அறத்துப்பாலில் வள்ளுவர் மானிட வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று இரண்டு அறங்களாகப் பகுத்தறிந்தார் என்றும் துறவறத்திற்குரியனவாகத் குறளிற் சொல்லப்பட்டுள்ள அறங்களில் அருளுடைமை ஒன்று என முன்னர் கூறினர். வள்ளுவர் துறவறம் பற்றித் தனியாகக் கூறவில்லை; இல்லறத்தின் தொடர்ச்சியே துறவறம்; இல்லறத்திலிருந்து கொண்டே தமக்குரியவராய் இன்றிப் பிறர்க்குரியவராகவும் வாழலாம். இது இன்றைய அறிஞர்கள் கருத்து. இவற்றுள் பின்னதே ஏற்கத்தகுந்தது. எனவே 'அருளுடைமை' அதிகாரத்தை துறவறக் கருத்துகளைச் சேர்க்காமலேயே நோக்க வேண்டும்.
அன்பு விரிந்து அருளாக மலரும். அன்பு ஈன்ற குழந்தை அருள் என்பார் வள்ளுவர். ஓருயிர் இடர்ப்படின் அதைத் தனக்கு உற்ற துன்பமாகக் கருதி அவ்வுயிர்பால் கசியும் ஈர உணர்ச்சியே அருளுடைமை எனப்படும். மனிதநேயத்தின் ஆதாரமாக அருளுடைமை விளங்குகிறது. ஒரு மனிதனின் அகத்தேவைகளுக்கு உரியனவாய் விளங்கும் அருள்உடைமை இங்கு பேசப்படுகிறது. அருள் உடையார்க்கு மன்னுயிரையும் தன் உயிர்போல் எண்ணும் மனப்பாங்கு கைவரப்பெறும். ஒருவன் இவ்வுணர்வைப் பெற்று மனிதநேயப் பண்புடன் விளங்கினால் வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, இனியவை கூறல், ஈகை ஆகிய அருளுடைமைக் கூறுகள் கொண்டதாக, உலகம் முழுவதையுமே தன் பற்றின் நிலைக்களம் ஆக்கிக்கொண்டதாக, அவனது வாழ்க்கை அமையும். இத்தகைய அருள் ஒருவனுக்கு அமைவது அருமை.
அருளுடைமை கூறவந்த வள்ளுவர் பொருட்செல்வத்தைக் கொண்டுவந்து இவ்விரண்டையும் ஒப்புமைப்படுத்தி மூன்று பாடல்களில் அருட்செல்வத்தின் பெருமையையும் மேன்மையையும் காட்டுவார். அருட்செல்வம் செல்வத்தில் சிறந்த செல்வமாகும்; பொருட்செல்வம் கயவர்களிடத்திலும் இருப்பதால் அதன் மேன்மை அருட்செல்வத்தை ஒப்புநோக்கும்போது குறைவுதான். பொருள் இல்லாதவர்களுக்குப் புறவுலக வாழ்க்கை இல்லாதது போல், அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலக வாழ்க்கை இல்லை.
பொருளை இழந்தவர்கள் அதைத் திரும்பப் பெற்றுச் செழிப்பது உண்டு; ஆனால் அருளை இழந்து வன்முறை நெறியில் சென்று அழிந்தவர்கள் அழிந்தவர்களே. இவை பொருட்செல்வத்தை ஒப்பிட்டுக் கூறப்பட்ட கருத்துக்கள். பொருட்செல்வத்தைக் குறிப்பிடாமலேயே வள்ளுவர் இவ்வதிகாரத்தை ஆக்கியிருக்கலாம். ஆனால் உலக நடைமுறை தழுவியே அறம் பேசுபவர் வள்ளுவர் ஆதலால் பொருட்செல்வத்தின் தன்மையை அருட்செல்வத்துடன் ஒப்பிட்டுக் கூறினார், ஆயினும் அருளையும் பொருளையும் எதிர் எதிராக வைக்கவில்லை என்பது நோக்கத்தகும்.
நல்ல நெறி கண்டு அருள் ஆள்க. அது தவிர்த்து. வாழ்க்கைக்கு வேறு துணை இல்லை.
எல்லா உயிர்களையும் போற்றி அருள் செலுத்துவோனை தீவினை அணுகாது. அவனது உயிர்க்கு வரும் துன்பம் இல்லை.
அவன் வன்முறை உலகில் புகமாட்டான். ஒருமுறை அங்கு சென்றுவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.
வன்குணம் கொண்டவன் அருள் ஆள்வதற்கு ஒரு வழி உள்ளது-அதாவது தான் தன்னைவிட மெலிந்தவரைத் துன்பப்படுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது தான் படும் துயரை நினைத்தால் நெஞ்சில் அருளுணர்வு பிறக்கும். இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.