இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0322



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:322)

பொழிப்பு (மு வரதராசன்): கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.



மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம்.
இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.

பரிமேலழகர் உரை: பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்.
('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.)

குன்றக்குடி அடிகளார் உரை: அறநூலோர் தொகுத்துக் கூறும் அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறமாவது, தமது செல்வத்தைப் பலரோடும் பகுத்துண்டு தொடர்ந்து அவ்வுயிர்களைப் பாதுகாத்தலேயாம்.
இத்திருக்குறளைப் பொருள் நோக்கிப் பார்த்தால் ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்திற்கு இசைவுடையதாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கொல்லாமைக்கு இசைவுடையது போலவும் தெரியவில்லை. ஆயினும் இந்த அதிகாரத்தில் இக்குறளை வைத்ததின் குறிப்பு யாதெனில் வாழப்பிறந்த உயிர்களுக்கு உணவு முதலியன வழங்கி பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றாது பசியால் வருந்திச் சாகவிடுதலும் கொலையேயாம் என்பதாகும். 'பல்லுயிர் ஓம்புதல்' என்றதால் ஒருவேளைச் சோறு போடுதல் மட்டுமே அறமாகாது. தொடர்ந்து அந்த உயிர்ப் பசித் துன்பத்தில் வாடாத வகையில் செய்யப் பெற வேண்டும் என்பது அறிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

பதவுரை: பகுத்து-பிரித்துக் கொடுத்து; உண்டு-உண்டு; பல்-பலவாகிய; உயிர்-உயிர்; ஓம்புதல்-குறிக்கொண்டு காப்பாற்றுதல்; நூலோர்-நூல் படைத்தவர்கள்; தொகுத்தவற்றுள்-(நன்னெறிகளாகத்) தொகுத்த கோட்பாடுகளுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல்;
பரிப்பெருமாள்:பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல்;
பரிதி: பெற்ற செல்வத்தைப் பகுத்து உண்டு தன் உயிர போல எல்லா உயிரையும் பார்த்துக் காத்தல்;
காலிங்கர்: தனக்குள்ளது கொண்டு பலர்க்கும் பகுத்து ஊட்டித் தானும் உண்டு, அனைத்துயிர்களையும் கொலைகுறியாது பாதுகாத்தலே;
பரிமேலழகர்: உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார்.

'பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகுத்துண்டு பல்லுயிரையும் காப்பதுவே', 'தம்மிடம் உள்ளவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு பல உயிர்களையும் துன்புறாமல் காத்தல்', 'தனக்கு உள்ள உணவில் பிறருக்கும் பங்கு கொடுத்து, உலகிலுள்ள பல உயிர்களையும் காப்பாற்றும் செய்கைதான்', 'உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு பல உயிர்களையும் ஓம்புதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனக்குள்ளதைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.
பரிப்பெருமாள்: நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாச் சமயத்தார்க்கும் ஒக்க நன்றென்றது. பகுத்துண்டல் கூறியதென்னை பல்லுயிரோம்புதல் என அமையாதோ? இது கொல்லாமை யாதலால் எனின்? எல்லாச் சமயத்தார்க்கும் ஒக்க நன்றென்றது, இவ்விரண்டறமும் என்றற்காகவும் , கொல்லாமையே நன்றென்றார். அதனினும் நன்று அவ்வுயிர்களை யூண் கொடுத்துப் பிறர் நலியாமற் பாது காத்தலென்றற்காகவும் கூறினார் என்று கொள்ளப்படும்.
பரிதி: தலைமையான காரியம் என்றவாறு.
காலிங்கர்: பெரிது என்று அநாதியில் பல அறநூல் கண்டவரும், முனிவர் அனைவரும் சிறந்த நல்லறம் இவை இவை என்று எண்ணி முடிந்தவற்றுள் எல்லாவற்றினுன் சாலத் தலைமைப்பாடு உடைத்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இவனிடாமையால்3 பிறர் சாவினும் கொலையாம் என்பது கருத்து.
பரிமேலழகர்: அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்.
பரிமேலழகர் குறிப்புரை: எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.

'நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசிரியர்கள் கூறிய அறத்துள் மேலானது', 'நூலாசிரியர் தொகுத்துக் கூறும் அறங்களுள் தலைசிறந்ததாகும்', 'அறிவு நூல்களை எழுதினவர்கள் சேகரித்துக் கொடுத்திருக்கிற அறிவுகளிளெல்லாம மிக உயர்ந்த அறிவு', 'அறநூலோர் தொகுத்துக் கூறியுள்ள அறங்கள் எல்லாவற்றினும் தலைமையாய அறம் ஆகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் மேலானது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
தனக்குள்ளதைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதல் நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் மேலானது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கொல்லாமை அதிகாரத்துள் ஏன் வைக்கப்பட்டுள்ளது?

தன்னிடம் உள்ளதை உண்ணக் கொடுத்துப் பசிக்கொலையைத் தடுத்தலாலே பகுத்துண்டு வாழ்தல் தலையாய கோட்பாடாகிறது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்:
பகுத்துண்டு, பாத்தூண் என்ற இவ்விரு சொற்களையும் ஒரு பொருள் குறித்துத் தம் குறட்பாக்களில் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர். பகுத்துண்டு என்ற சொல் பகுத்தூட்டி, தானும்உண்டு, என்பதாக விரியும். உண்டு என்ற சொல் இங்கு தானும் உண்டு எனப் பொருள்படுகிறது. தான்உண்பதையும் ஏன் சேர்த்துச் சொல்லப்பட்டது என்பதற்கு வ சுப மாணிக்கம் 'வள்ளுவர் உலக நடை அறம் கண்டவர்; எனவே துய்க்கும் உரிமை மறுக்காது பகுத்துண்டு என ஓம்புவானையும் கூட்டி மொழிந்தார்; ஈதற் கடமையையும் துய்க்கும் உரிமையையும் தலையறமாகவே எண்ணினார்; பகுத்து ஊட்டி மட்டும் அமைவது ஊட்டியான் வாழ்வை அழிக்கும்; பகுக்காது உண்டு மட்டும் அமைவது உலக நலத்தை அழிக்கும்; அதனால் உண்டவன் வாழ்வும் அழியும்; ஆதலின், உலகமும் வாழ ஒருத்தனும் வாழ, கடமையும் வாழ உரிமையும் வாழ 'பாத்தூண்'' என விளக்கம் தந்தார்.
பல்லுயிர் ஓம்புதல் என்பது 'பல உயிர்களைப் பாதுகாத்தல்' என்ற பொருள் தந்து அவற்றை உயிர் போகாது காக்க, உணவு, மருந்து முதலியவற்றை வழங்குதலைக் குறிக்கும்.
பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே(பதிற்றுப்பத்து (38)) (பொருள்: பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்பதற்காகவே செல்வத்தைத் தொகுத்த ஆண்மையயுடைய நீ பிறர் நன்மைக்காகவே இவ்வுலகில் வாழ்வாயாக. ) என்று பகுத்துஉண்பது குறித்து சங்கப்பாடல் மொழிந்தது.
பகுத்தூட்டல் என்பதற்கு விளக்கமாக வரும் மணிமேகலைக் காப்பியப் பாடல்:
காணார், கேளார், கால்முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர், பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருகஎன்று இசைத்துடன் ஊட்டி
(மணிமேகலை, ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, 111-113 பொருள்: குருடர்செவி டர் முடவர் பாதுகாப்போர் அற்றோர் நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து,)
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறநானூறு 17 பொருள்: உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார் ) என்ற சங்கப்பாடல் சொல்வதுபோல. பசியாற்றுதல் என்பது ஒருவர்க்கு உயிர் கொடுத்தல் போன்றது.
இருப்பதைப் பசியுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து அளித்துத் தானும் உண்டு வாழும் ஓம்புதல் நெறி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ஆகும்.

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை:
நூலோர் என்ற சொல் நூல்இயற்றியவர் எனப்பொருள்படும். என்ன வகையான நூல் எனச் சொல்லப்படவில்லை. அறநூல், பொருள் நூல், சமய நூல் போன்ற வேறுபட்ட கோட்பாடுகளுக்கான நூல்கள் எனக் கொள்ளலாம். இவ்விதம் தொகுக்கப்பட்ட எல்லாவற்றையும் கலந்தெண்ணி ஆயும்போது பகுத்துண்டு உயிர்களை ஓம்புவதே தலையாய அறக்கோட்பாடாக விளங்குகிறது எனச் சொல்கிறார் வள்ளுவர். நூலோர் பலரின் தொகுப்பில் தான் கண்டறிந்த உண்மை என்பதாக இதைச் சொல்கிறார் அவர். (பரிமேலழகர் இக்குறளின் விளக்கவுரையில் 'எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு' என்று கூறுவதும் அறியத்தக்கது.)
ஒருபக்கம் பலர் வறுமையில் வாட, மறுபக்கம் சிலரிடம் மிகைச்செல்வச்சேர்க்கை, இந்தப் பொருளியல் முரண்களின் இடைவெளியைக் குறைத்து செல்வப் பரவல் உண்டாக்கக்கூடியதான சிந்தனைகள் உலகம் முழுக்கக் காலந்தோறும் தோன்றிக்கொண்டு இருக்கின்றன. மேற்கு நாட்டைச் சேர்ந்த காரல் மார்க்சு வழங்கிய கோட்பாட்டில் முகிழ்த்த பொதுவுடைமை (communism) என்பது சென்ற நூற்றாண்டில் தோன்றி, சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு, தோல்வியில் முடிந்த ஒன்றாகும். பொதுவுடைமையின் மென்மை வடிவம் கொண்ட சமதருமம் (Socialism) என்ற கோட்பாடும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இக்கோட்பாடுகள் இக்குறளில் சொல்லப்பட்ட கருத்துக்கு நேர் பொருத்தம் உடையன எனப் பலர் கருதுகின்றனர். இவையெல்லாம் அரசு அதிகாரம் மூலம் செயல்படுத்தப்பட்டன/படுவன. வள்ளுவர் கூறும் பாத்தூண் என்பது செல்வம் படைத்தவர் தாமாக முன்வந்து தான் ஈட்டியதைப் பசித்தவர்க்குப் பகிர்ந்து கொடுப்பது பற்றியது. எனவே இதைப் பொதுவுடைமைக் கோட்பாட்டிற்கு இணையாகச் சொல்வது ஏற்புடையதல்ல.
வள்ளுவர் பகுத்துண்பதை ஒரு பொருளியல் கொள்கையாக நோக்கவில்லை. அப்படி அவர் கருதியிருந்தால் பொருட்பால்-அரசியலில் அல்லது பொருட்பாலில் வேறொரு அதிகாரத்தில் அதைச் சொல்லியிருப்பார். அறத்துப்பாலில் வைக்கப்பட்டுள்ளதால் பகுத்துண்பதை அவர் ஒரு அறக்கோட்பாடாகவே கொண்டார் என்பதே சாலும். குவிந்திருக்கும் செல்வம் எல்லோருக்கும் பயன்படத் தக்கவகையில், செல்வம் திரட்டியவர், அவராக விருப்பப்பட்டு, அச்செல்வத்தைப் பகுத்து பல உயிர்கள் வாழ வழிசெய்வது வள்ளுவரின் பாத்தூண் அறக்கொள்கை.
மகாத்மா காந்தி தர்மகர்த்தா கொள்கை அல்லது அறநிலைப் பொருளுடைமை என ஒன்றை முன்வைத்தார்; தான் ஈட்டிய செல்வத்தை அருளுணர்வோடு பிறருக்கும் பகிர்ந்து மகிழ்ந்து வாழும் முறைதான் தர்மகர்த்தா கொள்கை எனப்படும்; தங்கள் சொத்துக்களுக்கு முதலாளிகள் அறங்காவலர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அந்தச் சொத்துக்களை அவர்கள் தனது ஆதாயத்துக்காக செலவிடலாகாது என்றும் அக்கொள்கை சொல்கிறது. வள்ளுவர் சொல்லும் பாத்தூண் கோட்பாட்டுடன் காந்தியின் அறநிலைப் பொருளுடைமை ஒத்துவருகிறது என்பதும் பொருந்தாக் கூற்றே.

உணவீந்து உயிரோம்பி பசிக்கொலையை அகற்றுதல் இங்கு பேசப்படுகிறது. பாத்துண்ணுதலைக் கொல்லாமையின் வடிவம் என வள்ளுவர் கொள்கின்றார்.

இக்குறள் கொல்லாமை அதிகாரத்துள் ஏன் வைக்கப்பட்டுள்ளது?

இக்குறளின் பொருள் நோக்கிப் பார்த்தால் இது ஈகை அல்லது ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் வைப்பதற்குரியதாகிறது. ஏன் இது கொல்லாமை அதிகாரத்தில் சொல்லப்பட்டது?
இக்கேள்விக்குப் பழம் ஆசிரியரான காலிங்கர் 'பல்லுயிர் ஓம்புதல்' என்பதற்கு 'அனைத்துயிர்களையும் கொலை புரியாது பாதுகாத்தலே' என்றுசொல்லி 'இவனிடாமையால் பிறர் சாவினும் கொலையாம் என்பது கருத்து' எனத் தெளிவான விளக்கமும் தந்துள்ளார். பரிமேலழகர் ஓம்புதல் என்பதற்குச் 'சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல்' என்று பொருள் கூறி கொல்லாமை அதிகார இயைபும் கூறுகிறார். குன்றக்குடி அடிகளார் 'கொல்லுதலும் குற்றமே. அதைவிடப் பெரிய கொலைக் குற்றம் உணவு முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவதும் ஆகும் என்பதை உணர்த்த இங்கு கூறினார்' என்றார். மேலும் அவர் 'கொல்லாதிருத்தலை மட்டும் திருவள்ளுவர் அறமாகக் கருதவில்லை. சமூக ரீதியாக-சமூகம் ஒருவரை உணவு முதலியன இல்லாமல் சாக விடுதலையும் கொலைக் குற்றமாகவே கருதுகிறார் என்பது வேறு எந்த நீதி நூலிலும் இல்லாத சிறப்பு' எனவும் கூறுகிறார்.
கொடிய வறுமைநிலையில் உண்ணவழியின்றி ஒருயிர் பிரிவதை நோக்கும்போது அதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? அப்படி மாந்தர் சாவதும் சமுதாயம் சேர்ந்து செய்யும் மனிதக்கொலைதான் என்பது வள்ளுவர் கருத்து. உணவளியாமல் கொல்லப்படுவதைத் தடுக்க பாத்தூண் கடைப்பிடிக்க வேண்டும் என இக்குறள்வழி வலியுறுத்துகிறார் அவர். பசிக்கொலையை நீக்குதலும் கொல்லாமை அறத்தைக் கடைப்பிடிப்பதுதான் என்கிறது இப்பாடல். 'பகுத்துண்ணுதல்' இன்றேல் அது பிற உயிர்களைப் பாதுகாவாது கொல்வதற்குச் சமமாகும் என்ற கருத்திலேதான், இது 'கொல்லாமை' அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது பகுத்துண்ணாமை, கொலைக்குற்றம் புரிவதாகும்; பகுத்துண்பது கொல்லாமை ஆகும்.

தனக்குள்ளதைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களைக் காப்பாற்றுதல் நூலோர் தொகுத்துக் கூறியவற்றுள் எல்லாம் மேலானது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறஉயிர்களின் பசிபோக்குதல் கொல்லாமையை ஒக்கும்.

பொழிப்பு

தம்மிடம் உள்ளவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், நூலோர் திரட்டிக் கூறியவற்றுள் மேலானதாகும்.