இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:408)

பொழிப்பு: கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.

மணக்குடவர் உரை: நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம்.
இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.

பரிமேலழகர் உரை: நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: கல்விபெற்ற நல்லவரிடம் உள்ள வறுமையைக் காட்டிலும் கல்லாத தீயவரிடம் உள்ள செல்வம் துன்பம் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே:
பதவுரை: நல்லார்கண்-கற்றார் மாட்டு; பட்ட-நின்ற; வறுமையின்-ஏழ்மையைவிட; இன்னாதே-தீதே.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்;
பரிப்பெருமாள்: நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்;
பரிதி: நல்லோரிடத்தில் வறுமை மிடைப்படும்;
காலிங்கர்: கல்வியிற் சிறந்த நல்லறிவாளரிடத்து உளதான வறுமையிலும் சால இன்னாதே;
பரிமேலழகர்: கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது;
பரிமேலழகர் குறிப்புரை: இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'நல்லார்கண் வறுமைபோல' என்று இத்தொடரை உவமையாகக் கொண்டனர். பரிதி நல்லோரிடத்தில் வறுமை மிடைப்படும் அதாவது வருந்தும் என்றார். காலிங்கர்:'கற்ற நல்லாரிடத்து உள்ள வறுமையிலும் துயருறுத்துவது' என்று பொருள் கொள்வார். பரிமேலழகர் 'கற்றாரிடத்தில் உள்ள வறுமையினும் துன்பம் தருவது' என்று உரை கண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதே', 'படித்தவர் எய்திய வறுமையைக் காட்டிலும் கேடாகும்', 'கற்றார்க்கு ஏற்பட்ட வறுமையைப் பார்க்கிலும் மிக்க துன்பத்தைக் கொடுக்கும்', 'கற்றறிந்த நல்லவரிடம் உண்டான வறுமையை விடக் கொடியதாகும்' என்றபடி உரை நல்கினர்.

'கற்ற நல்லவரிடம் உள்ள வறுமையை விடக் கேடானது' என்பது இத்தொடரின் பொருள்.

கல்லார்கண் பட்ட திரு:
பதவுரை: கல்லார்கண்-கற்காதவர் மாட்டு; பட்ட-நின்ற; திரு-செல்வம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம்.
மணக்குடவர் கருத்துரை: இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.
பரிப்பெருமாள்: கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வமும்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்புறுவிக்கும் என்றது.
பரிதி: அது போல மிடைப்படும் கல்லாதாரிடத்தில் செல்வம் என்றவாறு.
காலிங்கர்: கல்வியின் விளங்கு நல்லறிவில்லாதார் கைப்பட்ட செல்வமானது;
காலிங்கர் விரிவுரை: அது கொண்டு தாம் இனிது நுகர்தலும், தம் சுற்றம் ஓம்புதலும், நட்டோர்க்குப் பகுத்தலும், வறியவர்க்கு உதவலும், மற்றும் பிற நல்லறம் செய்தலும் என்னும் இவை முதலிய இனிய பயன் கோடலின்றிச் சிறிதே உண்டு வறிது உயிர்வாழும் தன்மையர் ஆகலான் குற்றங்கள் பலவும் உடையர் என்றவாறு.
பரிமேலழகர்: கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.
பரிமேலழகர் விரிவுரை: தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.

'கல்லாதாரிடத்தில் உள்ள செல்வம்' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்', 'படியாதவர் எய்திய செல்வம்', 'கல்லாதவர்க்குண்டாகிய செல்வம்', 'கல்லாதவரிடம் அகப்பட்ட செல்வம்' என்றவகையில் பொருள் கூறினர்.

கல்லாதவரிடம் உள்ள செல்வம் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
கல்லாதவன் செல்வத்தைத் திறனறிந்து பயன்படுத்தத் தெரியாமல் பாழ்பண்ணுவான் என்னும் பாடல்.

நல்லார்கண் பட்ட வறுமையை விடக் கேடானது கல்லார்கண் பட்ட செல்வம் என்பது இக்குறட்கருத்து.
நல்லார்/கல்லார் முரண்பட்ட சொற்களா?

இப்பாடல் நல்லார்கண் பட்ட வறுமையையும் கல்லாதார் பெற்ற செல்வத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறது.
நல்லார், கல்லார் என்பன முரண் கொண்ட சொற்கள் அல்ல. இவை முரண் சொற்கள் என்று கொண்டால் கல்விபெற்றோர் அனைவரையும் நல்லார் என்றும் கல்லாதவர் எல்லோரும் தீயவர் என எண்ண வைக்கும். ஆகையால் அதிகார இயைபு நோக்கி காலிங்கர், பரிமேலழகர் மற்றும் இன்றைய உரையாசிரியர்கள் கற்றவர்/கல்லாதவர் என்ற முரண் கொண்டு உரை செய்தனர். மேலும் இதைத் தெளிவுபடுத்த கற்ற நல்லவர்/கல்லாத தீயவர் என்று உரையாளர்கள் விளக்கம் தந்தனர்.

மணக்குடவர் 'கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம் நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்' என்றார்; 'நல்லோரிடத்தில் வறுமை வருந்தும்; அது போல கல்லாதாரிடத்தில் செல்வம் வருந்தும்' என்று கருத்துத் தெரிவித்தார் பரிதி. பின்வந்த பரிமேலழகர் இக்கருத்துக்களை உள்வாங்கி 'கல்லாதான் சேர்த்த செல்வம் அவனைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்கும் என்பதால் நல்லார் வறுமையினும் கல்லாதான் செல்வம் இன்னாது' என்ற சிறப்பான உரையை இக்குறளுக்கு வழங்கினார்.

'இன்மையின் இன்மையே இன்னாதது' என்று சொல்வது வள்ளுவம். வறுமை நல்லாரிடமோ மற்றவரிடமோ யாரிடம் தங்கினாலும் துன்பம் தருவதுதான். நல்லார் வறுமையைவிட கல்லாதான் பெற்ற செல்வம் துன்பம் தருவது என்று சொன்னதற்குக் காரணம் கல்விஅறிவின் பயனையும் கல்லாமையின் குற்றத்தையும் வலியுறுத்தத்தான். கற்றவன் வறுமையுற்றால் அவன் பெற்ற கல்வியறிவு அவனுக்குத் துணைநின்று உதவும்; வறுமையிலும் கற்றவர் தீயவழியில் செல்லாமல் காத்து அவனை வறுமைத் துன்பத்திலிருந்து மீண்டுவரவும் வழி வகுக்கும். ஆனால் செல்வம் பெற்ற கல்லாதவன் படிப்பறிவில்லாததனால் தான் அடைந்த செல்வத்தை நல்லவிதமாக மேலாண்மை செய்யத் தவறிவிடுகிறான். இதனால் தானும் கெட்டு பிறரையும் துன்பத்துக்குள் ஆளாக்குகிறான்.
'அவரவர் கற்ற கல்வியறிவால் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வகையைக் கொண்டே இன்ப துன்பத்தை அளந்தறிய முடியும்' என்பார் மு வ.
பரிதியின் உரையில் கண்டபடி நல்லோரிடம் வந்த வறுமையே துன்பமடையும்; அறிவற்றவனிடம் உள்ள செல்வம் பாழாகிறது.
காலிங்கர் 'கல்லார் அவர் அடைந்த செல்வத்தை இனிது நுகர்ந்து, செல்வத்தால் தம் சுற்றம் ஓம்பி, நட்டோர்க்குப் பகுத்துக் கொடுத்தும், வறியவர்க்கு உதவியும், மற்றும் பிற நல்லறம் செய்தும் பயனுள்ளவகையில் அச்செல்வத்தை செலவிடத் தெரியாமல் குற்றமுள்ள வாழ்வு நடத்துபவர்' என்று கூறுகிறார்.

பேரறிவாளன் செல்வத்தின் திறனறிந்தவன் ஆதலால் அதை ஆக்கவழியில் பயன்படுத்துவான்; அச்செல்வம் ஊருணியில் நீர் நிறைந்தாற்போல் பலர்க்கும் நன்மை விளைவிக்கும். அவனே வறுமைப்பிணியால் வாடினால், அவனிடமுள்ள கல்விச்செல்வத்தின் துணைகொண்டு, வறுமையிலும் செம்மையராய், சுடச்சுடரும் பொன்போல் வறுமைப் பிணி வருத்த வருத்த, நற்குண நற்செயல்களின் சிறுதும் நீங்காராய் ஒளியுடன் விளங்குவான். மாறாக், கல்லாத ஒருவனிடம் செல்வம் குவிந்துவிட்டால், அவனிடம் கல்விப்பயன் இல்லாததால், கிடைத்த செல்வத்தைப் பயனற்றதாக ஆக்கி. அதை அழிவு சக்தியாக மாற்றிவிடுவான்.
நல்லார் வறுமையுற்றாலும் அந்நிலையிலும் செம்மையுடன் வாழ்த்தெரிந்தவர்; வறுமைக்காலத்து அவர் மட்டுமே வருந்துவர்; ஆனால் கல்லார் செல்வம் அவர்க்கும் பிறர்க்கும் தீங்கு செய்யும். எனவே நல்லார் வறுமையினும் கல்லாதார் செல்வம் தீயது என்று சொல்லப்பட்டது.

கல்லாதவரிடம் உள்ள செல்வம் கற்ற நல்லவரிடம் உள்ள வறுமையை விடக் கேடானது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தான் பெற்ற கல்வியின் துணையால் வறுமையிலும் செம்மையான வாழ்வு காண்பான் கற்றவன் என்னும் கல்லாமை அதிகாரப் பாடல்.

பொழிப்பு

நல்லவர் எய்திய வறுமையைக் காட்டிலும் கல்லாதவர் எய்திய செல்வம் கேடாகும்.