இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0321



அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:321)

பொழிப்பு (மு வரதராசன்): அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

மணக்குடவர் உரை: நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.
இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.

பரிமேலழகர் உரை: அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
(அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.

தமிழண்ணல் உரை: அறச்செயல் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது ஓருயிரையும் கொல்லா நோன்பேயாகும். கொல்லுதல் பிற பாவச் செயல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தரும். அத்துணைக் கொடியது கொலைப்பாவம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும்.

பதவுரை: அறவினை-அறமாகிய செயல்; யாதுஎனில்--எது என்றால்; கொல்லாமை-கொலை செய்யாதிருத்தல்; கோறல்-கொல்லுதல்; பிறவினை--மற்ற செயல் (இங்கு மற்ற தீச்செயல் விளைவுகள் எனப் பொருள்படும்); எல்லாம்-அனைத்தும்; தரும்-கொடுக்கும்.


அறவினை யாதெனில் கொல்லாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்வினை யாதெனின் கொல்லாமை;
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.
பரிப்பெருமாள்: நல்லவினை யாதெனின் கொல்லாமை;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.
பரிதி: தன்ம நெறியாவது கொல்லாமை;
காலிங்கர்: இருவினைப் பயனையும் கொண்ட வையத்து அறவினைக்குச் சிறந்தது* யாதோ எனின் யாதானும் ஒன்றினையும் கொல்லாமை;
பரிமேலழகர்: அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்;
பரிமேலழகர் குறிப்புரை: அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார்.

'நல்வினை யாதெனின் கொல்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'அறங்களெல்லாம் ஆகிய செய்கை ஓர் உயிரையும் கொல்லாமையாம்' என சற்று வேறுபட உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம்', 'அறச்செயல் யாது என வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்', 'புண்ணியம் என்பது எதுவென்றால் உயிர்க்கொலை செய்யாதிருப்பது', 'அறச் செயல் யாது என்று கேட்டால், பிற உயிர்களைக் கொல்லாமையாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

கோறல் பிறவினை எல்லாம் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.
பரிப்பெருமாள்: கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.
பரிதி: கொலை செய்கை தன் ஆத்மாவுக்கு எல்லா விதனமும் தரும் என்றவாறு.
காலிங்கர்: ஆதலான் ஒன்றினைக் கொல்லுதலாகின்ற இது பாவமாகிய எல்லாத் திவினையும் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.

'கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொல்லுதல் எல்லாத் தீமையும் தரும்', 'உயிரைக் கொல்லுதல் என்பது பாவச் செயல்கள் எல்லாவற்றையும் தானே தரும்', 'கொலை செய்வது மற்றெல்லாப் பாதகங்களையும் தரக்கூடியது', 'பிற உயிர்களைக் கொல்லுதல், அறத்திற்கு மாறுபட்ட பாவச் செயல்களைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கொல்லுதல் எல்லாத்தீச் செயல்களையும் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும்; கொல்லுதல் பிறவினை எல்லாம் தரும் என்பது பாடலின் பொருள்.
'பிறவினை' குறிப்பது என்ன?

அறச்செயல் எது என்று கேட்டால் அது 'கொல்லாமை' என்று ஒரு சொல்லில் உடன் கூறிவிடலாம்.

அறச்செயல் எதுவென்றால், அது ஓர் உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும். கொல்வது பிற எல்லாத் தீச்செயல்களுக்கும் வழிவகுக்கும்.
கொல்லாமையானது தன்னலத்துக்காகவோ அல்லது பகை காரணமாகவோ பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதாகும். கொல்லாமை என்பது அறச்செயல் என்று குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறது இக்குறள்; உயிர்க்கொலை செய்யாதிருத்தல் மிகச் சிறந்த அறம் என்று சொல்வதாகவும் அமைந்தது. மேலும் கொல்வதால் எல்லா தீச்செயல்களும் உண்டாகும் என்றும் கூறுகிறது பாடல்; அதாவது. ஓர் உயிர் உடம்பை விட்டு நீங்குமாறு கொலை செய்வது பிற பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும் அமையும் என்பதாம்.
பிற உயிரைக் கொல்லாத அறத்தினுள் எல்லா அறமும் அடங்கும். உயிர்களைக் கொல்வது எல்லாத் தீயசெயல்களுக்கும் காரணமாகி அவற்றின் பயனையும் விளைவிக்கும் என்பதால் மிகக் கொடிய செயலான உயிர்நீக்குதலைச் செய்யற்க எனச் சொல்லப்பட்டது.

'யாதெனின்' என்று கேள்வி எழுப்பி அதற்கு விடையிறுக்கும் வண்ணம் அமைந்துள்ளது இப்பாடல். இது போன்று 'யாதெனின்' என்ற வினா-விடையில் அமைந்த பிற குறட்பாக்கள் 178, 254, 324, 789, 801, 831, 844 ஆகியன.

'பிறவினை' குறிப்பது என்ன?

'பிறவினை' என்ற தொடர்க்கு தீவினைப் பயன், விதனம், பாவமாகிய தீவினை, பாவச்செய்கைகள், அறமல்லாத செயல்கள், பிற பாவச் செயல்கள், பல தீவினைகளுடைய பயன், தீமை, பாவச் செயல்கள், மற்றப் பாதகங்களையும், அறமல்லாத் தீய செயல்கள், பிற பாவச் செய்கைகள், அறத்திற்கு மாறுபட்ட பாவச் செயல்கள், அறம் அல்லாத பிற தீய செயல்களையும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

இக்குறளின் பிற்பகுதி உயிர்களைக் கொல்லுதலாவது அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் தானே விளைக்கும் எனச் சொல்கிறது. கொலையையே செய்யத் துணிந்தவன் மற்ற எந்தத் தீச்செயல் செய்யவும் தயங்கமாட்டான். மிகக்கொடிய வினையான மனிதக் கொலையைச் செய்துவிட்டு ஒறுப்பில் இருந்து தப்பித்து சமுதாயத்துள் நடமாடுபவனுக்கு மற்ற அறமற்ற செயல்கள் எவையும் தீயனவாகத் தெரிவதில்லை. மேலும் மேலும் மறச்செயல்கள் புரிந்து அவற்றின் பயனைத் துய்த்தற்குரியவனாகிடுவான்.
பிறவினை என்பதற்கு நேர்பொருள் மற்ற செயல்கள் என்பது. இங்கு அறவினைக்கு மறுதலையான சொல்லாக பிறவினை அறமற்ற செயல் குறித்து நின்றது.
'கோறல் பிறவினை எல்லாம் தரும்' என்பதற்குக் கொலை பாவத்திற்குள் பிற பாவச் செயல்கள் எல்லாம் அடங்கிவிடும் எனவும் விளக்குவர்.

'பிறவினை' என்ற தொடர்க்கு மற்ற தீயசெயல்கள் என்பது பொருள்.

அறச் செயல் யாது என்றால் கொல்லாமையாகும்; கொல்லுதல் எல்லாத்தீச் செயல்களையும் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொல்லாமையைக் கடைப்பிடித்தல் ஓர் அறச்செயல்.

பொழிப்பு

அறச் செயல் யாதென்றால் கொல்லாமையேயாகும்; கொல்லுதல் எல்லாத் தீச்செயல்களையும் தரும்.