கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து
(அதிகாரம்:கொல்லாமை
குறள் எண்:329)
பொழிப்பு (மு வரதராசன்): கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
|
மணக்குடவர் உரை:
கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
பரிமேலழகர் உரை:
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
(கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
கொலைத்தொழிலின் மிக்க இழிவை உணர்ந்தவரது மனத்திற் கொலைசெய்வார் எக்குலத்தவராயிருப்பினும் புலைத்தொழிலர் ஆகவே கருதப்படுவர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து.
பதவுரை: கொலை-கொல்லுதல்; வினையர்-செயலையுடையவர்; ஆகிய-ஆன; மாக்கள்-பகுத்தறியும் திறனில்லா மாந்தர்; புலை-புலால், இழிவு; வினையர்-தொழிலையுடையவர்; புன்மை-கீழ்மை, இழிவான தன்மை; தெரிவார்-அறிபவர்; அகத்து-உள்ளே.
|
கொலைவினையர் ஆகிய மாக்கள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள்;
மணக்குடவர் குறிப்புரை: இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள்: கொலைத் தொழிலுடையராகிய மாக்கள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இவரை உலகத்தர் (கொலைப்புலையர்) கன்மசண்டாலரென்று சொல்லுவர் என்றது.
பரிதி: கொலை செய்வாரும்;
காலிங்கர்: கொலைத் தொழிலை உடையராகிய மாக்கள்;
பரிமேலழகர்: கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர்;
'கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கொலைஞனை மிக இழிந்தவனாகக் கருதுவர்', 'கொலைத்தொழில் செய்யும் மாந்தர்', 'கொலை சம்பந்தமான தொழிலைச் செய்கிறவர்கள் சண்டாளத் தனமுள்ள கீழ் மக்களாகக் கருதப்படுவார்கள்', 'கொலைத் தொழிலையுடைய மாந்தர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர் என்பது இப்பகுதியின் பொருள்.
புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
பரிப்பெருமாள்: பொல்லாமை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
பரிதி: புலையரும் நிகராம்; பாவத்தின் சொரூபமாவது புலையர் என்றவாறு.
காலிங்கர்: 'கடையாய புலையரினும் இவரே புலைத்தொழில் உடையவர்' என்று சொல்லப்படுவார். நூல் முறைமையான நூல்களில் குற்றங்கள் ஆராயும் சான்றோரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
பரிமேலழகர் குறிப்புரை: கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.
'குற்றங்கள் ஆராயும் சான்றோரிடத்து, இவரே புலைத்தொழில் உடையவர் என்று சொல்லப்படுவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர்', 'அத்தொழிலின் கீழ்மையை அறிவார் நோக்கில் இழிதொழில் புரிவோராவர்', 'ஈனமான காரியம் எதுவென்பதை எண்ணிப்பார்க்கக் கூடியவர்களுடைய மதிப்பில்', 'கொலைத் தொழிலின் கீழ்மையைத் தெரிவாரிடம் புலைத் தொழிலினர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, புலைவினையர் ஆவர் என்பது பாடலின் பொருள்.
'புலைவினையர்' யார்?
|
யார் எவ்விடத்து உயிர்க்கொலை செய்தாலும் அவர்கள் இழிதொழில் புரிபவர்களே.
கொலைச் செயலையுடையவராகிய மனிதர்கள், அத்தொழிலின் இழிவை உணர்ந்தோர்க்கு, புலைத் தொழிலினராகத் தோன்றுவர்.
உயிர்க்கொலை செய்பவர்கள் வெறுக்கத்தக்க இழிதொழிலினரே எனச் சொல்கிறது இப்பாடல்.
பொருளுக்காகவோ, வேண்டுதலுக்காகவோ, வேள்விக்காகவோ- கொலைஞராக இருந்தால் அவர் இழிந்தவரே. இங்கே கொலைவினையர் என்பது ஆங்கிலத்தில் Butcher என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். கொலைவினையர் என்ற சொல் தின்னுவதற்காகக் கொல்பவன், இறைச்சி வணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலையைத் தொழிலாகக் கொண்டவன் போன்றோரைக் குறிக்கும்.
இக்குறட்பாவில் 'கொலைவினைய ராகிய மக்கள்' என்று கூறாமல் 'மாக்கள்' என்று கூறப்பட்டுள்ளது. மாக்கள் என்ற சொல் பகுத்தறியும் திறனில்லாத மாந்தர் எனப் பொருள்படும். ஆறாமறிவு இல்லாத அவர்களை விலங்குகளுக்கு ஒப்பாவர் எனச் சொல்லி தன் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார் வள்ளுவர்.
கொலைவினையன் என்றால் அருவருப்பான, வெறுக்கத்தக்க, உயிர்களை இரக்கமின்றிக் கொல்லும் கொடிய செயல் புரிபவன் என்று இழித்துக் கூறப்படுகிறது.
'வேள்விக்கண் கொலை கொலையன்மை அறிக' என்று இக்குறளுக்கான சிறப்புரையில் கூறுகிறார் பரிமேலழகர். இவ்விளக்கம் "வேள்விக்கண் செய்யப்படும் கொலை" என்று ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அப்படிப்பட்ட கொலை வேள்விக்காக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது. வேள்விக் கொலையும் வள்ளுவர்க்கு உடன்பாடற்றதுதான்.
தேவநேயப் பாவாணர் 'வள்ளுவர் கொலைத்தொழிற்கு எவ்வகை விலக்கும் கொடுக்கவில்லை யாதலாலும் அவர் ஆரியவேள்வியை மறுப்பவராதலாலும் இங்குக் "கொலைவினை" என்பது வேள்வியையும் உளப்படுத்தியதே யாகும்' என்பார். மேலும் பாவாணர் 'கொலை வினையைத் தொழிலாகக் கொண்டிருக்கும் பூசாரியரைக் "கொலைவினையர்" என்றார்' எனவும் 'வேள்வி தவிர்த்த பிற உயிர்ப் பலி கொடுத்து வழிபடும் இடங்களான காளிக்கோட்டம் போன்ற கோயில்களும் பேய்த்தெய்வங் கட்குக் காவு கொடுக்கும் இடங்களும் ஆம்' எனவும் சொல்கிறார்.
கொலைத்தொழில் செய்வோரை வீரம் மிகுந்தவர் என்றோ, வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் உயிர்க்கொலை உணவை புனிதப்படையல் என்றோ, எண்ணவேண்டாம் என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். கொலைத் தொழில் கீழ்மையானது அதைச் செய்பவர் இழிமாந்தர் எனத் தாழ்வுபடுத்தப்படுகிறது இங்கு.
|
'புலைவினையர்' யார்?
'புலைவினையர்' என்ற தொடர்க்குத் தொழிற்புலையர் (கன்மசண்டாளர்), பாவத்தின் சொரூபமாவது புலையர், கடையாய புலையரினும் இவரே புலைத்தொழில் உடையவர், மிகக் கீழ்ப்பட்ட புலைத்தொழிலினர், உயர்ந்தோராகத் தம்மைக் காட்டிக் கொள்ளினும் புலையரே, இழிந்தவன், இழிதொழில் புரிவோர், சண்டாளத் தனமுள்ள கீழ் மக்கள், புலைத் தொழில் செய்பவர், புலைத்தொழிலர், மிகமிக இழிந்தவர், புலைத்தொழிலோர், மிகத் தாழ்ந்த செயலுடையர் என்றவறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
புலைவினையர் என்ற சொல் இழிவான செயல் அல்லது தொழில் புரிவோர் என்ற பொருள் தரும்.
மணக்குடவர் பேச்சு வழக்காக உலகத்தார் கன்ம சண்டாளர் என்று புலைவினையரைச் சொல்லுவர் எனக் குறிக்கிறார். பாவத்தின் சொரூபமாவது புலையர் அதாவது தீச்செயலின் உருவம் என்கிறார் பரிதி.
பாடலிலுள்ள புன்மை என்ற சொல்லும் 'இழிவு' என்று பொருள் படுவதே.
'புன்மைதெரிவார் அகத்து' என்ற தொடர் 'கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு' என்று பொருள்படும்.
உலகில் பலர் எது இழிவான தொழில் எது இழிவற்றது என்று தெரியாதிருக்கிறார்களே என்று வருந்திச் சொல்லப்படுகிற விதத்தில் இத்தொடர் ஆளப்பட்டுள்ளது.
சுடுகாட்டில் தொழில்புரியும் பிணம் எரிப்போர், அரசின் சாவுத் தண்டனை நிறைவேற்றும் தொழில்புரிவோர் போன்றோரை இழிதொழில் செய்வோர் எனச் சொல்லியுள்ளனர். இத்தொழில்களில் சமுதாய நன்மைதானே தெரிகிறது. இவற்றில் எங்கே இழிவு உள்ளது?
உயிர்க் கொலைசெய்தல், போதைப்பொருள் விற்றல், கலப்படம் செய்தல், கள்ளநோட்டைப் புழக்கத்தில் விடுதல் போன்றவையே இழிதொழில்கள்.
புன்மை தெரிந்து இழிதொழிலைப் புறக்கணியுங்கள்; கொலைஞர் எல்லாம் புலைவினையரே என்கிறார் வள்ளுவர்.
புலைவினையரை புலையர் என்றும் கூறுவர். பரிமேலழகர் தனது உரையில் தொழிலால் புலையர் என்றவாறு என்கிறார் அதாவது சாதியால் அன்று; செய்யும் தொழிலால் எனக் குறிக்கிறார். தொழிலில் இழிவு இருக்கலாம். சாதியில் ஏது இழிவு?
இழிவான தொழில் செய்வோர் புலைவினையர் ஆவர்.
|
கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் என்பது இக்குறட்கருத்து.
கொல்லாமை தொடர்புடையதாய் இருந்தால் அது இழிவற்ற தொழில்.
கொலைத்தொழிலின் கீழ்மையை அறிவார் பார்வையில் கொலைஞர் இழிதொழில் செய்வோராவர்.
|