இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0250வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:250 )

பொழிப்பு (மு வரதராசன்): (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.மணக்குடவர் உரை: தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்துத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

பரிமேலழகர் உரை: வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது.
('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தன்னை விட மெலியவரிடத்துத் தான் துன்புறுத்தச் செல்லும்போது வலிமைமிக்கவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் எதிரே தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து.

பதவுரை:
வலியார்-வலிமையுடையவர்; முன்-எதிரில்; தன்னை-தன்னை; நினைக்க-எண்ணுக; தான்-தான்; தன்னின்-தன்னைக் காட்டிலும்; மெலியார்-எளியார்; மேல்-இடத்தில்; செல்லும்இடத்து-செல்லும் பொழுது.


வலியார்முன் தன்னை நினைக்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க;
பரிப்பெருமாள்: தம்மின் வலியார் முன் தாம் நிற்கு நிலையை நினைக்க;
பரிதியார்: தனக்கு வலியாரிடத்திலே சென்றறிக என்றவாறு.
காலிங்கர்: தான் தன்னின் வலியார் முன் சென்றால் அவரால் உறும் துயர் இழிவு எளிமை இவையிற்றை நினைத்துக் கொள்க;
பரிமேலழகர்: தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க;

'தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'தான் தன்னின் வலியார் முன் சென்றால் அவரால் உறும் துயர், இழிவு, எளிமை இவையிற்றை நினைத்துக் கொள்க' என்ற காலிங்கர் உரை தெளிவு பயப்பது.

இன்றைய ஆசிரியர்கள் 'உன்னினும் வலியவன்முன் உன்னை நினை', 'தன்னைக் காட்டிலும் மிகுந்த பலமுள்ளவர்கள் தனக்குத் துன்பம் செய்ய வந்தால் அவர்களுக்கு முன்னால் தன் நிலைமை எப்படியிருக்குமோ அதை நினைத்துப் பார்க்க வேண்டும்', 'தன்னிலும் வலியவர்கள் தன்னை வருத்த வரும்பொழுது தான் அஞ்சிநிற்கும் நிலையை நினைக்கக்கடவன்', 'தன்னின் வலியார் தன்னை வருத்த வருங்கால் தான் அஞ்சி நிற்கும் நிலையினை எண்ணிப் பார்க்க', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்து.
பரிப்பெருமாள்: தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃதருளுண்டாக்குமாறு கூறிற்று.
பரிதியார்: தான் தனக்கெளியார்மேல் கோபிக்குங் கோபத்தை.
காலிங்கர்: அஃது எவ்விடத்து என்னின் தான் தன்னின் மெலியாரை அடக்கச் செல்லுமிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.

'தாம் தம்மின் மெலியார்மேல் வெகுண்டெழுமிடத்து/கோபிக்குங் கோபத்தை/அடக்கச் செல்லுமிடத்து/நலியச் செல்லும் பொழுது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உன்னினும் எளியவனை நீ வருத்தும்போது', 'ஒருவன் தன்னைக் காட்டிலும் குறைந்த பலமுள்ளவனுக்குத் துன்பம் செய்யப் போகும்போது', 'அருளில்லாதவன் தன்னைப் பார்க்கிலும் எளியவரைத் தான் வருத்த முயலுங்கால்', 'அருளில்லாதவன் தன்னின் எளியாரிடம் துன்பம் செய்யச் செல்லுங்கால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்பது பாடலின் பொருள்.
'வலியார்முன் தன்னை நினைக்க' என்ற பகுதி குறிப்பது என்ன?

வன்முறை தவிர்த்து, எல்லாரிடத்தும் அருளுடன் பழக வேண்டியதற்கான எளிய வழியை வகுத்துச் சொல்லும் பாடல்.

நம்மில் எளியவரைக் கண்டால் அவருக்கு அச்சம் உண்டாக்கவும், துயர் தரவும், இழிவு ஏற்படுத்தவும், அவரை எளிமைப் படுத்தவும் உந்தப்படும்போது நாம் காட்ட வேண்டிய மற்ற நல்ல உணர்வுகள் மறைந்து விடுகின்றன. இவ்வித நிலை ஏற்படாமைக்கு, நம்மின் வலிமை மிகுந்தாரைக் கண்டால் நாம் எப்படி உணர்வோம் என்பதை நினைத்துக் கொள் என்று யாவராலும் பின்பற்றக்கூடிய எளிய அருள் வழி கூறப்பட்டது. தன்னை எளியாராக நினைத்துப் பார்க்கவல்ல கற்பனையாற்றலே இங்கு வேண்டப்படுவது.
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (புறங்கூறாமை குறள் எண்:190 பொருள்:பிறருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால் உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?) என்று இதை ஒத்த மற்றொரு வழி முந்தைய அதிகாரத்திலேயும் சொல்லப்பட்டுள்ளது. பிறிதோர் இடத்திலும் அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை (இன்னா செய்யாமை குறள் எண்: 315 பொருள்: மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?) எனக் கூறி மற்றவர் நிலையில் தன்னை நிறுத்தி அதன் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டது.

இக் குறளிலுள்ள 'மேற்செல்லுதல்' என்னும் சொல் வன்முறையால் ஆளுவதைக் குறிக்கிறது. செல்வமும் செல்வாக்கும் உடையோரே பிறரை ஒறுக்க வல்லவராக இருப்பர். தன்னை விட செல்வம், செல்வாக்கு, கல்வி இவற்றில் குறைந்தவர்களைத் துன்புறுத்த எண்ணுமிடத்து, வலியார் தன்னை நலியவருங்கால் தான் நிற்கும் நிலையை நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்தால் தன்னை அடக்கிக்கொள்வர்; நெஞ்சில் அருளுணர்வு பிறக்கும் என்கிறது பாடல். வன்முறையைத் நிறுத்தற்கும் அருள் பெருகுதற்கும் அமைதி நிலவுவதற்கும் வள்ளுவர் காட்டும் நல்வழி இது.

'‘மெலியார்’ என உயர்திணை மேற் கூறினாராயினும் ஏனை அஃறினையும் கொள்ளப்படும்' எனப் பரிமேலழகர் அனைத்து மெல்லிய உயிர்களிடத்தும் அருள் காட்டவேண்டும் எனக் குறள் சொல்கிறது என உரை வரைந்தார். ஏனை அஃறிணை என்பன இப்பி, சங்கு, கறையான், எறும்பு, தும்பி, வண்டு, பறவை, ஆடு, மாடு முதலியனவாம்

'வலியார்முன் தன்னை நினைக்க' என்ற பகுதி குறிப்பது என்ன?

இப்பகுதிக்குத் தம்மின் வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க, தனக்கு வலியாரிடத்திலே சென்றறிக, தான் தன்னின் வலியார் முன் சென்றால் அவரால் உறும் துயர் இழிவு எளிமை இவையிற்றை நினைத்துக் கொள்க, தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும், தன்னைவிட வலியவர் தன்னைத் துன்புறுத்த வரும்பொழுது தனது நிலையாதாகும் என நினைத்துப் பார்க்க வேண்டும், தன்னின் வலியார் தன்னைத் துன்புறுத்தும்பொழுது தான் நிற்கும் நிலையை எண்ணுக, உன்னினும் வலியவன்முன் உன்னை நினை, வலிமைமிக்கவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் எதிரே தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணுக, தன்னைக் காட்டிலும் மிகுந்த பலமுள்ளவர்கள் தனக்குத் துன்பம் செய்ய வந்தால் அவர்களுக்கு முன்னால் தன் நிலைமை எப்படியிருக்குமோ அதை நினைத்துப் பார்க்க வேண்டும், தான் தன்னைப் பார்க்கிலும் வலிய ஒருவன் முன் நிற்கும் நிலையுண்டானால் எப்படி இருக்கும் என்பதை நினைப்பானாக, தன்னிலும் வலியவர்கள் தன்னை வருத்த வரும்பொழுது தான் அஞ்சிநிற்கும் நிலையை நினைக்கக்கடவன், தன்னின் வலியார் தன்னை வருத்த வருங்கால் தான் அஞ்சி நிற்கும் நிலையினை எண்ணிப் பார்க்க, தன்னினும் வலியவர்கள் தன்னை, வருத்தும் காலத்துத் தான் அஞ்சி இருக்கும் நிலையை நினைத்தல் வேண்டும், தன்னின் வலியான் முன் தான் தண்டனைக்குரியவனாய் நிற்கும் நிலையை நினைப்பனாயின், (தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இப்பகுதி மிக எளிதாகப் பொருள் விளங்கக்கூடியதே; இதற்குப் பொருள் கூறுவதில் உரையாளர்கள் அனைவருமே ஒற்றுமை காண்கின்றனர்.

(தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறையற்றுச் செல்லும் இடத்து) வலிமைமிக்கவர் தன்னைத் துன்புறுத்த வரும்போது அவர் எதிரே தான் துயருற்று நிற்கும் நிலையை எண்ணுக என்பது இப்பகுதியின் பொருள். வன்முறை நீக்கி அருள் பிறக்க ஒருவழி சொல்லப்பட்டது.

தன்னைவிட வலிமை குறைந்த ஒருவனிடத்து முறைகேடாக நடக்க முயலும்போது, தன்னைக் காட்டிலும் வலுவுமிகுந்தவர் முன்பு தான் நிற்கும்போது உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளுடைமை மேற்கொள்ள ஓர் பயிற்சி முறை.

பொழிப்பு

தன்னைவிட மெலிந்தவரைத் துன்பப்படுத்த ஒருவன் செல்லும்போது, தன்னைவிட வலியவர் தன்னைத் துயர்படுத்த வரும்போது தான் எவ்விதம் உணர்வோம் என்று நினைக்க வேண்டும்.