இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:403)

பொழிப்பு: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.

மணக்குடவர் உரை: கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.
சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.

பரிமேலழகர் உரை: கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
(உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தாமே தம் கல்வியில்லாத் தன்மையை அறிந்து கற்றுவல்ல பெரியோர் முன்னிலையில் எதைப்பற்றியும் சொல்லாமலிருக்க முடியுமானால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின் கல்லா தவரும் நனிநல்லர்.


கல்லா தவரும் நனிநல்லர்:
பதவுரை: கல்லாதவரும்-ஓதாதவரும்; நனி-மிக; நல்லர்-நன்மையுடையார்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர்;
பரிப்பெருமாள்: கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர்;
பரிதி: கல்லாதாரும் மிகவும் நல்லராகுவர்;
காலிங்கர்: கசடற நூல்களைக் கற்றிலாதோரும் அறிவினால் பெரிதும் நல்லர் என்று கொள்ளலாம்;
பரிமேலழகர்: கல்லாதவரும் மிக நல்லராவர்,
பரிமேலழகர் கருத்துரை: உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார்.

'கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர்; என்றவகையில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்களும் 'கல்லாதவர்களும் மிக நல்லவர்கள் ஆவர்' என்று இத்தொடர்க்கு உரை பகர்ந்தனர்.

கல்லாதவர்களும் மிகவும் நல்லவராவர் என்பது இத்தொடரின் பொருள்.

கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின்:
பதவுரை: கற்றார்முன்-ஓதியவர்முன்; சொல்லாது-சொல்லாமல்; இருக்கப்-கூடுமாயின்; பெறின்-நேர்ந்தால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
பரிப்பெருமாள்: கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சொல்லாதொழிய அறிவாரில்லையாம் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
பரிதி: கல்விமான்கள் முன்னே வாய்திறவாமல் இருப்பாராகில் என்றவாறு.
காலிங்கர்: எப்பொழுது எனின், மற்று அக்கசடறக் கற்ற மாசற்றார் முன் தமது நாவுரை நடையைக் காட்டாதிருக்கப் பெறின் என்றவாறு.
பரிமேலழகர்: தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.

'கற்றார்முன் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் அறிவின் தகுதியன்மையை உணர்ந்து, கற்றோர் அவையில் சொல்லாது அடக்கமாயிருப்பாராயின்', 'கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பரேல்', 'படியாதவர்கள் தங்கள் நிலையை அறிந்து படித்தவர் அவையிலே ஒன்றுஞ் சொல்லாதிருக்கக் கூடுமாயின் ', 'கற்றறிந்த சான்றோர் அவையில் கல்வியறிவில்லாதவர் பேசாமல் இருந்துவிடுவானானால்' என்று இத்தொடர்க்குப் பொருள் உரைத்தனர்.

கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பாராயின் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
கல்லாதவன் தன் கல்வியறிவின் எல்லையைத் தாமே அறிந்து கற்றவரிடையே பேசாமல் இருப்பது நல்லது என்னும் குறள்.

கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பாராயின் கல்லாதவர்களும் மிகவும் நல்லர் என்பது இப்பாடலின் கருத்து.
பேசாமல் இருந்தால் எப்படி நல்லர் ஆகமுடியும்?

இப்பாடல் கற்றவருடன் உரையாட விரும்பும் கல்லாதவன் பற்றியது. கற்றவர்முன் உள்ளபோது கல்லாதவன் பேசாமல் இருப்பதே நல்லது என்று அறிவுரை கூறுகிறது இப்பாடல்.

கற்றோர்முன் பேசாமல் இருந்தால் எப்படி நல்லர் ஆகமுடியும்?
காலிங்கர் 'கற்றிலாதோரும் அறிவினால் பெரிதும் நல்லர் என்று கொள்ளலாம்' என்கிறார்.
நல்லர் என்னும் சொல்லுக்கு நல்லவர் என்றும் நன்மையுடையவர் என்றும் பொருள் உண்டு. நல்ல குணம் உடையவர் அதாவது நல்லவர் என்று கொண்டால் கல்லாதவர் கற்றார்முன் சொல்லாது இருந்தால்தான் நல்லவர் ஆகிறார் என்று ஆகிவிடும். எனவே இங்கு நன்மையுடையவர் என்று பொருளில் ஆளப்பட்டது என்று கொள்ளவேண்டும் என்பர்.
கல்லாதவன் நன்மையுடையவர் ஆவார் என்றால் அவர்க்கு எந்தவிதமான நன்மை உண்டாகும்?
கல்வியில்லாதவன் கற்றவரிடை உள்ளபோது தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து பேசாமல் இருந்தால் அவனுடைய அறியாமை வெளிப்படாது; இழிவு ஏற்படும் நிலையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வாய் திறவாமல் இருப்பது ஒரு வழிமுறையாகிறது; பேசாமல் இருந்து கற்றவர் சொல் கேட்பானானால், அவன் பல நூலறிவுகளைக் கேட்க வாய்ப்பு ஏற்படும். அதனால் அவனும் அறிவு பெற ஏது உண்டாகிரது. இவ்விதம் அவன் நன்மை பெறுகிறான் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

படிப்பு இல்லாத சிலருக்கு படித்தவர்கள் நடுவில் புகுந்து தாமும் கற்றவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசை எழலாம். அல்லது படித்தவர்களோடு பழகுவதற்கு விருப்பப்படலாம். அப்படிப்பட்டோர்க்கு இக்குறள் கூறுவது: 'கற்றோருடன் இருக்கும்போது வாயைத் திறந்து பேசாமல் ஊமையாய் இரு' என்பதே. தமது அறிவின் குறைபாட்டை உணர்ந்து கற்றவர்கள் முன்னிலையில் எதுவும் சொல்லாமல் இருந்தால் கல்லாதவனும் மிகவும் நல்லவன்தான் என்கிறது இக்குறள். படித்தவர்களுடன் உறவாட நினைப்பவர்கள் முதலில் தானும் கற்றுத் தகுதியுடையவனாக்கிக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

கற்றுவல்ல பெரியோர் முன்னிலையில் எதைப்பற்றியும் பேசாதிருந்தால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவராவர் என்பது இப்பாடலின் கருத்து.அதிகார இயைபு

கற்றோருடன் சொல்லாட வேண்டுமானல் கல்வி பெறுக என்று சொல்லும் கல்லாமை அதிகாரத்துப் பாடல்.

பொழிப்பு

கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பரேல், கல்லாதவரும் மிகவும் நல்லவர் ஆவர்.