.
எல்லா உயிர்களையும் போற்றுவது ஒழுக்க இயலில் மிகவும் உயர்ந்த பண்பு. உலகம் ஒன்று; மக்கள் ஓரினம் என்பது எங்கும் எப்பொழுதும் நிலவி வரும் அன்புக் குறிக்கோள்.
மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று எண்ணுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பு குறளுக்கு உண்டு.
பிற உயிர் அதன் உடம்பை விட்டு நீங்குமாறு செய்வது கொலையாம். கொல்லாமை என்ற சொல் பொதுவாக எந்த உயிரையும் கொல்லாத அறம் மேற்கொண்டொழுகுதலைக் குறிக்கும். மற்ற உயிர்கள் உணவுக்காகவும் அவற்றின் உறுப்புக்களின் பயன்பாட்டிற்காகவும் கொல்லப்படுகின்றன. உணவுக்காக உயிர்களைக் கொல்வதுபற்றி புலால்மறுத்தல் அதிகாரம் ஆராய்கிறது. எந்த ஓர் உயிரையும் பொருளுக்காகவோ, பகை காரணமாகவோ, உயிர்ப்பலி வழிபாட்டிற்காகவோ, வேள்வியின் பொருட்டோ கொல்லுதல் கூடாது என்று கொல்லாமை அதிகாரம் கூறுகிறது. கொலைவினையர்களை மாக்கள் என்றும் இழிந்த தொழில் செய்பவர்கள் (புலைவினையர்) என்றும் இவ்வதிகாரம் இழித்துரைக்கின்றது.
கொல்லாமை தனிமனித அறமாகச் சொல்லப்படுகிறது. சமுதாய அறம் காக்க கொலைத்தண்டனையில் கொல்லப்படலாம் (கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் செங்கோன்மை, 550) எனக் குறள் கூறும். படைமாட்சி, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்கள் படைத்து படையையும் படைவீரர்களையும் புகழ்ந்தமையால் நாடு காக்கவும் உயிர்கள் கொல்லப்படலாம் என்பதும் வள்ளுவர்க்கு உடன்பாடுதான் எனத் தெரிகிறது.
தற்காப்புக்காகக் கொல்லலாமா?
தன்னுயிர் போவதாயினும், தான் பிறிதோர் இனிய உயிரை நீக்கும் தொழிலைச் செய்தல் கூடாது என்கிறது ஒரு பாடல் (குறள் 327).
தற்காப்புக்காக்கூட உயிர்களைக் கொலை செய்யலாகாது என்று இக்குறள் கூறுவதாகப் பலரும் உரைக்கின்றனர்.
மற்றோர் உயிரைப் போக்கினால் அல்லாமல் தன் உயிர் வாழ்க்கைக்கு இடம் இல்லாததுபோல் தோன்றும் நிலையில் - கொடிய விலங்கோ பாம்பு போன்ற நச்சு உயிர்களோ நமக்கு ஊறு செய்ய வந்தால்- என்ன செய்வது? அப்பொழுதும் கூட அவற்றைக் கொல்லக்கூடாது என்றுதான் சொல்லப்படுகிறது எனத் தோன்றவில்லை.
'தன்னுயிர் நீப்பினும்' என்றுதான் பாடல் சொல்கிறது. தன்னைக் கொல்லவரும் உயிர்களிடமிருந்து காத்துக்கொள்வதற்காகக் கூட உயிர்க்கொலை கூடாது எனக் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. தன்னுயிர் போனாலும் சரி என்பது வேறு; தன்னுயிரை நீக்கவரும் உயிரிடமிருந்து காத்துக் கொள்வது என்பது வேறு. தன் உயிர் காக்கும் மருந்துக்காகப் பிற உயிரைக் கொல்லவேண்டாம் என்றுதான் வள்ளுவர் சொல்லுகிறார். எனவே தன்னைக் காத்துக்கொள்ள, தேவைப்படின், கொடிய உயிர்களைக் கொல்லலாம் எனக் கொள்ளலாம்.
கொல்லாமை அதிகாரம் கூறும் செய்திகளாவன:
எல்லா அறவினைகளும் கொல்லாமை என்பதில் அடங்கும். உயிர்க்கொலை எல்லா தீச்செயல்களையும் தரும்;
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் பாத்துண்ணுதலை அதாவது பிறருடன் பகிர்ந்து உண்ணுவதை கொல்லாமையின் தலைசிறந்த வடிவம்;
மருந்துக்காகவோ, தெய்வத்திற்கு உயிர்ப்பலி வேண்டிக்கொண்டதற்காகவோ, வேற்றுலகத் தேவர்களுக்கு வழங்குவதற்கான வேள்விப்படையல் என்ற பெயரிலோ உயிர்க்கொலை கூடவே கூடாது. நன்மை உண்டாகும், செல்வம் பெருகும் என்று ஆசைகாட்டப்பட்டதால் உயிர்ப்பலி செய்யவேண்டாம்; அப்படி ஒன்றும் கிடைக்காது. ஒருவேளை பெற்றாலும் சான்றோர் அவ்விதம் தீநெறியால் கிடைத்த ஆக்கத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;
கொல்லாமை நல்ல அறம் என்று சொல்லும்போது பொய்யாமையும் நல்லது என்று சேர்த்துச் சொல்லப்படுகிறது. வள்ளுவர் பார்வையில் மனிதர் யாவரும் இவ்விரண்டு தலையாய அறங்களையும் கடைப்பிடித்தே ஆக வேண்டும்;
கொலைத்தொழில் செய்வோர் யாராயிருந்தாலும் இழிந்தோரே;
உடம்புநீக்கி வாழ்வு நடத்தியவனுக்குத் தன்னுடம்பு சீர்குலைந்த கொடிய வாழ்நாள்தான் மிஞ்சும்.