இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:324)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

மணக்குடவர் உரை: நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.

பரிமேலழகர் உரை: நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.
('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நன்னெறி என்பது யாது? ஓருயிரும் கொலைப் படாதபடி எண்ணும் நெறி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.

பதவுரை: நல்ஆறு-நல்ல நெறி, நல்ல வழி; எனப்படுவது-என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; யாது-எது; எனின்-என்றால்; யாதுஒன்றும்-சிறிதாயினும்; கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; சூழும்-கருதும்; நெறி-முறை.


நல்லாறு எனப்படுவது யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிப்பெருமாள்: நல் வழியென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிதி ('நல்லார்' என்பது பாடமாகலாம்): பெரியோர் இவர் என்றது;
காலிங்கர்: உலகத்துத் தவநெறிகள் பலவற்றினும் சிறந்த நன்னெறிகள் என்று நூல்களால் எடுத்துச் சொல்லப்படுவன யாவையோ எனின்;
பரிமேலழகர்: மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; [மேற்கதி- இந்திரன் முதலிய தேவர் பதவிகள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு.

'நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'நல்லாறு' என்பதற்குப் பரிதி 'நல்லார்' எனப் பாடங்கொண்டார். நல்லாறு என்றதற்கு உலகத்துத் தவநெறிகள் பலவற்றினும் என்று காலிங்கரும் மேற்கதி வீடு பேறுகள் என்று பரிமேலழகரும் பொருள் கூறுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல நெறி எனப்படுவது யாதென்றால்', 'நன்னெறி என்பது எதுவென்றால்', 'வீடு எய்துதற்கு நல்ல வழியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதெனின்', 'உலகில் நல்ல வழி என்று சொல்லப்படுவது யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல வாழ்வுமுறை என்பது எதுவென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
மணக்குடவர் குறிப்புரை: இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
பரிப்பெருமாள்: அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நன்னெறியாவதும் கொல்லாமை யென்றது.
பரிதி: ஒரு உயிர் வதை செய்யாமலும், பொய் சொல்லாமலும், மாங்கிஷம் புசியாமலும், கோபம் தவிர்தலும், செபம் தவம் தான தன்மஞ் செய்தலும் ஆகிய குணங்கள் உடையாரே என்றவாறு.
காலிங்கர்: யாதொன்றினையும் கொல்லாமையைக் கருது நெறி ஒன்றுமே. என்றவாறு.
பரிமேலழகர்: அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.
பரிமேலழகர் குறிப்புரை: காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.

'யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நல்லார்' எனப் பாடம் கொண்டிருக்கலாம்; ஆனால் 'எனப்படுவது என அடுத்து வரும் அஃறிணைச் சொல்லை நோக்கின் 'நல்லார்' என்னும் பாடம் பொருந்தவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வுயிரையும் கொலை செய்யாமை எண்ணும் நெறியாகும்', 'எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற கொள்கை சூழ்ந்த நெறிதான்', 'யாதோர் உயிரையுங் கொல்லாமையாகிய அறத்தினைப் போற்றும் நெறியாகும்', 'எதனையும் கொல்லாமலிருத்தற்குக் கருதும் வழியேயாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எந்த உயிரும் கொலைப் படக்கூடாது என்ற கொள்கை எண்ணும் நெறியே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்லாறு என்பது எதுவென்றால் எந்த உயிரும் கொலைப் படக்கூடாது என்ற கொள்கை எண்ணும் நெறியே என்பது பாடலின் பொருள்.
'நல்லாறு' குறிப்பது என்ன?

கொல்லுதலைச் சிந்திக்காமல் இருப்பதே சிறந்த நெறி.

நல்ல வாழ்வுநெறி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எதுவென்றால் அது எத்தகைய உயிரையும் கொல்லாமலிருக்கக் கடைப்பிடிக்கும் வழியே ஆகும்.
உலகம் பரந்தது; அதன் வளப்பங்களும் எண்ணிறந்தன; எல்லா உயிர்களுக்கும் எல்லாம் உண்டு என்ற அடிப்படையில்தான் அது இயங்குகிறது. போட்டி நிறைந்த உலகில் ஒருவரை அழித்துத்தான் இன்னொருவர் வாழமுடியும் என்ற எண்ணம் மிகத் தவறானது. போட்டியைத் தன் தகுதியால் வென்றிடவே முயலவேண்டும். உலகம் ஒன்று; உயிர்கள் ஓரினம் என்னும் அன்பு நெறியை வளர்த்துக்கொள்ளவேண்டும். இக்கருத்துக்கள் ஒருவர் மனதில் மேலோங்கினால் கொலை எண்ணம் எழாது.
கொல்லாமை அறம் மாந்தர்க்கு இயல்பாக உள்ள குணமாகும். உலகில் கொலைக்குற்றம் புரிவோர் விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிலரே ஆவர். பிற உயிர்களைக் கொல்வதே தன் வாழ்வுக்குத் தீர்வு என யாரும் எண்ணவேண்டாம் என அறிவுறுத்த வந்தது இப்பாடல். பகைகருதியோ, பொருள் நோக்கிற்காகவோ வன்முறையால் உடம்பிலிருந்து உயிர்களை நீக்குதல் தன் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் தடையாகிவிடும். கொலை என்பது அரசியல்-சமூக வழியிலும் குற்றம்; அருளியல் நோக்கிலும் ஏற்கத்தகாதது. கொலைத்தொழிலை எக்காரணத்துக்காவும் கருதாதிருப்பதே நல்ல நெறி; அதுவே மேலான வாழ்வுமுறை.

'நல்லாறு' குறிப்பது என்ன?

'நல்லாறு' என்ற சொல்லுக்கு நல்ல வழி, நல் வழி, உலகத்துத் தவநெறிகள் பலவற்றினும் சிறந்த நன்னெறிகள், மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி, நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது, நன்னெறி, நல்ல நெறி, வீடு எய்துதற்கு நல்ல வழி, உலகில் நல்ல வழி, பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழி, நன்மை பெறுதற்குரிய வழி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் உலகில் நல்லவழி என்பது சிறந்ததாகலாம்.

நல்ல வாழ்வு நெறிதான் நல்லாறு என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.

நல்ல வாழ்வுமுறை என்பது எதுவென்றால் எந்த உயிரும் கொலைப் படக்கூடாது என்ற கொள்கை எண்ணும் நெறியே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கொல்லாமை அறம் காத்தல் நல்ல நெறி.

பொழிப்பு

நல்ல வாழ்வுமுறை எது என்றால், எவ்வுயிரும் கொலைப் படக்கூடாது என்று எண்ணும் நெறியாகும்.