இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0326



கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:326)

பொழிப்பு (மு வரதராசன்): கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

மணக்குடவர் உரை: கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது.
பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.
(மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: கொல்லாமையைக் கைக்கொண்டு ஒழுகுபவன் வாழ்நாளில், உயிரை இடைமறித்து உண்ணும் கூற்றுச் சென்று தாக்காது. அவனது வாழ்நாளில் இடைமுறிவு ஏதும் ஆபத்துக்களால் ஏற்படாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் உயிருண்ணும் கூற்று செல்லாது.

பதவுரை: கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; மேல்கொண்டு-ஏற்றுக்கொண்டு; ஒழுகுவான்-நடந்து கொள்பவன்; வாழ்நாள்-உயிரோடிருக்கின்ற நாள்; மேல்-இடத்தில்; செல்லாது-நடவாது; உயிர் உண்ணும் கூற்று-உயிர் போக்கும் இறப்புத் தெய்வம், எமன்.


கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல்;
பரிப்பெருமாள்: கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழுநாளின் மேல்;
பரிதி: கொல்லாவிரதம் நிலைபெற்றவன்மேலே;
காலிங்கர்: கொல்லாமையாகின்ற சிறந்த அறத்தினைத் தன்னிடத்து என்றுங் கொண்டு இடைவிடாது நடாத்துகின்றான் யாவன்; அவனது வாழ்நாள்மேல்;
பரிமேலழகர்: கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்;

'கொல்லாமையை மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொல்லா அறத்தைக் கொண்டவன் ஆயுளை', 'பிறிதோருயிரைக் கொல்லாமையைக் குறிக்கோளாகக் கொண்டொழுகுபவன் ஆயுளைக் கவர', 'கொல்லா விரதத்தைக் கடைப்பிடித்து நடந்து கொள்ளுகிறவனுடைய வாழ்நாள் மேல்', 'கொல்லாமையாகிய கொள்கையை கடைப்பிடித்து ஒழுகுபவனது வாழ்நாளின் மேல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொல்லாமை அறத்தை மேற்கொண்டு ஒழுகுபவன் வாழ்நாள்மேல் என்பது இப்பகுதியின் பொருள்.

செல்லாது உயிருண்ணும் கூற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது.
மணக்குடவர் குறிப்புரை: பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறவாமை யுண்டாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையாற் பயன் கூறிற்று.
பரிதி: இயமன் வர அஞ்சுவான் என்றவாறு.
காலிங்கர்: சென்று அடராது மற்று ஏனை உயிர் உண்ணுங் கூற்றானது என்றவாறு.
பரிமேலழகர்: உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.
பரிமேலழகர் குறிப்புரை: மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. [அடியிற் கட்டிய வாழ்நாள் - கருவுறும் போது உறுதி செய்யப்பட்ட வாழ்நாள்]

'உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உயிருண்ணும் யமன் நெருங்க மாட்டான்', 'உயிருண்ணும் கூற்றுவன் செல்ல மாட்டான்', 'உயிரைப் பதை பதைக்கச் செய்து மென்று தின்னுகின்ற எமன் வரமாட்டான்', 'உயிர்களை உடலினின்று பிரித்துக்கொண்டு போகும் யமன் செல்லமாட்டான். (கொல்லாதவனுக்குப் பாவ மிகுதியால் வரும் ஆயுட் குறைவு இல்லை யென்றவாறு)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயிரைப் பிரித்துக்கொண்டு போகும் இறப்புத் தெய்வம் நெருங்காது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொல்லாமை அறத்தை மேற்கொண்டு ஒழுகுபவன் வாழ்நாள்மேல் உயிரைப் பிரித்துக்கொண்டு போகும் இறப்புத் தெய்வம் நெருங்காது என்பது பாடலின் பொருள்.
'வாழ்நாள்மேல் செல்லாது' என்பது குறிப்பது என்ன?

கொல்லா அறம் கைக்கொண்டவன் வாழ்நாள் மிகும்.

கொல்லாமை அறம் மேற்கொண்டு ஒழுகுகின்றவனுடைய வாழ்நாள்மேல், உயிர்நீக்கும் கூற்று தன் கருத்தைச் செலுத்தாது.
கொல்லா நோன்பு காப்பவன் நீடு வாழ்வான் என்கிறது பாடல். தொன்மங்களில் கூறப்படும் 'கூற்று' அல்லது கூற்றுவன் என்பது இறப்புக்குப் பொறுப்பான இயமனைக் குறிப்பது. இயமன் பாசக் கயிற்றை வீசி உயிர்களை வீழச் செய்பவன். இக்கூற்றுவன் கொல்லாமை ஒழுக்கம் மேற்கொண்டவனிடம் நெருங்கும்போது விலகிச் சென்றுவிடுவானாம். இதன் காரணமாக அவன் வாழ்நாள் நீட்டிக்கும் என்பது செய்தி.

'வாழ்நாள்மேல் செல்லாது' என்பது குறிப்பது என்ன?

'வாழ்நாள்மேல் செல்லாது' என்றதற்கு வாழ்நாளின் மேல் செல்லாது, வாழுநாளின் மேல் செல்லாது, வர அஞ்சுவான், வாழ்நாள்மேல் சென்று அடராது, வாழ்நாளின்மேல் செல்லமாட்டான், வாழ்நாளில் சென்று தாக்காது, வாழ்நாள் மீது செல்ல மாட்டான், ஆயுளை நெருங்க மாட்டான், ஆயுளைக் கவர செல்ல மாட்டான், வாழ்நாள் மேல் வரமாட்டான், வாழ்நாளின்மேல் அதனைக் குறைக்கும் வகையில் செல்லாது, வாழ்நாளை தொடராது (சாவு வராது), வாழ்நாள்மேல் தன் கருத்தைச் செலுத்தமாட்டான், வாழ்நாளின்மேல் அவனுயிரைப் பிரிக்கச் செல்ல மாட்டான், வாழும் நாளின் மேல் செல்லாது என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் எமன் வாழ்நாள்மேல் தன் கருத்தைச் செலுத்தமாட்டான் என்ற உரை சிறக்கும்.

உயிருண்ணும் கூற்று, கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் 'வாழ்நாள்மேல் செல்லாது' எதனால் என்பதற்கான விளக்கங்களில் சில:

  • பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது; இது கொல்லாமையின் பயன்.
  • இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து.
  • அவனது வாழ்நாளில் இடைமுறிவு ஏதும் ஆபத்துக்களால் ஏற்படாது.
  • புலால் உண்ணாமையினால் மரக்கறி உணவால் ஏற்படும் மன அமைதியும் யாதோர் உயிர்க்கும் தீங்கு செய்யாமையால் பிற உயிர்களின் நல்லெண்ணமும் கிடைப்பதால் வாழ்நாள் நீட்டிக்கும்.
  • ஒரு உயிரைக் கொல்லும்போது அந்த உயிரிருந்த உடல் பதைபதைத்துத் துடித்துத் தவிக்கின்றது. அது போலவே எமன் வந்து ஒருவனுடைய உயிரை வதைத்து மென்று தின்னுகின்றபோது அவனுடைய உடல் பதை பதைத்துத் துடித்துத் தவிக்கின்றது. பிற உயிரை நீக்க, அதன் உடலைத் துடிக்க வைத்த துன்பங்கள் இவன் உயிர் நீக்கும்போது இவனுக்கு உண்டாகும். பிற உயிரைக் கொல்லக் கூடாது என்ற அறத்தை மேற்கொண்டவனுக்கு அந்த மரண துன்பங்கள் இருக்காது.
  • கொல்லாதவனுக்குப் பாவ மிகுதியால் வரும் ஆயுட் குறைவு இல்லை.
  • வாழ்நாள் நீடிப்பதற்குக் கரணியம் (காரணம்) மரக்கறியுணவும் மனவமைதியும் மக்கள் நல்லெண்ணமும் இருக்கை வளிநிலைப் பயிற்சியும் அறவினைப் பயனும் இறைவன் திருவருளுளாம். வாழ்நாள் நீடிப்பதனால் துறவறத்திற்குரிய மெய்பொருளாராய்ச்சியும் ஓகப்பயிற்சியும் முதிர்ச்சி பெறும்.
  • அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
  • தன்னால் பிற உயிருக்கு இடையூறு உண்டாகாத போது தனக்கு வரும் இடையூறும் இல்லையாய் நீண்டு வாழலாம் என்ற இயற்கை விதி கூறியவாறு.
  • கூற்றை வென்றவர் மார்க்கண்டன், நந்திகேசுரன், சிவேதன். இவர்கள் கூற்றை வென்ற விவரங்களை முறையே கந்த புராணத்திலும், இலிங்க புராணத்திலும், கூர்ம புராணத்திலும் காண்க.
  • கொல்லாமை நோன்பை உறுதியோடு கடைப்பிடிப்போரின் உயிருக்குச் செயற்கையாய் வரும் நேர்ச்சிகள் (Accidents) ஏற்படுவதில்லை.
  • ஒழுக்க நெறியில் நிற்பவனுக்கு இயற்கையும் தலை வணங்கும் (அவன் விருப்பத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் நிகழாது) என்பது
  • எந்த ஒரு உயிரையும் கொன்று உண்ணாமல் இருந்தால் நோய் வரும் வாழ்நாளை குறைத்து நீண்ட காலம் நீடுழி வாழலாம்.
  • கொல்லாமையை மேலான அறமாகக் கொண்டொழுகுபவர்களுக்கு மீண்டும் பிறப்பும் அதனால் இறப்பும் கிடையாது; கூற்றுவன் அவர்கள் வாழ்வை முடிக்கச் செல்லவேண்டியதில்லை.

கொல்லாமை அறத்தை மேற்கொண்டு ஒழுகுபவன் வாழ்நாள்மேல் உயிரைப் பிரித்துக்கொண்டு போகும் இறப்புத் தெய்வம் நெருங்காது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொல்லாமையைக் கடைப்பிடிப்பவனின் வாழ்நாளை சாவு குறைக்காது.

பொழிப்பு

கொல்லா அறத்தைக் கொள்கையாகக் கொண்டொழுகுபவன் வாழ்நாள்நாள்மேல் இறப்புத் தெய்வம் நெருங்காது.