போலப் பயன்படமாட்டார்கள் என்பது பாடலின் கருத்து.
'மாத்திரையர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

கல்லாதவன் அறிவில் எது போட்டாலும் ஒன்றும் தோன்றாது.

கல்லாதவர் இவ்வுலகில் இருக்கின்றனர் என்னும் அளவில்தான் காணப்படுகின்றனர். இதையன்றி அவர் விளைச்சலுக்குப் பயன்படாத களர் நிலத்துக்குச் சமமாவர்.
'உளரென்னும் மாத்திரையர் அல்லால்' என்ற தொடர் 'உயிரோடு வாழ்கிறார் என்று சொல்லும் அளவினரே அல்லாமல்' என்ற பொருள் தரும்.
கல்லாதவரை 'முகத்திரண்டு புண்ணுடையர்' என்றும், கடையரென்றும் முன்னதிகாரத்தில் இழித்துக்கூறியபின் இப்பாடல் கல்லாதவன் விளைச்சல் பயன்களைத் தர இயலாத களர்நிலம் போன்றவன் என்கிறது. களர் நிலமானது பார்வைக்கு நல்ல நிலத்தைப் போலவே தெரியும். ஆனால், எவ்வளவு உழுது பயிர் செய்தாலும் பயன் தராது. போட்ட விதையும் அழிந்துவிடும். அதுபோல, கல்வியறிவு இல்லாதவர்கள், பெயரளவுக்கு உயிரோடு இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவர்களால் எதற்கும் பயனில்லை, அவர்கள் 'உயிருடன் உள்ளனர்' என்பதொன்று மட்டுமே உண்மை.

பாடல் கருத்து உலகத்துக்கு கல்லாதவனால் ஒரு நன்மையும் கிடையாது என்பது. பரிதி இக்குறளுக்குப் புதிய கோணத்தில் விளக்கம் அளிக்கிறார். அவர் கூறுவது: 'கல்வியில்லாதவர், செல்வம் பெற்றார்களாகில், பெருமை பெறுவார்; அஃது எப்படி என்றால் விளைநிலத்தின் முன்னே உவர் நிலம்போல்.' பரிதியின் உரையை விளக்கும் தண்டபாணி தேசிகர் 'ஏதோ பணக்காரன் என்பதல்லாமல் உவர் நிலம்போல யார்க்கும் பயன்படாநன்றியில் செல்வம் உடையார் ஆவர் கல்லாதார்; 'ஈயாதான் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று' 'ஈயான் செல்வம் ஏதம்' என்ற கருத்துக்களும் இவர் உள்ளத்து நிலவ, இவர் 'உள்ளான் -செல்வம் உள்ளான்; பிறர்க்கோ தனக்கோ பயன்படாத தன்மையால் உவர்நிலமனையர்' என்று உரை கண்டிருக்கிறார்' என்கின்றார். செல்வம் 'உள்ள' கல்வியறிவில்லாதவன் என்ற குறிப்பு இருப்பதாகக் கொண்டு, சொற்கள் வருவித்து பரிதி உரை கண்டுள்ளார்; பரிதியின் உரையும் அதற்குத் தண்டபாணி தேசிகர் தந்த உரைவிளக்கமும் பாடல் கருத்தை வேறொரு வகையில் உணரவைக்கிறது.

கல்லாதவர்கள் களர்நிலம் போல் பயன்படாமல் வாழ்பவர்கள் என்கிறது பாடலின் உவமை. களர் என்றது களர்நிலத்தைக் குறிப்பது. எவ்வகையான முயற்சி எடுத்துக் கொள்ளினும் எதையும் விளைவிக்க முடியாத நிலம் களர்நிலம் எனப்படும். களர்நிலம் உப்புநிலம், உவர்நிலம் என்றும் அறியப்படுவது. களர் என்பது அமிலம் மற்றும் காரத்தன்மை உள்ள புன்னிலமாகும். மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. இந்நிலத்தில் நெல் முதலிய பயிர்கள் விளையா; ஆனால் உப்பு விளையும்.
பரிமேலழகர் 'தானும் பேணற்படாமல் அதாவது விரும்பிக் காக்கப்படாமல் அழிந்து, உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போல' என்று இவ்வுவமையை விளக்குகிறார். ஆனால் உவர் மண்ணில் உப்பு விளையும். உப்பின் பயன் நாம் நன்கு அறிந்ததே. வள்ளுவர் காலத்துப் பாடலான நாலடியாரும்
களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
(நாலடியார், கல்வி, 133 பொருள்: உவர் நிலத்தில் தோன்றிய உப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும் நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்) என்று உப்பின் விழுமிய பயனைப் பாராட்டியது.
இதனால்தான் தேவநேயப்பாவாணர் இக்குறளில் சொல்லப்பட்டது உவர் நிலமல்ல; "காலாழ்களரின் நரியடும்" (500) என்னுங் குறளிற் கூறப்பட்ட உளைநிலம் அதாவது புதைசேறு நிலமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கிறார். புதைசேற்றிலும் எதுவும் விளையாது.

கல்லாதான் பயவாமை என்பதை அறிவாற் பிறர்க்குதவாமை என்று பரிமேலழகரும் பிறரும் விளக்குவர். மனிதனாகப் பிறந்தவன், ஏதோ ஒருவகையில் தன்னைச் சார்ந்த குடும்பத்திற்கோ, அல்லது சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ பயன் உடையவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 'பெயருக்கு இருக்கிறான்' என்றுதான் கொள்வர். கல்விபெறாதவனால் உலகத்துக்கு எந்தவகையான பங்களிப்பும் தர இயலாது என்பது கருத்து.

'மாத்திரையர்' என்ற சொல்லின் பொருள் என்ன?

மாத்திரம்/மாத்திரை என்ற சொல் 'அளவு' என்பதை குறிக்கிறது. இச்சொல் பற்றி தேவநேயப்பாவாணர் கூறுவது: 'மாத்தல் அளத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. மா என்பது பல்வேறு அளவுகுறித்த சொல். மா+அனம்=மானம்=அளவு, படி. ..மா+திரம்=மாத்திரம்=அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்பது நெல்லைவழக்கு. ....அளவு-அளபு=மாத்திரை. "மாத்திரை எழுத்தியல் அசைவகை எனா அ"(தொல்.செய்.1.) "கண்ணிமை தொடியென அவ்வே மாத்திரை".(எழுத்-7), மா என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் தமிழ்க் கீழ்வாயெண்ணுப்பெயர்களுள் ஒன்று. அதன் அளவு(1/20) (1/30) மா (ம.), மாவு (தெ.). அரைமா, ஒருமா, ஒருமாவரை (ஒருமாரை), இருமா, மும்மா, நான்மா, மாகாணி என்பன அவ்வளவால் எற்பட்ட எண்ணுப் பெயர்கள். ஒரு வேலியில் இருபதிலொன்றான நில அளவு மா எனப்படும். "மாநிறை வில்லதும் பன்னாட் காகும் "(புறம். 184)- ஓர் எடையில் இருபதிலொன்றான நிறையும் மா எனப்படும் (தொல்.180, உரை). இங்ஙனம் பல்வேறு அளவு குறித்த மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர், ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத்தூய்மைத் தமிழ்ச்சொல். ஆதலால் இருக்குவேதத்தில் மா, மாத்ரா என்னும் சொற்கள் ஆளப்பட்டிருத்தல் நோக்கி மயங்கற்க. மா என்னும் முதனிலை போன்றே, அதனின்று திரிந்த மாத்திரம், மாத்திரை என்ற சொற்களும் தூய தமிழ் என அறிக. இன்றும் அது மாத்திரம், கேட்டமாத்திரத்தில், மாத்திரைக்கோல் (வரையிட்ட அளவுகோல்) எனப்பொது வழக்காக வழங்குதல் காண்க. அளபு, மாத்திரை என்னும் இருசொற்களும் தமிழின் சொல் வளத்தையே காட்டும். "மாத்திரையின்றி நடக்குமேல்" (நாலடி242) என்பதனால், மாத்திரை என்பதன் அடிப்படைப்பொருள் அளவு என்பதேயென்று அறிந்து கொள்க.'

'மாத்திரையர்' என்ற சொல்லுக்கு அளவினர் என்பது பொருள்.

உலகத்திலே இருக்கின்றார் என்ற அளவே கூறப்படுதற்கு உரிய கல்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாமையால் விளையாத நிலத்திற்கு ஒப்பாவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கல்லாமை ஒருவனை எதற்கும் உதவாதவனாய் ஆக்கிவிடும்.

பொழிப்பு

உயிரோடு வாழ்கிறார் எனலாமே அன்றி, கல்லாதவர் பயன்தராத களர்நிலம் போன்றவர்.