இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0404



கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:404)

பொழிப்பு (மு வரதராசன்): கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.



மணக்குடவர் உரை: கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்.
ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
(ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: கல்லாதவன் தன்னை அறியாமல் சிலசமயம் வெளிப்படுத்தும் ஒளிவீச்சுப் போன்ற அறிவுடைமை, மிகவும் சிறந்தது போல் தோன்றினாலும் அதனை அறிவுடையார் நுண்ணறிவு என்று ஏற்றுக்கொள்ளார்.
ஒட்பம்-நுண்ணறிவு. கல்வியின்றி இயல்பாயுள்ள அறிவு பண்படுத்தாத நிலம்போலப் பயன் தராது. படிக்காத அறிவும் பயிற்சி செய்யாத இசையும் பழகாத நாட்டியமும், அங்ஙனம் பயின்று பழகியவர்முன் எடுபடா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும், அறிவுடையார் கொள்ளார்.

பதவுரை: கல்லாதான்-கல்வி பெறாதவன், ஓதாதவன்; ஒட்பம்-இயற்கைஅறிவு, நுண்ணறிவு, அறிவுடைமை; கழிய-மிக; நன்று-நல்லது, நன்மையுடையது; ஆயினும்-ஆனாலும்; கொள்ளார்-ஒப்பமாட்டார்; அறிவுடையார்-அறிவுடையவர்.


கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும்;
மணக்குடவர் குறிப்புரை: ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிப்பெருமாள்: கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும்;
பரிதி: கல்லாதவன் வயதால் பெரியவனாகிலும்;
காலிங்கர்: இடம்படு நூல்களை இனிதாகக் கற்றிலானது அறிவு மிகவும் நன்றாயினும்;
காலிங்கர் பதவுரை: ஒட்பம் என்றது ஒள்ளிமை.
பரிமேலழகர்: கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்; [ஒரோவழி - ஒவ்வோரு சமயம்]
பரிமேலழகர் பதவுரை: ஒண்மை: அறிவுடைமை.

ஒட்பம் என்பதற்கு மணக்குடவரும் காலிங்கரும் அறிவு என்று பதவுரை கூறினர்; பரிப்பெருமாள் சாமர்த்தியம் என்று பதவுரை காண்பார்; பரிமேலழகர் அறிவுடைமை என்றார். 'கழிய நன்று' என்றதற்கு 'மிகவும் நன்றாயிருப்பது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் காலிங்கர் ஆகியோர் பொருள் கூறினர். பரிமேலழகர் 'ஒரோவழி நன்றாயிருப்பது' என்று பொருளுரைக்கிறார். 'கல்லாதவன் அறிவு நன்றாயிருந்தாலும்' என்பது இத்தொடர்க்கு இவர்கள் அனைவரும் கூறும் பொருளாகும். பரிதி வயதால் பெரியவனாகிலும் என்னும் முற்றிலும் மாறுபட்ட பொருள் ஒன்று சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதவன் பிறர் சொன்னதைப் பாடம் செய்து கொண்டு பேசுகின்ற பேச்சிலுள்ள அறிவு மிகவும் நனறாக இருந்தாலும்', 'கல்லாதவன் தன்னை அறியாமல் சிலசமயம் வெளிப்படுத்தும் ஒளிவீச்சுப் போன்ற அறிவுடைமை', 'கல்லாதவனுடைய அறிவு மிகக் கூர்மையாகச் சில பொழுது காணப்பட்டாலும்', 'கல்லாதவன் தன்னை அறியாமல் சிலசமயம் வெளிப்படுத்தும் ஒளிவீச்சுப் போன்ற அறிவுடைமை' என்றபடி விளக்கம் தருவர்.

கல்லாதவனது இயற்கை அறிவு மிகவும் நன்றாக இருப்பினும் என்பது இப்பகுதியின் பொருள்.

கொள்ளார் அறிவுடை யார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்.
பரிப்பெருமாள்: அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒண்மை-சாமர்த்தியம்; அறிவெனினும் அமையும். இஃது ஒள்ளியராயினும் மதிக்கப்படார் என்றது.
பரிதி: அறிவுடையார் கொள்ளார்கள் என்றவாறு.
காலிங்கர்: அதனை ஓர் அறிவாகக் கைக்கொள்ளார்; யாரெனின் கல்வியாற் சிறந்த அறிவுடையோர் என்றவாறு.
காலிங்கர் பதவுரை: ஒட்பம் என்றது ஒள்ளிமை.
பரிமேலழகர்: அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
பரிமேலழகர் குறிப்புரை: அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம். [ஏரல் - நத்தை; ஏரல் எழுத்து- நத்தைக் கீற்றில் தோன்றும் எழுத்து]

'அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையவர்கள் அவனைக் கற்றவனாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்', 'அதனை அறிவுடையார் நுண்ணறிவு என்று ஏற்றுக்கொள்ளார்', 'அவ்வறிவுக் கூர்மையை அறிஞர்கள் சிறப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்', 'கற்றறிந்தவர்கள் அவன் அறிவை மதிக்கமாட்டார்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர்.

கற்றவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து.



நிறையுரை:
கல்லாதவனிடம் தோன்றும் ஒட்பம் மிகவும் நன்றாக இருப்பினும் கற்றவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது பாடல் கருத்து.
ஒட்பத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தடை?

செயற்கை அறிவுடன் சேராத இயற்கை அறிவு விளக்கமாக இராது.

கல்லாதவனின் இயற்கை அறிவு சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றினாலும் அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கல்வியறிவில்லாதவன் சொல்வது நுணுகிய கருத்தாயினும் அவனை அறிவுடையவனாக கற்றவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முறையான கல்வியறிவு இன்றியமையாதது என்பதைச் சொல்லவந்த குறள் இது. அதுவில்லா இடத்து அரைகுறை அறிவிலிருந்து வெளிப்பட்டதாகவே கருதப்பட்டு செயலுக்காகாது எனக் கல்லாதவனின் எண்ணங்கள் கொள்ளப்படமாட்டாது. இங்கு முறையான கல்வி அறிவு பெறாதவனைப் பற்றியும் அவனுக்கு அவ்வப்போது தோன்றும் ஒளிமிகுந்த கருத்துக்கள் குறித்தும் பேசப்படுகின்றன. ஒருவனது இயற்கை அறிவு உண்மை அறிவு என்றும் அறியப்படும், இது இயல்பாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்தறிவுடைமையைக் குறிப்பது. கல்வி கேள்வி மூலம் இயற்கை அறிவு பண்படுத்தப்படும். கல்வியறிவின்றி ஓரோவழி தோன்றும் அறிவை - நிலை பேறற்ற அறிவை - அதன்மூலம் பெறப்பட்ட கருத்துகளை அறிவுடையார் ஏற்றுக் கொள்வதில்லை. கல்லா ஒட்பத்தைவிட கல்வி மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சிறந்தது என்பதைச் சொல்வது இப்பாட்டு.
அடிப்படைக் கோட்பாடுகளுடன் சரியாக ஒத்துக்கொள்கிற வகையில் இணைத்தும் விரித்தும் விளக்கத் தெரிய வேண்டிய கல்வி, ஒட்ப அறிவுடையோரரிடம் இல்லாததால், அவர்களது எண்ணங்களை அறிவார்ந்தவர்கள் ஏற்க இயலாது போகிறது. கல்லாவிட்டாலும் வாழ்வியல் அனுபவங்களோடு நுண்ணறிவு கொண்ட பலர் உலகில் உண்டுதான். இருப்பினும் இயற்கையறிவு, வருந்திப்பெறும் செயற்கயறிவுடன் கூடியபொழுதுதான் சிறந்து விளங்கும். எனவேதான் கல்விபெற மக்களைத் தூண்டுகிறார் வள்ளுவர்.

தன்னிடத்தில் உள்ள குறையைத் தானே அறிந்து அதனை மேம்படுத்திக் கொள்ளத்தக்க நிலையில் அமைக்கப் பெறுவது 'தான் உணர் நடை' எனச் சொல்லி கல்லாதவன் தான் கற்கவில்லை என்பதை உணர்ந்து, தன்னை மேம்படுத்திக் கொள்ளக் கற்க முயலும் முயற்சியை வெளிப்படுத்தும் பாங்கில் இக்குறள் அமைந்தது என்பார் வ சுப மாணிக்கம்.

ஒட்பத்தை ஏற்றுக் கொள்வதில் என்ன தடை?

'ஒட்பம்' என்ற சொல்லுக்கு ஒண்மை, அறிவு, சாமர்த்தியம், வயதால் பெரியவன், ஒள்ளிமை, அறிவுடைமை, உறவு, அழகு, ஒளிவீச்சுப் போன்ற அறிவுடைமை, உயரிய கருத்து, இயற்கையறிவு, அறிவுக் கூர்மை, அறிவுள்ள பதங்கள், உண்மை அறிவு (இயற்கை அறிவு), இயற்கை அறிவு என்றவாறு உரைகாரர்கள் பொருள் கூறினர்.

ஒட்பம் என்பதற்கு நேர்பொருள் ஒளி பொருந்திய அறிவு என்பது. அது உயிரின்கண் அமைந்த இயற்கையறிவைக் குறிப்பதாகக் கொள்வர். கல்லாத ஒருவன் தன் இயற்கை அறிவு கொண்டு மிகுதியும் நல்லதான கருத்து ஒன்றைச் சொன்னால் அறிவுடையார் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்கிறது இக்குறள். 'கழிய நன்றா'ன ஒட்பத்தினை ஏற்பதில் என்ன தடை?
இயற்கை அறிவானது கல்வி, கேள்விகளாலே ஒளிதீட்டப்பெற்றுப் பயன்தரு செயற்கையறிவு உண்டாகிறது. செயற்கையறிவு பெறாதவர் அதாவது கல்லாதவர் அவ்வப்போது வெளிக்காட்டும் நுண்ணறிவு மிகவும் சிறப்பாகவே இருக்கலாம். ஆயினும் நூலறிவு இன்மையால் அது தற்செயலானது; பகுத்தாராயப்பட்டதாக இராது. ஒட்ப அறிஞரும் தன் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்ல இயலாதவராயிருப்பார். இக்காரணங்களால் இவரது வெளிப்பாடுகளைக் 'குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்தாற் போன்றது' என அறிஞர்கள் ஏற்பதில்லை.
இருபதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த கோவையைச் சேர்ந்த ஜி டி நாயுடு பள்ளிப் படிப்பு அதிகம் இல்லாதவர். இருந்தும் அறிவியல் துறையில் சில கண்டுபிடிப்புக்களைச் செய்து காட்டினார். அவரது வித்தகம் பாராட்டப் பெற்றாலும், அவர் முறைப்படி கல்வி கல்லாதவராதலால் (வேறுபல காரணங்களும் சொல்லப்பட்டன) அவர் கருத்தை அறிஞருலகம் ஆதரிக்கவில்லை. இவரது வரலாற்று நிகழ்வுகள் இக்குறளுக்கு நல்ல காட்டாய் அமைகிறது.

அறிவுடையார் ஒட்பத்தை ஏன் ஏற்பதில்லை என்பதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களிலிருந்து சில:

  • ஆகுமோ நந்து உழுத எல்லாம் கணக்கு என்ற பழமொழிப் (245 பொருள்: நத்தையாற் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ?) பாடலைத் தழுவி 'ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்' என்றார் பரிமேலழகர்.
  • 'சாணை பிடியா மணிபோல்வது ஒட்பம்; நூலோடு தீட்டிய ஒட்பத்திற்கே அறிவு என்று பெயர். ஒருவன் ஒட்பம் கல்வியோடு சேர்ந்த வழி அறிவுடையார் ஏற்பார் என்பது கருத்தாயிற்று. ஒட்பத் தீட்டு வேண்டுவர் வள்ளுவர்' - வ சுப மாணிக்கம்.
  • 'இயற்கையாக ஓரோவழி வெளிப்படும் கருத்து நுட்பம் கல்வியின் வழி வாராமையால் உறுதியும் பயன்பாடும் இருக்காது என்பதால் கல்லாத ஒருவனின் உயரிய கருத்து மிகச் சிறந்ததாயினும் அறிவுடையார் அக்கருத்தினை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்' - குன்றக்குடி அடிகளார்.
  • 'கல்வியின்றி இயல்பாயுள்ள அறிவு அறிவு பண்படுத்தாத நிலம்போலப் பயன் தராது. படிக்காத அறிவும் பயிற்சி செய்யாத இசையும் பழகாத நாட்டியமும், அங்ஙனம் பயின்று பழகியவர்முன் எடுபடா' - தமிழண்ணல்.

ஆனால் கல்லாதவன் கூறும் கருத்தையும் ஏற்றுக்கொண்டு அதிலும் மெய்ப்பொருள் காணலாம் அல்லவா? கல்வியறிவு இல்லாத போதும் வாழ்வியல் அனுபவங்களோடு நுண்ணறிவு மிக்க பலரைநாம் காண்கிறோமே? படிக்காத மேதை என்ற சொற்றொடர் பொருளற்றதா? போன்ற வினாக்கள் எழுகின்றன.

கல்லாதவனது அறிவு மிகவும் நன்றாக இருப்பினும் கற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது இப்பாடலின் கருத்து.

அதிகார இயைபு

கல்லாமை ஒளிவீச இயலாமை.

பொழிப்பு

கல்லாதவனுடைய அறிவு மிகக் கூர்மையாக ஒவ்வோரிடத்துக் காணப்பட்டாலும் கற்றவர்கள் அதைக் கொள்ள மாட்டார்கள்.