உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
(அதிகாரம்:கொல்லாமை
குறள் எண்:330)
பொழிப்பு (மு வரதராசன்): நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
|
மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை.
இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர்.
(செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)
இரா சாரங்கபாணி உரை:
நோயுற்ற உடம்போடு நீங்காத பசி என்னும் தீப்பிணியும் (வறுமையும்) உடைய வாழ்வினரை, உயிரை உடம்பினின்றும் போக்கியவர் (கொலை செய்தவர்) என்பர் பெரியோர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
பதவுரை: உயிர்-உயிர்; உடம்பின்-உடம்பினின்றும்; நீக்கியார்-போக்கினவர்; என்ப-என்று சொல்லுவர்; செயிர்உடம்பின்-குற்ற உடம்புடன். நோயுள்ள உடம்புடன்; செல்லா-நீங்காத, வறிய; தீ-கொடிய; வாழ்க்கையவர்-வாழ்க்கையுடையவர்.
|
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்;
பரிப்பெருமாள்: முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்;
பரிதி: போன சென்மத்திலே கொலை செய்தவர் என்று அறிக;
காலிங்கர் ('உயிருடம்பு' பாடம்): பிற உயிரை அவ்வுடம்பினின்றும் அவற்றின் துயர் கருதாது பிரித்திட்டவர் என்று சொல்லுப சான்றோர்;
செயிர் என்பது குற்றம்.
பரிமேலழகர்: இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர்.
காலிங்கர் தவிர்த்த மற்ற பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு 'முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்' என உரை நல்கினர். காலிங்கர் முற்பிறப்பின்கண் என்பதை விட்டுவிட்டு 'பிற உயிரை அவ்வுடம்பினின்றும் அவற்றின் துயர் கருதாது பிரித்திட்டவர் என்று சொல்லுப சான்றோர்' எனக் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஓருயிரை உடம்பிலிருந்து பிரித்தவர்', 'முற்பிறப்பில் உயிரை உடலிலிருந்து நீக்கும் கொலை செய்தவர்கள் என்று கருதப்படுகிறவர்கள்', 'முற்பிறப்பின்கண் உயிர்களை அவற்றின் உடம்பினின்று நீக்கினவர் என்று கற்றோர் சொல்லுவர்', 'உயிரை உடம்பிலிருந்து நீக்கியார் (கொலை செய்தவர்) என்று சொல்லுவர் வினையின் பயனை அறிந்தோர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உயிரை உடம்பிலிருந்து போக்கியவர் என்பது இப்பகுதியின் பொருள்.
செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை.
மணக்குடவர் குறிப்புரை: இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
பரிப்பெருமாள்: குற்றமான வுடம்பினையும்உடையராய் அற்றை ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
பரிதி: வியாதியான சரீரமும் தரித்திரமும் உள்ளபேர் என்றவாறு.
காலிங்கர்: யாரை எனின் பின் தாம் உறும் துயரமானது உடம்பினின்றும் ஒருகாலும் நீங்காத கொடு நரகத்துள் வாழும் வாழ்க்கையினை உடையோரை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: செயிர் என்பது குற்றம்.
பரிமேலழகர்: நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை,
பரிமேலழகர் குறிப்புரை: செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.
'குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி இவ்வுரை போன்றே 'வியாதியான சரீரமும் தரித்திரமும் உள்ளபேர்' எனக் கூறினார். காலிங்கர் 'தாம் உறும் துயரமானது உடம்பினின்றும் ஒருகாலும் நீங்காத கொடு நரகத்துள் வாழும் வாழ்க்கையினை உடையோரை (குற்றமான உடம்பு)' எனப் பொருள் கூறினார். 'நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை' என்பது பரிமேலழகர் தரும் உரை.
இன்றைய ஆசிரியர்கள் 'நோயுடலும் தீயவாழ்வும் உடையார் யார்?', 'வியாதிகள் உடம்பிலிருந்து நீங்காமல் எந்நேரமும் துன்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறவர்கள்', 'நோயுடம்புடனே வறுமை மிகுந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையார்', 'நோக்கலாகா நோய் உடம்பினோடு வறுமை மிக்க இழி தொழில் வாழ்க்கையுடையாரை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நோயுடலும் நீங்காத தீச்செயல் சுமக்கும் வாழ்வும் உடையார் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உயிரை உடம்பிலிருந்து போக்கியவர் செயிர்உடம்பின் நீங்காத தீச்செயல் சுமக்கும் வாழ்வும் உடையார் என்பது பாடலின் பொருள்.
'செயிர்உடம்பின்' என்பது என்ன?
|
அன்று கொலைஞன்; இன்று தீராத நோயாளி.
நோயோடு கூடிய உடம்புடன், வறுமையான தீச்செயல் வாழ்க்கையை உடையவர்களை, முன்பு உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிய தொழில் செய்தவர் (கொலைகாரர்) எனச் சொல்வர்.
வள்ளுவர் உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு; அதனை தட்டிப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என்ற கருத்துடையவர். எந்த ஓர் உயிருக்குமே இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டுமே தவிர, அது கொலையுண்டு சாகக்கூடாது என்ற விருப்புக் கொண்டவர்.
ஒருவர் பார்க்க சகிக்காத நோயிலும், கொடிய வறுமையிலும் வாடும் நிலையில் இருந்தால், அவர் முன்பு உயிர்க் கொலைத்தொழிலில் ஈடுபட்டிருந்திருப்பார் என்று உலகத்தார் சொல்வர். முன்பு செய்த கொலைக்குற்றங்களே இப்பொழுது நோயாகவும், வறுமையாகவும் வந்து துன்பம் தருகிறது.
உடம்பை நீக்கியவர் உடம்பழிந்து வறுமையுற்று தீச்செயலை (பாவத்தை) உடன் சுமந்து இழிய வாழ்க்கை நடத்துவர்.
‘செல்லாத் தீ வாழ்க்கை’ என்பதற்குத் தாம் உறும் துயரமானது உடம்பினின்று ஒருகாலும் நீங்காத கொடுநரகத்துள் வாழும் வாழ்க்கை என்பார் காலிங்கர்.
மல்லர் என்ற பழைய உரையாசிரியர் 'குறைந்த உடம்போட பொறுக்கக் கூடாத துன்பங்களுடனேவாழ்கின்றவர்கள் தனக்குரிய உடம்பிலே யிருந்து உயிரை நீக்கிப்போட்டவர் என்று சொல்லுவார்கள் அறிவுடையார். அறிவுடையான் ஒருவன் குஷ்ட வியாதினாலாகினும் விஷக்கடினாலாகிலும் கை கால் விரல்கள், மூக்கு, உதடு இது முதலான அவயங்கள் குறைந்ததுகள், தரித்திரத்தையும் இது முதலான துன்பங்களை அனுபவிக்கிறதைக் கண்டால் இத்தனை கடினமான ஆக்கினை பெரிய பாதகங்களுக்கு வரும் என்கிறதனால் அவனைக் கொலை பாதகனாக்கும் என்று சொல்கிறதுக்கு ஏதுவாயிருக்கும் என்பது கருத்து' என அவரது மொழிநடையில் விளக்கினார்.
‘பசிஎன்னும் தீப்பிணி’ (ஈகை 227 பொருள்: பசி என்று சொல்லப்படும் கொடிய நோய்) என முன்னர் குறளில் சொல்லப்பட்டுள்ளது ஆதலால், ‘செல்லாத் தீ வாழ்க்கை’ என்பதற்கு நீங்காத பசிப்பிணி யுடைய வாழ்க்கை அதாவது வறுமையுள்ள வாழ்க்கை என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு.
தன் கண்முன் காணுபவனின் இன்றைய அவல வாழ்க்கையைப் பார்க்கப் பொறுக்கமுடியாமல், மற்றவர்கள் அவனைப் பற்றிப் பேசுவதைக் கேட்டு, முன்பு செய்த தீச்செயல்களின் பயனால் இப்பொழுது நோயுற்றுத் துன்பம் நிறைந்த வாழ்க்கையுடையராயிருக்கிறார் என்பதை 'என்ப' அதாவது 'சொல்வர்' என்கிறார் வள்ளுவர்.
|
'செயிர்உடம்பின்' என்பது என்ன?
'செயிர்உடம்பின்' என்பதற்குக் குற்றமான வுடம்பினை, வியாதியான சரீரமும், தாம் உறும் துயரமானது உடம்பினின்றும், நோக்கலாகா நோய் உடம்புடனே, நோய் மிகுந்த உடம்புடன், வெறுக்கத்தக்க நோய்வாய்ப்பட்ட உடம்போடு, உடல் நோயிலும், நோயுடலும், நோயுற்ற உடம்போடு, வியாதிகள் உடம்பிலிருந்து, குற்றமே தன் உடலாக, நோயுடம்புடனே, நோக்கலாகா நோய் உடம்பினோடு, நோயோடு கூடிய உடம்புடன், உடம்பே நோயினால் நொந்து, குற்றமான உடம்புடன், அருவருப்பான நோயுடம்புடன், பார்ப்பதற்கும் அச்சத்தைக் கொடுக்கிற நோய் முதலியவற்றினால் தாக்குண்ட, குற்றமான உடம்புடனே, குற்றம் உடம்பினின்று எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்.
செயிருடம்பின் என்பது குற்றமான, நோயான உடம்பு எனப் பொருள்படும். குற்றமான உடம்பு என்பதை குறை உடம்பு அதாவது உறுப்புக் குறைந்த எனக் கொண்டு தொழுநோய் உண்டான உடம்பு எனக் கூறுவர். இதற்குப் பரிமேலழகர் நோக்கலாகா (கண்ணால் பார்க்க முடியாத) நோய் உடம்புடனே எனப் பொருள் கூறி நாலடியார் பாட்டொன்றையும் மேற்கோள் காட்டியுள்ளார். அப்பாடல்:
அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.(நாலடியார் தீவினைஅச்சம் 123 பொருள்: முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பி அதன் கால்களை ஒடித்துத் தின்ற பழவினை இப்போது வந்தடைந்தால், சங்கு மணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க ஏனை விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பத்திற்கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர்)
உடம்பு நீக்கும் கொலைக் குற்றம் கொடிதென்பதை விளக்க அவன் உடம்பும் உருக்குலைந்து போகும் எனச் சொல்கிறது பாடல்.
|
உயிரை உடம்பிலிருந்து போக்கியவர் நோயுடலும் நீங்காத தீச்செயல் (பாவம்) சுமக்கும் வாழ்வும் உடையார் என்பது இக்குறட்கருத்து.
கொல்லாமை அறம் ஓம்புவான் நல்லுடம்புடன் சாவு எய்துவான்.
நோயுடலும் நீங்காத தீயவாழ்க்கையும் கொண்டவர் கொலைத்தொழில் செய்தவராயிருப்பர் என்பர்.
|