இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0247அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:247)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

மணக்குடவர் உரை: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.
இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.

பரிமேலழகர் உரை: அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
('அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.)

சி இலக்குவனார் உரை: பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல அருட்செல்வம் இல்லாதார்க்கு வீட்டுலக இன்பம் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

பதவுரை:
அருள்-அருள்; இல்லார்க்கு-இல்லாதவர்க்கு; அவ்வுலகம்-அந்த உலகம்; இல்லை-இல்லை பொருள்-உடைமை; இலார்க்கு-இல்லாதவருக்கு; இவ்வுலகம்-இந்த உலகம்; இல்லை-இல்லை; ஆகியாங்கு-ஆனாற்போல.


அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை;
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
பரிப்பெருமாள்: அருள் இல்லாதார்க்கு மேலுலகத்து நுகர்ச்சியில்லை;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
பரிதி: அருளில்லார்க்குத் தெய்வலோகம் இல்லை;
காலிங்கர்: இவ்வுலகத்தொருவர் துறவின்கண் இயலுமிடத்து அருள் என்னும் பெருந்துணை இலராயின், இப்பிறவித் துயர் நீங்கத் தாம் வீட்டின்பம் பெறுவதொன்றில்லை;
பரிமேலழகர்: உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை,

'அருள் இல்லாதார்க்கு மேலுலகம்/தெய்வலோகம்/வீட்டின்பம் இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை', 'உயிர்கள் மேல் அருளில்லாதவர்க்கு அவ்வுலக இன்பம் இல்லை', 'அருள் இல்லாதவர்கள் மோட்சலோகத்தில் வாழ்வு பெற முடியாது', 'அருளில்லாருக்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல.
பரிப்பெருமாள்: பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் நுகர்ச்சியில்லையானாற்போல.
பரிதி: அது போலப் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: என்போல எனின் பொருளீட்டல் இல்லாதார்க்குப் பிறவிக்கண் பெறுவதாகிய இவ்வுலகம் இல்லாதிருக்கின்றது யாதொருபடி, மற்று அப்படியே என்றவாறு.
பரிமேலழகர்: பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல.
பரிமேலழகர் குறிப்புரை: 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.

'பொருளில்லார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை', 'பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையாயினாற் போல', 'செல்வம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் வாழ்க்கை நடத்த முடியாது. அது போல', 'பொருளில்லாதவருக்கு இவ்வுலகத்தே இன்பம் இல்லையாயினாற்போல' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லையாயினாற் போல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லையாயினாற் போல அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது பாடலின் பொருள்.
'அவ்வுலகம்' என்ற சொல் குறிப்பது என்ன?

நமக்குப் பொருளும் வேண்டும் அருளும் வேண்டும் என்னும் பாடல்.

இவ்வுலகத்தில் பொருளற்ற ஒருவர் தம் வாழ்க்கையை இன்பமாக நடத்த இயலாது; அது போல அவர் பிற உயிர்கள் மேல் அன்பு காட்டாத அருளற்றவராய் இருந்தால் அவருக்கு மேலுக இன்பம் இல்லை எனக் காணாத நீதியைக் கண்ட நீதியால் நிறுவுகிறது இக்குறள்.
பொருள் இல்லாதவர்க்கு இந்த உலக வாழ்வு இல்லை என்பதை வள்ளுவர் அறத்துப்பாலிலும் நினைவூட்டுகின்றார். அருளைச் சிறப்பிக்க வந்த இடத்தில் உவமையாக வைத்துப் பொருட்சிறப்பைக் கூறுகின்றார். இவ்வுலகத்தை ஆள்வது செல்வப் பொருள். இவ்வுடைமையில்லாதவர் உலக வாழ்க்கையை இழந்தவர் என்பது திண்ணம். மேலும், பொருட்பாலில் அன்பீன்ற அருட் குழவியும் பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்வது (குறள் 757) என்கின்றார். 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதால் பொருளைச் சார்ந்தே வாழ்வியல் அமைகிறது.
இவ்வுலகத்திற்குப் பொருள் இன்றியமையாததைப் போலவே, மேலுலகத்திற்கு அருள் தேவை. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

உலக வாழ்க்கை இன்பமுடன் விளங்க வேண்டுமெனில் பொருள் இன்றியமையாது தேவைப்படும். உயிர் வாழ்க்கை நலமுடன் விளங்க வேண்டுமெனில் அருள் உறுதியாகத் தேவை. எனவே இவ்வுலக நல்வாழ்விற்குப் பொருளும் அருளும் இன்றியமையாது வேண்டும் என்பதுவே வள்ளுவர் வலியுறுத்துவது. அதைச் சொல்ல வரும்போது பொருள் இல்லையானால் இந்த உலக வாழ்வு கிடையவே கிடையாது என்றும் மண்ணுலகு வாழ்வு முடிந்தபின், எங்கோ இருப்பதாக நம்பப்படும் விண்ணுலக வாழ்க்கைக்கும் அவ்வருள் வேண்டும் எனவும் கூறுகின்றார். பொருள் வாழ்வின் நோக்கம் அருள் வாழ்வாக அமைய வேண்டும் என்பது கருத்து.

மேற்கோளாகப் பெரிதும் பயன்படுத்தப்படும் குறள் இது. இதன் பொருளும் நடையமைப்பும் நெஞ்சிலிருந்து நீங்காது நிலைத்து நிற்கக்கூடியதாய் உள்ளது.

'அவ்வுலகம்' என்ற சொல் குறிப்பது என்ன?

'அவ்வுலகம்' என்ற சொல்லுக்கு மேலுலகம், தெய்வலோகம், வீட்டுலகம், அவ்வுலக வாழ்வு, அவ்வுலக இன்பம், மோட்சலோகம், வீட்டுலகத்து இன்பம், மேலுலகத்து இன்பம், துறவற வாழ்க்கை, சொர்க்கம், துறக்க உலகம் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அவ்வுலகம் என்பது எல்லா நலங்களையும் தரவல்ல மேலுலகம் அதாவது விண்ணுலகில் உள்ள இடத்தைச் சுட்டும் சொல். அது மனிதனின் கற்பனையில் உள்ள உலகம். அது ஒரு நம்பிக்கை நிலை. யாரும் பார்த்ததில்லை. அவரவர் மனக்கண்ணில் அதை உருவாக்கிக் கொள்ளலாம். சமயவாதிகள் இதையே 'தேவர் உலகாய மேலுலகும் அடங்கும் உயிர் பெறற்குரியதும் இதனினூங்குப் பெறுதற்கொன்று இல்லாததுமாய் விளங்குவதும் வீட்டின்பமாகும்' என்கின்றனர். இக்குறளில் 'அவ்வுலகம்' என்பது இடவாகுபெயராய் அங்குள்ள இன்பங்களைக் குறிக்கும்.
வ சுப மாணிக்கம் 'வள்ளுவர்தம் பிறவுலகக் குறிப்பனைத்தும் நம்மை இவ்வுலகின்கண் ஒழுக்கத்து உய்க்கும் கருத்துடையன' என்பார். மேலும் அவர் 'இவ்வுலகமே நாம் உயிர் மெய்யாய்த் தொழில் செய்தற்கு உரிய வினைக்களம். அவ்வுலகமாவது வினைப்பயன் துய்க்கும் நுகர்ச்சிக்களம். மறுமை, எழுபிறப்பு, புத்தேளுலகு, அளறு என்று ஆசான் பேசுமிடத்தெல்லாம் இவ்வேற்றுமைக் குறிப்பு கிடைத்தலைக் கண்டுணர்க. இக்குறள் போன்று வரூஉம் பல்பகுதியெல்லாம் அருள், கல்வி, மனநலம், செருக்கறுப்பு, அறிவுடை வாழ்க்கை என இவ்வுலக ஒழுக்கம் வலியுறுத்தலை உள்ளுக' எனவும் கூறுவார். 'அவ்வுலகம் என்பது சேய்மைச் சுட்டு. குடும்பத்தினின்று விலகி, சற்றுத் தூரத்தில் இருப்பது. அதுவே மக்கட் சமுதாயம்!' என விளக்குவார் குன்றக்குடி அடிகளார். 'அவ்வுலகம் எங்கோ இருப்பதல்ல. பெரியோர் பலரும் விரும்பும் உலகமே அது. அதில் இங்கேயே வாழத் தலைப்படுகிறவர்கள் அருட்செல்வத்தை நாடுகிறார்கள்' என்பார் தெ. பொ. மீனாட்சிசுந்தரம். மேலும் 'அருளுலகமாக இந்த உலகம் மாற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? பட்டினியை ஒழிக்க வேண்டும். அறியாமையை நீக்க வேண்டும். இன்பவாழ்வு நிலைக்க வேண்டும்' எனவும் தெ பொ மீ கூறுவார்.

இக்குறளின் கருத்தாகச் சொல்லப்படுவது: அருள் நோக்கு, அதாவது இரக்ககுணம் இல்லாதவர்களுக்கு, அவர்கள் மறைந்தபிறகு மேலுலகம் இல்லை என்பது.

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லையாயினாற் போல அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளுடைமை பொருள்வாழ்வின் பொருள்.

பொழிப்பு

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்வு இல்லையாயினாற் போல, உயிர்கள் மேல் இரக்கவுணர்வு இல்லாதவர்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை