இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0242



நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை

(அதிகாரம்:அருளுடைமை குறள் எண்:242)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பல வழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக உள்ளது.

மணக்குடவர் உரை: நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம்.
நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: நல் ஆற்றான் நாடிஅருள் ஆள்க - அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக, பல் ஆற்றான் தேரினும் துணை அஃதே - ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.
(அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க; எவ்வகையால் பார்த்தாலும் அருளே துணை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை.

பதவுரை:
நல்-நல்ல; ஆற்றான்-நெறியால்; நாடி-ஆராய்ந்து; அருள்-அருள்; ஆள்க-உடையராகுக; பல்-பலவாகிய; ஆற்றான்-நெறியால்; தேரினும்-ஆராய்ந்தாலும்; அஃதே-அதுவே; துணை-உதவி.


நல்லாற்றான் நாடி அருளாள்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக;
மணக்குடவர் குறிப்புரை: நல்லாற்றானாடியருளாள்க என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு.
பரிப்பெருமாள்: நல் வழியாலே நாடி அருளையுண்டாக்குக;
பரிப்பெருமாள் குறிப்புரை: நல்வழியான் என்றது அருளுடைமை யுண்டாகப் பலவறங்களையுஞ் செய்கவென்றவாறு. நாடி என்றது பலவறத்தையும் ஆராய்ந்து என்றவாறு.
பரிதி: நல்லநெறி எதுவாகும் என்று விசாரிக்கில்;
காலிங்கர்: வீட்டின்பத்திற்கு இதுவே நன்னெறியாவது என்னுமரபினால் குறிக்கொண்டு முன் சொன்ன அருளினையே மருவுக; .
பரிமேலழகர்: அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறம் யாது? என்று ஆராய்ந்து, அருளுடையராக,
பரிமேலழகர் குறிப்புரை: அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும், இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம்.

'நல்ல வழியாலே நாடி அருளையுண்டாக்குக/அருளினையே மருவுக/அருளுடையராக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல வழியாலே ஆராய்ந்து அருளுடையர் ஆகுக', 'நன்றாக ஆராய்ந்து பார்த்துக் கருணை வாழ்வைக் கடைப்பிடிக்க வேண்டும்', 'நல்ல நெறியிலேநின்று அருட்குணம் பெற விரும்பி அருளொடு கூடிய செயல்களைச் செய்து பழகவேண்டும்', 'நல்வழியால் ஆராய்ந்து அருளினைப் பெறுக', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல வழியை ஆராய்ந்து அருள் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

பல்லாற்றான் தேரினும் அஃதே துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளுடைமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பல்லாற்றானென்றது எல்லாச் சமயத்திலும் என்றவாறு. இஃது அருளுடைமை வேண்டுமென்றது.
பரிதி: எல்லார்க்கும் கிருபை பாலித்தலே பெரியது என்றவாறு.
காலிங்கர்: என்னையெனில் பல வழியாலும் மறைநூல் சொல்லுகிற முறைமை வகுத்தாராயினும் மற்றவருள் தானே வீட்டின்பம் சேர்தற்கு மிக்க துணையாவாய் என்றவாறு.
பரிமேலழகர்: ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது.

'பல வழியினும் ஓடி யாராயினும் தமக்கு அவ்வருளே துணையாம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் மறைநூல் கூறும் முறைமை வகுத்தாராயினும் அருளே வீட்டின்பம் எய்த துணையாம் என்றார். பரிமேலழகர் சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் அருளே துணை, பிறிதில்லை எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல வழிகளால் ஆராய்ந்து தெளிந்தாலும் அவ்வருளே துணையாம்', 'பலவழிகளை ஆராய்ந்து பார்த்தாலும் கருணை வாழ்க்கைதான் துணையாகக் கூடியது என்பது தெரியவரும்', 'பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் உயிர்க்குத் துணையாவது அவ் அருளேயாம்', 'பல வழிகளால் ஆராய்ந்தாலும் அருள் ஒன்றே துணையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எந்தவகையால் ஆராய்ந்து தெளிந்தாலும் அருளே துணையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல வழியை ஆராய்ந்து அருள் செய்க; எந்தவகையால் ஆராய்ந்து தெளிந்தாலும் அருளே துணையாகும் என்பது பாடலின் பொருள்.
'நல்லாற்றான்' குறிப்பது என்ன?

நல்ல வழியைத் தெரிந்து அருள் வாழ்க்கை மேற்கொள்க; அருளைக் குறிக்கொள்வதே வாழ்வுக்குச் சிறந்த துணை.

குறளின் முதற்பகுதியான ‘நல்லாற்றான் நாடி அருளாள்க’ என்பது நல்ல வழியைத் தேர்ந்தெடுத்து அருள் நெறி மேற்கொள்க என்கிறது. இது அருள் வாழ்க்கை தொடர நிறைய வழிகள் உள்ளன என்றும் அவற்றுள் நல்லனவற்றைத் தெரிக என்றும் சொல்வதாக உள்ளது. மணக்குடவர் 'நல்லாற்றான் நாடி அருளாள்க' என்ற தொடர்க்கு அருளுடைமை உண்டாகப் பலவறங்களையும் செய்க என உரை தருகிறார். தண்டபாணியாரின் இப்பகுதிக்கான 'ஊனுண்டு உயிர்கட்கு அருளுடையேம் என்பாரும் ஊரைப்பறித்து அறச்சாலை கட்டி உயிர்கட்கு அருளுடையேம் என்பாரும் உளராதலின், அவர் போலாது புலால் மறுத்தல் முதலிய அறநெறியிலே நின்று அவ்வாற்றாற் பக்குவப் பட்டெழும் அருளைச் செய்தல். அல்லாத அருள் போலியே ஒழிய, உண்மையாகா தென்பது கருத்து' என்ற விளக்கம் தெளிவு பயப்பதாய் இருக்கிறது.
பாடலின் பிற்பகுதியான 'பல்லாற்றான் தேரினும் அஃதே துணை' என்பது பல நிலைகளிலும் ஆராய்ந்து பார்த்தாலும் நமக்குத் துணையாவது அருள்நெறியேயாகும் என்பதைச் சொல்கிறது. பரிமேலழகர் இப்பகுதிக்கு 'ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை' என உரை தந்தார். அருள்நெறி மேற்கொள்வதற்குச் சமயத்தின் உதவியையே அனைவரும் நாடுவர் என்ற கருத்தின் அடிப்படையில் எழுந்த கருத்து இது.
நல்ல வழிகளால் ஆராய்ந்து ஒருவன் வாழ்வில் பெற வேண்டியது எது? பல்வேறு வழிகளில் ஆராய்ந்தாலும் அருளே வாழ்விற்குத் துணை; வேறில்லை என உறுதிபட ஏகாரமிட்டு உரைக்கின்றார் வள்ளுவர். அறநெறிக் கருத்துக்கள் பலவாக உள்ளன. ஒருநெறி கூறுவதை இன்னொன்று மறுக்கும் அல்லது ஏற்கும். ஆயின் அனைத்து நெறிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் சில கருத்துகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் அருளுடைமை. 'உன் உயிரைப் போல, பிற உயிரிடமும் அன்பு செலுத்து' என்ற அருட் கருத்தை எல்லா நெறிகளும் கூறும். எல்லா நெறியினரும் உறுதியாக உரைப்பது அருளாதலால் உயிர்க்குறுதி வேண்டினோர் அருளுடையராக என்கிறது பாடல்.

இப்பாடலது ஈற்றடியையே கொண்ட இன்னொரு குறள்- பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை (ஒழுக்கமுடைமை 132 பொருள்: வருந்தினாலும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க; நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே ஒருவர்க்குத் துணைநிற்கும்) - இதே நடையில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

'நல்லாற்றான்' குறிப்பது என்ன?

'நல்லாற்றான்' என்றதற்கு நல்ல வழியாலே, நல் வழியாலே, நல்லநெறி (விசாரித்து), நன்னெறி குறிக்கொண்டு, நன்றான நெறியிலே நின்று, நல்ல வழியால், நல்ல நெறியில், நல்ல முறையில், நல்லவழியை, நல்ல வழியாலே, நல்வழியால், நல்ல வழியிலே என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

இத்தொடர்க்குப் பரிமேலழகர் 'அளவைகளானும் பொருந்து மாற்றானும் நன்றான நெறியிலே நின்று' எனப் பொருள் கூறி 'காண்டல் அளவை, அடையாளங்களைக் கொண்டு அறியப்படும் கருதலளவை, நூலளவை என்ற மூன்று அளவைகளையும் வேறு சிலவற்றையும் கூறி விரிவான விளக்கம் தந்துள்ளார்.
நல்ல நெறியிலேநின்று உயிர்களிடம் இரக்க உணர்வு கொண்டு அருளாள்க என்பது இக்குறள் கூறும் செய்தி. நல்ல அருள்நெறிகளாக கொல்லாமை, புலாலுண்ணாமை முதலியவற்றைக் கொள்ளலாம்.

நல்ல வழியை ஆராய்ந்து அருள் செய்க; எந்தவகையால் ஆராய்ந்து தெளிந்தாலும் அருளே துணையாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அருளுடைமையை நல்வழியில் ஆளுக.

பொழிப்பு

நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க; எந்தவகையால் ஆராய்ந்து தெளிந்தாலும் அருளே துணையாம்.