ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
(அதிகாரம்:கொல்லாமை
குறள் எண்:323)
பொழிப்பு (மு வரதராசன்): இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
|
மணக்குடவர் உரை:
இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று.
இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.
பரிமேலழகர் உரை:
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.
('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.
வ சுப மாணிக்கம் உரை:
நிகரற்ற அறம் கொல்லாமை; அதற்குத் துணைவரும் வாய்மையும் நல்ல அறம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று.
பதவுரை: ஒன்றுஆக-இணையில்லாதது ஆகும்படி; நல்லது-நல்லது கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; மற்று-(அசைநிலை) அதன்-அதற்கு; பின்-பிறகு; சார-நிற்க; பொய்யாமை-பொய் கூறாதிருத்தல்; நன்று-நன்மையுடையது.
|
ஒன்றாக நல்லது கொல்லாமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இணையின்றாக நல்லது கொல்லாமை;
பரிப்பெருமாள்: இணையின்றாக நல்லது கொல்லாமை;
பரிதி: தன்மநெறி எல்லாம் ஒன்றாகத் திரட்டியது அது; எஃது எனில், கொல்லாமை என்று அறிக.
காலிங்கர்: அனைத்தறங்களினும் தனக்கு இணையின்றித் தானேயாகச் சிறந்தது யாதோ எனில், கொல்லாமையாகிய அறம் ஒன்றுமே; .
பரிமேலழகர்: நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை;
பரிமேலழகர் குறிப்புரை: 'நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது.
'இணையின்றாக நல்லது கொல்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அற நூலோர் தொகுத்துக் கூறும் அறங்களுள் தனித்த சிறப்புடையது கொல்லாமை', 'இணையற்ற நல்ல குணம் கொல்லா விரதம்', 'அறங்கள் எல்லாவற்றிலுந் தனி சிறப்புடையது கொல்லாமையாகும்', 'கொல்லாமை ஒப்பற்றதான நல்ல அறம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இணையற்ற நல்ல அறம் கொல்லாமை என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.
பரிப்பெருமாள்: அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று எனலாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனாற் சொல்லியது எல்லா அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றவாறாயிற்று.
பரிதி: அதினும் பெரியது பொய் சொல்லாமை என்றவாறு.
காலிங்கர்: அதனால் இனிக் கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவானொருவன் இனி இதன்பின் செய்ய வேண்டுவதும் ஒன்றுண்டு அஃதாவது எஞ்ஞான்றும் பொய்யாமையைத் தப்பாமல் குறிக்கொள்ளல்.
காலிங்கர் குறிப்புரை: அங்ஙனம் குறிக்கொண்டால் அது சாலத் தகைமை யுடைது என்றவாறு.
பரிமேலழகர்: அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.
'அதன்பின்பே அணைய, பொய்யாமை நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குத் துணையாக நிற்கும் பொய்யாமை நல்ல அறம்', 'அதற்கடுத்த நல்ல குணம் பொய் சொல்லா விரதம்', 'அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும்', 'பின்னர் அதனை அடுத்து பொய்யாமையும் நல்ல அறமாகும். (கொல்லாமை, பொய்யாமை ஆகிய இரண்டு அறங்களுள் கொல்லாமைக்கு முதலிடமும் பொய்யாமைக்கு இரண்டாம் இடமும் கொடுக்கின்றார்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அதற்குத் துணை நிற்கும் பொய்யாமையும் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இணையற்ற நல்ல அறம் கொல்லாமை; அதற்குத் துணை நிற்கும் பொய்யாமையும் நல்லது என்பது பாடலின் பொருள்.
கொல்லாமை-பொய்யாமை இயைபு என்ன?
|
கொல்லாமையும் பொய்யாமையும் தனிச்சிறப்புடைய மேலான அறங்கள்.
கொல்லாமை தன்னோடு இணை ஒப்பதுஇல்லாமல் தானேயாக நல்லது; அதற்கு அடுத்தபடி நிற்கத்தக்க சிறப்பினை யுடையது பொய்யாமை.
இக்குறளிலுள்ள ‘ஒன்றாக’ என்பதற்கு ஒருசொல்லாக, ஒருதலையாக, இணையின்றாக, ஒப்பும் உயர்வுமின்றித் தான் ஒன்றேமுதன்மையாய், நிகரற்ற, பொருந்துவதாக எனப் பொருள் கூறுவர். இவற்றுள் இணையின்றாக என்பது பொருத்தம்.
கொல்லாமைதான் முதன்மையான அறப்பண்பு என்கிறார் வள்ளுவர். இதைத் தெளிவுறச் சொல்ல, கொல்லாமை ஒன்றாக நல்லது அதாவது அது தனக்கு இணையென்று ஏதும் இல்லாத நற்பண்பு என்று மொழிகிறார். மேலும் இன்னொரு ஒப்பற்ற அறமான பொய்சொல்லாதிருப்பது அதற்குத் துணை நிற்கும் என்றும் கூறி கொல்லாமையின் பெருமையை உயர்த்துகிறார்.
'அதன் பின்சார' என்ற தொடர்க்கு அதன்பின்பே அணைய, இதன்பின் செய்ய வேண்டுவது, அதன் பின்னே நிற்க, அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாக, அதற்கு அடுத்தபடியாக, அதனை அடுத்த, அதற்குத் துணைவரும், அதற்குத் துணையாக நிற்கும், அடுத்துச் சொல்லத்தக்க, அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது, பின் வைத்து எண்ணக் கூடிய என்றவாறு பொருள் கூறினர். இவற்றுள் 'அதற்குத் துணையாக நிற்கும்' என்ற பொருள் சிறந்தது.
நன்மை யுண்டாகுமிடத்து, பொய்பேசுதலும் மெய்பேசுதலாகக் கருதப்படும் என்பது வள்ளுவர் கருத்தாதலால் வாய்மையில் மெய்பேசுதலும் பொய்பேசுதலாகவும் மாறுபட்டு வரும். கொல்லாமையில் அது இல்லை. எனவே கொல்லாமை முதலில் வைத்து எண்ணப்படும் என்பது. இதனால் 'அதன் பின்சாரப் பொய்யாமை நன்று' எனச்சொல்லப்பட்டது,
|
கொல்லாமை-பொய்யாமை இயைபு என்ன?
கொல்லாமை அதிகாரத்தில் பொய்யாமை பற்றி எதற்காகச் சொல்லப்படுகிறது? இவ்விரண்டு பேரறங்களுக்குமுள்ள தொடர்பு என்ன?
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (குறள் 300 பொருள்: நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை) என்று முன்பு சொன்ன வள்ளுவர் இங்கு இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்குத் துணையாக வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது என்று கூறுவது பொய்யாமையைச் சற்றுப் பின்னுக்குத் தள்ளுவது போல் தோன்றுகிறது.
பரிமேலழகர் 'இந்நிலையில் எது முதலாய அறம் என்ற ஐயம் ஏற்படும் அல்லவா? அதைத் தீர்க்கும்வகையில் அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார்' எனச் சொல்லி 'நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என்பதால்' எனப் 'பின்சாரப் பொய்யாமை' என்று ஏன் சொல்லப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துவார்.
வ சுப மாணிக்கம் 'கொல்லாமை முதலறம் வாய்மை இரண்டாம் தரத்தது என மேல் கீழ் தெரிந்தோதுதல் இக்குறட் கருத்தன்று. வாய்மையால் கொலை நிகழுமெனின், எங்ஙன் நடந்து கொள்வது என நடைமுறைச் சிக்கலை அறுக்க வந்தது இக்குறள். இதன் கருத்து கொலைக்கு ஏது வாகுமெனின் தன்னெஞ்சறிந்த வாய்மையையும் தூயது என்று நம்பற்க. கொல்லா அறத்துக்குச் சார்புடைய பொய்யாமையே காண். தாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது என்றவாறாம். இவ்விளக்கத்தால் புரை தீர்ந்த நன்மை.. (குறள் 292) என்ற விடத்து, அந்நன்மையானது பிற உயிர்க் கொலையின்மை என்பது சிறந்த குறிப்பாயிற்று' என்பார்.
தேவநேயப் பாவாணர் 'சொல்வடிவான அறங்களுள் வாய்மையையும் செயல் வடிவான அறங்களுள் கொல்லாமையையும் தலைமையாகக்கூறி, அவ்விரண்டையும் ஒப்பு நோக்கும்போது வாய்மை மக்களுக்கு மட்டும் உரியதாகிறது. கொல்லாமை மக்களுக்கு மட்டுமல்லாமல் அறுவகைப்பட்ட உயிர்களுக்கும் உரியதாகிறது. மேலும் அவ்வுயிர்களை காப்பதுமான அறத்திலும் (பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்') கால்பதிக்கிறது. ஆதலால் வாய்மையை விடக் கொல்லாமை சிறந்ததாகிறது' என விளக்குவார்.
இக்குறளுக்கு வ உ சிதம்பரம் 'வாய்மை கொள்ளத்தக்க அறத்தில் தலையாயது; கொல்லாமை தள்ளத்தக்க மறத்தில் தலையாயது' என்று இரண்டுமே தத்தம் வழியில் தலையாயின என உரை வரைந்தார்.
|
இணையற்ற நல்ல அறம் கொல்லாமை; அதற்குத் துணை நிற்கும் பொய்யாமையும் நல்லது என்பது இக்குறட்கருத்து.
ஒரே நல்ல அறம் என்றால் அது கொல்லாமை.
இணையற்ற நல்ல அறம் கொல்லாமை; அதற்குத் துணை நிற்கும் பொய்யாமையும் நல்லது.
|