இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0245அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலம் கரி

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:245)

பொழிப்பு (மு வரதராசன்): அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

மணக்குடவர் உரை: அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம்.
இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.

பரிமேலழகர் உரை: அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
(சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: அருள் உடையார்க்கு எப்பொழுதும் துன்பமில்லை. அதற்குக் காற்று வீசும் செழிப்பான பெரிய உலகமே சான்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி.

பதவுரை:
அல்லல்-துன்பம்; அருள்-அருள்; ஆள்வார்க்கு-ஆள்பவர்க்கு; இல்லை-இல்லை; வளி-காற்று; வழங்கு-இயங்குகின்ற; மல்லல்-வளப்பம்; மா-பெரிய; ஞாலம்-உலகம்; கரி-சான்று.


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளுடையார்க்கு அல்லலில்லை;
பரிப்பெருமாள்: அருளுடையார்க்கு அல்லலில்லை;
பரிதி: கிலேசம், அருளை விரும்பினாரிடத்து வாராது;
காலிங்கர்: இல்லறம் முதலாகிய நல்வினை செய்வார்க்கும் அதனின் நீங்கிய தீவினை செய்வார்க்கும் உயர்ந்தும் இழிந்தும் பிறந்திறந்துழலும் பெருந்துயர் உறவேண்டுதலான், மற்றிவ் வல்லாலானது, அனைத்துயிர்மாட்டும் அவற்றிற்குத் துயர் செய்யாத அருளுடைமையை எஞ்ஞான்றும் இடைவிடாது ஆளும் அமைவுடையோர்க்கு இல்லை; .
பரிமேலழகர்: அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது,

'அருளுடையார்க்கு துன்பம் உண்டாகாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளாளர்க்குத் துன்பம் என்பது இல்லை', 'அருளை மேற்கொண்டவர்க்கு ஒரு துன்பமும் இல்லை', 'கருணையுள்ள காரியங்களையே செய்கின்றவர்களுக்குத் துன்பம் என்பது இல்லை', 'அருள் உடையார்க்குத் துன்பம் இல்லை', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருள் உடையார்க்குத் துன்பம் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.
பரிப்பெருமாள்: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது. என்னை அல்லல் வருவது சிலராலன்றே; யாவர் மாட்டும் அருள் செய்தலால் யாவரும் அல்லல் செய்வார் இன்றா மாதலான்.
பரிதி: அதற்கு வாயு இயங்கும் பூமி சாட்சி என்றவாறு.
காலிங்கர்: மற்று இதற்குக் காற்று வழங்கும் கடல்சூழ் உலகமே சான்று என்றவாறு.
பரிமேலழகர்: அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று.
பரிமேலழகர் குறிப்புரை: சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.

'காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய உலகம்/ஞாலத்து வாழ்வார் சான்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காற்றுடன் வளமுடைய இவ்வுலகமே சான்று', 'அதற்குக் காற்றுலாவுகின்ற வளம் பொருந்திய மாநிலத்தில் வாழ்வார்களே சான்றாவார்', 'காற்று உலவுகின்ற வளப்பமுள்ளை இந்தப் பெரிய உலகம் அதற்குச் சாட்சி', 'காற்று இயங்கும் வளப்பம் உடைய உலகம் சான்றாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காற்று உலாவும் வளமுடைய பெரிய இவ்வுலகமே சான்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருள் உடையார்க்குத் துன்பம் இல்லை; காற்று உலாவும் வளமுடைய பெரிய இவ்வுலகமே சான்று என்பது பாடலின் பொருள்.
அருளாளர்கள் துன்பமுறாமல் இருப்பதற்கு, வளிவழங்கு ஞாலம் எப்படி சான்றாகிறது?

காற்று உலாவும் வளமுடைய பெரிய இவ்வுலகமே அருள் உடையார்க்குத் துன்பம் இல்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

அருள் உணர்வு ஒன்றே துன்பங்கட்குக் காரணமாகும் கொடுஞ்செயல்களை நீக்க வல்லது. அது பொய், கொலை, களவு, முதலானவற்றை அழித்தொதுக்கும் ஆற்றல் பெற்றது. அருள் சேர்ந்த நிலையே அல்லல் நீங்கிய நிலையாம்.
மற்ற உயிர்களின் துயர் துடைத்துத் தூய்மையான வாழ்வு நடாத்தும் அருளாளர்க்குத் துன்பம் இல்லை என்கிறது பாடல். இக்கருத்தை விளக்க ஒரு சான்று இருக்கிறதென்று சொல்லி அது 'வளிவழங்கு மல்லல்மா ஞாலம்' எனவும் சொல்கிறது. எல்லா இடத்திலும் எல்லாக் காலத்தும் இயங்கும் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாத காற்றை வழங்கும் உலகமே அச்சான்று. காற்றை வழங்கி உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது இந்த பூமி. அதுபோல அருளாளர் அருள் பரப்பி உலகம் அழியாமல் காக்கின்றனர். காற்றை நல்கி எப்படி பூமி வளமாக இருக்கிறதோ அப்படி அருளாள்வார்களும் அன்பு செலுத்தி அல்லல் நீங்கி வாழ்வர்.
சான்று கூறுபவர் தாம் நேரில் கண்டு அறிந்த பொருளைக் காணாதவர்க்கு தெரிவித்தற்குரியவராவர். அருளுடையவர்கள் துன்பமுண்டானதாகக் கண்டறிந்தார் உலகில் ஒருவருமில்லை என்பதனை ஏதுவாகக் கொண்டு உலகத்தைச் சான்றாகக் கொண்டார் எனச் சான்றை இயைபுபடுத்துவர்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (கடவுள் வாழ்த்து குறள் எண்: 4 பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனது திருவடியை மறவாமல் நினைப்பவர்க்கு எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்கள் இல்லை) என்ற பாடல் நடைபோன்று கருதி அருள் தரும் பயன்களில் ஒன்றாக துன்பம் நீங்கிய வாழ்க்கை கிடைக்கும் எனவும் இக்குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.

அருளாளர்கள் துன்பமுறாமல் இருப்பதற்கு, வளிவழங்கு ஞாலம் எப்படி சான்றாகிறது?

'வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி' என்றதற்கு நேர்பொருள் காற்றை வழங்கும் வளப்பமான பெரிய உலகமே சான்று என்பது.
பாடலின் முன்பகுதியான 'அல்லல் அருளாள்வார்க்கு இல்லை' என்ற கூற்றுக்கு இவ்வுலகே சான்றாகும் என்பது பாடல் சொல்லவரும் கருத்து. எங்கும் உலவுகின்ற உயிர்க்காற்றைக் கேட்டுப்பார்! வளப்பமாக விளங்கும் இப்பூமியைக் கேட்டுப்பார்! அவையே சான்றுகள் என்கிறது குறள். 'வளி வழங்கு மல்லல் மாஞாலம்' என்றதால் காற்றில்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் இல்லை என்பது பெறப்படுகிறது. ஆனால் இது எப்படி 'அல்லல் அருளாள்வார்க்கு இல்லை' என்பதற்குச் சான்றாகும்?
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (புகழ் குறள் எண்: 239 பொருள்: புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி, பழியற்ற வள ஆதாரங்களில் குறைவுபடும்) என்ற பாடலில் பெயர் பெறாதவர் வாழும் பூமி வளம் குன்றும் என்று சொன்னதைப்போல, அருளாளர் வாழுமிடம் வளம் கொழிக்கும் என்பதாம்; வளம் மிகுதல் 'வளி வழங்குதல்', 'மல்லல்' என்னும் ஞாலத்திற்கு வரும் அடைமொழிகளால் பெறப்படும் என விளக்கினார் இரா. சாரங்கபாணி.
இன்னும் 'அருளோடு இருப்பவர்களுக்கு துன்பங்கள் கிடையாது' என்பதற்கு இயைபு காட்டப்படவில்லையே? அருள் ஆள்வார் உலகிற்குக் காற்றுப் போல் இதமாக இருப்பவர்கள். உலகம் இயங்குகிறது என்ற உண்மையே அருள் வழங்கும் இரக்கமுள்ளவர்கள் அல்லல் இல்லாமல் இருக்கிறார்கள் அதாவது அருட்காற்று வீசிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கும். பெரிய உலகத்தைப் பேணிப் புரக்கும் காற்றுக்கும் துன்பம் இல்லை. அன்பால் உலகை ஓம்பிவரும் அருளாளர்க்கும் அல்லல் இல்லை. அருளாளார் அல்லல் உற்றால் உலக இயக்கத்திற்கு ஊறு உண்டாகும் என்பது கருத்து.

அருள் உடையார்க்குத் துன்பம் இல்லை; காற்று உலாவும் வளமுடைய பெரிய இவ்வுலகமே சான்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளுடைமை காற்றுபோல உயிர்ச்சூழலுக்குரிய இன்றியமையாத் தேவை.

பொழிப்பு

அருளாளர்க்குத் துன்பம் இல்லை; காற்று உலாவும் வளமான இப்பெரிய உலகமே சான்று