அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள
(அதிகாரம்:அருளுடைமை
குறள் எண்:241)
பொழிப்பு (மு வரதராசன்): பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
|
மணக்குடவர் உரை:
செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால்.
இஃது அருள்நிலை கூறிற்று.
பரிமேலழகர் உரை:
செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.
(அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.)
வ சுப மாணிக்கம் உரை:
அருளே செல்வத்துள் சிறந்த செல்வம்; பொருளோ கயவரிடத்தும் உண்டு.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வத்துள் செல்வம் அருட்செல்வம்; பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
பதவுரை:
அருட்செல்வம்--அருள் என்னும் செல்வம்; செல்வத்துள்-உடைமைகள் பலவற்றுள்ளுள்ளும்; செல்வம்-உடைமை; பொருட்செல்வம்-பொருளாலாய செல்வம்; பூரியார்-இழிந்தார்; கண்ணும்-இடத்திலும்; உள-இருக்கின்றன.
|
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்;
பரிப்பெருமாள்: செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வம்;
பரிதி: செல்வமாவது, மெய், வாய், கண், மூக்குச் செவி என்க. இதிற் பெரிய செல்வம் அருட்செல்வம் என்க!
காலிங்கர்: இனி, அருட்செல்வமானது அளவிறந்த இன்பம் பயப்பதொன்றாதலான் இதனை என்றும் அழியாத செல்வம் என்று கொள்வர் அறிவுடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம்,
அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம்.
'செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை கூறினர். பரிதி பெரிய செல்வம் அருட்செல்வம் என்கிறார். காலிங்கர் 'அருட்செல்வம் அளவிறந்த இன்பம்பயப்பது; அழிவில்லாத செல்வம்' என உரைப்பார். பரிமேலழகர் 'அருட்செல்வம் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வம்' என உரை தருகிறார். அருட்செல்வம் உயிர்களை ஓம்பி அவ்வறத்தால் மேம்படுவது எனவும் இவர் கூறுவார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்த செல்வம் உயர்ந்தோரிடம் விளங்கும் அருட்செல்வமே', 'உடைமைகளில் எல்லாம் சிறந்த உடைமை அருளுடைமை', 'அருள் செல்வமே பலவகைச் செல்வங்களுள்ளுஞ் சிறப்பாகிய செல்வமாகும். (அஃது உயர்ந்தோரிடத்தேதான் உண்டாவது.)', 'செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததெனக் கருதப்படும் செல்வம், அருளுடைமையாகிய செல்வம்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் அருளுடைமை என்பது இப்பகுதியின் பொருள்.
பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருள்நிலை கூறிற்று.
பரிப்பெருமாள்: பொருட்செல்வமாவது கீழாயினோர் கண்ணும் உளவாதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அருளின் நிலைமை கூறிற்று.
பரிதி: பொருட்செல்வம் அறிவிலாதவரிடத்தும் உண்டென்று அறிக என்றவாறு.
காலிங்கர்: பொருளாகிய செல்வம் உலகத்துக் குலமக்கட்கும் கீழ்மக்கட்கும் மற்றறிவுடையோர்க்கும் அறிவுகேடர்க்கும் ஒப்பதாக வந்து எய்துமாதலால் மற்றிது சிற்றின்பம் பயக்குமதுவே யாதலால் கற்று உணர்ந்தோர் இதனைச் செல்வம் என்று கருதார்.
பரிமேலழகர்: அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.
'பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால்/அறிவிலாதாரிடத்தும் உண்டு/கீழ்மக்கட்கும் அறிவுகேடர்க்கும் வந்து எய்துமாதலால்/இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருட்செல்வம் இழிந்தோரிடத்தும் காணப்பெறும்', 'வெறும் பணம் உடைமை தீயவர்களிடத்திற்கூட உண்டு', 'பொருள் செல்வம் இழிந்தவரிடத்தும் உள்ளது', 'பொருளாகிய செல்வம் இழிந்தாரிடத்தும் உண்டு. அதனால் அதனைப் பெற்றிருத்தல் சிறப்பாகாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொருட்செல்வங்கள் கயவரிடத்தும் உள என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் அருளுடைமை; பொருட்செல்வங்கள் பூரியாரிடத்தும் உள என்பது பாடலின் பொருள்.
யார் இந்த 'பூரியார்'?
|
அருளுடைமையே சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் கெட்டவர்களிடம் உள்ளது.
அன்பின் முதிர்ச்சியில் அருள் தோன்றும். தம் மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற அன்பு வளர்ந்து வளர்ந்து, எல்லோரும் நன்றாக வாழவேண்டும், எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற அருள்நோக்கமாக மலரும். இவ்வாறு பிற மாந்தரிடம் மட்டும் அல்லாமல் மற்ற உயிர்களிடத்திலும் அருளுணர்வு ஒருவனுக்கு அமைவது மிக அருமையாகும். இவ்வருளைச் செல்வம் என அழைப்பதோடன்றி அதைச் செல்வத்துள் செல்வம் என்கிறது குறள். மேலும் இதை ஆற்றலுள்ள பொருட்செல்வத்துடன் ஒப்பிட்டு, எல்லாச் செல்வங்களிலும் உயர்ந்தது அருட்செல்வமே என்று தெரிவிக்கிறது.
இக்குறள் பொருட்செல்வம் பெற்ற பெரியானை நோக்கி அவன் உயர் நெறியடைய வழிகாட்டுகின்றதாகும் எனவும் சொல்வர்.
உண்டி, உடை, உறையுள், விளைநிலம், பணம், மற்ற நிதியுடைமைகள், ஏவல் முதலியன பொருட்செல்வம் என அறியப்படுவன. பொருட்செல்வம் மிகுந்த ஆற்றல் பொருந்தியது என்று அதை உயர்த்தியே பல இடங்களில் குறள் கூறியுள்ளது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று இதே அதிகாரத்திலேயே கூறப்பட்டுள்ளது, அன்பினால் பெறப்பட்ட அருள் என்னும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும் என்றும் குறள் (757) பின்னர் கூறும்.
பொருளின் சிறப்புக் கூறும் குறள் பொருள் உடையவர் எல்லாம் சிறப்புடையர் அல்லர் என்றும் சொல்கிறது. அது தோலான் துருத்தியிடமும் சென்று குவிகிறது. சிறு முயற்சியாரிடமும் பொருள் அமையும்; முயலாதவரிடத்திலும்கூட அது அமையும். தகுதியுள்ளவர்களிடத்திலும் சென்று சேர்கிறது, கயவர்களிடமும் நிலைநிற்கின்றது. இதனால் பொருட்செல்வத்தின் மேன்மை குறைபடுகிறது.
ஆனால் அருட்செல்வம் என்னும் வாழ்வுடைமை ஒருவரின் இயற்கைப் பண்பால் உண்டாவது. அது எல்லோருக்கும் உரியதல்ல. அந்த அகவுடைமை பண்பட்டவர்களிடத்தில் மட்டுமே காணப்படுவது. பொருட்செல்வத்தை யார் வேண்டுமானாலும் சேர்க்க முடியும். ஆனால் அருட்செல்வத்தை ஒரு சிலரே சேர்க்க முடியும். ஆகையால் அருட்செல்வம் உயரிய நிலையில் கருதப் பெற்று செல்வத்தில் சிறந்த செல்வமாகிறது. அது நல்லோரிடத்து மட்டுமே உண்டு; பொருட்செல்வமோ கொடியவர்களிடத்தும் உள்ளது.
பல செல்வங்களைப்பற்றிக் குறள் பேசுகிறது. அருட்செல்வம் தவிர அடக்கம் (குறள் 125), பொருள் (குறள் 241), வேண்டாமை (குறள் 363) கல்வி (குறள் 400), கேள்வி (411), ஊக்கம் (குறள் 592) என்பனவும் செல்வங்களாகக் குறளில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இங்கு சொல்லப்பட்ட 'செல்வத்துள் செல்வம்' என்ற சொற்றொடர் கொண்டு கேள்விச் செல்வத்தையும் குறிப்பிட்டு அதைச் 'செல்வத்துள் எல்லாம் தலை' என்றும் பாராட்டுவார்.
'செல்வத்துள் செல்வம்' என்பது போன்று ஒன்றனுள் ஒன்றைப் பொதிந்து சுட்டும் நடை வள்ளுவரின் விருப்பமான தனி நடை எனத் தெரிகிறது.
|
யார் இந்த 'பூரியார்'?
'பூரியார்' என்ற சொல்லுக்குக் கீழாயினோர், அறிவிலாதவர், குலமக்கட்கும் கீழ்மக்கட்கும் மற்றறிவுடையோர்க்கும் அறிவுகேடர்க்கும் ஒப்பதாக எல்லோரும், இழிந்தார், நீசர், இழிந்தவர், பண்பற்ற இழிந்தவர்கள், கீழ்மக்கள், கயவர், தீயவர்கள், அருளற்ற கீழோர், சாதாரண மக்கள், கீழ்த்தரமானவர்கள், தாழ்ந்த அற்பர்கள், புல்லர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'இது சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது' என்று குறள் 1207க்கான உரையில் பூரியன என்ற சொல்லை கீழானவை என்ற பொருளில் மணக்குடவர் குறித்துள்ளார். கம்பரும்
பூரியரேனும் தம்மைப்
புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார் (கம்பராமாயணம் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலம் 116 பொருள்: கீழ் மக்களாயினும் தங்களைச்
சரணடைந்தவர்களுக்கு அழியாத தங்களது ஆருயிரைத் தந்தும் காத்தவர்கள்) என்று பூரியர் என்பதைக் கீழானவர் என்ற பொருளில் ஆண்டுள்ளார்.
தண்டபாணியார் 'பூரியார்-கீழ்மக்கள். பூரியம் என்னுஞ் சொல் பல்கோடியின் மிக்கதோர் எண்ணைக் குறிப்பதாய் வழங்குகிறது. பல்கோடி மக்களில் மேல்மக்கள் சிலராயும் கீழ்மக்கள் பலராயு மிருப்பது கருதிக் கீழ்மக்களை எண்மிகுதி குறிக்கும் பூரியம் என்னும் சொல் வடியாகப் பூரியர் என வழங்கினார் போலும்' என இச்சொல்லுக்கு விளக்கம் தருவார்.
வள்ளுவரே பிறிதோரிடத்தில் வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. (வரைவின் மகளிர் குறள் எண்:919 பொருள்: ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கயவர் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்) எனக் கயவர் என்ற பொருள்படும்படி பூரியர் என்ற சொல்லை ஆண்டார்.
'பூரியார்' என்பது கயவரைக் குறிக்கும் சொல்.
|
செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த செல்வம் அருளுடைமை; பொருட்செல்வங்கள் கயவரிடத்தும் உள என்பது இக்குறட்கருத்து.
அருளுடைமை எக்காலத்தும் தாழ்வுறுவதில்லை.
அருளே செல்வத்துள் சிறந்த உடைமை; பொருட்செல்வங்கள் கயவரிடத்தும் உள.
|