இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0325



நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:325)

பொழிப்பு (மு வரதராசன்): வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.

மணக்குடவர் உரை: மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன். இல்வாழ்க்கையில் நிற்பினும்.
இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.

பரிமேலழகர் உரை: நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன்.
(பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறந்த உயிரைக் கொல்ல அஞ்சுபவனே பிறவிக்கு அஞ்சும் துறவியினும் மேலானவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.

பதவுரை: நிலை-நிலைமை; அஞ்சி-நடுங்கி; நீத்தாருள்-துறந்தவருள்; எல்லாம்-அனைத்தும்; கொலை-கொல்லுதல் தொழில்; அஞ்சி-நடுங்கி; கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; சூழ்வான்-எண்ணுவான்; தலை-முதன்மை.


நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும்;
பரிப்பெருமாள்: மனைவாழ்க்கையில் நிற்றலஞ்சித் துறந்தவர்களெல்லாரினும்;
பரிதி: யாக்கை நிலையாமை அறிந்து, துறந்தாரிலும்;
காலிங்கர்: வினைவழி எய்தி வருகின்ற பிறவித்தன்மையை அஞ்சிப் பிறவாமைக்குக் காரணமாகிய தவநெறி இயற்றுவார் எல்லாரினும்;
பரிமேலழகர்: பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும்;
பரிமேலழகர் குறிப்புரை: பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால் பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.

'இல்வாழ்க்கையில் நிற்றலை அஞ்சி/யாக்கை நிலையாமை அறிந்து/வினைவழி எய்தி வருகின்ற பிறவித்தன்மையை அஞ்சி துறந்தவரெல்லாரினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலக நிலையைக் கண்டு அஞ்சிப் பற்றினைத் துறந்தவர் எல்லாருள்ளும்', 'பிறவித் துன்பங்களுக்கு அஞ்சி, பற்றற்ற வாழ்க்கை மேற்கொண்டவர்கள் எல்லாரினும்', 'பிறப்பின் துன்ப நிலையை யுணர்ந்து பயந்து துறவறம் பூண்டவர் எல்லாருள்ளும்', 'உலக நிலைமையை அஞ்சி உலகப்பற்றினை விட்டவருள் எல்லாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறவி நின்றநிலைக்கு அஞ்சித் துறந்தார் எல்லாரினும் என்பது இப்பகுதியின் பொருள்.

கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.
பரிப்பெருமாள்: கொலை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையான்; இல்வாழ்க்கையில் நிற்பினும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.
பரிதி: கொல்லாமை விரதம் கொண்டவன் பெரியன் என்றவாறு.
பரிதி குறிப்புரை: அஃது எப்படி என்றால் உயிர்நிலையில்லை என்று, பிற உயிரைப் பார்த்துக் காத்தவன் பெரியவன் என்றவாறு.
காலிங்கர்: மற்று இக்கொலைத் தொழிலை உயிரழிவு என்று அஞ்சி மற்று இதனால் எஞ்ஞான்றும் கொல்லாமையைக் குறிக்கொள்பவனே பெரிதும் தலைமைப்பாடு உடையவன்.
பரிமேலழகர்: கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன்.
பரிமேலழகர் குறிப்புரை: இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.

'கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொலை செய்ய அஞ்சிக் கொல்லா அறத்தை எண்ணுபவனே தலைசிறந்தவனாவான்', 'கொலை செய்யப் பயப்பட்டு கொல்லா விரதத்தைக் கடைப்பிடிக்கிறவனே மிகச் சிறந்தவன்', 'கொலைப் பாவத்திற்குப் பயந்து கொல்லாமையாகிய அறத்தைப் போற்றுபவனே உயர்ந்தோனாவன்', 'கொல்லும் தொழிலை அஞ்சிக் கொல்லாமலிருத்தலைக் கருதுகின்றவனே தலைவன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயிர்களைக் கொல்ல அஞ்சி கொல்லாமை அறத்தை எண்ணுபவனே உயர்ந்தோனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிலைஅஞ்சித் துறந்தார் எல்லாரினும் உயிர்களைக் கொல்ல அஞ்சி கொல்லாமை அறத்தை எண்ணுபவனே உயர்ந்தோனாவான் என்பது பாடலின் பொருள்.
'நிலைஅஞ்சி' என்றால் என்ன?

கொல்லாமை அறம் மேற்கொள்பவன் எத்துறவு நெறி கொண்டவரினும் மேலானவன்.

வாழ்வில் நேரும் துன்ப நிலைக்குப் பயந்து துறவறத்தினை மேற்கொண்டவர்களைக் காட்டிலும் உயிர்நீக்கம் செய்வதற்கு அஞ்சி எந்த உயிரையும் கொல்லாதிருக்கும் அறத்தைக் கைக்கொண்டவனே உயர்ந்தனாவான்.
அஞ்சும் இருவர் பற்றிப் பேசி இவர்களில் யார் மேலானவர் என்று கணிக்கிறது இப்பாடல். நிலையஞ்சி அதாவது பிறந்த வாழ்க்கையில் நிலவும் வறுமை போன்ற துன்ப நிலைகளுக்கு அஞ்சி, பற்றறத் துறந்த பிறவி நிலையஞ்சுபவர் ஒரு பக்கம்; கொலை அஞ்சி அதாவது கொலைத் தீவினைக்கு(பாவத்திற்கு)ப் பயந்து அல்லது தன்னைப் பற்றிய உயிரச்சத்தால், கொல்லாமை சூழும் கொலைஅஞ்சுபவன் மறுபக்கம். இவர்களுள் யார் உயர்ந்தவன் என்றால் கொல்லா அறம் காப்பவனே மேலானவன் என்கிறார் வள்ளுவர்.
முன்னவர் அஞ்சப்பட வேண்டாததற்கு அஞ்சுகிறார். பின்னவன் அஞ்சுவதற்கு அஞ்சுகிறான். உயர்ந்த குறிக்கோளுக்காக இல்லாமல் நிகழும் வாழ்க்கைக்கு அஞ்சி துறவு கொள்வதைவிட, கொலைத் தீவினைக்கு அஞ்சி கொல்லாமை பேணுபவரே மேல் என்பது கருத்து.

‘நீத்தாருள் எல்லாம்’ என்பது உலகப்பற்றைத் துறந்தவரெல்லாரினும் எனப்பொருள்படும். 'துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால் துறவு பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்' என்பது பரிமேலழகர் உரை. துறவு ஒன்றேயாயினும் அது பின்னர் வைராக்ய சந்நியாசம், ஞான சந்நியாசம், ஞானவைராக்கிய சந்நியாசம், கரும சந்நியாசம் என நான்கு வகையாயிற்று என்பார் கோ வடிவேலுச் செட்டியார்.
நீத்தார் என்ற உயர்திணைச் சொல்லைத் தொடர்ந்து எல்லாம் என்ற அஃறிணைச் சொல் எப்படி வந்தது? இதற்கு இ சுந்தரமூர்த்தி 'எல்லாம் என்ற பதிலிடுபெயர் உயர்திணைச் சொற்களுடன் இணைந்து வருவதும் மொழிநடைப் போக்கில் ஏற்பட்ட மாறுதல் எனலாம்' என்று சொல்லி, 'முயல்வாருள் எல்லாம் (47) அறன்கடை நின்றாருள் எல்லாம் (142) வையத்தார்க் கெல்லாம் (238) எழுவாரை எல்லாம் (1032) இரப்பாரை எல்லாம் (1067) எனப் பல்வேறு குறட்பாக்களில் இங்ஙனம் அமைந்து விளங்குவது எண்ணுதற்குரியதாகும்' என்று இம்மொழிநடை அமைந்த குறளின் வேறுஇடங்களையும் சுட்டுவார்.

கொல்லா அறம் பேணுவோர் தவிர்த்து, துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற் பவர்(பொறையுடைமை 159 பொருள்: நெறிகடந்தவர் வாயில் பிறக்கும் வெஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் துறந்தவர்களைவிடத் தூய்மையுடையர்) என்று இன்னாசொல் பொறுத்தவரையும், உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை (உழவு 1036 பொருள்: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை) என்று உழவுத்தொழில் செய்வோரையும் துறந்தவரைவிட உயர்வானவர்கள் என்று குறள் கூறும்.

'நிலைஅஞ்சி' என்றால் என்ன?

'நிலைஅஞ்சி' என்றதற்கு மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சி, மனைவாழ்க்கையில் நிற்றலஞ்சி, யாக்கை நிலையாமை அறிந்து, வினைவழி எய்தி வருகின்ற பிறவித்தன்மையை அஞ்சி, பிறப்பு நின்ற நிலையை அஞ்சி (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை), வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சி, வாழ்வின் தன்மையை அறிந்து அஞ்சி, பிறப்பின் துன்பம் கருதி அஞ்சி, பிறவிக்கு அஞ்சி, உலக நிலையைக் கண்டு அஞ்சி, உலகத் துன்பங்களுக்கு அஞ்சி, நிலையாமையை நிலையாக உடைய உலகியலுக்கு அஞ்சி, பிறப்பின் துன்ப நிலையை யுணர்ந்து பயந்து, உலக நிலைமையை அஞ்சி, இல்லற வாழ்வில் நேரும் துன்ப நிலைக்கு அஞ்சி, வாழ்வின் சூழலை அஞ்சி, பிறவிநிலைமைக்கு அஞ்சி, பிறவியின் நிலையினை அறிந்து எனப் பலவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறளில் 'நிலையஞ்சி' என்ற தொடருக்கு இல்வாழ்க்கைக்கண் நிற்றலையஞ்சி எனவும் யாக்கை நிலையாமை அறிந்து எனவும் வினைவழி வரும் பிறப்பு நிலைக்கு அஞ்சி எனவும் தொல்லாசிரியர்கள் உரை கண்டனர். இருமை வகை தெரிந்து ஈண்டறம் பூண்டார் (நீத்தார் பெருமை 23) என வள்ளுவரும் குறித்திருப்பதால் வினைவழி வரும் பிறப்பிற்கஞ்சி என உரை காண்டல் சிறப்பு என்பது ஒரு சாரார் கருத்து. தேவநேயப்பாவாணர் இத்தொடருக்குப் 'பிறவிநிலைமைக்கு அஞ்சி, அதனின்று விடுதலை பெறும் பொருட்டு' எனப் பொருள் கூறி, 'பிறவி நிலைமையாவது எல்லாவுயிர்களும் இருதிணைப் பிறப்பிலும் எல்லையில்லாது பிறந்திறந்து பிறப்புப்பிணி மூப்புச் சாக்காட்டொடு வறுமையும் பசியும் பகையும் உடல் வருத்தமுங் கொண்டு வருந்துதல்' என விளக்கமும் தருவார்.
நிலைஅஞ்சி என்ற தொடர் பிறவி நிலையைச் சொல்கிறது. ஆனால் வினைவழி எய்தி வருகின்ற பிறவித்தன்மையை அஞ்சி 'மீண்டும் பிறவாமை' வேண்டி துறந்தவர் எனக் கொள்ளவேண்டுவதில்லை. பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (கடவுள் வாழ்த்து 10) என்ற குறளில் பிறப்பு, இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள உயிர் வாழ்க்கையை வள்ளுவர் பிறவி எனக் குறிக்கிறார். அதுபோலவே இங்கும் நிலையஞ்சி என்பதற்கு பிறவிநிலைமையை அஞ்சி அதாவது வாழ்க்கையின் தன்மை கண்டு அஞ்சி துறவு கொண்டவர் எனப் பொருள் காண்டல் சிறக்கும்.

'நிலைஅஞ்சி' என்ற தொடர்க்கு வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சி என்பது பொருள்.

பிறவி நின்றநிலைக்கு அஞ்சித் துறந்தார் எல்லாரினும் உயிர்களைக் கொல்ல அஞ்சி கொல்லாமை அறத்தை எண்ணுபவனே உயர்ந்தோனாவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொல்லாமை அறம் மேற்கொண்டவன் உலகியலுக்கு அஞ்சுபவரைவிடச் சிறந்தவன்.

பொழிப்பு

வாழும் உயிரைக் கொல்ல அஞ்சுபவன், வாழ்க்கை நிலைகண்டு அஞ்சித் துறந்தார் எல்லாருள்ளும் மேலானவன்.