இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0405



கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:405)

பொழிப்பு: கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

மணக்குடவர் உரை: கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும்.
இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கல்லாத ஒருவன் தன்னை மதிக்கும் மதிப்பு கற்றார் முன் சென்று உரையாடினவுடன் கெட்டொழியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும்.


கல்லா ஒருவன் தகைமை :
பதவுரை: கல்லா-கற்காத; ஒருவன்-ஒருவன்; தகைமை-மதிப்பு; .

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாத ஒருவனது பெருமை;
பரிப்பெருமாள்: கல்லாத ஒருவனது பெருமை;
பரிதி: கல்லாத ஒருவன் பெருமையெல்லாம்;
காலிங்கர்: உலகத்துக் கற்றிலா ஒருவன் தனது செல்வத் தகைமையும் பிறவும் கொண்டு என்ன பயன்?
பரிமேலழகர்: நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு;

இத்தொடர்க்குப் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் 'கல்லாதவனது பெருமை' என்று உரை கூறினர். காலிங்கர் 'கல்லாதவனது செல்வப் பெருமையும் பிறவும்' என்று கொள்ள பரிமேலழகர் 'கல்லாதவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு' என்று உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதவன் மதிப்பு', 'கற்காத ஒருவன் அறிவுடையவனாகத் தன்னை மதித்துக் கொள்ளுதல்', 'கல்வியறிவு இல்லாதவனிடத்தில் அறிவுத் தகுதி காணப்படுமானால்', 'கல்லாத ஒருவன் 'நான் அறிவுடையேன்' எனத் தன்னை மதிக்கும் பெருமை' என்றபடி உரை தந்தனர்.

கல்லாத ஒருவனது பெருமை என்பது இத்தொடரின் பொருள்.

தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்:
பதவுரை: தலைப்பெய்து-கண்டு; சொல்லாட-உரையாட; சோர்வுபடும்-திண்ணமாகக் கெடும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றவன் கிட்டி உரையாட மறையும்.
மணக்குடவர் கருத்துரை: இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிப்பெருமாள்: கற்றவன் கிட்டி உரையாட மறையும்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கல்லாதார்க்குப் பெருமையில்லை என்றது.
பரிதி: களறியேறி, வார்த்தை சொல்லக் கெடும்.
காலிங்கர்: மர்றுக் கற்றுவல்ல சான்றோருழைச் சென்று தலைப்பட்டு உரையாடவே அவை அனைத்தும் சோர்வுபடும் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
பரிமேலழகர் விரிவுரை: 'கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.

கற்றவருடன் உரையாடக் கெடும் என்ற பொருளில் மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் உரை பகர்வர். பரிதி அரங்கு ஏறி வார்த்தை சொல்லக் கெடும் என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கரைந்து போகும்', 'கற்றவன் ஈண்டு உரையாடக் கெட்டுவிடும்', 'கற்றவர்களோடு உரையாடும்பொழுது சோர்வுபட்டு அவன் கல்லாமை வெளிப்படும்.', 'கல்வி அறிவு உடையோர் ஒருதரம் பேசுவாரானல் அத்தகுதி இல்லாமல் போய்விடும்' என்றவகையில் பொருள் கூறினர்.

கற்றவரோடு உரையாடிய அளவில் கெட்டுவிடும் என்பது இத்தொடரின் கருத்து.

நிறையுரை:
மிக உயர்ந்தவனாய்த் தன்னைக் கருதிக்கொள்கிற கல்லாதவனது மனப்பான்மை, கற்றோரோடு உரையாடியபின் மறைந்து போகும் என்னும் பாடல்.

கல்வியில்லாதவனது தகைமை கற்றவரோடு உரையாடும்பொழுது கெட்டுவிடும் என்பது இப்பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட தகைமை தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்வதால் உண்டாவதா அல்லது செல்வம். பிறவற்றால் ஏற்படுவதா?

தகைமை என்ற சொல்லுக்குத் தகுதி, பெருமை, அழகு, மதிப்பு எனப் பல பொருள் உண்டு. இங்கு பெருமை அல்லது மதிப்பு என்று பொருள் கொள்வது பொருந்தும்.
தலைப்பெய்தல் என்பதற்கு அணுகுதல், ஒன்று கூடுதல், அல்லது கிட்டுதல் (நெருங்கிச் செல்தல்) என்று பொருள்.
சொல்லாட என்பது உரையாட என்ற பொருள் தரும். இங்கு பேசுதல் அல்லது அளவளாவுதல் என்பதைக் குறிக்கும்.
படும் குறிப்பது துணிவுப்பொருள். 'சோர்வுபடும்' என்பது ஒரு சொல்; உறுதியாகக் கெடும் என்ற பொருள் தருவது.

கல்லாதவனது தலைக்கனம் கற்றோருடன் உரையாடிய பின்னர் ஒன்றுமில்லாமல் மறைந்து போகும் என்பது திரண்ட கருத்து.
கல்லாதான் தன்னைக் கல்வியாளன் என்று காட்டிக் கொள்ளும் போலித் தகுதி கற்றவருடன் உரையாடிய அளவில் கெடும் என்பது இக்குறளின் பொருளாக பெரும்பான்மை உரையாளர்கள் கருதுவர்.

கல்லா ஒருவன் தகைமை அவன் அறிவாளி என்று எண்ணிக்கொள்வதால் உள்ளதா அல்லது செல்வம், பிறவற்றால் அமைந்ததா?
கல்லாதவன் செல்வந்தனாக அல்லது அழகுநலம் பொருந்தியவனாக அல்லது மிகுந்த செல்வாக்குக் கொண்டவனாக இருக்கலாம். தாம் கல்லாரே ஆயினும் மேற்சொன்ன தன்மைகளால் தம்மைப் பெரிதும் மதித்து தருக்கி நடப்பர். 'கல்வி எனக்குத் தேவை இல்லை. நான் மற்றவகையில் உயர்ந்து உள்ளேனே' என்ற பெருமை கொண்டவனாக இருப்பர். அவரும்கூட கற்றோருடன் சொல்லாடியபின் தன் 'உயர்வு மனப்பான்மை' நீங்கி தன் குறைபாடு உணர்ந்து தனக்கு உரிய நிலைக்கு இறங்கிவந்துவிடுவர். இது காலிங்கர் முதலியோர் கூறும் கருத்து.
வேறு சிலர், கல்லாத ஒருவன் தானும் எல்லாம் கற்று அறிந்தவன் போல வேடம் தரித்துக் கொள்வது உண்டு; அதன் மூலம் மதிப்பும், பெருமையும் தனக்குக் கிடைக்கும் என்று நினைப்பதுண்டு. அப்படிப்பட்டவன் கற்றவருடன் சொல்லாடியபின் தன் உண்மை அறிவு விளங்கி தான் கருதிவந்த 'பெருமை' இழப்பான்; என்று பொருள் உரைப்பர். கற்றார் கல்வியறிவைக் கொண்டே ஒருவனை எடையிட்டு மதிப்பர் ஆதலால் காலிங்கர் உரை பொருத்தம் அன்று; இப்பாடல் குறிப்பிடுவது போலி அறிஞனையே என்பர் இவர்கள்.
கற்றோர் கல்லாதவனை மதிப்பீடு செய்வது பற்றியதல்ல இப்பாடல். கல்லாதவன் அவனாகவே தன்மீது கொண்ட மதிப்பை இழப்பதைச் சொல்வது. கற்றவன் சிறப்பு மற்ற மதிப்புகளிலெல்லாம் மேலானது என்பதைக் கூறுவது. எனவே கல்லாதானது போலியான கற்றான் வேடத்தால் வந்த பெருமையாக இருந்தாலும் அல்லது செல்வம் போன்ற மற்றவற்றால் ஏற்பட்ட தன்மதிப்பாக இருந்தாலும் அவையாவும் கற்றவருடன் சொல்லாடிய பின் சோர்ந்து, கெட்டு, அழிந்து போகும். கல்வியறிவே மெய்யான மதிப்பும், பெருமையும் தேடித்தரும். கல்லாதவனின் பொய்யான தகைமை கற்றறிந்தவர் முன் நில்லாது தோற்றுப் போகும் என்பது கருத்து.

கல்லாத ஒருவனது பெருமை கற்றவரோடு உரையாடும்பொழுது கெட்டுவிடும் என்பது இப்பாடலின் பொருள்.



அதிகார இயைபு

கல்வியில்லாதவன் கற்றவர்முன் எந்தவித மதிப்புமின்றித் தோற்றமளிப்பான் என்னும் கல்லாமை அதிகாரத்துக் குறள்.

பொழிப்பு

கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கல்லாதவன் தன்மதிப்பு இழந்து நிற்பான்.