நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை
(அதிகாரம்:கொல்லாமை
குறள் எண்:328)
பொழிப்பு (மு வரதராசன்): கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
|
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
பரிமேலழகர் உரை:
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை.
(இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை:
உயிர்க் கொலையிட்டுச் செய்யும் வேள்வியால் வரும் ஆக்கம் பெரிதேயானாலும் சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் இழிவானதேயாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்றுஆகும் ஆக்கம்பெரிது எனினும், சான்றோர்க்குக் கொன்றுஆகும் ஆக்கம் கடை.
பதவுரை: நன்று-நன்மை; ஆகும்-ஆகின்ற; ஆக்கம்-செல்வம்; பெரிது எனினும்-பெரிது என்று சொல்லப்பட்டாலும்; சான்றோர்க்கு-பலகுணங்களிலும் நிரம்பியவர்க்கு; கொன்று-(உயிர்களைக்)கொலை செய்து; ஆகும்-ஆகின்ற; ஆக்கம்-செல்வம்; கடை-இழிபு.
|
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும்;
பரிப்பெருமாள்: நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும்;
பரிதி: ஓர் உயிரைக் கொன்றால், இதனாலே ஆக்கம் வரும் என்றாலும்;
காலிங்கர்: ஒன்றின் கொலையானது எக்காலமும் கேடின்றி இனிதாகும் ஆக்கத்தைப் பெரிதும் பயக்கும் என்று அறநூல் சொல்லினும்;
பரிமேலழகர்: தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும்;
'நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வீரர்க்குப் போரில் படை விளைவு சிறந்தது', 'வேள்விக்கொலை முதலியவற்றால் நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று பிறர் கூறினாலும்', 'நன்மை உண்டாகுமென்றாலும் செல்வம் அதிகரிக்கும் என்றாலும்', 'இன்ப மிகுதற்கு ஏதுவாகிய செல்வமானது வேள்வி முதலியவற்றிற் செய்யுங் கொலையினால் பெரிதாகக் கிடைக்குமாயினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று கூறப்பட்டாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
மணக்குடவர் குறிப்புரை: இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அஃதியாதெனின், வேள்வியால் வரும் கொலை. அதனை உயர்ந்தோர்க்கு ஆகாதென்றார், ஏனையோர்க்காமென்றற்கு என்னை அதனாற் பயன் சுவர்க்கமன்றே அச்சுவர்க்கத்தினை விரும்பாது வீடுபேற்றினை விரும்புவராதலான்.
பரிதி: அப்படிப் பெற்ற செல்வமும் சடுதியிலே கெடும் என்றவாறு.
காலிங்கர்: துறவோர்க்கு ஒன்றினைக் கொன்றாகுவதோர் ஆக்கம் சாலக்கடை என்றவாறு.
பரிமேலழகர்: துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை.
பரிமேலழகர்: இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.
'ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். சான்றோர் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் உயர்ந்தோர் என்றும் காலிங்கரும் பரிமேலழகரும் துறவோர் எனப் பொருள் கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தனிக்கொலை விளைவு இழிந்தது', 'சால்புடையார்க்குக் கொலையால் வரும் செல்வம் இழிந்ததாம்', 'உயர்ந்த குணமுடையவர்கள் கொலை செய்து அதனால் வரக்கூடிய நன்மைகளை மிகவும் கேவலமாகத்தான் கருதுவார்கள்', 'அத்தகைய செல்வம் கொலை காரணமாக வருதலால் நிறை தவமுடையோர்க்கு அது கடைப்பட்டதாகவே காணப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கொலையால் வரும் நன்மைகளைச் சான்றோர் இழிந்ததாகக் கருதுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று கூறப்பட்டாலும் கொன்றாகும் ஆக்கத்தைச் சான்றோர் இழிந்ததாகக் கருதுவர் என்பது பாடலின் பொருள்.
'கொன்றாகும் ஆக்கம்' குறிப்பது என்ன?
|
உயிர்களைக் கொன்று செய்யும் வழிபாட்டினால் செல்வம் குவியும் என்று சொல்லப்பட்டாலும், அதனால் கிடைத்த செல்வத்தை இழிவாகத்தான் பண்புள்ள பெரியார்கள் கருதுவர்.
நன்மை விளையும், செல்வம் மிகக் கிடைக்கும் என்றாலும், கொலைச் செயலால் பெறப்படும் செல்வம், நற்குணங்கள் நிரம்பிய சான்றோர்க்கு இழிவுடையதே ஆகும்.
உயிர்க்கொலை என்னும் தீநெறியால் பெரும் செல்வம் கிடைக்கும் என்றாலும் சான்றோர் அந்த ஆக்கத்தை இழிவாகவே எண்ணுவார்கள் எனச் சொல்லிக் கொல்லாமையை வற்புறுத்தும் பாடல் இது. செய்யுளில் வேள்வி என்ற சொல்லும் இல்லை; என்னவகையான வேள்வி என்றும் கூறப்படவில்லை. இக்குறள் உயிர்க்கொலை எனச் சொல்வதாலும் சான்றோர் அவ்வாக்கத்தைத் தொடமாட்டார் என்பதை இயைத்துக் குறிப்பதாலும், இது கொலைவேள்வி பற்றிய பாடல் என உணர்ந்து கொள்ளலாம்.
வடமொழியில் யாகம் என்று சொல்லப்படுவது தமிழில் வேள்வி எனப்படுகிறது. வேள்வி என்பது தீ வளர்த்து வேண்டுதல் செய்வதைக் குறிக்கும். வேள்வித் தீயில் வேறுலகத்திலுள்ள தெய்வங்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் போடப்படும். அவ்வுணவு அவி என அழைக்கப்படுகிறது. வேள்வியில் கொலைவேள்வி என்று ஒரு வகை இருந்தது. அதில் குதிரை, பசு, உடும்பு போன்ற உயிர் விலங்குகளும் உயிரோடு அளிக்கப்பட்டன. இவ்வாறாகத் தேவர்களுக்கு அக்கினி பகவான் மூலம் உணவைக் கொடுத்துஅனுப்பி ஆரியர்கள் வழிபட்டு வேண்டுதல் செய்வர். வெந்த அவற்றின் மாமிசத்தை, தெய்வத்தின் பெயரால், யாகம் வளர்த்தவர்களும் யாகம் செய்வித்தவர்களும் உண்டு இன்புற்றார்கள். அவியுண்ட தெய்வங்கள் மகிழ்ந்து வேள்வி செய்வோர் கேட்ட வரம் தருவர் என்பது அவர்தம் நம்பிக்கை. உயிர்க்கொலை செய்து வேள்வி செய்வது புலைசூழ் வேள்வி எனப்பட்டது. கொல்லுதல் தீது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் வேள்விக்காக உயிர்க்கொலை செய்யலாம் என்பது அவர்கள் கோட்பாடு. இந்நாட்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீயில் உயிர்களைப் போடாமல், விலை மதிப்புள்ள தங்க, வெள்ளிக்காசுகள், பட்டுச்சேலை போன்ற பொருள்களையும் நெய், பால், தானியங்கள் போன்றவற்றையும் சொரிகின்றனர்.
'நன்றாகும் ஆக்கம் பெரிது' என ஒரே தொடராகவும் நன்றுஆகும் + ஆக்கம்பெரிது எனப் பிரித்தும் இருதிறமாகச் செய்யப்படும் உரைகளின் பொருளில் பெரும் மாற்றம் இல்லை.
வேள்வியில் நலம்பல உண்டாகும், செல்வம் பெரிதாக கிடைக்கும் என நம்பிக்கையூட்டினர். அந்நன்மைகள் 'நன்மை தரக்கூடிய சக்திகள் அதிகப்படும்', 'நோய்கள் நீங்கி நலமுண்டாகும்', 'பொன் உடம்பு பெறுதல்', 'வாழ்நாள் நீண்டிருத்தலுமாகிய பெருமை', 'வறுமை நீங்கிச் செல்வமுண்டாகும்', 'வாழ்வில் பொன்னுலக வாழ்வு பெறுதல்', என்பன. நன்றாகும் ஆக்கமாவது 'விண்ணுலகத்தில் தேவராகத் தோன்றி நுகரும் இன்பம்' என்பது. இப்படிக் கூறுபவர்களை மறுத்து, உயிர்களைக் கொல்லுவதால் ஆக்கம் எதுவும் கிடைக்காது; கிடைப்பினும், அது மிகவும் கீழ்ப்பட்டதாகும் என்று இக்குறள் கூறுகிறது. 'எனினும்' என்ற சொல் 'என்று சொல்லப்பட்டாலும்' எனப் பொருள் தருவதால், வள்ளுவருக்கு உயிர்க்கொலையால் ஆக்கம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்கிறது. அப்படியே ஆக்கம் கிடைத்தாலும் பண்பு நிறைந்த சான்றோர் பெருமக்கள் அவற்றை இழிவாகக் கருதுவர் அதாவது அதை ஏற்கமாட்டார்கள் என்றும் பாடல் சொல்கிறது.
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள் (இன்னாசெய்யாமை 311 பொருள்: சிறப்புக்களைத் தரும் செல்வங்கள் கிடைப்பதாயினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே குற்றமற்றவர் கொள்கை) என்று முன்பு சிறப்புகள் பெறுவதாக இருந்தாலும் உயர்ந்த பண்பாளர்கள் பிற உயிர்களுக்குக் கெடுதல் செய்யமாட்டார்கள் என்று குறள் கூறிற்று.
|
'கொன்றாகும் ஆக்கம்' குறிப்பது என்ன?
'கொன்றாகும் ஆக்கம்' என்றதற்கு கொன்று ஆகின்ற ஆக்கம், ஓர் உயிரைக் கொன்றால் இதனாலே ஆக்கம், ஒன்றினைக் கொன்றாகுவதோர் ஆக்கம், ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம், கொலையால் வரும் ஆக்கம், கொலை செய்தல் மூலம் கிடைக்கும் செல்வம், கொலையால் வரும் செல்வம், தனிக்கொலை விளைவு, கொலையால் வரும் செல்வம், கொலை வழியால் ஆகும் நலங்கள், கொலை காரணமாக வரும் செல்வம், ஓருயிரைக் கொன்று அதனால் உண்டாகும் செல்வம், கொலைத் தொழிலால் பெறப்படும் செல்வம், கொலைச் செயலால் வரும் நன்மை, கொல்வதினால் வரும் செல்வம், கொலைத்தொழிலினால் பெறக்கூடிய நன்மைகள் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இத்தொடர்க்கு நேர்பொருள் ஓர் உயிரைக் கொன்றால் ஆகுவதோர் செல்வம் என்பது. உயிரைக் கொல்வதால் செல்வம் பெறமுடியும் என்றால் அது என்ன கொலை?
ஒரு உயிரைக் கொன்று அதன் புலால், தந்தம், நகம் இவற்றை விற்பதால் சிறுது ஆதாயம் கிடைக்கலாம். கூலிக்காகச் செய்யப்படும் மனிதக்கொலையில் நிறையப் பணம் பெறலாம். ஆனால் குறள் சான்றோர் பற்றியதாக உள்ளது. சான்றோர் அச்செயல்களை எண்ணவேமாட்டாதவராவர். எனவே, இங்கு சொல்லப்படுவது, இவை தவிர்த்த நம்பிக்கை சார்ந்த வேள்விக்காகச் செய்யப்படும் கொலை என்று தெளியப்படும். கொலை வேள்வி செய்தால் பெரும்பயன் கிடைக்கும் என்று நம்பினர். இன்றும் நன்மைகள் பல உண்டு என்ற நம்பிக்கையில் வேள்விகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. உயிர்க்கொலையை முற்றிலும் வெறுக்கும் வள்ளுவர் கொலைவேள்வியை மறுக்கும் முகத்தான் இக்குறளைப் பாடினார். கொன்றாகும் ஆக்கம் என்பது நம்பிக்கை ஊட்டப்படும் உயிர்க்கொலைப் பயன்கள் குறித்தது.
'வேத நெறியைத் தழுவி இல்லறத்தார் வேள்விக்கண் கொலை செய்தல் தகும் என இக்குறட்குப் பரிமேலழகர் உரைப்பர். அத்தகையதொரு நெறியை ஆசிரியர் யாண்டும் உடன்பட்டிலர். கொல்லாமையின் தனிச் சிறப்பைக் கூறுங்காலை, வேள்வியில் கொலை செய்தல் அறமாகும் என எடுத்துக் கோடல் ஆசிரியர் முதன்மைக் கருத்தை வேரறுப்பதாகும். மேலும், அவ்வுரைக்குக் குறளில் சிறிதும் இடமில்லை' (இரா சாரங்கபாணி).
|
நன்மை உண்டாகும். செல்வம் மிகும் என்று கூறப்பட்டாலும் கொலையால் கிடைக்கும் ஆக்கங்களைச் சான்றோர் இழிந்ததாகவே கருதுவர் என்பது இக்குறட்கருத்து.
கொல்லாமைதரும் ஆக்கத்தையே நம்புக.
நன்மை உண்டாகும், பயன் பெரிது எனச் சொல்லப்பட்டாலும் கொலையால் கிடைக்கும் ஆக்கம் சான்றோர்க்கு இழிந்ததாம்
|