விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
(அதிகாரம்:கல்லாமை
குறள் எண்:410)
பொழிப்பு (மு வரதராசன்): அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
|
மணக்குடவர் உரை:
விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்.
இது கல்லாதார் விலங்கென்றது.
பரிமேலழகர் உரை:
விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு
ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
(இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின்,
கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை:
சிறந்த நூல்களைக் கற்றவரையும் அவற்றைக் கல்லாதவரையும் ஒப்பிடும் பொழுது, விலங்கை(மிருகத்தை)யும் மக்களையும் ஒப்பிடும் நிலைமைக்கு ஒத்ததாகும். (கல்லாதவர் விலங்கிற்கு ஒப்பாவார்;அஃதாவது கற்றவரே மக்கள்; கல்லாதார் விலங்கு என்பதாகும்)
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்.
பதவுரை: விலங்கொடு-மிருகங்களோடு(நோக்க) மக்கள்-மாந்தர்; அனையர்-ஒப்பர், வேறுபாடுடையவர்; இலங்குநூல்-விளங்கிய நூல், அறிவு விளக்கத்துக்குக் காரணமான நூல்கள்; கற்றாரோடு-ஓதியவரை நோக்க; ஏனையவர்-மற்றவர்கள்.
|
விலங்கொடு மக்கள் அனையர்:
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்;
பரிப்பெருமாள்: விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்;
பரிதி: நாற்கால் சீவனாகிய மிருகத்திற்கும் மனிதற்கும் எத்தனை தூரமுண்டு;
காலிங்கர்: இவ்வுலகத்துப் பிறந்த விலங்குச் சாதிக்கும் மக்கட்கும் வேற்றுமைபோல;
பரிமேலழகர்: விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்;
பழைய ஆசிரியர்கள் 'விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை வேறுபாடுடையர்' என்றபடி மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர் ஆகியோர் உரை தந்தனர். பரிமேலழகர் 'விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்' எனச் சற்று மாறுபட்டு உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'விலங்கும் மக்களும் வேற்றுமை எவ்வளவு', 'விலங்கினத்துக்கும் மக்களினத்துக்கும் உள்ள வேறுபாடு உடையவர்', 'மனிதர்களோடு விலங்குகளை ஒப்பிட்டுப் பார்ப்பது போலத்தான்', 'மக்களை நோக்க விலங்கு எவ்வளவு இழிந்ததோ' என்றபடி விளக்கம் தருவர்.
'விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு ஒப்பர்' என்பது இத்தொடரின் பொருள்.
இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்:
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்.
மணக்குடவர் கருத்துரை: இது கல்லாதார் விலங்கென்றது.
பரிப்பெருமாள்: விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கல்லாதவர் விலங்கென்றது.
பரிதி: அத்தனை தூரமுண்டு கல்லாதாற்கும் கல்வியுள்ள பேர்க்கும் என்றவாறு.
காலிங்கர்: விளங்கிய நூல்களைக் கற்றுணர்ந்த சான்றோரோடும் மற்றைக் கல்லாதாரோடும் வேற்றுமை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
பரிமேலழகர் விரிவுரை: இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது
கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.
'விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்' என்று பழம் ஆசிரியர்கள் பொருள் கூறுவர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வளவு கற்றாரும் கல்லாரும்','விளக்கம் தரும் நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்', 'அறிவை விளங்க வைக்கின்ற நூல்களைக் கற்றவர்களோடு கல்லாத மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது', 'அவ்வாறே கற்றாரை நோக்கக் கல்லாதாரும் இழிந்தவர் ஆவர்' என்றவகையில் பொருள் கூறினர்.
'விளக்கம் தரும் நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர்' என்பது இத்தொடரின் பொருள்.
|
நிறையுரை:
விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு ஒப்பர், அவ்வளவு கல்லாதவர் நல்ல நூல்களைக் கற்றவரோடு என்பது பாடலின் பொருள்.
கல்லாதார் விலங்கு போல்வர் என்றா சொல்லப்படுகிறது?
|
நல்ல நூல்களைக் கற்றவர் விலங்கிடம் இருந்து வேறுபட்டவராகின்றனர்.
மனிதரின் அறிவு துலங்குதற்குத் துணையாகும் சிறந்த நூல்களைக் கற்றவர்களுடன், அங்ஙனம் கல்லாத ஏனையவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், மக்களும் விலங்குகளும் போன்றவர்கள் ஆவார்கள்.
விளங்கிய நூல்கள் கற்ற கல்வி ஆறாவது அறிவைத்துலக்கும். விலங்குகள் கற்று, அறிவைப் பெருக்குவதில்லை. அந்த அறிவே மனிதனிடமுள்ள முரட்டுக் குணத்தை, விலங்குத்தன்மையை விலக்கும் என்பதால் மனிதன் கல்வி பெறாவிட்டால் அவ்விலங்குகளுக்கு ஒப்பர் என இப்பாடலுக்கு விளக்கம் தருவர்.
விலங்குடன் ஒப்பிட மக்கள் மேன்மையுடையராகவும், விலங்கு தாழ்நிலையுடையதாயும் இருத்தல் போன்று கல்லாதவரை நோக்கக் கற்றவர் மேன்மை உடையராயும், கல்லாதவர் தாழ்ந்தவராகவும் இருக்கின்றார் என்பது இப்பாடல் தரும் செய்தி.
அனையர் என்ற சொல்லுக்கு அத்தன்மையர் அல்லது ஒத்தவர் என்பது பொருள். ஆனால் இக்குறளுக்கான உரையில் தொல்லாசிரியர்கள் அனைவரும் இச்சொல்லுக்கு வேறுபாடுடையர் எனப் பொருள் கொண்டு 'விலங்கிற்கும் மக்களுக்கும் எவ்வளவு வேற்றுமையோ, அவ்வளவு வேற்றுமை கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ளது' என்று பொருள் உரைத்தனர். வள்ளுவர் கல்லாதாவரை நேரடியாக விலங்குக்கு ஒப்பிடமாட்டார் என்பதை உணர்ந்த அவர்கள் இப்பாடலின் சொல்முறையில் உள்ள நுணுக்கத்தை ஆராய்ந்து அதைத் தமது உரையில் பொருத்துகின்றனர். பரிமேலழகரது விளக்க உரையிலுள்ள நன்மை-தீமை என்ற ஒப்புமை பொருத்தமாக இல்லை; அதை நீக்கிப்பார்த்தால் அவர் உரையின் சாரம்: 'விலங்குகளைக் காட்டிலும் மனிதர் எத்தனை அளவு மேன்மையாக உள்ளனரோ, அத்தனையளவு தாழ்ந்தவர் கல்வியறிவுடையவரோடு நோக்கும் பொழுது கல்லாதவர்' என்பதாகும். 'ஒரு பக்கம் உயர்வு இன்னொரு பக்கம் அதேயளவு தாழ்வு' என்ற கருத்தைத் தரும் பாடலின் சொல்முறை எண்ணத்தகுந்தது.
நிரல்நிறைஅணி என்பது வரிசையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குத் தொடர்புடையவற்றைத் தொடர்ந்து அவ்வரிசை முறையிலேயே கூறுவது என்று இலக்கண நூல்கள் கூறும். சொற்களை நேர் நேராக இணைத்துப் பொருள் கொண்டால் நேர் நிரல் அணி; அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (குறள் 45) என்ற பாடலில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் அது நேர் நிரல் நிறை.
இக்குறளின் கிடக்கை முறையில் விலங்குக்குக் கற்றாரையும் மக்களுக்கு ஏனையாரையும் அதாவது கல்லாதவரையும் கொள்வது போலுள்ளது.
பொருளுக்கு இயைய விலங்குக்கு ஏனையாரையும் மக்களுக்குக் கற்றாரையும் நின்ற வரிசையை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பதால்
இக்குறள் எதிர் நிரல் நிறை அணி ஆகும். இதனைப் பரிமேலழகர் மயக்க நிரல் நிறை என்கிறார்.
'ஒடு, ஓடு' இரண்டும் ஒருபொருள் தரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் (எடுத்துக்காட்டுகள்: அவனொடுவந்தான், என்னோடு வணிகஞ்செய்). இவ்விரண்டுக்கும் என்ன வேற்றுமை? இதன் சொல்லுருபு 'உடன்'. 'ஒடு' என்பது மெய்க்கு முன்பும், 'ஓடு' என்பது உயிருக்கு முன்பும் அமையும். 'மக்கள்' என்னும் சொல் மெய்யில் தொடங்குவதால் அதற்கு முன் வரும் விலங்கு என்னும் சொல்லுடன் 'ஒடு' என்று வந்துள்ளது. ஆனால், அதன் பின்பு ஏனையவர் என்னும் சொல் உயிரில் தொடங்குவதால், அதற்கு முன் வரும் கற்றார் என்னும் சொல்லுடன் 'ஓடு' என்று சேர்த்துக் 'கற்றாரோடு' என வருகிறது.
|
கல்லாதார் விலங்கு போல்வர் என்றா சொல்லப்படுகிறது?
இப்பாடல் 'மக்களுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு எப்படியோ, அப்படிப்பட்டது அறிவுவிளக்க நூல்களைக் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் வேறுபாடு' என்ற
கருத்துக் கொண்டது. மக்களாகப் பிறந்தும் கல்வி கல்லாதவர் விலங்கை ஒப்பர்; மக்களாகப் பிறந்தவர் அனைவரும் மக்கள் என்று மதிக்கப் பெறுவதற்குக் கல்விகற்றல் இன்றியமையாதது என்று சொல்கிறது இக்குறள். கல்லாதார் என்பது கல்வியறிவு பெறாதாரைக் குறிக்கும் சொல். கல்வியறிவு இல்லாத போதும் வாழ்வியல் அனுபவங்களோடு பகுத்தறிந்து சிந்திக்கக்கூடிய பலரை நடப்புலகில் நாம் காண்கிறோம். கல்வியறிவு தேவைதான் என்றாலும் அதைப் பெறாதவர்களை விலங்குடன் ஒப்பிடுவது பொருத்தம்தானா?
பசி, தாகம், இனப்பெருக்கம், பயம், போன்ற வேட்கைகள்/உணர்வுகள் உயிர்களுக்கு எல்லாம் பொது. ஆனால் மனிதன் தன் ஆறாம் அறிவால் விலங்கிடமிருந்து
வேறுபடுகிறான். அந்த ஆறாம் அறிவை முறையாக நெறிப்படுத்துவது நூல்கள். எனவே நூல்கள் கற்றவன் விலங்கு நிலை களைந்து மனிதனாக மாறுகிறான்.
விலங்குகள் காற்றை உட்கொண்டு இரையை உண்டு இனத்தைப் பெருக்கி வாழ்ந்து மடிகின்றன. விலங்குகளுக்கு உலகம் புரியாது. கலைகளைச் சுவைக்கத்
தெரியாது. வாழ்க்கைபற்றிய அறிவு கிடையாது. புதிய பொருட்களை அவற்றால் படைக்க முடியாது. விலங்குகள் வெறும் புலன் நுகர்வில் கட்டுப்பட்டவை. விலங்குகளிடமிருந்து மேம்பட்டவர் மனிதர். இதைத் தெளிந்து கொள்வதற்கும் மேலும் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கும் கல்வியறிவு தேவை. கல்லாத மனிதனோ அல்லது சமுதாயமோ முன்னேற்றம் காணமுடியாது. கல்விதான் மனிதனை விலங்கு நிலையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது. இக்கருத்துக்களைத் தெரிவிக்க வந்தது இக்குறள்.
கல்வியைக் கண்ணுக்கு நிகராகக் கருதும் வள்ளுவர், கல்லாமையின் விரும்பத்தகாத விளைவுகளை விளக்க வரும்போது கல்லாதவர்களை விலங்கொடு ஒப்பிடுகிறார். ஒப்பாகாத விலங்கை ஒப்பாக ஏன் உரைத்தார்? அவரது எண்ணம் கல்லாதவர்களை இழிவாகப் பேசுவது அன்று. அப்படியான ஏச்சும் பேச்சும் வாங்கிய பின்னராவது கல்லாதவன் கல்விபெற முயலவேண்டும் என்பதே.
கல்லாதவர்களிலும் நுண்ணறிவு கொண்டோர் உண்டு என்பது உண்மைதான்; ஆனால் அவர்கள் விதிவிலக்கானவர்கள்.
இவற்றைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது கற்றவர்களை விலங்கிலிருந்து வேறுபடுத்தியதும், கல்லாதவர்களை விலங்குடன் ஒப்பிட்டதும் தெளிவாகும்.
|
விலங்கொடு நோக்க மக்கள் எவ்வளவு ஒப்பர், அவ்வளவு கல்லாதவர் நல்ல நூல்களைக் கற்றவரோடு என்பது இக்குறட்கருத்து.
கல்லாமை மனிதனை விலங்கு நிலைக்கு இட்டுச் செல்லும்.
விலங்கை நோக்க மக்களது வேற்றுமை எவ்வளவோ அவ்வளவு விளங்குநூல் கற்றாருடன் கல்லாரது.
|